27 Jun 2021

புளிப்புக்காரனின் ஒரு நாள் பொழுது

புளிப்புக்காரனின் ஒரு நாள் பொழுது

            பொதுவாகச் சாப்பாட்டைப் பொருத்த வரையில் எஸ்.கே. கோபப்படுவதில்லை. அன்று வந்து கோபத்தில் சாப்பாட்டுத் தட்டைத் தூக்கி எறிந்து விட்டார். சாப்பாடு தட்டுப் பறந்தது அவரது வாழ்க்கையில் அது முதல் முறை. வர வர சாப்பாடு எஸ்.கே.வுக்குப் புளிப்பாக மாறிக் கொண்டிருந்தது. அரைத்த மாவைப் புளிப்பதற்கு முன் கொடுத்தாலும் புளிக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தார். ஏன் எதைச் சாப்பிட்டாலும் அது தாங்க முடியாத புளிப்போடு மாற ஆரம்பிக்கிறது என்று புரியவில்லை. கைப்பிடி சர்க்கரையை அள்ளிக் கொடுத்தாலும் புளிக்கிறது என்று சொல்லாத குறையாக எஸ்.கே. ஆகிப் போனார்.

எவ்வளவோ முறை வீட்டில் சொல்லிப் பார்த்து விட்டார் எஸ்.கே. வீட்டில் கேட்பதாகத் தெரியவில்லை. அதற்காகக் குடிக்கின்ற தண்ணீர் வரை புளிக்கிறது என்று சொன்னார் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? நேற்று இரவு பிரிட்ஜைத் திறந்தால் அதற்குள் ஐந்தாறு ஐஸ்கிரீம்கள். குளிர்ச்சி என்றால் அப்படி ஒரு குளிர்ச்சி. எடுத்துக் கொஞ்சம் நாக்கில் வைத்துப் பார்த்தார். புளிப்பென்றால் புளிப்பு தாங்க முடியாத புளிப்பு. “ஐயோ! புளி… புளிப்பு!” என்று என்னவோ வீட்டில் பிசாசைப் பார்த்தது போன்று கத்தி விட்டார் எஸ்.கே. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வருவதற்குள் அத்தனை ஐஸ்கிரீம்களையும் கை அலம்பும் தொட்டியில் கொட்டித் தண்ணீரைத் திறந்து விட்டார். கழிவறைக்குள் செல்லும் மலத்தைப் போல் அத்தனையும் தொட்டியில் தண்ணீரின் ஊடாக ஓடி உள்ளே கலந்து ஓடிப் போனது. இப்படியாக ஐஸ்கிரீமைத் தூக்கிக் கை அலம்பும் தொட்டியில் போட்ட முதல் ஆளாக ஆனார் எஸ்.கே.

ஓடி வந்துப் பார்த்தவர்கள் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதற்குள் பிரிட்ஜ் உள்ளே இருந்த ஐஸ்கிரீமை விட மோசமாக உறைந்துப் போனார்கள். ஐஸ்கிரீம் போன இழப்பில் குழந்தை ஒன்று அழ ஆரம்பித்து விட்டது. அதை எப்படிச் சமாதானம் செய்வதென்று புரிவதற்குள் எஸ்.கே.வின் கோபத்தை எப்படித் தணிப்பது என்பது எல்லாருக்கும் குழப்பமாக இருந்தது.

எஸ்.கே. தன் பிரசங்கத்தை ஆரம்பித்திருந்தார்.

            “சோம்பேறிகளால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாது. நீங்கள் அலுத்துக் கொண்டேதான் ஒவ்வொரு வேலையையும் செய்வீர்கள். அதற்காக எத்தனைப் பேரைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது? வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் மாபெரும் சோம்பேறிகளாக ஆன பின் அவர்களிடம் எதையும் நான் எதிர்பார்க்க முடியாது. உணவை உருவாக்குவது என்பது மாபெரும் செயல். அச்செயலை வீட்டில் இருக்கும் சோம்பேறிகளிடம் எதிர்பார்க்க முடியாது. ஆமாம், எதிர்பார்க்க முடியாது. உணவைத் தூய்மையான பாத்திரத்தில் தயாரிக்க வேண்டும். அதை முறையாகச் சூடு செய்ய வேண்டும். போதுமான வெப்பத்தை அடைந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். இறக்கி வைத்ததை முறையாகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பூனையோ, நாயோ தின்னும்படி அஜாக்கிரதையாக விட்டு விடக் கூடாது. பாத்திரத்தை அலம்ப அலுப்புப்பட்டுக் கொண்டு அலம்பாத பாத்திரத்தில் சமைத்ததை எடுத்து வைத்து விடக் கூடாது. அதே பாத்திரத்தில் எடுத்து வைத்தால் ஒன்று புளிச்ச நாற்றம் தாங்க முடியாது அல்லது ஊளை நாற்றம் தாங்க முடியாது. இதுதான் பிரச்சனை. உணவைச் சமைத்தவுடன் எடுத்து வைத்து விட முடியாது. அது கொஞ்சமாக ஆறிய பின்தான் எடுத்து வைக்க முடியும். இதையெல்லாம் வேலை மெனக்கெட்டுப் பார்க்க வீட்டில் இருக்கும் சோம்பேறிகளுக்கு ஏலாது. அதற்காகச் சோம்பேறிகளே உங்கள் மேல் குறைபட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. நீங்கள் அப்படித்தான் என்பது தெரிந்த சேதியாகி விட்ட பிறகு உங்களை என்ன சொல்வது? உங்களை என்ன செய்வது? எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் சோம்பேறிகளைத் திருத்த முடியாது.”

            என்னடா எஸ்.கே. இப்படிப் பேசுகிறாரே என்று எல்லாருக்கும் குழப்பம். எஸ்.கே. பேசியதில் பொருள் பொதிந்த யாதோன்றும் இருப்பதாக யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் பொருள் பொதிந்த ஒன்றைப் பேசுவதாகக் கோர்வையாகப் பேசியிருந்தார் எஸ்.கே. அதெப்படி பொருளற்ற ஒன்றைப் பொருளுள்ளது போல எஸ்.கே.வால் பேச முடிகிறது என்று அது ஒரு புரியாத புதிராக நீள ஆரம்பித்தது.

            “இதற்காகக் கோபப்பட்டிருக்க வேண்டியதில்லை. அந்தக் கோபத்தில் சர்வ நாசம்தான் விளைகிறது. எந்தப் பயனும் விளைவதில்லை. வீட்டில் இருந்த ஐஸ்கிரீம் அனைத்தும் கெட்டதுதான் மிச்சம். அவர்கள் மேல் கோபம் வரக் கூடாது என்றால் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படித்தான் இருந்தேன் இவ்வளவு நாளும். ஆனால் ஏதோ ஒரு கோபத்தில் அப்படிச் செய்யும்படி ஆகி விட்டது.” எஸ்.கே.வின் உள்மனம் இப்படியும் நினைத்துக் கொண்டது.

            இவ்வளவு நடந்த பிறகும் தன்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது போனது எஸ்.கே.வுக்கு ஓர் அதிசயத்தைப் போன்று தோற்றமளித்தது. வீட்டில் இனி எதைச் சமைத்தாலும் அதைத் தூக்கிக் கீழே ஊற்ற வேண்டும் என்று ஆத்திரம் கொப்புளித்துக் கொண்டு வந்தது. அதை தன்னால் கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை என்பது எஸ்.கே.வுக்குப் புரிந்தது. அதே நேரத்தில் இதில் இந்த அளவுக்குக் கோபம் கொள்ள என்ன இருக்கிறது என்றும் எஸ்.கே.வுக்குப் புரியவில்லை. எஸ்.கே.வின் கோபம் விண் விண் தெறித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு என்ன செய்வது, என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக வெகு அமைதியாக எல்லாரும் கலைந்த போது எஸ்.கே.வுக்கு யார் மேல் கோபப்படுவது என்று தெரியவில்லை.

            எஸ்.கே. மறுபடியும் பிரிஜைத் திறந்து ஊறுகாய் பாட்டிலை எடுத்து நாக்கில் வைத்து ஓர் இழுப்பு இழுத்துப் பார்த்தார். துரதிர்ஷ்டவசமாக அது இனித்தது. ஏதோ நினைப்பில் ஜாம் பாட்டிலை எடுத்து வாயில் வைத்து விட்டோமோ என்று மறுபடியும் பார்த்த எஸ்.கே.வுக்கு அது ஊறுகாய் பாட்டில்தான் என்பது நன்றாகத் தெரிந்தது.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...