27 Jun 2021

மனச்சரக்கு ஒரு கால் கிலோ

மனச்சரக்கு ஒரு கால் கிலோ

எஸ்.கே. பத்து நாள்களுக்கு ஒருமுறை தேவையற்ற மன உளைச்சலில் சிக்கிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஏதாவது குழப்பம் ஆட்டிப் படைக்கிறது.

அவர் மனம் ஏன் உளைச்சலுக்குள் செல்ல வேண்டும்? வேண்டாம் என்றால் கேட்க கூடியதா மனம்? ஒரு பிரச்சனையைச் சுலபமாகத் தீர்க்கும் உத்தி எஸ்.கே.வின் மனதிடம் இருக்கிறதா என்றால் இல்லை. எல்லாவற்றையும் சுற்றி விட்டுக் குழப்பி விட்டு விடுகிறது. இதில் கேள்விப்படுகின்ற நமக்கே இவ்வளவு பிரச்சனை என்றால் எஸ்.கே.வுக்கு எப்படி இருக்கும்? எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

மற்றவர்களிடம் பேசி அதன் மூலம் மன அமைதி பெறலாம் என்று நினைக்கிறார் எஸ்.கே. அவர் வரையில் அது ஒத்து வராது. அவருக்கு சரக்குதான். சரக்கை அடிக்க அடிக்கத்தான் மன அமைதி.

எஸ்.கே.வின் மனம் அடுத்தது அடுத்தது என்று விரைந்து கொண்டே இருக்கிறது. அதற்கு எதிலும் ஆர்வம் இல்லை. அதன் காரணமாக ஏதோ எல்லாவற்றையும் முடித்தால் போதும் என்று நினைக்கிறது. குடிக்கின்ற சரக்கு அதற்கு நிரம்பவே துணை புரிகிறது.

இந்த மனம் ஏன் தேவையில்லாமல் குழப்பி எடுக்கிறது என்றே புரிவதில்லை எஸ்.கே.வுக்கு. சொல்வதையும் கேட்காது. ஆனால் சரக்கடித்தால் கேட்கத் தொடங்கி விடும்.

எஸ்.கே.வுக்கு மனம் சரியில்லை. மீண்டும் மீண்டும் உளைச்சலுக்குள் கொண்டு சென்றால் பாவம் எஸ்.கே. என்ன செய்வார்? சாதாரண நினைப்புக்கே இப்படி என்றால்... ஆழ்ந்து யோசித்தால் பைத்தியம் பிடித்தது போலாகி விடுகிறது எஸ்.கே.வுக்கு. சாதாரண யோசனையே முடியுமா என்ற அச்ச உணர்வு எஸ்.கே.வுக்கு ஏற்படுகிறது. இந்த அளவோடு மனதிலிருந்து வெளியேறிக் கொள்வதுதான் நல்லது என்று படுகிறது. ஆனால் அதற்கு அதில் வாய்ப்பில்லை. எஸ்.கே.வின் கர்மவினை அவ்வளவுதான் என்று ஏற்றுக் கொள்வதே இவ்விசயத்தில் நல்லது என்று படுகிறது. வேறு மனதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பிடிக்கவில்லை என்று விவாகரத்தா செய்ய முடியும்? அல்லது பிடிக்கவில்லை என்று தப்பித்தா ஓட முடியும்? வாய்ப்பில்லை. அதனோடு வாழ்ந்து அதனோடு சாவதைத் தவிர வேறு வழியில்லை.

மனதோடு வழக்குத் தொடுக்கலாம் என்றால்... இது போன்று வழக்குத் தொடுத்து அலுத்துப் போயிற்று. மனம் ஒன்றை முடிவு செய்து விட்டால், அதை யாரைக் கேட்டு முடிவு செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்காக முடிவெடுக்கும் அதிகாரத்தை யார் வழங்கியதோ? அப்படித்தான் மனதின் விசயத்தில் மனிதன் அமைதி பெறக் கூடாது என்று யாரோ சதி செய்து விட்டார்கள். அது அதுதான் அந்த அமைதி எஸ்.கே.வுக்குக் கிடைக்கவும் இல்லை. இதை எஸ்.கே. ஏற்றுக்கொள்ளாவிட்டால் வன்முறையில்தான் ஈடுபட வேண்டியிருக்கும். எதற்கு அந்த வன்முறை? ஒரு பாட்டில் சரக்கு வன்முறையை எப்படியோ தணித்து விடுகிறது. ஆனால் பலருக்கோ ஒரு பாட்டில் சரக்கில்தான் வன்முறையே துவங்குகிறது. அதுவும் ஏனென்று எஸ்.கே.வுக்குப் புரிவதில்லை. எஸ்.கே.வைப் பொருத்தமட்டில் வன்முறையைத் தணிக்கும் மகத்தான வடிவாகச் சரக்கைப் பார்க்கிறார்.

எல்லாவற்றையும் மாற்றி சும்மா விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக எஸ்.கே. அடிக்கடி சரக்கை நாடுகிறார். அவரை மனம் ஏமாற்றியிருக்கிறது. சரக்கு ஏமாற்றியதில்லை. எப்போதெல்லாம் அவர் மனநிலை அவருக்கு ஏற்றதாக இல்லையோ அப்போதெல்லாம் சரக்கைக் கொண்டு தனக்கு ஏற்றாற்போல் மாற்றியிருக்கிறார். சரக்கை அடித்தால் அவர் மட்டுமல்ல அவர் மனம் நிலைகுலைந்து போவது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வேறு காரணங்களும் இருக்கக் கூடும். ஆனால் அது குறித்து அவ்வளவு துல்லியமாகத் தெரியவில்லை.

எஸ்.கே.வைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கு அற்றவர்களாக இருக்கிறார்கள். ஒன்றுக்கும் ஆவாத விசயங்களை ஆவது போல பேசி வெட்டிப் பொழுதைக் கழிப்பவர்களாக இருக்கிறார்கள். எஸ்.கே.வை உசுப்பி விட்டு அவர்கள் குளிர்காய்கிறார்கள். அதில் எஸ்.கே. மிகவும் ரணப்பட்டுப் போகிறார். ரணப்பட்டுப் போனால் என்ன? அதை ஆற்றும் மருந்ததாகச் சரக்கு இருக்கிறது.

மற்றவர்களிடம் அன்பாகப் பழகுவது, அறிவார்ந்த முயற்சியில் ஈடுபடுவது, கௌரவத்திற்காகக் கொஞ்சம் மெனக்கெடுவது, நியாயமாக நிற்க முனைவது என்று இவைகளில் எஸ்.கே. அனுபவித்த மன உளைச்சல் இருக்கிறதே! சொல்லி மாளாது.

உண்மையில் அன்பும் பண்பும் மாபெரும் மன உளைச்சலாக இருக்கும் என்பதால்தான் அது கைகூடுதல் ஆகாமல் தடையாகிறதா என்று கூட யோசித்திருக்கிறார் எஸ்.கே. அன்பிலிருந்து பிறக்கும் துரோகங்களும், பண்பிலிருந்து உண்டாகும் அடிமைத்தனமும் எஸ்.கே.வைக் களைத்துப் போகச் செய்து விட்டன.

தன் வாழ்வில் நற்பண்புகளுக்காக அன்றி வேறெதெற்கும் எஸ்.கே. அந்த அளவுக்கு மன உளைச்சலோடு போராடியதில்லை. கெட்டவனாக இருக்கும் போது கூட அவர் மனம் அவரைப் பாடாய்ப் படுத்துவதில்லை. உண்மையில் அது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. நல்லவனாய் மாற முயற்சித்தால் போதும் அதுவரை எங்கிருந்ததோ என்று தெரியாத மனம் எப்படியோ முன் வந்து விடுகிறது. கலவரத்தில் ஈடுபடத் தொடங்கி விடுகிறது.

எதிலும் மனம்தான் முக்கியம் என்று நினைக்கிறார் எஸ்.கே. மற்றவர்களின் வாய் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதனால் எந்தப் பயனும் இல்லை. வேறு வழியில்லை என்பதால் சுற்றி இருப்பவர்களின் அத்தனை பேச்சுகளையும் கேட்டுக் கொண்டுதான் ஆக வேண்டும். அவைகளுக்குப் பிரதிவினை ஆற்றாமல் இருப்பதுதான் உருப்படாத பேச்சுகளுக்கு கொடுக்கும் சரியான பதிலடி. இதில் கெட்டதை ஆற்றினால் பயந்து கொண்டு எதையும் பேச மாட்டார்கள். நல்லததை ஆற்றினால் அதற்கு ஆயிரத்தெட்டு விமர்சனத்தைப் புரிவார்கள். எப்படித்தான் அவ்வளவு விமர்சனங்களும் அவர்களது வாயிலிருந்து புறப்பட்டு வருகிறதோ? ஒவ்வொருவரின் மனமும் நல்லவற்றுக்குத்தான் எதிரியாக இருக்கிறது போலும்.

எஸ்.கே.வுக்கு எல்லாம் உளைச்சலின் வடிவாகத்தான் வருகிறது. அதுவே அவருக்கு ஏற்ற தலைச்சுழியாக இருக்கிறது. அதுவே அவருக்கான அமைப்பு முறையாக இருக்கட்டும் என்று நினைப்பதைத் தவிர சுற்றியுள்ளவர்களாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. சரக்கை அடிப்பதன் மூலம் இந்த உலகிலிருந்து தப்பி ஏதோ ஓர் உலகுக்குச் செல்கிறார். அந்த ஏதோ ஓர் உலகம்தான் சக மனிதர்களால் காப்பாற்ற முடியாத ஏதோ ஒன்று அவரைக் காப்பாற்றுகிறது. இந்த நிஜ உலகு அவரை அழிக்கவேச் செய்கிறது என்பது அவரது பொன்னான கருத்துகளில் ஒன்றாக ஆகி விட்டது.

மனதுக்குப் பிடிப்பது அறிவுக்குப் பிடிப்பதில்லை. அறிவுக்குப் பிடிப்பது மனதுக்குப் பிடிப்பதில்லை. மனதுக்கும் அறிவுக்கும் இடையில் இப்படித்தான் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னப்படுபவன்தான் மனிதன், குறிப்பாக இந்த எஸ்.கே என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார்.

எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும். சோர்ந்து போய் விடக் கூடாது. பிடிக்காத ஒன்றையேப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதை விட பிடிக்கின்ற மற்றொன்றில் மனதை மாற்றிச் செலுத்தி இன்னொன்றில் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இயக்கம்தான் வாழ்க்கை. இப்படி எதையாவது உளறிக் கொண்டுதான் எஸ்.கே. தனது சரக்கு உலகில் ஆழ்ந்து இருக்கிறார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதில் உண்மை இருப்பதாகவும் தோன்றும். மாயங்கள் ஒளிந்திருப்பதாகவும் தோன்றும். அது அவரவர் பார்வையைப் பொருத்தது.

பொதுவாக எஸ்.கே. குறிப்பிடும் போது வெளியில் தெரியாதவைகளைப் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம் என்பார். அதற்கு அவர் குறிப்பிடத்தக்க காரணத்தையும் சொல்வார். அதாகப்பட்டது, மரத்தின் வேர்கள் வெளியே தெரிவதில்லை. வேர்கள் தங்கள் பணியை ஆற்றாவிட்டால் வெளியில் தெரியும் மரத்தின் கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் என்று எதுவும் இல்லை. அதனால் வெளியில் தெரிபவைகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஏமாற்றம் அடைந்து விடக் கூடாது. ஏமாந்து விடவும் கூடாது. உள்ளார்ந்த விசயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த உள்ளார்ந்த விசயத்தை எஸ்.கே.விடம் நீருற்றிச் செழிக்க செய்வது எது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். உள்ளே அகவயத்தன்மையில் இருக்கும் மாயத்தன்மை புறவயத்தன்மையில் இருக்காது. அதனால் அதுவால் போதைத்தன்மையைக் கொடுக்கவும் முடியாது. அகவயத்தின் போதைத்தன்மையையும் அது உருவாக்கும் மாயத்தன்மையையும் என்னவென்று சொல்வது?

*****

No comments:

Post a Comment

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...