26 Jun 2021

புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும்

புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும்

            அவ்வளவு கடுமையான மன உளைச்சலைச் சந்திப்பீர்கள் என்று நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனால் சந்திப்பீர்கள். அந்த மன உளைச்சல் எதிலிருந்து வந்தது என்று யோசிப்பீர்கள். உங்களால் சரியான ஒரு பதிலைக் கண்டறிய முடியாது. மன உளைச்சல் என்பது மிகச் சரியாக நடக்க வேண்டும் என்று உணர்விலிருந்து எழுந்ததா? அல்லது எல்லாரையும் மிகச் சரியாக மாற்ற வேண்டும் என்ற உணர்விலிருந்து எழுந்ததா? என்பது புரியாது.

            புரிந்து கொள்ளுதலும் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுதலும் ஒரு நல்ல வழிமுறை. மனதையும், உடலையும் பாதுகாக்க ஒரு வகையில் அது மிகச் சிறந்த வழிமுறை. யாரும் சொல்லிப் புரிந்து கொள்வதில்லை. அவர்களாகப் புரிந்து கொள்வதற்கான தேவைகள் உருவாக வேண்டும். இதை உணராமல் உளைச்சல் கொள்வது அதிகம் நிகழ்ந்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்குப் புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும் தேவைப்படும். சொல்லப்படுகிற இந்த வழிமுறைக்குக் கூட அது பொருந்தும். புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும் இல்லை என்றால் என்னதான் செய்து விட முடியும் சொல்லுங்கள்.

            மனிதர்களுக்குப் புரிய வைத்து விட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு இடையேயான புரிதல்வேறுபாடுகள் எப்போதும் இருக்கும். அந்தப் புரிதல் வேறுபாடுகளைச் சமன்படுத்துவது சிக்கல் நிறைந்தது. ஓரளவுக்கு வெற்றி பெறலாம். முழுமையாக வெற்றிப் பெறுவதற்கு ஆயுள் போதாது.

            தயிர் ஏன் புளிக்கிறது? பாகற்காய் ஏன் கசக்கிறது? கரும்பு ஏன் இனிக்கிறது? பாக்கு ஏன் உவக்கிறது? உப்பு ஏன் கரிக்கிறது? இதைப் புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் அவசியம். இதில் தேவையில்லாத மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக உங்களின் விருப்பமான சுவைக்கேற்ப நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதை மாற்றிக் கொள்ளலாம். அது மிக எளிமையாக இருக்கும்.

            உங்களை உங்களால் மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள முடியாது. உங்கள் தவறு உங்களுக்குப் புரிந்தாலும் அதை உங்களால் நிறுத்திக் கொள்ள முடியாது. பிறகு இந்தப் புரிதலால் பயனென்ன என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவும், நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும் அந்தப் புரிதல் தேவை. ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது? ஏதோ ஒன்று ஏற்றுக் கொள்வதைத் தடுக்கிறது என்றால் உங்கள் புரிதலால் பயனில்லாமல் போகலாம். எங்கே புரிந்து கொள்ளுதலும் புரிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளுதலும் ஒருங்கே நிகழ்கிறதோ அங்கே மாற்றம் உடனடியாக நிகழ்கிறது.

            நீங்கள் நிறைய நூல்களை வாசிக்கலாம். வாசிப்பு புரிதலுக்கான புதிய வாசல்களைத் திறந்து விடுகிறது. உங்கள் புரிதல் மேம்பட வழிவகுக்கும். நீங்கள் வாசிப்பதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மாற்றம் நிகழும். இது அறிவியல் விதியைப் போன்றது.

            ஓய்வில்லாத அதீத ஒன்று உங்கள் மனதைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்றால் உங்கள் புரிதலில் ஏற்றுக் கொள்ளுதல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். இந்தத் தடுமாற்றம்  வாழ்க்கை மீதான எரிச்சலை அதிகப்படுத்திக் கொண்டு இருக்கும். வாழ்க்கையில் எதையும் எரிச்சல்படாமல் பார்ப்பது ஒரு கலை. அதற்கு நீங்கள் புரிதலை நேசிக்க வேண்டும். புரிந்து கொண்டதை ஏற்றுக் கொள்வதன் பக்குவம் பெற வேண்டும்.

            மனக்குறை மனதை ஆட்டிப் படைக்கலாம். இப்பிடியெல்லாம் ஆகும் என்று தெரிந்தும் அதற்கேற்ற முன்னெச்சரிக்கையோடு விட்டேத்தியாக இருப்பதாக நினைக்கலாம். நாளடைவில் உங்கள் மனக்குறையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையும் உண்டாகலாம். எதிலும் ஓர் அங்கீகாரம் கிடைக்காதது போல உணரலாம். யாரும் உங்களை மதிக்காதது போல நினைக்கலாம். உங்கள் பேச்சு எங்கும் கவனிப்பு பெறாததாக எண்ணலாம். உங்களை நீங்களே மிகவும் தாழ்வாக கருதிக் கொள்ளலாம். எல்லாம் புரிதலில் ஏற்படும் குறைபாட்டைக் காட்ட கூடியவை. புரிதலில் உண்டாகும் பின்னடைவுக்கான அறிகுறிகளைக் காட்டுபவை.

            முன்பு உங்களுக்குக் கிடைத்த மரியாதை தற்போது கிடைக்காதது போல உணரலாம். வேறு யாருக்கோ முக்கியத்துவம் கொடுப்பதாக நினைக்கலாம். ஒவ்வொரு நிகழ்விலும் மிகச் சரியாக நடந்தும் நீங்கள் புறக்கணிக்கப்படுவதாக உங்களுக்குள் ஒரு சித்திரம் தோன்றலாம். எங்கு சென்றாலும் உங்களுக்கு அங்கு மதிப்பு இல்லாததாகக் கருதலாம். ஒன்றில் தொடர்வதா? வேண்டாமா? என்று கூட யோசித்து தடுமாறிக் கொண்டிருக்கலாம். அது குறித்து ஏதோ ஒரு சிறு புரிதல் உங்களுக்கு இல்லாமல் இருக்காது. நிச்சயம் இருக்கும். ஆனால் அதை ஏற்றக் கொள்வதில் தயக்கம் இருக்கும்.

            அநேகமாகப் புரிதலும் ஏற்றலும் இல்லாத மனநிலைக்கு எல்லாவற்றையும் விலக்கும் குணாதிசயம் இயல்பாக வந்து விடும். அந்த மனநிலைக்கு எதுவும் பிடித்தமானதாக இருக்காது. மிகவும் விரக்திக்கு உள்ளான வெறுப்பு மனநிலை இயல்பாக உண்டாகும். மனச்சோர்வு ஆட்டிப் படைக்க கூடும். சில நேரங்களில் மனஇறுக்கம் தாங்க முடியாமல் கூடப் போகலாம். மனம் போன போக்கில் எதையெதையோ செய்யலாம். முன்பு மனம் அமைதி அடைந்ததைப் போல தற்போது அமைதி அடையாது. நிலைமை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நிச்சயமாக இப்போது அப்படி இல்லை. மிகவும் மோசமான ஒரு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இதைப் பார்க்க பார்க்க எதற்கெடுத்தாலும் கோபம் பொத்துக் கொண்டு வரும். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு ஆட்பட்டு விட நேரிடும். சரியாக இருக்க வேண்டியதில் கொஞ்சம் பிசகினாலும் கோபம் தலைவிரித்து ஆடத் தொடங்கி விடும். முன்பெல்லாம் அது கிடக்கிறது போ என்று அதைத் தூக்கிப் போட்டு விட்டு கடந்த நீங்கள் இப்போது அப்படி கடக்க முடியாமல் சிரமப்பட நேரிடலாம்.

            உங்களது வழக்கமான கடமைகளைச் செய்ய முடியாமல் தடுமாறலாம். வலிந்து செய்ய வேண்டிய பல காரியங்களில் ஒன்றும் செய்யாமல் இருக்கலாம். ஏதோ ஒரு அல்பத்தனமான உணர்வில் சிக்குண்டு நீங்கள் நிலைகுலையலாம். பொறுமையாக இதைப் புரிந்து கொள்ளுங்கள். மனதளவில் ஒன்றை ஏற்றுக் கொள்வதன் அதிசயத்தைச் சாதாரணமாகப் பார்க்காதீர்கள். அது குறைபாட்டை நிறைவு செய்கிறது. முழுமையை நோக்கி உங்களைத் தள்ளுகிறது. சரியான புரிதலை ஏற்றுக் கொள்வதன் அவசியத்தையும் ஏற்றுக் கொள்வதைத் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் அது சொல்கிறது. புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்பதை ஒருமுறை அனுபவித்துப் பார்த்து விட்டால் அது அப்படித்தான் என்பது உங்களுக்குப் புலப்படும். தயவு செய்து இதை இதன் வழியாகப் புரிந்து கொள்ள முயலாதீர்கள். அதன் பயன்படாமல் போய் விடும். இதை உங்களது உள்ளார்ந்த அனுபவத்தின் மூலமாகப் புரிதலுக்கு உட்படுத்தி ஏற்றுக் கொள்ளுங்கள்.

            பயன்படா பொருளொன்றை வாங்கிப் போடுவதிலோ, வாங்கிய பொருளைப் பயன்படுத்தாமல் போடுவதிலோ என்ன இருக்கிறது? புரிதலுக்கும் ஏற்றுக் கொள்ளுதலுக்கும் இது பொருந்தும்.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...