25 Jun 2021

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு உலகையும் சுற்றி வரும் மனம்

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு உலகையும் சுற்றி வரும் மனம்

            சூழ்நிலைகள் அவ்வளவு நெருக்கடியாக இருக்கிறதா, அல்லது தான் அப்படி உணர்கிறோமா என்று சந்தேகம் வந்து விட்டது எஸ்.கே.வுக்கு. இந்தச் சந்தேகம்தான் எஸ்.கே.வை இப்படிச் சிந்திக்க வைத்தது.

            “யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. அதிலிருந்து வெறுப்பு பிறக்கிறது. அதிலிருந்து கோபம் பிறக்கிறது. கோபம் கொஞ்சம் கொஞ்சமாக பகையை நோக்கி நகர்த்துகிறது.”

            ஒருவர் வேலையே செய்யவில்லையா? அதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவருடைய இயல்பு அதுதான் என்று அதை விட்டு விடுவதுதான் நல்லது என்று தோன்றியது எஸ்.கே.வுக்கு. இந்த உலகில் யாரும் திருந்துவதற்குத் தயாராக இல்லை எனும் போது அவர்களைத் திருத்தும் முயற்சி வீணாகி விடுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சுபாவத்துடன் வாழ படைக்கப்பட்டுள்ளான் எனும் போது யாருடைய சுபாவத்தையும் மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை என்பதை நினைத்த போது ஒரு சோர்வு வந்து ஆட்கொண்டது எஸ்.கே.வை.

            எடுத்துச் சொல்லி மனிதர்களை மாற்றுவது என்பது காலாவதியாகி விட்ட நுட்பமாகி விட்டது. யாரும் எதைச் சொல்லியும் திருந்தப் போவதில்லை எனும் போது எதையும் சொல்வது என்பது ஒரு பைத்தியகாரத்தனமான செயல்பாடாகி விட்டதாக நினைத்தார். ஆனால் இதில் நுட்பமாக சாதுர்யமாகப் பேசி நழுவிக் கொள்வது எக்காலத்துக்கும் பொருந்தும் முறையாக இருக்கிறது என்பதாகவும் நினைத்தார். அப்படித்தான் நழுவிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் என்றும் நினைத்தார். 

            ஒன்றை மாற்ற ஆரம்பித்தால் வரிசையாக எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதாக இருக்கிறது. அப்படி மாற்றுவது முன்னர் இருந்த நிலையை விட நல்ல நிலையைத் தருமா? தராதா? எனும் கேள்வி எழும் போது அதற்கு விடை காண்பதும் சிரமமாக இருந்தது எஸ்.கே.வுக்கு. பல நேரங்களில் மாற்ற நினைத்த மாற்றம் மோசமான பின்விளைவுகளை உருவாக்கி, அதை ஏன் மாற்ற நினைத்தோம் என்ற உணர்வையும் எஸ்.கே.வுக்கு உண்டாக்கி இருந்தது.

இது சரியா? அது சரியா? என்ற குழப்பத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருந்திருக்கலாமே என்ற உணர்வும் மேலிட்டு விடுகிறது எஸ்.கே.வுக்கு. ஆகவே எஸ்.கே. தனக்குத்தானே சொல்லிக் கொண்டார், “பொறுமையாக இரு. நிகழ வேண்டிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைத் தடுக்க யாராலும் முடியாது.”

            “ஆனாலும் மாற்றங்களை ஏன் வலிந்து உருவாக்க நினைக்கிறேன்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார் எஸ்.கே. ஆசைதான் காரணமோ அதற்கு? அப்படி ஆசைப்பட்டுத்தான் மாற்ற நினைக்கிறேனோ? அந்த ஆசையில்லா விட்டால் எதையும் மாற்ற வேண்டும் என்ற உணர்வு உண்டாகாதா? ஏன் ஆசைப்பட்டு அல்லோகலப்பட வேண்டும்? தேவை இல்லைதானே? ஆசைப்படா விட்டாலும் ஆசைப்பட நினைத்ததோ, நினைக்காததோ ஏதோ ஒன்று நடக்கத்தானே போகிறது? அதில் மாற்றமுண்டா என்ன? கேள்விகள் சுற்றிச் சுழன்றடிக்க ஆரம்பித்தன எஸ்.கே.வின் மனதுக்குள். கேள்விகள் ஒவ்வொன்றும் எஸ்.கே.வைப் பெருத்த மனஉளைச்சலை நோக்கிக் கொண்டு சென்றன.

            இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும், மனச்சோர்விற்கும் ஆளாக வேண்டுமா? என்பது கூட ஒரு கேள்வியாக எஸ்.கே.வின் மனதில் தொக்கி நின்றது. வேலைகள் அதிகமாகும் போது அந்த வேலையிலிருந்து முடக்க மனம் செய்யும் தந்திரமோ இந்த உளைச்சலும் சோர்வும் என்று கூட யோசித்துப் பார்த்தார் எஸ்.கே.

உண்மையில் எஸ்.கே.வுக்கு வேலைகள் அதிகம். காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அவர் பல வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சொன்னால் நம்புவது சிரமம் என்றாலும் எஸ்.கே.வுக்கு உறங்குவதும் இப்போது ஒரு வேலையாக ஆகி விட்டது.

எல்லாம் ஒன்றிணைந்து உருக்குலைத்த போது எஸ்.கே. ஒரு கோபக்கார மனிதராக ஆகி விட்டார்.

            கோபம் என்பது ஒரு மனநிலை. அந்த நேரத்து மனநிலை. ஒரு தீவிரமான மனநிலை. பிறகு அது வடிந்துப் போய் தானா அப்படி நடந்து கொண்டோம் என்று யோசிக்க வைத்து விடுகிறது எஸ்.கே.வை. இதனைக் கருத்தில் கொண்டு கோபத்தையும் அடக்க முடிந்ததில்லை எஸ்.கே.வால். எந்த ஒன்றையும் அடங்கிப் போய் விடச் செய்திட முடியாது. அது மிக வீரியமாக வெளிப்பட்டு விடும் அபாயத்தை உருவாக்கி விட்டு விடுகிறது எஸ்.கே.வுக்கு.

            கோபம் வடிந்த நேரத்தில் ஏன் கோபப்பட்டோம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது எஸ்.கே.வுக்கு. கோபப்படாமல் இருந்திருக்க முடியுமா என்றும் யோசித்துப் பார்ப்பதுண்டு எஸ்.கே. அப்படி இருந்திருந்தால் ஒருவேளை எப்போதும் சந்தோஷமாக இருந்திருக்க முடியுமோ என்னவோ! ஒரு கோபம் தேவையில்லாத பல பிரச்சனைகளை உருவாக்கி துக்ககரமான காரியத்தை உண்டு பண்ணுவதில் துணையாக நின்று விடுகிறதே என்று பெருமூச்சொன்றை இழுத்து விட்டுக் கொண்டார் எஸ்.கே.

            எஸ்.கே.வுக்குப் பல நேரங்களில் எதற்காகக் கோபப்படுகிறோம் என்பதைக் கண்டறிவது கடினமாகி விடுகிறது. அந்த அளவுக்கு எஸ்.கே.வின் மனமானது பல விதமான உணர்வுகளால் அழுத்திப் பிடிக்கப்பட்டு பீடிக்கப்பட்டு இருக்கிறது. அழுத்தப்பட்ட உணர்வுகளுக்கு ஒரு வெளியேறும் வழியாக கோபம் மாறி விடுகிறது என்பதை எஸ்.கே. புரிந்து கொள்ளலாமல் இல்லை. ஆனால் எஸ்.கே.வுக்கு அதிலிருந்து விடுபடுவது பெரிய பாடாக உருமாறத் தொடங்கியிருந்தது.

            வர வர மனிதர்களின் மீதான மனிதர்களின் கோபம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது எஸ்.கே.வுக்கு. ஒருவர் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற் போல் இல்லை என்று எப்போது எஸ்.கே. நினைக்கத் தொடங்குகிறாரோ அப்போதே அவர் எஸ்.கே.வுக்குப் பிடிக்காமல் போயி விடுகிறார். அந்தப் பிடிக்காமல் போய் விடும் தன்மை வெறுப்பை மனதுக்குள் தூவ ஆரம்பித்து விடுகிறது. வெறுப்பு வளர வளர கோபமும் வளர ஆரம்பித்து விடுகிறது.

            இன்னொரு வகையில் வெறுப்பு என்பது வளர வைக்கப்படுகிறது. சுற்றியுள்ள மனிதர்கள் அதைத் திறம்பட வளர்த்தெடுக்க உதவுகிறார்கள். எதற்கெடுத்தாலும் அக்கம் பக்க்ததில் இருப்பவர்களைப் பற்றிக் குறை கூறி வெறுப்பை மனதுக்குள் வளர செய்யும் மனிதர்கள் சூழ்ந்து இருக்கிறர்கள். எப்போது பார்த்தாலும் மனிதர்களுக்கு மனிதர்களைப் பற்றிய குறைதான். ஒரு துரதிர்ஷ்டமான உண்மை என்னவென்றால் மனிதர்களுக்கு மனிதர்களைப் பிடிக்காது. அந்தப் பிடிக்காமையை எல்லாம் மனிதர்கள் வெறுப்பாக மனிதர்களின் காதில் ஊதித் தள்ளுகிறார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்க்கலாம். எதுவும் உதவுவதாகத் தெரியவில்லை. இப்போது எஸ்.கே. சோர்ந்துப் போய் விட்டார். தன்னால் செய்வதற்கு எதுவுமில்லை என்பது போல காணப்பட்டார். அத்துடன் மனிதர்கள் காதில் ஊதிய வெறுப்பு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டார்.

            விடுபடுவதற்கான வேலையை எப்போதும் செய்து கொண்டிருக்க முடியாது என்பது புரிந்தது. அதது அதுவாக விடுவித்துக் கொள்ளும் என்ற நிலையை நோக்கி நகரும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எஸ்.கே. மிகவும் சலித்து வெறுத்துப் போன நிலையில் திரும்பவும் நம்பிக்கையை நோக்கி நகர ஆரம்பித்தார்  திரும்பவும் கோபம் கோள்ள, திரும்பவும் உளைச்சல் அடைய, திரும்பவும் சலித்து வெறுக்க, திரும்ப நம்பிக்கையை நோக்கி நகர.

பூமி மட்டுமா மனமும் தனக்குத்தானே சுழன்றுக் கொள்கிறது. தன்னைத் தானே சுழன்றுக் கொண்டு சூரியனையும் சுற்றி வரும் பூமியைப் போல தனக்குத் தானே சுழன்று கொள்ளும் மனம் உலகையும் சுற்றிக் கொள்கிறது.

*****

No comments:

Post a Comment

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...