24 Jun 2021

வாழ்க்கையெனும் நெகிழ்ந்து நீளும் கலை

வாழ்க்கையெனும் நெகிழ்ந்து நீளும் கலை

வாழ்க்கைக் குறித்துச் சிந்திக்கும் போது வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தார் எஸ்.கே.

நல்லதோ,கெட்டதோ எல்லாம் வாழ்வதற்கான போராட்டம்தான் என்று பட்டது எஸ்.கே.வுக்கு. தன் வாழ்நாளில் எவ்வளவோ பார்த்து விட்டார். இந்த வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கு ஒற்றை வழி ஏதேனும் இருக்காதா என்று யோசித்துப் பார்த்தார்.

பல்வேறு வழிகளில் எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டும் எதிர்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்பது அவருக்குத் தெரிந்தது. ஆனால் அவர் கண்களுக்கு ஒரு வழியின் தன்மை புலப்பட்டது. அநேகமாக அந்தத் தன்மை பொறுமை எனப் புரிந்து கொண்டார். பொறுமையின் சக்தி எல்லலையற்றது. எல்லையற்ற சக்தியைப் பெற பொறுமையே வழி என்பதை அவர் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதுவரை செய்தவற்றை நினைத்த பார்த்த போது அதில் ஏதேனும் பொதுமை இருக்கிறதா என்று அலசிப் பார்த்தார். தனக்கு எப்பிடி வருகிறதோ அப்படித்தான் அவர் செய்திருக்கிறார். அதில் பணிவாக இருப்பது போல் ஒரு நடிப்பு தேவைப்பட்டிருப்பதை உணர்ந்தார்.

மனதில் தோன்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கவில்லை. அப்படி வெற்றி பெற்றதற்கான மனநிறைவான நிகழ்வுகளும் அவருக்கு நிகழ்ந்ததில்லை. அநேகமாக அவர் தம் வாழ்நாளில் எதிர்பார்த்தபடி வாழ்ந்திருக்க முடிந்ததில்லை. வாழ்வு எதை கொண்டு வந்து நிறுத்துகிறதோ அதை எதிர்கொண்டபடி வாழ்ந்திருக்கிறார்.

மனதைப் பற்றி நினைத்த போது மனம் கொண்டு வந்து நிறுத்திய அத்தனை நினைப்புகளும் ஒரு மாயைப் போல எழுந்து அடங்கியது. நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மாயையை மனமானது கொண்டு வந்து நிறுத்தியதை நினைத்துப் பார்த்த போது அதன் பிரமாண்டத்தைக் கண்டு வியந்து போனார்.

மனதின் மாயையை நம்பி எதையும் செய்வதற்கில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. செய்த அடுத்த நிமிடமே அந்த நினைப்பு வேறு மாதிரியாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குள் எஸ்.கே. தன் வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடந்திருந்தார்.

மாறும் நினைப்புகளுக்கு ஏற்றபடி மறுபடியும் திருப்திபடுத்தலைத் தொடர வேண்டியிருக்கும் ஒரே மாதிரியான சுழற்சியான வாழ்க்கையை அவரால் தவிர்க்க முடியவில்லை. மாற்றி மாற்றி எப்படிச் செய்தாலும் திருப்தி வராத, திருப்திக்குக் கொண்டு வர முடியாத நிலை அது. அதைப் பின்தொடர்வதில் அர்த்தமில்லை என்று புரிந்தாலும் பல ஆண்டுகளாக அவர் கடந்து வந்த வாழ்க்கை அது.

இப்போது இந்த நிலையில் எண்ணிப் பார்க்கும் போது தன் கையே தனக்கு உதவி என்பதை எண்ணிப் பார்த்து மலைத்துப் பார்க்கிறார். சாதாரண ஒரு கருத்துதான் அது. இளம் வயதில் அவர் கேள்விப்பட்ட கருத்தும் கூட. அந்தக் கருத்து அவர் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எல்லாரும் அவரைக் கைவிட்டுப் போய்க் கொண்டு இருக்க அந்தக் கருத்தின் அர்த்தம் அவருக்கு ஆழமாக விதையூன்றிய மரத்தைப் போல செழித்து அவர் ஆழ்மனதுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. எதற்காகவும் யாரிடமும் சென்று பிச்சைக் கேட்டுக் கொண்டு நிற்க வேண்டியதில்லை என்பதன் உச்சமாக அது உருப்பெற்றுக் கொண்டிருந்தது.

எஸ்.கே. தனது சம்பாஷனைகளால் ஒரு விசயத்தைத் தெரிந்து கொண்டார். மனிதர்கள் மகத்தான ஏமாற்றுக்காரர்கள். ஒவ்வொருவருக்கும் ஏமாற்றுவது ஒரு பிடித்தமான விளையாட்டும் பொழுதுபோக்கும் ஆகும். ஏமாற்றுவதை ஒரு வேலையாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மனம் இருக்கிறதென்றால், எஸ்.கே.வுக்கும் ஒரு மனம் இருக்கத்தானே செய்யும். அனைவரும் தங்கள் தங்களின் மனதைப் பெரிதாகப் பினாத்துகிறார்கள். எஸ்.கே.வினுடைய மனதின் குரலைக் கேட்க மறுத்திருக்கிறார்கள். எஸ்.கே.வைக் குரலற்ற மனிதராகவும் நினைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் மனம் முக்கியம். மற்றவர்களுடைய மனம் அநாவசியம். ஒவ்வொருவரும் தாங்கள் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இடையில் எஸ்.கே. பேசி விட முடியாது. எஸ்.கே.வைப் பேச விட்டதும் இல்லை. அவர் இடையில் ஒரு வார்த்தைப் பேசினால் கோபம் வந்து விடும். தன்னுடைய குரலையும் கொஞ்சம் கேளேன் என்று சொல்லிட முடியாது. ஆவேசமாகி விடுவார்கள்.

தான் எதைச் சொன்னாலும் அதை அப்படியே வேண்டுமென்றே மாற்றிச் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டவராக எஸ்.கே. இருந்தார். யாரிடம் எதைச் சொல்வது? என்னத்தைச் சொல்வது? ஒவ்வொருவரும் தங்களைத் தயாரித்துக் கொண்ட விதம் அப்பிடி. அதை எதுவும் செய்வதற்கில்லை. அது அப்படித்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியவராக இருந்தார்.

            யாரையும் எதையும் சொல்லித் திருத்தி விட முடிவதில்லை என்பது அவர் வாழ்வில் கண்ட ஒரு மோசமான பாடமாக அமைந்திருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் உண்டாகி விட்டது. அந்த மனப்போக்கில் வாழ்வதுதான் அவர்களுக்குத் திருப்தியாக இருக்கிறது. அந்தத் திருப்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மற்றவர்களை என்ன செய்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். அது வன்முறையாக இருந்தாலும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த வன்முறையை அவர்களின் தர்மம் என்று சொல்கிறார்கள். அவர்களின் வன்முறை என்று சொல்கின்ற அந்தத் தர்மத்தைப் பொறுத்துக் கொண்டுதான் வாழ வேண்டியதாக இருக்கிறது என்பதை வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக எஸ்.கே. ஏற்றக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

மனிதர்களைப் பற்றிப் பலவிதமான கருத்துகள் இருந்தாலும் மனிதர்களின் குழுமமான சமூகம் பற்றி ஒரு கருத்தும் எஸ்.கே.விடம் இருக்கிறது. அதன் சாராம்சம் இதுதான். சமூகம் என்று ஒன்று இல்லையென்றால் மனிதர்களிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றி விட முடியாது. பல மனிதர்கள் ஆசுவாசமாக இருப்பது சமூகம் என்ற அமைப்பு ஒன்று இருப்பதால்தான். சமூக அமைப்பு வேண்டாம் என்று இழுத்து மூடி விட்டால் மனிதர்களின் பாடு திண்டாட்டமாகி விடும். ஒரு மனிதரைச் சமாளிப்பது என்பது கூட சாமானியமானதன்று. சமூகங்கள் அதை எப்படியோ செய்கின்றன. ஏதோ ஒரு வகையில் சமூக அமைப்பு மனிதரைப் பயமுறுத்திக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

பாருங்கள் இதை இப்படி எழுத ஆரம்பித்து எப்படி நீளுகிறதென்று? இது இவ்வளவு நீண்டு செல்லும் என்று எஸ்.கே. கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அது பாட்டுக்கு நீண்டு கொண்டே செல்கிறது. இதை யாரும் நீட்டிக்கவில்லை. அதுவாக நீண்டு கொண்டு செல்கிறது. நீண்டு கொண்டு செல்வது அதன் சுபாவம். அந்த நீட்சியில் பயணித்துக் கொண்டு இருப்பது வாழ வேண்டியவர்கள் செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத வேலை என்பது எஸ்.கே.வுக்குத் தெரியும். நெகிழ்ந்தபடி வாழ்பவர்கள் எப்படியோ வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். அது முடியாதவர்கள் தீவிர மனநிலையோடு தமக்குத் தாமே விரோதமாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள் என்பது போலத்தான் எஸ்.கே.வுக்குத் தோன்றுகிறது.

*****

No comments:

Post a Comment

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...