23 Jun 2021

எப்போது தூக்கம் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க இயலாதவன்

எப்போது தூக்கம் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க இயலாதவன்

நடு இரவில் சம்பந்தமில்லாமல் விழித்த போது எஸ்.கே.வுக்குப் பொடணியில் தட்டியது போல இருந்தது. சம்பந்தம் இல்லாமல் சிந்தனைகள் அறுந்து விழுந்து கொண்டிருந்தன.

எஸ்.கே.வுக்கு இப்படித் தோன்றியது.

ஒருவரின் அந்தரங்கமான விசயத்தில் ஆழமாகத் தலையிடக் கூடாது. அப்படித் தலையிட்டால் அவரின் அந்தரங்கமான விசயத்திலிருந்து அவர் மீள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு விடுகிறது. முடிவில் அவரை மாற்ற முயற்சி செய்து அவரின் பகைமையைத் தேடிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அவருக்கு அந்த அந்தரத்தில் மூழ்கி இருப்பதே திருப்தியாக இருக்கிறதென்றால் அப்பிடியே இருந்து விட்டுப் போகட்டும். அவரை மீட்கிறேன் என்று போய் அவருக்கு ஏன் பிடிக்காதவராக மாற வேண்டும்?

இப்படிச் சிந்தித்ததும் எஸ்.கே.வுக்கு அந்தராத்மாவில் ஒரு நிறைவு உண்டாகியிருந்தது. உடனே அந்த நிறைவைக் கலைத்துப் போடுவது போல அடுத்தடுத்த சிந்தனைகள் இப்படி எழுந்தன.

ஏன் ஒருவிதமான வெறுப்பும் சலிப்பும் தட்டுகிறது? ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது? ஏதையோ மல்லுகட்டிக் கொண்டு செய்து கொண்டு இருப்பது போல் தோன்றுகிறது? அப்படி ஏன் மல்லுகட்டிக் கொண்டு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லாத போதும் ஏன் செய்து கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது?

அதற்கு ஒரு தீர்வு கிடைப்பது போல் அதைத் தொடர்ந்து இப்படிச் சில சிந்தனைகள் எழுந்தன.

வாழ்க்கையைப் பொருத்த வரையில் வாழ வேண்டும் என்றால் பிடித்த விதமாக வாழ்ந்துக் கொள்ள வேண்டும். பிடிக்காத விதமாக யாராலும் வாழ்ந்து விட முடியாது. துரதிர்ஷ்டவசமாகப் பிடிக்காத விதமாகத்தான் தான் உட்பட அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

            மனதுக்குப் பிடிக்காத ஒரு செயலைச் செய்வது எப்போதும் சிரமம்தான். மனதுக்கு ஏதோ ஒரு விதத்தில் பிடித்திருந்தால்தான் ஒரு செயலையும் செய்ய முடிகிறது. ஆனால் பணம் இருக்கிறதே பணம். அது பிடிக்காத காரியத்தையும் பிடித்தது போல நினைக்க வைத்துச் செய்ய வைத்து விடுகிறது.

ஒருவரிடம் போய் அவரது மனதுக்குப் பிடிக்காத செயலைச் செய்ய சொன்னால் செய்ய சொல்பவர் நல்லவராக இருந்தாலும் கெட்டவராகி விடுவார். அவர் மனதுக்குப் பிடித்த செயலைச் செய்ய சொல்பவர் கெட்டவராக இருந்தாலும் நல்லவராகி விடுவார்.

            இந்த உலகில் யாரும் நல்லவர், கெட்டவர் என்று எவரும் இல்லை. அவரவர் மனதுக்குப் பிடித்த செயல்களைச் செய்கிறார்கள். அதன் வெளிப்பாடு நல்லது, கெட்டது என இரண்டாகப் பிரிகிறது. பொதுவாக பிறருக்குத் துன்பம் தருவது கெட்டதாக, துன்பம் தராதது நல்லதாகப் போய் விடுகிறது. துன்பம் தருவதை மனிதச் சமூகம் விரும்பாதது என்பதால் கெட்டது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. நல்லது மட்டும் ஏற்கப்படுகிறது. சமயங்களில் கெட்டதில் காணப்படும் இன்பத்தின் காரணமாக ஒரு சிலரால் அது ஏற்கப்படலாம். எல்லாராலும் ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறியாக நிற்கும்.

            தன்னைப் பற்றிச் சிந்திக்க துவங்கி எங்கேயோ போய் நிற்பதை உணர்ந்தால் எஸ்.கே. இதற்கு மேல் இந்தச் சிந்தனைகளோடு போராடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை எனத் தோன்றியது. மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறி வேறு கிரிச் கிரிச் என்று சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்ததில் உறக்கம் வருமா என்ற சந்தேகம் எழுந்தது எஸ்.கே.வுக்கு. படுத்த நிலையிலேயே அருகில் இருந்த அலமாரியில் கையை விட்டுத் துழாவினார் எஸ்.கே. கையில் டக்கென்று அகப்பட்டது மாத்திரை. தூக்க மாத்திரை. தண்ணீர் பாட்டிலைத் தொட்டி தூக்கினார். லேசாக இருந்தது. தண்ணீர் கொண்டு வந்து வைக்க மறந்திருந்தார்.

தண்ணீர் கொண்டு வந்த குடிக்க பேரலுப்பாக இருந்தது. மாத்திரையை உள்ளே செலுத்திக் கொண்டார். எச்சிலைத் தண்ணீர் அளவுக்குப் பெருக்க முடியுமா என்று பார்த்தார். ஏதோ கொஞ்சம் பெருகியதில் மாத்திரை வழுக்கிக் கொண்டு உள்ளே போனது. எப்போது தூக்கம் வந்தது என்ற தெரியவில்லை. தூங்கிப் போனார். விழித்த போது எப்போது தூங்குகிறோம் என்பதை மட்டும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்விச் சிந்தனையைத் துருத்த ஆரம்பித்தது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...