7 Apr 2021

இந்திய நாட்டு வைப்பகம்

இந்திய நாட்டு வைப்பகம்

            ‘பேங்க்’ என்பதை பாங்கு’ என்று குறிப்பிட்டால் தமிழாகிவிடும் என்று ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார் எழுதிய புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். வங்கி என்பது பெண்கள் அணியும் அணிகலன் ஒன்றோடு தொடர்புறுவதால் ‘பேங்க்’ என்பதை ‘பாங்கு’ என்ற குறிப்பிட்டாலே போதும் என்று அந்தப் புத்தகம் மேலும் செல்லும். இந்தப் புத்தகம் எதையும் படிக்காமல் கிராமத்தில் ‘பேங்க்’ என்பதை ‘பாங்கி’ என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அது கூட ‘பேங்க்’ என்பதற்கு பாங்கு என்று சொல்வதுடன் ஒத்து வருகிறது. சொல்வதிலும் ஒருவித ஓசைநயம் இருக்கிறது. இதை கிராமத்து மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். மிக கவர்ச்சியாக இருக்கும். கேட்கும் போதே சொக்கிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

            நான் ‘பேங்க்’ என்பதை ‘வங்கி’ என்று எழுதுவதோடு சரி. ‘ஸ்டேட் பேங்க் இந்தியா’வுக்கு ஏதேனும் விண்ணப்பிக்க வேண்டியிருந்தால் ‘பெறுதலில்’ ‘மேலாளர்’ என்றெழுதி அடுத்ததாக ‘பாரத மாநில வங்கி’ என எழுதி அடைப்புக்குறிக்குள் ‘எஸ்.பி.ஐ.’ என்று எழுதி விடுவதுண்டு. அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பதை அப்படி தமிழாக்கியதாக நினைத்துக் கொள்வதுண்டு. இந்தத் தமிழார்வத்தை மெச்சாத மேலாளர்களை நான் பார்த்ததில்லை. ரொம்ப சிலாகித்துப் பேசுவார்கள். ஆனால் கடன் கொடுக்க முடியாது என்பதை ரொம்ப நாசுக்காகச் சொல்வார்கள். தமிழில் எழுதியற்காகக் கிடைக்கும் மரியாதை அதுதான். தமிழும் அதைத்தானே சொல்கிறது ‘கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி விடக் கூடாது’ என்று. அதனால் கூட மேலாளர்கள் தமிழார்வம் மிக்க ஒருவர் கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி விடக் கூடாது என்று கடன் கொடுக்க மறுத்திருக்கலாம்.

            ஒருமுறை வடவாதி பாரத மாநில வங்கியில் எவ்வளவோ கெஞ்சிக் காலில் விழாத குறையாகக் கேட்டும் கடன் இல்லையென்று வெளியே அனுப்பி விட்டார்கள். ஏன் கடன் எனப் போய் நின்றேன் என்பதைச் சொல்ல வேண்டுமே! அப்போது இயற்கை வேளாண்மை செய்வதற்கு ஏற்றாற்போல் நல்ல வயல் ஒன்று விற்பனைக்கு வந்தது. அதை வாங்குவதற்காகப் பணம் தேவைப்பட்டது. அந்தப் பணத்திற்காகத்தான் வங்கிக்கடன் தேவைப்பட்டது. வங்கியில் எதற்குக் கடன் என்றதும் நான் உண்மையான காரணத்தைக் கூறி விட்டேன். அவர்களும் மகிழ்வுந்து எனும் கார் வாங்குவதற்கு, மனை எனும் ப்ளாட் வாங்குவதற்குக் கடன் கொடுப்போம், இயற்கை வேளாண்மை செய்வதற்கு வயல் வாங்குவதற்கெல்லாம் கடன் இல்லையென்று கண்ணியமாகச் சொல்லி அனுப்பி விட்டார்கள். இதற்காக பாரத மாநில வங்கிக்கு ஒரு வார காலம் வரை குடும்பம் சகிதமாக அலையோ அலையென்று அலைந்து இலவு காத்த கிளி போல திரும்பியிருந்தேன்.  

            அப்போது தேவநேயப் பாவாணர் பற்றிய செய்தியொன்றை படிக்க நேர்ந்த போது அவர் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’வை ‘இந்திய நாட்டு வைப்பகம்’ என்று குறிப்பிட்டிருந்ததை அறிய நேர்ந்தது. பேங்கை ‘பாங்கு’ என்பதை விடவும், ‘வங்கி’ என்பதை விடவும் ‘வைப்பகம்’ என்று சொல்வது சிறப்பாக இருப்பதாகத் தோன்றியது. இந்த செய்தியைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் மறுபடியும் ஒரு முயற்சியாக மீண்டும் ஒரு விண்ணப்பத்தை

மேலாளர்,

இந்திய நாட்டு வைப்பகம்,

வடவாதி கிளை.

என பெறுதல் முகவரியிட்டு எழுதினேன். மேலாளர் என்னை தனியாக அழைத்து அரை மணி நேரத்துக்கு மேலாகப் பேசினார். வங்கியின் பெயரை ‘இந்திய நாட்டு வைப்பகம்’ என எழுதியதால் ஏதேனும் சட்ட ரீதியான பிரச்சனைகள் எழுமோ என பயந்து விட்டார். முடிவில் கடன் இல்லை என்பதை உறுதியாகக் கூறி விட்டார். ஆனால் அந்த மேலாளர் என்னை எப்போது பார்த்தாலும் “நீங்க நல்லா டமிள் பேசுறீங்க!” என்பார்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...