1 Mar 2021

காலம் மாறிப் போகுது!

காலம் மாறிப் போகுது!

செய்யு - 732

            விகடு வூட்டுக்கு வந்தவன் மத்தியானம் சாப்புட்டுப்புட்டு மூணரைக்கு வர்ற எட்டாம் நம்பர் பஸ்ஸூக்குத்தாம் கெளம்புனாம். வூட்டுல எல்லாரும் எவ்ளோ சொல்லிப் பாத்தாங்க வண்டிய எடுத்துக்கிட்டுப் போயித் தொலைடான்னு. கேக்குறாப்புல இல்ல. திருவாரூர்ல அய்யப்ப மாதவன் வக்கீல்கிட்டெ கொடுக்க வேண்டிய கேஸ் கட்டெ எடுத்துக்கிட்டு அவ்வேம் பாட்டுக்குக் கெளம்பிட்டாம்.

            கேணிக்கரை ஸ்டாப்பிங்ல போயி நின்னப்போ அந்த எடத்துல கேணி இல்லாம ஒரு பஞ்சாயத்துப் பைப்பு இருந்துச்சு. காலப்போக்கில எவ்வளவோ விசயங்க இல்லாமப் போயி பேரு மட்டும் இருக்குறது போல இருந்துச்சு அதுக்குப் பேரு. இப்போ அந்தப் பேரும் போயி இந்த ஸ்டாப்பிங்குக்குப் பட்டாமணியோட வாள்பட்டறைய வெச்சி வாள்பட்டறை ஸ்டாப்பிங்ற பேரு வந்துடுச்சு. எட்டாம் நம்பரு பஸ்ஸூ வர்றதுக்குள்ளார என்னென்னமோ நெனைப்புக வந்து ஓட ஆரம்பிச்சிடுச்சு. காலம் ஓட ஓட இன்னும் நெறைய மாற்றங்க உண்டாவுங்றது மட்டும் புரிஞ்சாப்புல இருந்துச்சு விகடுவுக்கு.

            மூணரைக்கு வர்ற வேண்டிய எட்டாம் நம்பரு பஸ்ஸூ மூணு அம்பதுக்குத்தாம் வந்துச்சு. நேரா நேரத்துக்கு வர்ற அந்த பஸ்ஸோட நேரமும் சமீப காலமா மாறிப் போயிடுச்சு. காலு மணி நேரம், இருவது நிமிஷம்ன்னு அதோட நேரத்துல தாமசம் உண்டாயிக்கிட்டெ இருக்குது. ஊருக்குன்னு ஓடுற ஒத்த பஸ்ஸூ எந்த நேரத்துல வந்தா என்னா, எந்த நேரத்துல போனா என்னான்னு சனமும் அதெ பெரிசா கண்டுக்கிடுறடுதில்ல. அதுக்குள்ளத்தாம் அந்த இடைபட்ட நேரத்துக்குள்ளார எம்மாம் நெனைப்புக திருவாரூருக்கும் வடவாதிக்கும் போயிட்டு வந்துப்புடுற எட்டாம் நம்பரு பஸ்ஸைப் போலவே அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் போயிட்டு வந்துப்புடுது.

            ஊர்லயும் வாகனங்கப் பெருத்துப் போச்சு. ஒவ்வொரு வூட்டுலயும் ரண்டு மூணு ரண்டு சக்கர வாகனங்க கெடக்குது. ஊர்லயும் ரண்டு, மூணு பேரு காருகள வாங்கிப் போட்டு வெச்சிருக்காங்க. மின்ன மாதிரி எட்டாம் நம்பரு பஸ்ஸூ இப்போ கூட்டம் கட்டிப் போறதில்ல. அதோட மொத கால டிரிப்பும், கடைசி ராத்திரி டிரிப்பும் கூட நின்னுப் போயி ஒரு நாளுக்கு ஆறு டிரிப்புக மட்டுந்தாம் ஓடிக்கிட்டுக் கெடக்கு. ஆறு டிரிப்பு ஓடுறதால அதெ ஆறாம் நம்பரு பஸ்ன்னு கூட பேர்ர மாத்திடலாம். அந்த ஆறு டிரிப்புக்கே கூட்டம் இல்லன்னு அந்த பஸ்ஸோடு ஓனரு சலிச்சிப் போயிக் கெடக்கறதா கேள்வி.

            ஆமா, இந்த பஸ்ஸூக்குக் காத்துக் கெடந்து, அங்கங்க சடர்ன் பிரேக் போடுறதுக்கெல்லாம் மின்னாடிப் போயி விழுந்து மண்டெயில மோதிக்கிட்டு, விழுந்தடிச்சிப் போயிட்டு வர்றதுக்கு ரண்டு சக்கர வாகனத்த எடுத்தமா, திருவாரூரு போயி வந்தமான்னு போயிட்டு வர்ற சனங்களும் பழகிடுச்சு. ஊருக்கு வர்ற கறிகாய்க எல்லாம் எட்டாம் நம்பரு பஸ்ல காத்தால ஏழரைக்கு ஊருக்குள்ள வர்ற டிரிப்புலத்தாம் திருவாரூலேந்து வந்து எறங்கும். ஒண்ணரைக்கு ஊருக்குள்ள வர்ற டிரிப்புல மளிகெக் கடெ அசாமிங்க சரக்குகள கொண்டாந்து எறக்கிடுவாங்க. மூணரைக்கு வர்ற டிரிப்புல பூவுக வந்து எறங்கிடும். இப்பிடித்தாம் ஒரு மொறைப்பாடா ரொம்ப காலமா ஊருக்குள்ள இருந்துச்சு. இன்னிக்கு எல்லாமே மாறிப் போயிடுச்சு.

            ஊருல இருந்த ரண்டு காய்கறிக் கடைங்க இன்னிக்கு ஏழெட்டா பெருகிப் போயிடுச்சு. அத்தனைக்கும் கறிகாய்க எட்டாம் நம்பரு பஸ்ல வர்றதில்ல. அத்தனெ கடெ காரவுங்களுமா சேந்து ஒரு டாட்டா ஏஸ்ஸ வாடகெக்குப் பேசி வெச்சிருக்காங்க. காத்தால ஏழு மணிக்கெல்லாம் அதுலேந்து கறிகாய்க வந்து எறங்கிடுது. மளிகெ கடெ அசாமிங்களுக்குச் சாமாஞ் செட்டுக பெரும்பாலும் வேன்ல கடைக்கே வந்து சேருது. அது போக வாங்கியார வேண்டிய சாமானுங்களுக்கு ஒரு போன அடிச்சித் தகவல சொல்லிட்டு, டிவியெஸ் எக்செல் சூப்பர எடுத்துக்கிட்டு ஒரு முறுக்கு முறுக்குனா அரை மணி நேரத்துல திருவாரூரு போயிடுறாங்க. ஒரு பத்து நிமிஷத்துல சொல்லி வெச்சிருந்த சாமானுங்கள ரூவாயக் கொடுத்துட்டு வாங்கி வெச்சிக் கட்டிக்கிட்டா அடுத்த அரை மணி நேரத்துல கடைக்கு வந்துடுறாங்க. பூக்கடெகாரவுகளும் அதெ சங்கதியத்தாம் பண்ணுறாங்க. டிவியெஸ் எக்செல் சூப்பர்ர எடுக்குறாங்க. பூவோட வந்து சேருறாங்க.

            இப்பிடியா ரண்டு சக்கர வாகனப் பெருக்கம் பஸ்ல போற கூட்டத்தெ ரொம்பவே சுருக்கிடுச்சு. நாளைக்கி ஏதோ ஒரு சூழ்நெலையா நாட்டுல பஸ்களே ஓடாட்டியும் சனங்களுக்கு அதால பெரிய பாதிப்பு வந்துடுறதப் போறதில்ல. அததுகளும் வூட்டுல வெச்சிருக்கிற ரண்டு சக்கர வாகனத்தெ வெச்சியே சென்னைப் பட்டணம் வரைக்கும் போயிட்டு வந்துடும்ங்க போலருக்கு. ஆர்குடி, திருவாரூருன்னு பள்ளியோடம் போற புள்ளைகளையும் பள்ளியோடத்து வேன்களும், பஸ்ஸூகளும் வூட்டு வாசலுக்கே வந்து புள்ளைப் பிடிக்கிறவுகளப் போல பிடிச்சிப் போட்டுக்கிட்டுப் போவுதுங்க. இங்கயிருந்து கர்ணாவூர்ல இருக்குற பீர் பேக்டரிக்கு வேலைக்குப் போற ஆளுங்களையும் அதுக்குன்னே ஒரு பஸ்ஸூ வந்து பிடிச்சிப் போட்டுக்கிட்டுப் போவுது. போறப் போக்கப் பாத்தா டவுன்ல இருக்குற மளிகெ கடெ, சவுளிக் கடைக எல்லாம் நாளைக்கி எங்க கடையில வந்து சாமானுங்கள வாங்குங்கன்னு அதுக்கே தனியா பஸ்ஸூ வுட்டாலம் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. ஆக இப்பிடித்தாம் எல்லாமுமா சேந்து எட்டாம் நம்பரு பஸ்ல கூட்டத்தெ கொறைச்சிடுச்சு. 

            இந்தக் கேணிக்கரை ஸ்டாப்பிங்க்ல இதெ பழைய காலமா இருந்தா பஸ்ஸூ ஏறுறதுக்குன்னு ஒரு கூட்டமே நிக்கும். பஸ்ல ஏறுனா எடம் கெடைக்குமோ, கெடைக்காதோன்னு சனங்க அலமலந்துப் பேசிக்கும். எப்பிடியோ மாவூர்ர தாண்டுனா பஸ்ல எடம் கெடைக்காமாலா போயிடும்ன்னு ஒருத்தருப் பேசுனா, அங்ஙனயிருந்துதாம்லா கூட்டமே ஏறுமேன்னு இன்னொருத்தரு அதுக்கு ஏறுக்கு மாறா பேசுவாரு. இப்போ குறுக்க மறுக்கப் பேசவோ, ஏறுக்கு மாறா பேசவோ யாருமேயில்ல. விகடுதாம் ஒத்த ஆளா எட்டாம் நம்பரு பஸ்ஸூக்காகக் காத்து நின்னாம். பஸ்ல ஏறுனாச்சும் பேசுறதுக்கு ஆளுங்க இருப்பாங்களா? ஒத்த ஆளா அதுல பிராயணம் பண்ணுறாப்புல இருக்குமான்னு விசித்திரமான ஒரு யோசனெ அவனுக்கு வந்துச்சு. மூணு அம்பதுக்கு வந்த எட்டாம் நம்பரு பஸ்ஸூ அவனெ உள்ள அள்ளிப் போட்டப்போ சீட்டுக்கு ஒருத்தருதாம் பஸ்ல இருந்தாங்க. அடப் பாவமெ இதென்ன இந்தப் பஸ்ஸூக்கு வந்தக் கொடுமென்னு அவ்வேம் நெனைச்சிக்கிட்டாம் தேர்ர வடம் பிடிக்குறதுக்குக் கூட ஆளுங்க வரலேங்றாப்புல.

            எட்டாம் நம்பரு பஸ்ஸூ எல்லா ஸ்டாப்பிங்கிலயும் நின்னுகிட்டும், சடர்ன் பிரேக்க அங்கங்கயும் போட்டுக்கிட்டும் அதெ டிரேட்மார்க் மாறாம போயிக்கிட்டெ இருந்துச்சு. நாலு அம்பது வாக்குல அது திருவாரூரு பஸ் ஸ்டாண்டுல போற வரைக்குமே முழுசா நெரம்புனாப்புல தெரியல. எப்பிடி கூட்டமா ஓடிட்டு இருந்த பஸ்ஸோட நெலமெ இப்பிடியாயிடுச்சேன்னு பாக்கப் பரிதாபமாத்தாம் இருந்துச்சு. அந்தப் பரிதாபத்தையெல்லாம் நெனைச்சி நெனைச்சி அலுத்துப் போயிருப்பாங்கப் போல டிரைவரும், கண்டக்டரும். பஸ்ஸ நிறுத்துன ஒடனே அவுங்கப் பாட்டுக்கு டீத்தண்ணிய குடிக்க கடெ பக்கமா ஒதுங்கப் போயிட்டாங்க.

            மின்னாடி நெலமெ இப்பிடி இருக்குமான்னா, ஏறுற கூட்டம் எடத்தெ பிடிக்கிறதுக்காக சன்னல் வழி வரைக்கும் பாஞ்சிக்கிட்டு ஏறுங்கிறதால டிரைவரும், கண்டக்டரும் நின்னு கூட்டம் ஏறி முடிக்கிற வரைக்கும், "யேப்பா! உள்ளார இருக்குற சனங்க எறங்குனா பெற்பாடு ஏறு! இந்தாருப்பா சன்னலு வழியா ஏறாதே! யே இந்த முண்டியடிச்சிட்டு ஏறுற ஆளு நில்லுய்யா!"ன்னு சத்தத்தெ வுட்டு அதுக்குப் பெறவுதாம் டீத்தண்ணியக் குடிக்கப் போவாங்க சத்தம் போட்டுச் சொல்லாட்டியும் அத்து குத்தமா போயிடும்ங்றாப்புல. அவுங்க போயி டீத்தண்ணிய குடிச்சிட்டுக்கிட்டு வர்றதுக்குள்ள உள்ளார இருக்குற சனங்க, "எலே அப்பிடிச் சத்தம் வெச்சி மொறைப்பாடா எத்தி வுட்டியுளே! எம்மாம் நேரமாடா இஞ்ஞ கெடந்து அவிஞ்சிப் போறது. போனமா டீத்தண்ணிய வாயில ஊத்தணுமான்னு வந்துத் தொலைங்கடே!"ன்னு சத்தத்தெ வைக்கும் ஊருக்கு உபதேசம் பண்டிட்டுக் சாராயக்கடை வாசல்ல நிக்குறீயேங்றாப்புல. இப்போ எல்லா சத்தமும் ஒய்ஞ்சு தேய்ஞ்சுப் போனாப்புல இருந்துச்சு ஆட்டம் முடிஞ்சா அந்த எடம் அநாதியா கெடக்கும்ங்றாப்புல.

            பஸ் ஸ்டாண்டு பக்கத்துலயே வடக்கால நெறைய வாடகெ சைக்கிளு கடைங்க இப்பயும் திருவாரூர்ல இருக்குது. சைக்கிள வாடவைக்கு எடுத்துட்டு அதுல சல்லுன்னுப் போயிட்டுச் சல்லுன்னு வந்துடுவாமான்னு நெனைச்சாம் பஸ்ஸ வுட்டு எறங்குன விகடு. இனுமே இந்த எட்டாம் நம்பரு பஸ்ஸூ ஊருக்குப் போயித் திரும்பி வந்து அதுலத்தாம் ஏறிப் போயாவணும். அதுக்கு எதுக்கு சல்லுன்னுப் போயிச் சல்லுன்னு திரும்பி வந்து பஸ் ஸ்டாண்டுல காத்துக் கெடக்கவான்னு நெனைச்சவேம், நடந்தே வடக்கு வீதிப் போயிடுறதுன்னு தீர்மானிச்சாம். அத்தோட நடந்துப் போனாக்கா சைக்கிள் வாடவெ அஞ்சோ, பத்தோ மிச்சமாவும்ன்னு நெனைச்சப்போ அந்தத் தீர்மானந்தாம் சரின்னு பட்டுச்சு கொஞ்சமா இருக்குற காசிய பஞ்சு மிட்டாய் வாங்கித் தின்னு பறக்கடிச்சிடக் கூடாதுங்றாப்புல. அவ்வேம் பாட்டுக்கு ஓடம்போக்கி ஆத்தோட பாலத்தெக் கடந்து நடக்க ஆரம்பிச்சாம் தன்னோட காலே தனக்கு உதவிங்றாப்புல.

            ஓடம்போக்கி ஆத்துப் பாலத்தோட அந்தாண்ட கரையில குறுக்கா வந்து சேர்ற பேபி டாக்கீஸ் ரோட்டுலேந்து சனங்களும், வாகனங்களும் நெறைய அது பாட்டுக்கு வந்துக்கிட்டெ இருந்ததுல அந்த எடத்தெ கடந்துப் போறது செருமமாத்தாம் இருந்துச்சு. மின்னாடி காலத்துல இல்லாத கூட்டம் எப்பிடியோ இந்த அஞ்சு வருஷத்துல வந்து சேந்துட்டாப்புல தோணுணுச்சு விகடுவுக்கு. காலேஜ்ல படிச்சக் காலத்துல அத்தனெ ரோட்டுலயும் சொதந்திரமா அவ்வேம் பாட்டுக்கு நடந்தது போலவும், யிப்போ கூட்டம் பெருத்துப் போயிட்டாப்புலயும் தோணுணுச்சு. அதுக்கேத்தாப்புல சர்ரு புர்ருன்னு வாகனங்க வேற போயிக்கிட்டெ இருந்துச்சு.

            தெக்கு வீதிய மொனையக் கடந்துப் போறப்போ அதே நாலு ரோடு சந்திக்கிற எடத்துல ஒரே நேரிசல்லா இருந்துச்சு. டிராபிக் போலீஸ்காரரு நின்னுகிட்டு நெரிசல்ல ஒழுங்குப் பண்ணிக்கிட்டு இருந்தாரு. நாலு பக்க ரோட்டுலயும் அங்கங்க தேங்கி நின்னு நின்னுத்தாம் அவரு காட்டுன வழியில வாகனங்களும், சனங்களும் ஓடிக்கிட்டு இருந்துச்சு. எட்ட நின்னுப் பாக்கறப்போ அது ஒரு வேடிக்கெப் போலத்தாம் இருந்துச்சு. அவரு கை காட்டுறதுக்கு எம்மாம் பெரிய வாகனமா இருந்தாலும் பொட்டுன்னு நின்னுச்சு. அவரு கைய அசைச்சா அவரு காட்டுற தெசையில போனுச்சு. அடேங்கப்பா மனுஷ கையிக்குத்தாம் எம்மாம் சக்திங்றது போல தோணுணுச்சு.

            தெக்கு வீதிய மொனையக் கடந்து கீழ வீதி வழியா போனப்போ பழனியாண்டவர் சந்நிதியில நல்ல கூட்டமா இருந்துச்சு. வேலங்குடி பெரிய மாமா இருந்திருந்தார்ன்னா இந்நேரத்துக்கு எம்மாம் கூட்டமா இருந்தாலும் சந்நிதிக்குள்ள இழுத்துட்டுப் போவாம வுட மாட்டாரு. அப்பிடியே எதுத்தாப்புல கொஞ்சம் தள்ளி இருந்த ஆஞ்சநேயர் சந்நிதியிலயும் கூட்டமாத்தாம் இருந்துச்சு. வேலங்குடி பெரிய மாமா இருந்தா நிச்சயம் ரண்டு கோயிலுக்கும் அழைச்சிட்டுப் போவாம இருக்க மாட்டாரு. எவ்ளோ குடும்பப் பெரச்சனைகளப் பேசிப் பேசியே சரி பண்ணி வுட்டவரு. ஒருவேள அவரு இருந்திருந்தார்ன்னா‍ செய்யுவோட பெரச்சனைய வேற வெதமா கூட பேசி வுட்டுருப்பாரு. குடும்ப விசயங்கள குடும்பம்ங்ற அமைப்பு செதையாத அளவுக்குச் சரி பண்ணி விட்டுருப்பாரு! அவருப் போயிச் சேந்ததுக்கு அப்புறமா இப்பிடில்லாம் நடக்கனமுன்னு இருக்கு.

திருவாரூருத் தேரழகு

            வரிசையா தேர் முட்டி. பெரிய தேரோட தேர் முட்டி எப்பவும் விஷேசந்தாம். தேர்ல தூசியோ, புழுதியோ படியாதபடிக்கு பைபர் கிளாஸ் போட்டு வெளியிலேந்து பாத்தா அம்சமா தெரியுறாப்புல பண்ணிருந்தாங்க. திருவாரூரு தியாகராசரோட தேரு, ஆழித்தேரு இல்லியா. அதுக்குன்ன இருக்குற கம்பீரத்தோட நின்னுச்சு அந்த மொட்டத் தேரு கூண்டுக்குள்ள இருக்குற கிளியாட்டம் பைபர் கிளாஸ் போட்ட அடைப்புக்குள்ள. தேரோடுறப்ப பாத்தா அந்த மொட்டத் தேருக்கு மேல எம்மாம் கம்பீரமா மூங்கில்கள வெச்சிக் கட்டுமானம் பண்ணி அடேங்கப்பா எம்மாம் ஒசரதுக்கு, அதெ இழுக்குறப்ப ஆடி அசைஞ்சு வர்றதப் பாக்குறப்போ, ஆரூரா தியாகேசாங்ற அந்தச் சத்தத்தெக் கேக்குறப்போ கடவுள் பக்தி இல்லாதவேமுக்கும் அந்த ஒரு கணத்துல எப்பிடியோ பக்தி பரவசம் அவனெ அறியாம வந்துடும். சடெ சடெயா முடிய வெச்சிக்கிட்டுக் காவி உடுப்ப உடுத்திக்கிட்டு நிக்குற சாமியாருங்களப் பாத்தா, சமயத்துல அவங்க பரவசம் வந்துப் போயி ஆடுற ஆட்டத்தெப் பாத்தா நெஞ்சு உருகிப் போயிடும். அந்த எல்லா நெனைப்போடயும் அப்பிடியே ஆழித்தேர்ரப் பாத்து என்னவோ இன்னிக்குத்தாம் புதுசா பாக்குறதெப் போல அப்பிடியே மெய் மறந்து நின்னுப் போனாம் விகடு. அது சரி காலந்தாம் எவ்ளோ விசயத்துல எவ்ளோ மாறிப் போனாலும், இந்தத் தேரு சின்னப் புள்ளையிலேந்து இன்னிக்கு வரைக்கும் தர்ற பரவசம் மட்டும் மாறிப் போவலங்றது போல ஒரு நெனைப்பு வந்துச்சு அவனுக்குள்ள.

            ஏதோ ஒரு ஒலகத்துக்குப் போயிட்டு திரும்ப வந்தவேம் போல ஆயிட்டாம் விகடு அந்த அஞ்சு நிமிஷத்துல. எந்த வேலைக்கு வந்தோம், என்னத்தெ பண்ணிட்டு இருக்கோம்ங்ற நெனைப்பு வர்றதுக்கு கொஞ்ச நேரமாயிடுச்சு அவனுக்கு. பையில கைய வுட்டுப் பாத்தாம். ஒரு ஐநூத்து ரூவாயி நோட்டும், ஒரு நூத்து ரூவாயி நோட்டும், அஞ்சுப் பத்துன்னு ரூவா நோட்டுகளும், கொஞ்சம் சில்லரையும் கெடந்துச்சு. வக்கீல்கிட்டெ கேஸ் கட்டுகளக் கொடுத்துட்டு அத்தோட ஐநூத்தக் கொடுத்துட்டு மிச்சத்தெ மாசச் சம்பளம் வந்த ஒடனே கொண்டாந்துக் கொடுத்துப்புடறேம்ன்னு சொல்லிடணும்ன்னு மனசுக்குள்ளாரயே சொல்லிப் பாத்துக்கிட்டாம். அது செரி நாம்ம ன்னா ஏமாத்திட்டா ஓடிப் போயிடப் போறோம்? நாலு வீதியச் சுத்தி ஓடுனாலும் கடெசியா ஆழித்தேரு வீதிய வுட்டா ஓடிட முடியும், கீழ வீதியில இருக்குற தேரு முட்டியிலத்தாம் வந்து நிக்கணும்ங்றாப்புல கொடுக்க வேண்டிய காசிக்கு அதெ கொடுக்க நாலு நாளு ஓடி முடிஞ்சா அங்கப் போயி நின்னுத்தாம் ஆவணும்ன்னு நெனைச்சிக்கிட்டாம். வேறென்ன பண்டுறது இப்போ? கையில காசி யில்லாத கொறெ. இருந்தா ஒரே அடியா கொடுத்துப்புட்டுத்தானே மறுவேல பாப்பேம், அதுக்கென்ன சம்பளத்தெ வாங்கிட்டு மொத வேலையா கொண்டாந்து கொடுத்துட்டு மறுவேல பாப்பேம்ன்னு தனக்குத் தானே சமாதானத்தப் பண்ணிக்கிறாப்புல நெனைச்சிக்கிட்டாம் விகடு ஒடிக்க ஒடிக்க பாலா கொட்டுற எருக்கஞ் செடியப் போல.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...