24 Feb 2021

பாத்து பண்ணி விடுங்கய்யா!

பாத்து பண்ணி விடுங்கய்யா!

செய்யு - 727

            ஆர்குடி தாலுகா ஆபீஸ் ரோட்டுல குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதுத்தாப்புல இருந்துச்சு பாண்டுரங்கஹரியோட ஆபீஸூ. ஆளுப் பாக்குறதுக்கு பழுத்தப் பழமா இருந்தாரு. வெள்ள வேளேர்ன்னு வேட்டி சட்டையில அம்சமா சிரிச்சாரு. மாநெறம்ன்னாலும் நல்ல களையான மொகம். திரிசோடா வாத்தியார்ரப் பாத்ததும், "வாய்யா திரிசோடா! என்னவோ பாக்கணும்ன்னு போன்ன அடிச்சீயே? இப்பத்தானே மதுரை ஹைகோர்ட்டுல கேஸ்ஸப் போட்டிருக்கு. ஒடனே அடுத்த கேஸ்ஸா? ஒன்னய இந்த ஆபீஸ்ஸூப் பக்கமே வர வுடாம அடிக்கணும்ன்னு நெனைக்கிறேம். மாசத்துக்கு ஒரு தவா வந்துகிட்டெ இருக்கே?"ன்னாரு பாண்டுரங்கஹரி சிரிச்சிக்கிட்டெ வக்கீலு ஆபீசுக்கு வாரதையெல்லாம் வாடிக்கையா வெச்சிக்கிட கூடாதுங்றாப்புல.

            "அதென்னவோ பழகிப் போச்சுங்கய்யா. இப்பல்லாம் ஒஞ்ஞ ஆபீஸையோ, கோர்ட்டு வாசலையோ எட்டிப் பாக்கலன்னா எதையோ எழந்தாப்புல இருக்குங்குய்யா. அதுக்காச்சியும் எதாச்சும் ஒரு கேஸ்ஸப் போட்டு நடத்தணுங்கய்யா!"ன்னாரு திரிசோடா எண்ணிப் பழக்கப்பட்டவேம் பழக்க தோஷத்துல கைப்பிடி மண்ணை அள்ளி எண்ணிட்டு இருப்பாம்ங்றாப்புல.

            "நடத்துவே நடத்துவே! பீஸ்ஸல்லாம் இந்த மாசத்துலேந்து ரண்டு பங்கா ஒசத்திருக்கேம். போடு இனுமே கேஸ்ஸ!"ன்னு கண்ணடிச்சிக்கிட்டெ சொன்னாரு பாண்டுரங்கஹரி வெலை ரண்டு பங்கா ஆயிடுச்சுன்னா வாங்குறது பாதியா கொறைஞ்சிடும்ங்றாப்புல.

            "பீஸ் என்னங்கய்யா பீஸ்ஸூ. கேக்குறதெ கொடுக்குறேம். எஞ்ஞ அய்யாகிட்டெ என்னிக்குக் கணக்குப் பாத்திருக்கேம். யிப்போ நாம்ம வந்திருக்கிறது நமக்காக யில்ல. இவுக நம்ம வாத்தியாரு வகையறா. பலபேத்துகிட்டு விசாரிச்சிக்கிட்டு நம்மளப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டு வந்தாங்க. நமக்கு அய்யாவ வுட்டா கதியேது? அதாங் அழைச்சாந்துட்டேம். பாத்து அய்யாத்தாம் இவுகளுக்கு நல்ல வழியப் பண்ணி வுடணும். கோர்ட்டு கேஸ்ஸூன்னுப் பாத்து நொந்துப் போயி வந்திருக்காங்க!"ன்னாரு திரிசோடா நொம்பலப்பட்டு வந்து நிக்குறவங்களுக்கு நோகாம வழியப் பண்ணி வுடணும்ங்றாப்புல.

            "விசயம் என்னா? சொல்லச் சொல்லுய்யா! கேப்பேம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி பிராதக் கேட்டாத்தாம் தீர்ப்ப சொல்ல முடியும்ங்றாப்புல.

            திரிசோட விகடுவெப் பாத்தாரு. விகடு சுப்பு வாத்தியார்ரப் பாத்தாம். சுப்பு வாத்தியாரு, "அத்து வந்துங்கய்யா!"ன்னு ஆரம்பிச்சி மவளோட கலியாணத்துலேந்து ரண்டு வக்கீலு மாறி வந்த கதெ வரைக்கும் பொறுமையா எல்லாத்தையும் சொன்னாரு பாசஞ்சர் ரயிலு பொறப்பட்டு பொறுமையா ஊரு வந்து சேர்றாப்புல. ரொம்ப கவனமா பாண்டுரங்கஹரி அதெ கேட்டுக்கிட்டாரு எங்கெங்க முடிச்சு எப்பிடி வுழுந்திருக்குன்னு உத்துப் பார்த்து தெரிஞ்சுக்கிறாப்புல.

            முழுசா எல்லாத்தையும் கேட்டு முடிச்சதும், "ஓ! அந்தச் செருப்படி வெவகாரம். நாமளும் கேள்விப்பட்டேம். அத்து ஒங்க மவதானா? அடிச்ச வரைக்கும் செரித்தாம். அடி வாங்க வேண்டியவந்தாம். அதெ நாம்ம தப்பே சொல்ல மாட்டேம்! கட்டெ கொண்டு வந்திருக்கீங்களா?"ன்னாரு பாண்டுரங்கஹரி கதிரு முத்துனா களத்துமேட்டுக்குக் கொண்டாந்துதாம் மறுவேல பாக்கணும்ங்றாப்புல.

            "ஒஞ்ஞள கலந்துகிட்டுக் கட்டெ எடுப்பீயளா, மாட்டீயளான்னு தெரிஞ்சிக்கிட்டுக் கொண்டு வாரலாம்ன்னு நெனைச்சிட்டு எடுத்துட்டு வாரலங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சம்மதம் படியாம பாக்கு வெத்தல மாத்திக்கிட வாண்டாம்ங்றாப்புல.

            "செரி கட்டெ நாளைக்கு எடுத்துட்டு வாங்க. மொத வக்கீல மாத்துனது செரி. ரண்டாவது வக்கீல மாத்துனதுக்கான காரணத்தெ மறைக்காம வெளிப்படையா நம்மகிட்டெ சொல்ல முடியுமா?"ன்னாரு பாண்டுரங்கஹரி ரோகத்தெ மூடாம காட்டுனாத்தாம் முழுசா புரிஞ்சி வைத்தியம் பண்ட முடியும்ங்றாப்புல.

            "பீஸ் கொடுத்து முடியலங்க்யயா! நாலு மாசந்தாம் இருந்திருக்கும். ஐம்பதினாயிரத்துக்கு மேல கொடுத்திருப்பேம்யா! அவ்வளவையும் வாங்கிட்டு இன்னும் இன்னும்ன்னு நெருக்கடி கொடுத்தாவோ. அத்தோட பணத்தெ கொடுக்காம ஏமாத்துறதாவும் பொய்யா ஒரு காரணத்தெ சொன்னாவோ. கையில வாங்குன பணத்தையும் வாங்கலன்னு அடிச்சிச் சொன்னாங்க. அதெ எஞ்ஞளாள ஏத்துக்கிட முடியல. எஞ்ஞ நெலையும் யிப்போ மேக்கொண்டு அவுங்க கேக்குற அளவுக்குப் பணத்தெ கொடுத்து நடத்துற நெலையில யில்ல!"ன்னாம் விகடு குண்டன கொண்டாந்து வூட்டுல வெச்சு குண்டான் சோத்தெ ஆக்கிப் போட்டாலும் அவ்வேம் பசிய தீக்க முடியாதுங்றாப்புல.

            "இங்க இருக்குற ஆர்குடிக்கும், திருவாரூருக்கும் வக்கீலப் போயி கும்பகோணத்துலேந்து வெச்சா அப்பிடித்தாம் கேப்பாக. தப்பு சொல்ல முடியாது. ஒவ்வொரு தவாவும் வந்துப் போவணுமில்லையா! அதுக்கு அவுங்க என்ன பண்ணிருக்கணும்ன்னா இங்க ஒரு வக்கீலப் பாத்து வெச்சிக்கிட்டு கேஸ் டிரையலுக்கு வர்றப்ப மட்டும் வந்துட்டுப் போயிருக்கணும். ஒவ்வொரு வாய்தாவுக்கும் அங்கேயிருந்த இங்க வந்துப் போறதுன்னா ஒரு நாளு வீணாப் போயிடும் இல்ல. நாங்க இங்க இருக்கிறோம்ங்றதால ஒரே நாள்ல அஞ்சாறு கேஸ்ஸூ கூட ஆஜராவோம், வாய்தா வாங்குவோம். அதால ஒரு கேஸூக்கு நூறு, எரநூறு வாங்குனா கூட போதும். அவ்வேம் கும்பகோணத்துலேந்து ஒரு நாளு மெனக்கெட்டு வர்றான்னா அவ்வேம் ஆஜராவ வேண்டிய அஞ்சாறு கேஸூக்கும் சேத்து ஒங்கிட்டெத்தாம் வசூலிக்கப் பாப்பாம். அதெ தப்புச் சொல்ல மிடியாது. மித்தப்படி கேஸ்ஸ எடுக்குறதுக்கு ஒவ்வொரு லாயரும் ஒவ்வொரு ரேட்டு வெச்சிருப்பாங்க. அது அவுங்களோட பாப்புலாரிட்டியப் பொருத்தது. அதையும் கொறை சொல்ல முடியாது. கொறைன்னா ஒங்களத்தாம் சொல்லணும். இங்க இருக்குற கோர்ட்டுக்கு அங்கப் போயி வக்கீலப் பிடிச்சதுன்னு. சம்பந்தம் இல்லாமப் போயி வக்கீலப் பிடிச்சிருக்கீங்க. ஒண்ணு ஆர்குடியிலயே ஒரு வக்கீலப் பிடிச்சிருக்கலாம். இல்ல திருவாரூர்லயே ஒரு வக்கீலப் பிடிச்சிருக்கலாம். அப்பிடியில்லையா ஆர்குடியில நடக்குற வழக்குக்கு ஆர்குடியிலயும், திருவாரூர்ல நடக்குற வழக்குக்கு திருவாரூர்லயும் வக்கீலப் பிடிச்சிப் போட்டிருக்கலாம்."ன்னு சொல்லிட்டுச் சிரிச்சாரு பாண்டுரங்கஹரி உள்ளூரு வேலைக்காரனெ வுட்டு வெளியூரு வேலைக்காரனெ பிடிக்கப் பாத்தா ஒண்ணுக்கு ரண்டாத்தாம் காசிய கேப்பாம்ங்றாப்புல.

            "அய்யா இந்த வழக்கெ இவுங்களுக்காகவும், எனக்காகவும் எடுத்துக்கிடலாம் இல்லியா?"ன்னாரு திரிசோடா எண்ணுன பணக்கட்டெ இன்னொரு தவா எண்ணிப் பாத்து உறுதிப்படுத்திக்கிறாப்புல.

            "அதாங் கட்டெ கொண்டார்ர சொல்லிட்டேமே. இவுங்க சொல்ற வழக்கப் பாக்குறப்போ டி.வி. ஒண்ணு, ஹெச்செம்ஓப்பி ஒண்ணு, ஜீவனாம்ச அப்பீல்ன்னு மூணு கேஸூ இருக்கு. ஆர்குடியில ரண்டும், திருவாரூர்ல ஒண்ணும் இருக்கு. கட்டுகள எடுத்துட்டு வர்றட்டும். நாம்ம வக்கீலப் பாத்துச் சொல்லி வுடுறேம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி இலையப் போடுறதுக்கு மின்னாடி சாப்பாட்ட போடச் சொல்ல முடியாதுங்றாப்புல.

            "அய்யா நீஞ்ஞ எடுத்து நடத்த முடியாதா?"ன்னாரு திரிசோடா கைய காட்டி வுடுற சாமி அதுவே அவதாரம் எடுத்து வார முடியாதாங்றாப்புல.

            "நாம்ம எடுத்தா அடிதடி, கொல கேஸ்தான்னு ஒமக்கு தெரியாதாய்யா?"ன்னாரு பாண்டுரங்கஹரி கிரிமினல் கேஸ்ஸ எடுக்குற வக்கீலுங்க சிவில் பக்கம் பொதுவா வார மாட்டாங்கங்றாப்புல.

            "அதுக்காக அவுங்க அடிதடியில எறங்கிட்டா வர்ற முடியும்?"ன்னாரு திரிசோடா கிரிமினல் லாயர்ர பாக்க வர்றவேம்ல்லாம் கொலையப் பண்டிட்டுத்தாம் வார முடியுமாங்றாப்புல.

            "அதாங் செருப்பால அடிச்சிருக்காங்க யில்ல. அத்து கோர்ட்டுல வரும். நாம்ம  எடுத்துக்கிறேம். மித்த கேஸ்ஸூக்கு ஆளப் பாத்து விடுறேம். நீயி ஒண்ணும் கவலப்படாதே. கட்டு இங்க ஆபீஸ்லத்தாம் இருக்கும். கட்டு மேல நம்ம பேருதாம் இருக்கும். அததுக்கு ஆளப் பாத்து அனுப்பிடுவேம். கோட்டப் போட்டுட்டு ரொம்ப நேரம் கோர்ட்டுல நிக்க முடிய மாட்டேங்குது. அஞ்சு நிமிஷம் நின்னாலும் கிறுகிறுன்னு வருது. வாய்தா எல்லாத்தையும் குமாஸ்தா பாத்துப்பாரு. அப்பிடி யாரும் ஆளு கெடைக்கலன்னா கோட்டப் போட்டுக்கிட்டு நாமளே களத்துல எறங்குறேம். போதுமாய்யா!"ன்னாரு பாண்டுரங்கஹரி களத்துல பெருந்தலைங்க கடைசியிலத்தாம் களம் எறங்கும்ங்றாப்புல.

            "இஞ்ஞ ஆர்குடிக்கு நீஞ்ஞப் பாத்துப்பீயே! அஞ்ஞ திருவாரூர்ல ஒரு கேஸ்ஸூ இருக்கே? அதெ அஞ்ஞயே ஒரு ஆளப் பாத்துச் செஞ்சி வுட்டா தேவலாம்!"ன்னாரு திரிசோடா கைப்புண்ண பாத்துக்கிட்டெ கால் புண்ணெ பாக்காம வுட்டுப்புடக் கூடாதுங்றாப்புல.

            "அதுக்கு அஞ்ஞத்தாம் ஆளப் பாத்து வைக்கணும். நம்மாள அலைய முடியாது. கட்டு வரட்டும்ய்யா. அதெப் பாத்துட்டுப் போன போட்டுச் சொல்லி விடுறேம். நமக்கு அங்க இல்லாத ஆளா என்னா? தமிழ்நாடு பூரா எங்க வேணாலும் கேஸ்ஸ நடத்தலாம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி கையில செல்போன்ன வெச்சிருக்கிறவேம் ஒலகம் பூரா போன்ன பண்ணிப் பேசலாம்ங்றாப்புல.

            "பெறவுங்கய்யா ஒஞ்ஞகிட்டெ சொல்ல வேண்டியதில்ல. பீஸ்ல்லாம் ரொம்ப போட்டீங்கன்னா தாங்குற நெலையில அவுங்க யில்ல. அதெ சொல்லித்தாம் நம்மகிட்டெயே வந்தாங்க."ன்னாரு திரிசோடா மயங்கி வந்து நிக்குறவேம் தலையில அறுவது கிலோ மூட்டைய தூக்கி வைச்சிடக் கூடாதுங்றாப்புல.

            "ஏதோ கொடுக்குறதெ கொடுக்கச் சொல்லு. வேறென்ன பண்ணணுங்றே?"ன்னாரு பாண்டுரங்கஹரி தட்சணை கொடுக்குறது கொடுக்குறவங்களோட இஷ்டம்ங்றாப்புல.

            "அய்யோ அப்பிடில்லாம் யில்லங்கய்யா! நீஞ்ஞளே பாத்து சொல்லிட்டீயள்ன்னா தேவல!"ன்னாரு திரிசோடா பூசாரி வாயைத் தொறந்துச் சொல்லிப்புட்டா கேக்குற தட்சணைய வெச்சிப்புடலாம்ங்றாப்புல.

            "கட்டெப் பாத்துட்டுச் சொல்றதுதாம் செரிபட்டு வரும். இருந்தாலும் சொல்றேம். ஒரு கட்டுக்கு ரண்டாயிரம் கொடுக்க முடியுமா என்னான்னு நீயே கேட்டுச் சொல்லு!"ன்னாரு பாண்டுரங்கஹரி டீல் பண்டி வுடுறவுகளே டீலா, நோ டீலாங்றதெ கேட்டுச் சொல்லுங்றாப்புல.

            "தாரளமா கொடுத்திடலாம்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஊடால பூந்துப் பண்டத்துக்கு ஏத்த வெலையக் கொடுத்துத்தாம் ஆவணும்ங்றாப்புல.

            "பெறவென்ன அவுங்களே சொல்லிட்டாங்க. நீயி வேணும்ன்னா பேரம் பேசி கொறைக்குறதுன்னாலும் கொறைச்சி விட்டுப்புட்டுப் போ!"ன்னாரு பாண்டுரங்கஹரி சிரிச்சிக்கிட்டெ சைக்கிள் கேப்புல ஆட்டோவ ஓட்டுறதுன்னாலும் ஓட்டுங்றாப்புல.

            "அய்யோ அய்யா என்ன வார்த்தெ சொல்லிப்புட்டீங்க? முடியாதவங்கய்யா. பல எடங்கள்ல போயி நொந்து வந்திருக்காங்கய்யா. அவுங்க அப்பாவும் வாத்தியார்ரா இருந்தவங்கத்தாம். பையனும் நம்மளப் போல வாத்தியார்த்தாம் இருக்காங்க. இருந்தாலும் பொண்ணுக்குக் கலியாணத்தப் பண்ணி இப்பிடி நிக்குறாங்கய்யா. அதாலத்தாம் நாம்ம கொஞ்சம் கூடுதல் கவனத்தெ எடுத்துச் சொல்றாப்புல இருக்குதுங்கய்யா! வேற ஒண்ணும் தப்பா நெனைச்சுக்காதீங்கய்யா!"ன்னாரு திரிசோடா பாதிப்பு அதிகமா உள்ளவங்களுக்கு நிவாரணம் கூடுதலாத்தாம் கொடுக்கணும்ங்றாப்புல.

            "நாம்ம என்னத்தெ தப்பா நெனைக்கப் போறேம்ய்யா? வர்றப்பயேத்தாம் நீயி எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டுதானே வார்றே!"ன்னாரு பாண்டுரங்கஹரி சிரிச்சிக்கிட்டெ அப்பாவி யேவாரி சொன்ன வெலைக்கு விக்க முடியுமாங்றாப்புல.

            "அப்புறம் என்னப்பா? நாளைக்கு கட்டெ எடுத்துட்டு வந்து கொடுத்துட்டீங்கன்னா பாக்கி எல்லாத்தையும் அய்யாப் பாத்துக்குவாங்க!"ன்னு திரிசோடா சுப்பு வாத்தியார்ரப் பாத்துச் சொன்னாரு பச்செ வௌக்கு எரிஞ்சிட்டா வண்டியக் கௌப்பிடணும்ங்றாப்புல.

            "நாளைக்குக் கண்டிப்பா எடுத்தாந்துடுறோம்ங்கய்யா! எந்த நேரத்துல வாரணும்ன்னு சொன்னா வந்துடுவேம்ங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நடை சாத்தியிருக்குற நேரத்துல போயி சாமி தரிசனம் பண்ட முடியாதுங்றாப்புல.

            "சாயுங்காலமா அஞ்சரைக்கு மேல எப்ப வேணாலும் வாரலாம்! நாம்ம இந்த ஆபீஸ்ஸ வுட்டு எங்கயும் போவ மாட்டேம். இங்கத்தாம் இருப்பேம். அப்படியே ஆபீஸ்ல இல்லன்னாலும் வூடு எதுத்தாப்புலத்தாம். அங்கத்தாம் இருப்பேம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி தூண்லயும் துரும்புலயும் இருக்குற கடவுளப் போல வூட்டுலயும் ஆபிஸ்லயும் இருப்பேம்ங்றாப்புல.

            "பெறவு அய்யாகிட்டெ உத்தரவ வாங்கிக்கிறேம்!"ன்னாரு திரிசோடா வந்தக் காரியம் முடிஞ்சா சொவடு தெரியாம கௌம்பிடணும்ங்றாப்புல.

            "வாங்க!"ன்னாரு பாண்டுரங்கஹரி இப்போ கௌம்பி நாளைக்கு வாங்கங்கறாப்புல. திரிசோடா எல்லாரையும் அழைச்சிக்கிட்டு ஆபீஸூக்கு வெளியில வந்தாரு.

மலிவு விலையே ஒரு சலுகைதாம்

            "என்னப்பா திருப்தியா?"ன்னாரு திரிசோடா சுப்பு வாத்தியார்ரப் பாத்து தரமான பண்டம் மலிவு வெலையில கெடைச்சதாங்றாப்புல.

            "கட்டெ எடுத்துக்கிறதுக்கு ரண்டாயிரம் போதும்ன்னு சொன்னப்பவே நமக்குத் திருப்தியாயிடுச்சு. வாய்தாவுக்கு எவ்வளவு கொடுக்கணும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு குடி வந்த வூட்டுக்கு முன்பணம் கொடுத்ததுக்குப் பெறவு வாடவெ எவ்வளவு கொடுக்கணும்ங்றாப்புல.

            "அத்து ஒண்ணும் பெரச்சனெயில்ல. குமாஸ்தாகிட்டெ அம்பதோ,நூறோ வர்றப்போ கொடுங்க. அவர்ர எங்காச்சும் பாக்குறப்ப டீயோ, காப்பியோ வாங்கிக் கொடுங்க அத்துப் போதும்!"ன்னாரு திரிசோடா கையில இருக்குற காசிய வெச்செ பாத்துக்கிடுங்கங்றாப்புல.

            "அப்பிடின்னா ஒண்ணும் பெரச்சனெயில்ல. சமாளிச்சிக்கிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கால்ல கடிக்காத செருப்பெ போட்டுக்கிறதுல ஒண்ணும் செருமம் இல்லங்றாப்புல.

            "ஒண்ணும் பெரச்சனெயில்லப்பா! இப்போ கட்டுக்குக் கொடுக்கற பணத்தையும் ஒடனே கொடுக்கணும்ன்னு அவசியமில்ல. மொதல்ல கட்டெ கொண்டாந்து கொடுத்துட்டு, பணத்தெ மெதுவா கொடுங்க ஒண்ணும் சொல்ல மாட்டாரு!"ன்னாரு திரிசோடா தாண்டுற கெணத்தையும் என்னவோ தவணை மொறையில தாண்டலாம்ங்றாப்புல.

            "அப்பிடில்லாம் பண்ணக் கூடாது. கட்டோட சேத்து பணத்தையும் கொடுத்துப்புடுறதுதாம் மொறெ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சலுகை தர்றவங்ககிட்டெ போயி சுதந்திரம்ங்ற பேர்ல சங்கடம் பண்டிடக் கூடாதுங்றாப்புல.

            "பணம் ரொம்ப நெருக்கடியா இருந்தா சொல்லுங்க. நாம்ம வேணாலும் அய்யாகிட்டெ பணத்தெ கொடுத்திடுறேம். ஒங்களால முடிஞ்சப்ப நம்மளுக்குத் திருப்பிக் கொடுங்க."ன்னாரு திரிசோடா தாம் வயித்துக்கு சோத்த எடுத்த கைய ஒங்க வாயிக்கு ஊட்டி வுடுறேம்ங்றாப்புல.

            "அப்பிடில்லாம் யில்லம்பீ! ஒதவ வந்த ஒஞ்ஞகிட்டெப் போயி, அதல்லாம் வாண்டாம்பீ! நீஞ்ஞ பண்ணுன ஒதவியே கோடி புண்ணியம் பெறும். அதுவே நீஞ்ஞ கோடி கோடியா கொட்டிக் கொடுத்ததுக்குச் சமம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எடத்தெ கொடுத்தவங்ககிட்டெ போயி மடத்தெ சாசனம் பண்டிக் கொடுங்கன்னு கேக்கக் கூடாதுங்றாப்புல.

            "அப்பிடில்லாம் இல்லீங்கய்யா! ஏத்தோ நமக்குத் தெரிஞ்ச வெவரத்தெச் சொன்னேம். நாளைக்கு நமக்கு ஏதும்ன்னா ஒரு வெவரத்தெ சொல்ல மாட்டீயளா?"ன்னாரு திரிசோடா ஒருத்தருக்கொருத்தரு ஒதவிக்கிறதுல குத்தம் கொறை ஒண்ணும் வந்துடப் போறதில்லங்றாப்புல.

            "கண்டிப்பா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சாசுவதமா உள்ளது இல்லன்னு ஆயிடாதுங்றாப்புல.

            "யப்போ யப்பா! வூட்டுக்கு வாங்களேம்! சாப்புட்டுக் கெளம்பலாம்!"ன்னாரு திரிசோடா விருந்தாடியா வந்தவங்க பசியோட போவக் கூடாதுங்றாப்புல.

            "வேண்டாம்பீ! ரொம்ப சந்தோஷம். நாஞ்ஞ நேரத்தோட வூட்டுக்குக் கெளம்புறேம். வண்டியோட லைட்டு வேற மங்கலத்தாம் அடிக்கும்."ன்னாரு சுப்பு வாத்தியாரு விருந்தப் பாத்தா சாப்புடுற மருந்து உள்ளார வேலை செய்யாதுங்றாப்புல.

            "செரி யப்போ கெளம்புங்கப்பா! நாளைக்கு நாம்மளும் வக்கீல் ஆபீஸூக்கு வரணுமா? நீஞ்ஞளே பாத்துக்கிடுவீங்களா?"ன்னாரு திரிசோடா நெலைப்பாட்டுக்குத் தகுந்தாப்புல மொறைப்பாட்டெ வகுத்துக்கிறதுதாம் சரிங்றாப்புல.

            "ஒஞ்ஞளத் தொந்தரவு பண்டுறதா நெனைச்சிக்க வாணாம். நாளைக்கும் நீஞ்ஞளும் வந்து ஒஞ்ஞ கையால கொடுத்துப்புட்டா தேவலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வரன் பாத்துக் கொடுத்தவுக கல்யாணத்துக்கும் வந்து ஆசிப் பண்டிப்புடுங்கங்றாப்புல.

            "கட்டாயம் வர்றேம்ப்பா! ஆறு மணி வாக்குல இஞ்ஞ ஆபீஸ்ல இருப்பேம்!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புனாரு திரிசோடா நேரத்துக்குச் சரியா வந்து நிக்குற கடிகார முள்ளெ போல வந்து நிப்பேம்ங்றாப்புல. அதுக்குப் பெறவு விகடுவும், சுப்பு வாத்தியாரும் டிவியெஸ் பிப்டியில கெளம்புனாங்க. கெளம்பி வர்றப்போ சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "பரவால்லடாம்பீ இந்த வக்கீலு. வயசான வக்கீலா வேற இருக்காரு. நெதானமாத்தாம் செய்வாரு. ஞாயத்துக்குக் கட்டுப்படற ஆளா வேற தெரியுது. இவருகிட்டெயே கட்டெ கொடுத்துப்புடலாம். அவர்ராப் பாத்து எதாச்சும் செஞ்சி வுடட்டும். இனுமே இந்த வழக்கப் பத்தி நெனைக்குறதா யில்ல. அவரே பாத்துக்கிடட்டும்!"ன்னு கடவுள் மேல பாரத்தெப் போட்டுட்டா அதெ பத்தி பெறவு நெனைக்க வாண்டாம்ங்றாப்புல.

மறுநாள் மறுபொழுது

            வாக்க கொடுத்த படியே மறுநாளு திரிசோடாவும் கட்டுகள கொடுக்க வந்திருந்தாரு. அவரு கையாலேயே கட்டுகள கொடுக்க வெச்சி, கையோட அவரு கேட்டதெப் போல நாலாயிரத்து ரூவாயையும் கொடுக்க வெச்சாரு சுப்பு வாத்தியாரு. அதெ கொடுத்ததும் பாண்டுரங்கஹரி பணத்தெ வாங்கி பாக்கெட்டுல வெச்சிக்கிட்டவரு, ஒடனடியா பக்கத்துல இருந்த குமாஸ்தாகிட்டெ கட்டுகளக் கொடுத்து அது எல்லாத்தையும் பிரிச்சிப் பாக்கச் சொன்னாரு. அவரு பிரிச்சிப் பாக்குறப்பத்தாம் தெரிஞ்சது வன்கொடுமெ வழக்குக்கான கட்டெ அதுல இல்லங்றது. "கட்டும் மொறையா இல்லாம கன்னாபின்னான்னு இருக்குங்கய்யா!"ன்னாரு குமாஸ்தா குடிகாரப் பயெ கண்டமேனிக்கு வாந்தி எடுத்து வெச்சிருக்கிறாப்புல இருக்குங்றாப்புல.

"கட்டுகள கொடுக்குறவனுவோ வழக்கமா அப்பிடித்தாம் பண்ணுவானுவோ! ஒண்ணும் பண்ணுறதுக்கில்ல!"ன்னாரு பாண்டுரங்கஹரி குத்தகை முடிஞ்சவேம் மொட்டையடிச்சிட்டுத்தாம் தோப்பை ஒப்படைப்பாம்ங்றாப்புல.

மொத்தமா எல்லா கட்டுகளையும் பிரிச்சி மேய்ஞ்சிப் பாத்ததுல டிரான்ஸ்பர் ஓப்பி வழக்குகள வித்ட்ரா பண்ணணுதுக்கான கட்டுக கூட அதுல இருந்துச்சு. ஆனா முக்கியமா எந்த வழக்குக்கான கட்டுக இருக்க வேணுமோ அதுல இல்ல. அதுக்குப் பதிலா வேறொரு வழக்கோட கட்டு ஒண்ணு இருந்துச்சு. அவசரக் கோலத்துலயோ, பேச்சு வாக்குலயோ ஏதோ ஒரு கட்டெ மாத்திக் கொடுத்திருக்கணும்ன்னு விகடுவுக்குப் புரிஞ்சது.

            "என்னய்யா திரிசோடா இப்பிடி கட்டுகள வாங்கியாந்திருக்காங்களே? இல்லாத கட்டுக்கு வழக்க நடத்தாமல விட்டுப்புடலாமா? அது சரிய்யா ஒரு வழக்குக் கட்டையே இவுங்ககிட்டெ தவறுதலா கொடுத்துட்டு அந்த வக்கீலுங்க அங்க எப்படி வழக்கெ நடத்துறானுவோன்னு தெரியலையே!"ன்னாரு பாண்டுரங்கஹரி திரிசோடாவப் பாத்துச் சிரிச்சிக்கிட்டு காப்பித்தூளு இல்லாம டிகிரி காப்பிய எப்பிடிப் போடுவாம்ங்றாப்புல.

            "அதாங் சொன்னேம்லய்யா! அவுங்க கோர்ட்டு, வழக்குன்னு அலைஞ்சி வெறுத்துப் போயிட்டாங்கய்யா. அதாம் போலருக்கு அந்த வக்கீலு கட்டெ தூக்கிக் கொடுத்ததும் அதெ பாக்காம கொள்ளாம கூட வாங்கிட்டு வந்துட்டாங்கப் போலருக்குய்யா!"ன்னாரு திரிசோடா அடிச்ச எடத்துலயே அடிச்சிட்டு இருந்தா மரத்துப் போயிடும்ங்றாப்புல.

            "ரொம்பச் சரியாப் பேசுனாங்கய்யா! கட்டெ கேட்டதுக்குப் பெறவு ஒஞ்ஞளுக்கும் எஞ்ஞளும் எந்தச் சம்பந்தமும் இல்ல. கட்டெ வாங்கிட்டுப் போயிக்கிட்டெ இருங்கன்னு. அதால எல்லாம் சரியா இருக்கும்ன்னு நெனைச்சி வாங்கிட்டு வந்துட்டேம்ங்கய்யா!"ன்னாம் விகடு பாங்கியில கொடுக்குற நோட்டுக் கட்டுல எப்பிடி எண்ணிக்கெ கொறைவு இருக்கும்ங்றாப்புல.

            "நாமளும் கட்டெ இவ்வேம் வாங்கிட்டு வந்ததும் அது கெடக்குத் தூக்கிப் போடுன்னு சொல்லிப்புட்டேம். இவ்வேம் கட்டெ வாங்குனவேம் அஞ்ஞயே ஒரு பார்வெ பாத்திருந்திருக்கலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பாங்கியில பணத்தெ வாங்குறவேம் அதெ எண்ணிப் பாத்துப்புட்டுத்தாம் அந்த எடத்தெ வுட்டுக் கௌம்பணும்ங்றாப்புல.

            "ஒண்ணும் பதற்றப்படாதீங்க! வக்காலத்துல கையெழுத்து மட்டும் மவளெ அழைச்சாந்துப் போட்டுக் கொடுங்க. நாம்ம தேவையான காகிதங்கள கோர்ட்டுல போட்டு வாங்கிக்கிறேம்! நாமளும் ரண்டு நாளுக்குள்ள இருக்குற கேஸ் கட்டுகள அதுக்குள்ள படிச்சி முடிச்சிடுறேம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி புத்தகத்தெப் படிக்காம பரீட்சையில நாமளா கதையடிக்க முடியாதுங்றாப்புல.

            "அவுங்களோட தேவையில்லாத ஒரு கட்டு நம்மகிட்டெ இருக்கும். நமக்குத் தேவையான ஒரு கட்டு அவுங்ககிட்டெ இருக்கு. அதால நாம்ம இதெ கொடுத்துட்டு, அதெ வாங்கிட்டு வந்துடுறேம்யா!"ன்னாம் விகடு இன்னொருத்தம் கட்ட வேண்டிய கோவணத்தெ நாம்ம ஏம் வெச்சிக்கிட்டு, நம்ம கோவணத்தெ அவ்வேம் ஏம் கட்ட வுடணும்ங்றாப்புல.

            "அவசியம் இல்ல. நீங்க முயற்சிப் பண்ணுறதுன்னா பண்ணலாம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி துணியிருந்தா எந்தத் துணியிலேந்து வாணாலும் கோவணத் துணியக் கிழிச்சிக்கிடலாம்ங்றாப்புல.

            "அதெ வாங்கிட்டு வந்துடுறதுதாம் நல்லதுங்கய்யா!"ன்னாம் விகடு ஆத்தோட போற கோவணத்தெ பிடிச்சிட முடியும்ங்றப்போ பிடிச்சிடுறதுதாம் நல்லதுங்றாப்புல.

            "அது ஒங்க இஷ்டம்!"ன்னுட்டாரு பாண்டுரங்கஹரி விருப்பம் போல செய்யுலாம்ங்ற மாதிரிக்கு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...