31 Jan 2021

நாட்டுல மனுச உசுரப் போல மலிவு வேறெதுமில்ல!

நாட்டுல மனுச உசுரப் போல மலிவு வேறெதுமில்ல!

செய்யு - 703

            மழெ வானத்தெ பொத்துக்கிட்டுக் கொட்டுறாப்புல ஊத்த ஆரம்பிச்சிது. ஆர்குடிப் பக்கம் ரண்டு சக்கர வாகனத்துலப் போயிட்டு இருந்தவங்க அரப்சாப் தர்க்கா பக்கமா ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அத்தனெ பேருக்கும் ஒதுங்க எடம் கொடுக்குற அளவுக்கு அந்த எடம் விசாலமா இல்லன்னாலும் உள்ளார நின்னவங்க ஒட்டி நெருங்கிக்கிட்டு வர்றவங்களுக்கு எடத்தெ கொடுத்துட்டு இருந்தாங்க. மனசு இருந்தா எடம் இல்லாத எடத்துலயும் எடம் உண்டாகத்தாம் செய்யுது. மித்த நேரத்துல காத்தோடிக் கெடக்குற அந்த எடத்துல மழைக்கு ஒதுங்குன கூட்டம் அதிகமா இருந்துச்சு. ஆர்குடிய நோக்கி வந்தவங்க மரக்கடையத் தாண்டி கொளத்து மண்ணு செதறிக் கெடந்த ரோட்டுல அஞ்சாறு பேத்துக்கு மேல வழுக்கி வுழுந்து கையி கால சிராய்ச்சிக்கிட்ட கதெயெ பேச ஆரம்பிச்சாங்க. பஸ்ஸூ வழுக்கிட்டுப் போயி வயல்ல கெடந்த கதெயெப் பத்தி வெசலாமாவும் பேச ஆரம்பிச்சாங்க.

            "என்னத்தங்க சொல்றது? நம்மகிட்டெ ரோடு டாக்ஸ் வாங்குறாம் வண்டிய வாங்குறதுக்குள்ளாரயே. ரோட்டப் பாத்தீயன்னா குண்டும் குழியுமா இருக்கு. அப்பிடியே ரோடு நல்லா இருந்தாலும் இந்த மாதிரிக்கி மண்ண அடிக்க வுட்டுக் குட்டிச் சொவரா ஆக்கிடுறானுங்க. மண்ண அடிக்கிறவனுவோ டிப்பரு தளும்ப தளும்பத்தாம் அடிக்கணுமா ன்னா? டிப்பர்ரு பின்னாடி கதவெ கூட மூட மாட்டாங்றானுவோ. அவ்ளோ அலுப்புங்க. அதுலேந்து வேற கணிசமா மண்ணு வுழுவுது!"ன்னாரு அதுல ஒருத்தரு மனுஷன் பொழைப்புல மண்ணள்ளிப் போடுறதெப் போல ரோட்டுல மண்ணள்ளிப் போடுறதெப் பத்தி.

            "எல்லாம் ப்ளாட்டுப் போறடுற பயலுவோளால வருது. அவனுவோ பாட்டுக்கு வயலத் தடுத்து கல்ல நட்டு ப்ளாட்டுப் போட்டுடுறானுவோ. அதெ நம்மப் பயலுவோ வாங்கி வூட்ட கட்டுறானுவோன்னு இப்பிடி மண்ண அடிச்சி அதுல வர்ற கதெதாங்க இதெல்லாம். மொத்தத்துல மனுஷனுக்கு மனுஷன் மண்ணள்ளி வெச்சிட்டுத்தாம் அடங்குவானுவோ போலருக்கு. எஞ்ஞ வூட்டக் கட்டணும், எஞ்ஞ வயலா வைக்கணும்ங்ற சட்டம்ல்லாம் நம்ம நாட்டுல செரியா கெடையாதுங்க. அவ்வவ்வேம் வைக்கறதெ சட்டமா இருக்கு. வலுத்துவேம் வைக்குறதுதாம் இந்தப் ப்ளாட்டு வெசயத்துல சட்டங்றாப்புல இருக்குது! நாம்ம நல்ல எடத்துல வூட்டுக் கட்டறதுக்கு அவ்வேங்கிட்டெ பெர்மிஷன், இவ்வேங்கிட்டெ பெர்மிஷன்னு நாயா அலைய வேண்டிக் கெடக்கு. நீஞ்ஞ மட்டும் ஒரு ப்ளாட்ட வாங்கிப் போட்டு வூட்டக் கட்டுங்க, எந்த பெர்மிஷனும் தேவல்லாம வூட்ட கட்டிக்கிட்டெ போவலாம். காசிருக்கிறவம்தானே ப்ளாட்ட வாங்கி அப்பிடி வூட்டக் கட்ட முடியும். யில்லாதவேம் ன்னாத்தா பண்ணுவாம்? இருக்குற எடத்துலத்தானே வூட்டக் கட்டிக்கப் பாப்பாம்!"ன்னாரு அதெ கேட்ட இன்னொருத்தரு மனுஷன் செத்த பின்னாடி மண்ணள்ளிப் போடுவாங்கன்னா, இவனுவோ மனுஷன் சாவட்டுமேன்னு மண்ணள்ளிப் போடுறானுவோங்றாப்புல.

            "பாத்தீயாடாம்பீ! மழைக்கு ஒதுங்குனதுல எம்மாம் வெசயங்க தெரியக் கெடக்குது! நாட்டுல இப்பிடித்தாம் நடக்குறதல்லாம் அநியாயமா இருக்கும் போல. எவனோ ஒருத்தெம் தேவைக்கு அவ்வேம் பாட்டுக்குக் காசியக் கொடுத்துப்புட்டு மண்ண அடிக்கிறாம். அதுல மழெ பேஞ்சி போறவேம், வர்றவேம்ன்னு பத்து பேராச்சும் வழுக்கி வுழுந்து கையிக் கால ஒடைச்சிக்கிறாம். சமயத்துல செல பேத்துக்கு உசுரே போயிடுது. நம்ம நாட்டுல நெறையப் பொருளோட வெல அதிகம்ன்னாலும் உசுரோட வெல என்னிக்கும் ரொம்ப மலிவுத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவனெப் பாத்து நாட்டு வெலைவாசியில மனுஷ உசுரு மட்டும் வெலை எறங்கிட்டெ போறாப்புல. 

            "நீஞ்ஞளும் இதெ கேட்டு ந்நல்லாத்தாம் கருத்தாப் பேசுறீயேப்பா!"ன்னாம் விகடு நாலு எடம் போயிட்டு வந்தா நாலு கருத்து தானா வந்துப்புடும்ங்றாப்புல.

            "ந்நல்லா கருத்தா சிந்திக்க, பேச நெறைய புத்தகமெல்லாம் படிக்க வேண்டியதில்லா. இப்பிடி நாலு எடத்துலக்கு நாலு பேரு கூடுற எடத்துக்குப் போனாலே போதும்டாம்பீ! நீந்தாம் என்னவோ எந்நேரத்துக்குப் பொத்தகம் பொத்தகம்ன்னு கெடக்குறீயடாம்பீ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒலகத்தெப் போல தொறந்த புத்தகம் வேற எதுவும் கெடையாதுங்றாப்புல.

            "ஏம்ப்பா ஒரு விசயத்தெ கவனிச்சீயளா? நாம்ம இந்தச் சம்பவத்துக்குப் பெறவு இதெ பேசுறதெ வுட ஒலகத்தெ அதிகம் கவனிச்சிப் பேச ஆரம்பிச்சிட்டேம்ப்பா. நாம்ம கூட நேத்திக்குக் கோவிந்து அண்ணங்கூட பேசுனப்ப நம்ம வெவகாரத்தையே சுத்தமா வுட்டுப்புட்டு அவுங்களோட பெரிப்பா மூலங்கட்டளெ கம்பு வாத்தியார்ரப் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டேம்ப்பா!"ன்னாம் விகடு இப்போல்லாம் பேச வேண்டியதெப் பத்தி வெலகிப் போறதெ சுட்டிக் காட்டிச் சொல்றாப்புல.

            "மனசு வெறுத்துப் போச்சுடாம்பீ! இதுலயே எத்தனெ வருஷம் கெடக்கறது? மூணு வருஷத்தக்கு மேல ஆவப் போவுது. அதாங் சம்பவம் பெரிசா நடந்துங் கூட சலிச்சிப் போச்சுது. இதுலேந்து மனசுக்கு அலுத்துப் போயி அத்து வெளியில அலைய ஆரம்பிச்சிடுச்சு. ரொம்பவே மனசு ஒரு வெசயத்துல பாதிக்கப்பட்டுச்சுன்னா ஒண்ணு அதுலயே ஒழட்டிக்கிட்டுப் பைத்தியமா போயிடும், யில்லன்னா அதெ வுட்டு வெலகிட்டுப் போயி யிப்பிடிச் சம்பந்தம் யில்லாத கவனிக்கவும், பேசவும் ஆரம்பிச்சிடும்! ஒழட்டிக்கிட்டுப் பைத்தியமா ஆவுறதுக்கு இத்து எவ்வளவோ தேவலாம் போ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு உள்ளூருல பைத்தியமா அலையுறதெ வுட ஊர்ர வுட்டு ஓடுறது எவ்வளவோ மேலுங்றாப்புல.

            "நீஞ்ஞ சொல்றதும் சரித்தாம்பா!"ன்னாம் விகடு. மழெ லேசா வுட்டாப்புல தெரிஞ்சது. ஆன்னா தூத்தல் வுட்டபாடில்ல. தூவாணம் அடிச்சிக்கிட்டெத்தாம் இருந்துச்சு. அதையே கூட்டமா நெருக்கடியிச்சு நின்ன சனங்க ஏதோ பம்பர் பரிசு அடிச்சாப்புல விழுந்தடிச்சி அதெ வாங்கப் போறாப்புல கெளம்ப ஆரம்பிச்சதுங்க. சனங்க ஒவ்வொண்ணும் போவப் போவ மிஞ்சுனது விகடுவும், சுப்பு வாத்தியாரும், அத்தோட ஒரு ஜோடியுந்தாம். அந்த ஜோடியில பொண்டாட்டிக்காரவுங்க கெளம்பலாம்ன்னு அடம் பண்ணிட்டு இருந்தாங்க. புருஷங்காரரு மழெ முழுசா வுடட்டும்ன்னு சொல்லி காக்க வெச்சிட்டு இருந்தாரு.

            "வூட்டுக்குக் கெளம்புங்க. வூட்டுல நீஞ்ஞ கேட்ட மாதிரிக்கி தோசைக்கி கெட்டிச் சட்னியோட, மொளவா தொவையலும் அரைச்சித் தர்றேம்!"ன்னு அந்த அம்மா சொன்னதெ கேக்குறப்ப வேடிக்கையா இருந்துச்சு. அந்தப் புருஷங்காரரு எடம் நெறைய இப்போ காலியா கெடந்ததாப் பாத்துட்டு அப்பிடியே தலைக்குக் கையக் கொடுத்துட்டுப் படுத்துட்டாரு. "சித்தப் பொறு. இந்த தூவாணத்துலப் போனா வூடுப் போயிச் சேர்றதுக்குள்ள நனைஞ்சிட வேண்டித்தாம். சொல்ல முடியாது மறு மழெ ஆனாலும் ஆனதுதாங். சித்தெ இருந்துட்டுப் போறதால ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடப் போறதில்ல. நிக்குறதெ நிப்பாட்டிட்டு உக்காரு யிப்பிடி. நமக்கு நீயி தோசெ சுட்டுக் கொடுக்காட்டியும் பரவாயில்ல. பட்டினியா வாணாலும் கெடக்குறேம். இந்த மழையில நனைஞ்சிட்டுப் போயி நாம்ம ஒரு வாரத்துக்கு ஜலதோஷம் பிடிச்சிக் கெடக்க முடியாது!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு ஜன்ம விரோதிக்குக் கூட பயப்பட மாட்டேம் ஆன்னா ஜலதோஷத்துக்குப் பயப்படுவேம்ங்றாப்புல.

            "நாம்ம கோயிலுக்கு ஒஞ்ஞள கெளப்பிட்டு வந்தேம் பாருங்க. பேயாம ஆட்டோவ எடுத்துட்டு வந்திருந்தா இந்தக் கதி வந்திருக்காது. ஒஞ்ஞளுக்கு ன்னா வூட்டுக்கு வந்ததும் இப்போ படுத்ததெப் போல அப்பாடா நமக்கென்னன்னு படுத்துடுவீயே! நாம்மத்தானெ கெடக்கற அத்தனெ வேலையையும் பாத்துட்டு படுக்கோணும். ராத்திரி சீக்கிரமா படுத்தாத்தானே காத்தால எழும்பி ஒஞ்ஞளுக்கு வடிச்சிக் கொட்டி, சோத்த கட்டிக் கொடுக்க முடியுது. இடுப்பு ஒடைஞ்சிப் போவுது. ஒஞ்ஞளுக்கு ன்னா வெளியில ஹாயா அலைஞ்சிட்டு வர்ற ஆளுக்கு?"ன்னாங்க அந்த அம்மா வூட்டுல இருக்குற பொம்பளைக்கு லீவு நாளும் ஓய்வு நேரமும் எங்க இருக்குங்றாப்புல.

            "ஆம்மா வெளியில ஹாயா அலைஞ்சிட்டு வர்றேம்? இந்தாப் பாத்தில்லா? இத்து மாதிரித்தாம் ஒரு மழென்னா ‍எடைஞ்சல்ன்னா கெடைச்ச எடத்துல நின்னுட்டுப் பெறவுத்தாம் கெளம்பியாராணும்!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு வெளியில போயிட்டு வர்றவங்களுக்கு எப்பிடில்லாம் மண்டெ கொடைச்சல் உண்டாவுதுங்றதெ சொல்றாப்புல. அவுங்க ரண்டு பேரும் விகடுவும், சுப்பு வாத்தியாரும் இருக்குறதெப் பொருட்படுத்துன்னாப்புல தெரியல. அவுங்கப் பாட்டுக்குப் பேசிட்டே இருந்தாங்க. மழெ சுத்தமா வுட்டப் பாடா தெரிஞ்சிது. அது வரைக்கும் அவுங்கப் பேசிட்டே இருந்தாங்க. விகடுவும், சுப்பு வாத்தியாரும் கெளம்புன பெற்பாடும் அவுங்க கெளம்பாம அஞ்ஞயே தொசே சுடுறதெப் பத்தியும், சட்டினி அரைக்கிறதெப் பத்தியும் அந்த அம்மா அரைச்ச மாவையே திரும்ப அரைக்குறாப்புல பேச அதெ சுத்தியே மாத்தி மாத்திப் பேசிட்டு இருந்துச்சுங்க. அந்தப் புருஷங்காரரும் இப்போதைக்கு அந்த எடத்தெ வுட்டு கெளம்ப முடியாத அளவுக்கு அலுப்புக்காத்ததப் போல பிடிச்சு வெச்ச புள்ளையாரு கணக்கா சாலு சாப்பா எதாச்சும் பேசிக்கிட்டெ இருந்தாரு.

            வெளியில அடிக்குற தூத்தல் நின்னாலும் இந்த சோடிகளோட பேச்சு நிக்காது போலன்னு நெனைச்சபடிக்கு விகடுவும், சுப்பு வாத்தியாரும் கெளம்பி ஆஸ்பிட்டல்ல நோக்கிப் போறப்பட ஆரம்பிச்சாங்க. அவுங்க ரண்டு பேரும் வந்தப் பெற்பாடும் விகடுவுக்கு அவுங்க ரண்டு பேரும் எப்போ கெளம்பியிருப்பாங்கற யோசனெ வந்துக்கிட்டெ இருந்துச்சு.

            ஆஸ்பிட்டலுக்கு வெளியிலயே கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகம் மூணு பேரும் நின்னுகிட்டு இருந்தாங்க ஆயுத எழுத்துல இருக்குற மூணு புள்ளியப் போல. விகடுவையும், சுப்பு வாத்தியாரையும் பாத்துட்டுக் கிட்டெ வந்தாங்க.

            "ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசன்ல வெசாரிச்சிட்டேம். அந்த வக்கீலு இன்னிக்கு வந்திருந்தாம். பாத்ததும் அவனெ வெச்சி அஞ்ஞயே மொத்திடுவோம்ன்னுத்தாம் நெனைச்சேம். இப்பத்தானே பெரச்சனையாயி வெசாரிச்சிருக்கிறாங்க. அவனெ வேற அடிச்சி ஆளு வெச்சு அடிச்சதா திரும்ப கம்ப்ளெய்ண்டு பண்ணா அது வேற வேற வெதமான பெரச்சனையாயிடுமோன்னு நெனைச்சி வுட்டாச்சு. அவ்வேம் தங்காச்சிய வுட ஒஞ்ஞ வக்கீலு மேலத்தாம் செம காண்டா இருக்காம். ஒஞ்ஞ வக்கீலு மட்டும் இன்னிக்கு வந்திருந்தா அவனெ கடத்திக் கொண்டுட்டுப் போயி வெச்சி வெளுக்குறதா வெளிப்படையா சொல்லிட்டு இருந்தாம். பெறவு சொல்றேம்ன்னு தப்பா நெனைக்க வாணாம். ஒஞ்ஞ வக்கீலு அவுங்ககிட்டெ வெலை போயிட்டாப்புல. பணத்தெ வாங்கிட்டுத்தாம் குறுக்கு வெசாரணையப் பண்ணலன்னு சொன்னாம். அத்தோட யப்பிடிச் சண்டெயக் கெளப்பி வுட்டு எப்பிடியாச்சும் ஒஞ்ஞள ஒரு வழிக்குக் கொண்டு வர்றத்தாம் அவனுவோ நெனைச்சிருக்கானுவோ. சம்பவம் எதிர்பாராம தெசெ திரும்பிப் போனதுல அவனுவோ அப்செட்டா இருக்கானுவோ. அவனுவோ யிப்போ எப்பிடிச் சந்தேகப்படுறானுவோன்னா ஒஞ்ஞ வக்கீலு ஒஞ்ஞளுக்கு விசுவாசமா நடந்துக்கிட்டாதவும், அவனுககிட்டெ வாங்குன காசிக்கு விசுவாசமா நடந்துக்கிடாம போயிட்டதாவும் நெனைக்கிறானுவோ!"ன்னாரு கோவிந்து இதுவரைக்கும் நடந்திருக்குற சம்பவம் இதாம்ன்னு வெசாரிச்சிட்டேம்ங்றதெ கேக்காமலேயே சொல்றாப்புல.

            "எஞ்ஞளுக்கும் ஆரம்பத்துலேந்து அவ்வேம் மேல ஒரு சந்தேகந்தாம். ஏம் குறுக்கு விசாரணையப் பண்ண மாட்டேங்றான்னு ஒரு யோசனெ. நாம்மளும் ச்சும்மா பேருக்குப் பண்ணி வுடுப்பான்னு சொல்லியும் கேக்க மாட்டேம்ன்னாட்டாம். அதாங் ஏன்னு அப்பலேந்து புரியல. யிப்போ புரிஞ்சாப்புல இருக்கு. அத்தோட தங்காச்சிக்கு இந்த மாதிரி ஆச்சு, ஸ்டேசன் வரைக்கும் வாஞ்ஞன்னுக் கெஞ்சிப் பாத்துட்டேம். வரக் காணும்!"ன்னாம் விகடு டயர்ல காத்துப் போற எடம் இதானாங்றதெ அறிஞ்சிக்கிட்டாப்புல.

            "எப்பிடி வருவாம் வாத்தியாரே? ரண்டுப் பக்கமும் காசிய வாங்கிட்டவேம் எந்தப் பக்கம் பேச முடியும் சொல்லுங்க? ரண்டுப் பக்கமும் மொத்துப் பட்டுக்கிட வாணாம்ன்னு நாசுக்கா ஒதுங்கிட்டாம்!"ன்னாரு கோவிந்து ரண்டு பக்கமும் அடிய வாங்கிக்க அவ்வேம் என்ன கலியாணத்துக்கார மோளமாங்றாப்புல.

            "அவ்வேம் மேல தப்பில்ல. அந்த வக்கீலு அப்பவே அவனுவோ சமாதானத்துக்கு வந்தப்போவே இந்தக் கேஸ்ஸ முடிச்சிடுறதுங்ற முடிவுக்கு வந்துட்டாம். நம்மப் பொண்ணுத்தாம் பிடிவாதமா முடிக்க முடியாதுன்னு நின்னுட்டா. அதுல வெறுத்துப் போனவந்தாம். அதுக்குப் பெறவு அவ்வேம் பண்ணி வுட்ட அத்தனெயும் சறுக்கலுதாம். அதெத்தாம் எஞ்ஞளால புரிஞ்சிக்கவும் முடியல, புரிஞ்சிக்காமலும் இருக்க முடியல. தடுமாறிப் போயிட்டேம். எடையில நம்பிக்கெ யில்லன்னா கேஸ்ஸூ கட்டெ வாங்கிட்டுப் போயிடுங்கன்னு பயமுறுத்துற அளவுக்கு வந்துட்டாம். அப்பவும் அதெ புரிஞ்சிக்கிடாம எப்படியாச்சும் செஞ்சி வுட்டுடுங்கன்னு சொன்னமே தவுர நடந்தது என்னாங்றதெ புரிஞ்சிக்கிட முடியல. ஒரே நேரத்துல அவனுவோ இவ்வேம் மேல காண்டா இருக்குறதாவும் காட்டிக்கிட்டு, இவ்வேம் நம்ம பக்கம் விசுவாசமா தீவிரமா வாதாடுறாதாவும் காட்டிக்கிட்டு நம்மப் பக்கம் நாமத்தெச் சாத்திட்டாம்! நாம்மத்தாம் செரியா புரிஞ்ச்சிக்கிடலே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நாமளா போயி ஏமாந்துப்புட்டு நம்மள ஏமாத்திப்புட்டாம்ன்னு சொல்லக் கூடாதுங்றாப்புல.

            "செரி! நேத்தி வக்கீலு வந்துப் பாக்க முடியல. இன்னிக்காவது வந்துப் பாத்திருக்கலாம்ல! வேற ஒண்ணும் செய்ய வேண்டியதில்ல!"ன்னாம் விகடு துரோகம் பண்ணவ்வேம்கிட்டெ போயி ஞாயத்தெ வைக்குறாப்புல.

            "ஒஞ்ஞ வக்கீலு இனுமே என்னிக்கும் வந்து எட்டிப் பாக்க மாட்டாம். எட்டிப் பாத்தாம்ன்னா நீஞ்ஞளும் செருப்பால அடிப்பீங்க. அந்தப் பரதேசிப் பயலுவோ தரப்புலயும் செருப்பால அடி வுழுவும் பாருங்க!"ன்னாப்புல மகேந்திரன் தர்ம அடியிலேந்து தப்பிக்க நெனைக்கிறவேம் திரும்புன பக்கமெல்லாம் அடி வாங்குவாம்ங்றாப்புல.

            "நாம்ம பேச ஆரம்பிச்சா இப்பிடித்தாம்பா பேச்சுப் போயிட்டே இருக்கும். நேரம் ஆயிடுச்சு. மணியாயிடுச்சுன்னா உள்ளார லேடீஸ் வார்டுல வுட மாட்டாங்கப் பாத்துக்கோ. இப்பவே மணி அது பாட்டுக்கு ஆச்சுடுச்சு!"ன்னாரு பெத்தநாயகம் கையில கட்டியிருந்த கடியாரத்தெ ஒரு சொழட்டு சொழட்டிக்கிட்டு.

            "செரிங்க வாத்தியாரே! பேசுனது போதும். நீஞ்ஞப் போயி தங்காச்சியப் பாத்துட்டு வந்துடுங்க. நாஞ்ஞ யிப்பத்தாம் பாத்துட்டு வந்தேம். செம தெகிரியமா இருக்காக. ஒண்ணும் கவலப்பட வாணாம். நாம்ம யிருக்கிறப்போ இனுமே கவலயே வாணாம். தெனமும் இஞ்ஞ வந்து பாத்துட்டுப் போயிடுவேம்!"ன்னாரு கோவிந்து காசிக்காக நிக்குறவேம் கௌப்பிக்கிட்டாலும் பாசத்துக்காக நிக்குறவேம் பங்கம் பண்ண மாட்டாம்ங்றாப்புல.

            "நீஞ்ஞல்லாம் வந்துப் பாக்குறதுதாம் இந்த நேரத்துல‍ தெம்பும் தெகிரியமும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தோள் கொடுக்குறவேம் தொணையில்லாமப் போயிட்டாலும் ஆறுதல் சொல்றதுக்காச்சி ஒரு மனுஷ நாக்கு மனுஷருக்கு வேணும்ங்றாப்புல.

            "விசாகன் அண்ணாச்சி சென்னைப் பட்டணத்துலேந்து இன்னும் வாரல. வந்த ஒடனே மொத வேலையா கொண்டாந்துக் காட்டிப்புட்டுத்தாம் மறுவேல பாப்பேம்!"ன்னாரு பெத்தநாயகம் அண்ணாச்சி வந்தா என்னாச்சிங்ற அளவுக்கு எறங்கி வேல பாப்பேம்ங்றாப்புல.

            "எப்பா பெத்தநாயகம் இவுங்கள உள்ளார அழைச்சிட்டுப் போயிட்டு வா! உள்ளார வுட மாட்டேன்னு சொல்லுவானுவோ. நீயிப் போனத்தாம் செரிப்பட்டு வரும்!"ன்னு கோவிந்து தொணைக்குப் பெத்தநாயகத்தெ அனுப்பி வுட்டாரு எந்தெத்த காரியத்துக்கு யாரு யாரு தொணை இருக்கணும்ங்றதெ அறிஞ்சாப்புல.

விகடுவும், சுப்பு வாத்தியாரும் ஆஸ்பிட்டல்ல நொழைஞ்சி இன்பேஷண்ட் வார்ட்ட நோக்கி நடந்தாங்க. மின்னாடி‍ பெத்தநாயகம் வேட்டிய மடிச்சிக் கட்டிக்கிட்டுப் போனாரு. பெத்தநாயகத்தையும், அவரோட வேட்டியில இருந்த கட்சிக் கரையையும் பாத்து யாரும் எதுவும் சொல்லல. அவருப் பாட்டுக்குப் போவ பின்னாடிய ரண்டு பேரும் போயிட்டே இருந்தாங்க.

            பெட்ல செய்யுப் படுத்திருந்தா. அவ்வே பக்கத்துல ஏகப்பட்ட பழங்க பையில இருந்துச்சு. அதெ விகடு உத்துப் பாக்குறதப் பாத்து, "இந்த யண்ணங்கத்தாம் வாங்கியாந்தது!"ன்னா செய்யு பெத்தநாயகத்தெ பாசத்தோட பாத்தபடிக்கு. விகடுவுக்கு பெத்தநாயகத்தெ பாக்க சிலிர்ப்பாவும் பெருமையாவும் இருந்துச்சு மொகம் தெரிஞ்சவங்களே ஒதவாத நாட்டுல மொகம் தெரியாத மனுஷங்க ஏம் எதுக்குன்னு தெரியாம வந்து உதவுறாங்களேன்னு.

            "யிப்போ ஒடம்பு எப்பிடி இருக்கு? டாக்கடருங்க என்னா சொன்னாங்க?"ன்னாம் விகடு செய்யு கொஞ்சம் நொந்தாப்புல படுத்திருந்ததெப் பாத்துட்டு.

            "நாலு நாளு தங்கணும்ன்னு சொல்லிட்டாங்க. பின்னாடி முதுவுக்கு ஒண்ணுமில்லயாம். ரத்தக்கட்டா இருக்கலாம்ன்னாங்க. இஞ்ஞயே தங்கி ரெஸ்ட் எடுத்தா சரிபட்டு வந்துடும்ன்னாங்க! பெறவு செவப்பா லைட்ட வெச்சி அடிச்சி வுட்டாங்க!"ன்னா செய்யு தள்ளி வுட்டு ஒடைஞ்ச நாற்காலி பட்ட பாட்டெ வுட தாம் பட்ட பாடு பெரிசில்லங்ற மாதிரிக்கு.

            "வேற ஒண்ணும் பெரச்சனெ யில்லையில்ல?"ன்னாம் விகடு எக்ஸ்ரேயிலப் போல ஊடுருவிக் கேக்குற கொரல்ல.

            "யில்ல!"ன்னா செய்யு வெட்ட வெளிச்சத்துல கொட்ட கொட்ட பாத்தாலும் கண்ணுக்குத் தெரியல குண்டுமணிங்றாப்புல.

            "அவ்வே ச்சும்மா சொல்றாடாம்பீ! நீயி கவலெப்படுவேன்னு. ராத்திரி முழுக்க தூங்கல முதுவு வலின்னு. காத்தாலயும் வலி தாங்க முடியலன்னதும் ஊசியப் போட்டு வுட்டு தூங்க வெச்சிட்டாவோ. அடி பின்னாடி முதுகுத்தண்டுல பட்டுருக்குல்லடாம்பீ! வலி கண்டுத்தாம்டாம்பீ செரிபட்டு வாரும். பொம்பளப் புள்ளைய யிப்பிடியாடாம்பீ நாற்காலியோட பின்னாடித் தள்ளி வுட்டு பண்ணுவாங்கோ? கேக்குற கேள்விக்குல்லாம் பதிலுக்குப் பதிலு சொல்றதுல அந்தப் போலீஸ்காரவோளுக்கு அம்மாம் கோவமாம். நாட்டுல எதெ கேட்டாலும் எதெயும் சொல்லக் கூடாது போலருக்கு. ஏம்டாம்பீ நம்மட பொண்ண இப்பிடியெல்லாம் வெசாரிக்கிறப்போ, இதெ வுட நம்மப் பொண்ணுக்குக் கொடுமெ செஞ்ச அவனெ சாதாரணமா கூட வெசாரிக்கலடா பாருடாம்பீ!"ன்னு வெங்கு கண்ண கசக்கிட்டு அழுவ ஆரம்பிச்சது காது வலின்னு சொன்னவேம்க்கு மருள வாட்டி காதுல பிழிஞ்சு ஊத்துறாப்புல.

            "யப்பாடி கட்சிக்கார கண்ணுங்களா! டாக்கடரு விசிட்டு வர்ற நேரமாயிட்டு இருக்குது. வந்தாப்புலன்னா நம்மளத்தாம் பாட்டு வுடுவாரு. தயவுசெஞ்சு கெளம்புனீயள்ன்னா புண்ணியா போவும் கண்ணுகளா?"ன்னுச்சு காவலுக்கு இருக்குற அந்த அம்மா நேரமான பின்னால பாரமா நிக்காதீங்கங்றாப்புல. அந்த அம்மாகிட்டெ பெத்தநாயகம் பத்து ரூவா தாள ஒண்ணுத்தெ சட்டெப் பையிலேந்து எடுத்து நீட்டுனதும் அந்த அம்மா ஒண்ணும் சொல்லாம, சீக்கிரமா கெளம்புங்ற மாதிரிக்கி கண்ணெ காட்டிட்டுச் சுத்திலும் பாத்துட்டு அந்தாண்ட நவுந்துச்சு.

            "ந்நல்லா கவனிச்சிக்கிறாங்கடாம்பீ! சாப்பாட்டுக்குக் கூட சிலவில்ல. இந்த யம்மாகிட்டெ கொஞ்சம் காசியக் கொடுத்தா கூட கொறைச்சலு தர்றாங்க!"ன்னுச்சு வெங்கு. விகடு வாளியில கொண்டாந்த இட்டிலி, சட்டினியா வெங்கு மின்னாடி நீட்டுனாம். அதெ வாங்கி வெச்சிக்கிட்டு, "அதெ வாரச் சொல்ல வாணாம்டாம்பீ! பாத்தா வூட்டுல வந்து அழுதுகிட்டெ கெடப்பா! வூட்டுலயே இருக்கட்டும். இத்து மாதிரிக்கி வர்றப்போ சமைச்சிக் கொடுத்தா போதும். புள்ள வேற வூட்டுல இருக்குல்ல. மழெ தண்ணியா வேற இருக்குது. சீக்கிரமா கெளம்புங்க!"ன்னுச்சு வெங்கு போன்னா சொன்ன பெறவு நசநசன்னு நிக்காம பொசுக்குன்னு கௌம்புங்கங்றாப்புல.

            "யப்பா! இஞ்ஞ தங்குறதா சொன்னாக!"ன்னாம் விகடு சுப்பு வாத்தியார்ரக் காட்டிக்கிட்டு ராத்தங்கிக் காத்தால கௌம்புறதுக்குத் தயாரா வந்திருக்கிறதெ சொல்றாப்புல.

            "இஞ்ஞல்லாம் எந்தப் பாதுகாப்பும் வேண்டியதில்லா. ஆளுங்க நொழையுறதெல்லாம் கஷ்டம். நாஞ்ஞளே வெளியிலப் போயி உள்ளார நொழையுறது கஷ்டமா இருக்கு. ஏம் யப்பா தேவையில்லாம வெளியில கெடந்துக்கிட்டு? மழ வேற. கொசுக்கடியில கெடந்து செருமப்பட வாணாம். வூட்டுக்கு ஒங் கூடவே அழைச்சிட்டுப் போயிடு. வேணும்ன்னா காத்தால இதெ போல சாப்பாட்ட செஞ்சி வுட்டு அனுப்பி வுடு போதும்!"ன்னுச்சு வெங்கு சுத்திலும் இங்க பத்து பாஞ்சு மக்கா படுத்திருக்க ஒத்தையா ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாம மழைத்தண்ணியிலயும் கொசுக்கடியிலயும் புருஷங்காரு வெளியில ஏம் காவலுக்குப் படுத்திருக்கணும்ங்றாப்புல.

            "யம்மா சொல்றதுதாம் சரித்தாம். நீஞ்ஞ இஞ்ஞ கெடந்து கஷ்டப்பட வாணாம். இவுங்க ரண்டு பேருமே போதும்!"ன்னாரு பெத்தநாயகம் தாய்க்கோழி காவலிருக்க பருந்து வந்தா கோழிக்குஞ்செ அடிச்சிட்டுப் போயிடும்ங்றாப்புல.

            "மத்தியானதுக்கு மேல உளவுத்துறையிலேந்து வர்றதா சொல்லி ஒருத்தரு பேண்டு டீசர்ட்டுப் போட்டுக்கிட்டுப் பாத்தாருண்ணே!"ன்னா செய்யு நெத்திய சுருக்குனபடிக்கு சொல்ல வேண்டிய சேதியில ஒண்ணு மிச்சமிருக்குறாப்புல.

            "ன்னா சொன்னாரு?"ன்னாம் விகடு நாட்டுல எவ்வளவோ களவுல்லாம் நடக்குறப்போ இதெயெல்லாம்மா தெரிஞ்சுக்கிட்டு உளவுத்துறை விசாரிக்குதுங்றாப்புல.

            "நடந்ததெ கேட்டுக்கிட்டு ஒரு தாள்ல குறிச்சிக்கிட்டு, இதெ பெரிசு பண்ண வாணாம்ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு! நீயெல்லாம் பெரச்சனெ பண்ணுவீயா? யப்பா எப்பிடி? பெரச்சனெ பண்ணுவாராங்ற மாதிரிக்கிக் கொஞ்சம் கேள்வியக் கேட்டாரு. நாம்ம எல்லாம் பயந்தாங்கொள்ளி கேஸூன்னு சொல்லிட்டேம்ண்ணே!"ன்னா சிரிச்சிக்கிட்டெ செய்யு உளவுத்துறை வந்து வெசாரிக்கிற அளவுக்கு பொருமானம் யில்லாத மனுஷங்கங்றாப்புல.

            "ம்! நக்கலு! ஒம் கூட பொறந்த அண்ணன் வேணா அப்பிடி இருக்கலாம். ஓம் கூடப் பொறக்காத யண்ணம்மா நாம்ம. அந்தப் பயெல வெச்சி எப்பிடி வெளுத்து வாங்குறேம் பாரு. ச்சும்மா உரிச்சி எடுக்காம வுட மாட்டேம். உளவுத்துறை வந்து வெசாரிச்சப்ப இந்த யண்ணனப் பத்திச் சொல்லாம வுட்டுப்புட்டீயேம்மா! சொல்லிருந்தீன்னா பொறி பறந்திருக்கும்ல்லா. ஒரே நேரத்துல ஒம்போது கேஸ்ஸ டீல் பண்ணிட்டு இருக்காம் பெத்தநாயம்ன்னு தெரிஞ்சா தெறிக்க விட்ருக்கலாம்ல்லா. செரி இதுக்கு மேல இஞ்ஞ நின்னாக்கா அந்த யம்மா வந்து நம்மள சத்தம் போடும். பெறவு நாம்ம ஒரு டெரர்ரா மாறுறாப்புல ஆயிடும்!"ன்னாரு பெத்தநாயகம் களத்துல எறங்குனா களத்துமேட்டு வைக்கோலப் போல கசக்கி எறிஞ்சுப்புடுவேம்ங்றாப்புல. அவரு அப்பிடிச் சொன்னதும் எல்லாருமா கெளம்பி வெளியில வந்தாச்சு. ஆஸ்பிட்டலுக்கு வெளியில கோவிந்து அவுங்க கட்சி ஆளுங்களோட பேசிகிட்டு இருந்தாரு. இவுங்களப் பாத்ததும், "பாத்தாச்சுல்ல?"ன்னு கேட்டுகிட்டெ அவரு பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிட்டாரு ஆன் பண்ணி விட்ட ரேடியோ அது பாட்டுக்குப் பாடிட்டு இருக்கும்ங்றாப்புல. நேரம் அது பாட்டுக்குப் போயிட்டே இருந்துச்சு எனக்கென்ன கெட்டுச்சு தாம் பாட்டுக்கு ஓடிட்டு இருக்கேம்ங்றாப்புல. 

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...