1 Feb 2021

குளம் கிணறு போல ஆன கதை

குளம் கிணறு போல ஆன கதை

செய்யு - 704

            கோவிந்து பேசிக்கிட்டெ இருந்ததுல அவ்வளவு சீக்கிரமா கெளம்ப வுடல. அவரு இதுக்கு மேல திருநீலகண்டன் வக்கீல வெச்சி வழக்க நடத்தக் கூடாதுங்றதெ அழுத்தமா சொன்னாப்புல. அத்தோட அந்த வக்கீலப் பாத்தா நாமளே அடிப்பேம்ன்னு கோவமாவும் சொன்னாப்புல.

            "ஒஞ்ஞ வக்கீலு வழக்கு சரியான மொறையில நடத்தல. சரியா நடத்திருந்தா இந்த அளவுக்கு நடந்திருக்கப் போறதில்ல. எதிர் பார்ட்டிக்காரனும் பணம் கொடுத்ததெ ஒத்துக்கிறாம். சோரம் போற பொம்பளைய வூட்டுலயும், வெல போகுற வக்கீல வழக்குலயும் வெச்சிக்கிட முடியாது. ஆர்குடியில நெறைய வக்கீலுங்க நமக்குப் பழக்கம். மொதல்ல ஒஞ்ஞ வக்கீலுகிட்டெ கட்டுகள வாங்குங்க. அதெ வாங்கி இஞ்ஞ நாம்ம சொல்ற வக்கீலுகிட்டெ கொடுத்தாத்தாம் இந்த வழக்குல அந்தப் பயலுவோளுக்கு ஒரு பயம் வரும். தாலுக்கா ஆபீஸ் ரோட்டுலயே பீடியோ ஆபீஸூக்கு எதுத்தாப்புல சிவபாதம்ன்னு ஒரு வக்கீலு இருக்காரு. அவுங்க குடும்பமே பரம்பரெ பரம்பரயா வக்கீலுங்க. அவுங்ககிட்டெ இந்த வழக்கெ கொடுத்தாத்தாம் சரிபட்டு வரும். நம்ம வழக்கு ஒண்ணுத்தையெ அவருதாம் சரிபண்ணி வுட்டாரு. வழக்குக் கூட சமீபத்துலத்தாம் முடிஞ்சது!"ன்னாப்புல கோவிந்து களவாணிய காவலுக்கு வெச்சிக்கிட்டு வூட்டுல சாமாஞ் செட்டுக் காணாம போவுதுன்னு சொல்ல கூடாதுங்றாப்புல.

            "ஒஞ்ஞளுக்குமா வழக்கு?"ன்னாம் விகடு என்னவோ நாட்டுல இருக்குறவங்க அத்தனெ பேத்து மேலயும் வழக்கு இருக்காங்றாப்புல.

            "அரசியல்ல இருக்குற நாம்ம வழக்கெ தவிர்க்க முடியாது. ஒரு வழக்குப் போனாலும் இன்னொரு வழக்கு வந்துகிட்டெ இருக்கும். அதாலப் பாத்தீங்கன்னா ஸ்டேசன், கோர்ட்டுன்னு அலைச்சலு இருந்துகிட்டெ இருக்கும். கோர்ட்டுல கேஸ்ல்லாம் இல்லன்னா இந்தக் காலத்துல எவனும் ஒரு அரசியல்வாதின்னு மதிக்க மாட்டாம். இன்னிக்குக் கட்சியில போஸ்டிங்கே யாரு மேல எத்தனெ வழக்கு இருக்குங்றதெ வெச்சித்தாம். நம்ம கட்சியில நாம்ம ஒன்றிய துணைத் தலைவரா இருக்கேம்ன்னா நம்ம மேல இருக்குற ஆறு கேஸூங்கள வெச்சித்தாம்!"ன்னாப்புல கோவிந்து வழக்கு இல்லன்னா அரசியல் வாழ்க்கெ இல்லங்றாப்புல.

            "வக்கீலு சிவபாதம்ன்னு சொன்னீயளே! ஆளு எப்பிடி? வெல போக மாட்டார்ல?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலோட ஜாதவத்தெ வெசாரிக்கிறாப்புல.

            "அதாம் சொன்னேம்ன்னே! அவுங்கக் குடும்பமே வக்கீலு குடும்பம் வாத்தியாரே! பீஸ வேணும்ன்னா நம்மகிட்டெ கூட கேட்டு வாங்குவாங்களே தவுர, அந்த வேல மட்டும் கெடையாது. அவுங்கல்லாம் எடுக்குற கேஸூ அத்தனையும் எப்பிடியும் ஜெயிச்சிடுவாங்க. ஜெயிக்குற மாதிரி இருந்தாத்தாம் கேஸ்ஸைய எடுப்பாங்க. நச்சா புச்சா பஞ்சாயத்துன்னுல்லாம் வெச்சிக்கிட மாட்டாங்க. எதுவா யிருந்தாலும் செரித்தாம் கோர்ட்டுல வெச்சித்தாம் மோதுவாங்க. ரொம்ப டீசண்டனா வக்கீலுங்க வாத்தியாரே அவுங்க!"ன்னாப்புல கோவிந்து ஜாதகக் கட்டமெல்லாம் சரியாத்தாம் இருக்குங்றாப்புல.

            "நீஞ்ஞ சொன்னா செரியாத்தாம் இருக்கும். இருந்தாலும் மனசுல உள்ளதெ ஒரு வார்த்தெ கேட்டுக்கணுமில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சொக்கத் தங்கத்தெ ஒரசிப் பாத்துப்புட்டேம்ன்னு நெனைச்சுப்புடாதீங்கங்றாப்புல.

            "ஒஞ்ஞளுக்கு ஏம் ஐயப்பாடுங்றேம்? எங் கதெயெ சொல்றேம்ன்னே. மூலங்கட்டளெ காத்தான் கொளம் இருக்குல்ல. அதுல மீன பிடிச்சதுக்குப் பெறவு கெராமமே கொளத்துலேந்து கொளத்து பொறுக்கெ அடிக்கிது. கொஞ்சம் ஆழம் தோண்ட தோண்ட காத்தான் கொளத்துக்கு அடியில மணலு வாத்தியார்ரே. மணல்லப் பாத்ததும் ஆளாளுக்கு ராத்திரிப் பகலுன்னு ஓய்ச்சல் ஒழிச்சல் யில்லாம அவனவனும் அவ்வேம் வூட்டுக் கொல்லையில சாக்குலயும், அன்னகூடையிலயுமா அள்ளியாந்து கொட்டி வெச்சிக்கிட்டு இருக்குறாம். அதுல நாமளும் கெடைக்குற வருவாய ஏம் வுடணும்ன்னு ராத்திரி நேரத்துல டாட்டா ஏஸ்ஸ வெச்சி ஆளுங்கள வேலைக்கி வெச்சி கொளத்துலேந்து மணல்ல அள்ளி ஏத்தி கொல்லையில அடிச்சிக்கிட்டு இருக்குறேம். ஒஞ்ஞளுக்குத்தாம் தெரியுமே தாளமுத்துக் குடும்பத்துக்கும் நம்மட குடும்பத்துக்கும் கிராமத்துல ஆவாதுன்னு. அவனுவோளுந்தாம் அடிக்கிறானுவோ. அவனோளும் ஒரு டிராக்டர்ர டிரக்கப் பிடிச்சி ஆளுகள வெச்சித்தாம் ராவோட ராவா அடிச்சிட்டுக் கெடக்குறானுவோ. அதெ நாம்ம கண்டுக்கிடல. ஆன்னா பாத்தீயன்னா நாம்ம அடிக்கிறது அவனுக்குக் கண்ண உறுத்துது. அவனுவோ மட்டும் அடிச்சிக்கிடணும், அத்தோட ஊருக்கார்ரெம் எவ்வேம் வேணும்ன்னா அடிச்சிக்கிடட்டும்ன்னு நெனைக்கிறானுவோ ஆன்னா நாம்ம மட்டும் அடிக்கக் கூடாதுன்னு நெனைக்கிறானுவோ. அந்தப் பயலுவோ ன்னா வேல பண்ணானுவோனுங்றீயே? போலீசுக்குப் போன போட்டு வுட்டுப்புட்டானுவோ! அன்னிக்குன்னுப் பாத்து அவனுவோ ராத்திரி நேரத்துல மணல்ல எடுக்கல. நமக்குத்தாம் விசயம் தெரியலியே. நாம்ம ஆளுகள வெச்சி எடுத்துட்டு இருக்கேம். மித்த ஊரு சனங்க அவுங்கவுங்களால முடிஞ்ச அளவுக்கு சாக்குலயும், கூடையிலயும் எடுத்து தூக்கிக்கிட்டும், டிவியெஸ் எக்செல்ல வெச்சிக்கிட்டும் போயி வூட்டுல கொட்டிக்கிட்டுக் கெடக்குதுங்க. நடுகொளத்துல மணலெடுத்துட்டு நிக்குற நேரமா பாத்து போலீஸ்காரவோ வந்துட்டாவோ. பாருங்க நல்லா வசமா மாட்டியாச்சு. டாட்டா ஏஸ்ஸூ, வெட்டுன மம்புட்டிங்க, கூடெ, கொளத்துல நின்ன ஆளுங்க, அவுங்களோட டூவீலர்ன்னு எல்லாத்தையும் ஸ்டேசனுக்கு அள்ளிட்டுப் போயிட்டாவோ போலீஸ்காரவுக. வடவாதி ஸ்டேசன்ல வெச்சிப் பஞ்சாயத்து நடக்குது. கெராமமே தெரண்டிருக்கு. ஊர்ல யாராச்சும் சொல்லாம போலீசுக்கு எப்பிடித் தகவலு தெரியும்ன்னு ஆளாளுக்குச் சந்தேகந்தாம். அதெத்தாம் பஞ்சாயத்துல போலீஸ்காரவுகளப் பாத்து நாட்டாமெகாரவுகக் கேக்குறாங்க. ஊர்ல யாரும் புகாரு கொடுக்காம எப்பிடி நீஞ்ஞ வந்து பிடிக்க வாறீகன்னு. போலீஸ்காரவுக சமாளிக்கப் பாக்குறாவோ. எப்பிடின்னா கொளத்துல மண்ணு அடிச்சிக்கிறதுல்ல பெரச்சனெயில்ல. ஆன்னா மணல்லு யிருந்தா அதெ பெர்மிஷன் இல்லாம எடுத்துக்கிட முடியாதுன்னு. நாட்டாமக்காரவுக வுடல. எங்க கிராமத்து காத்தான் கொளத்துல நாஞ்ஞ எடுத்துக்கிட்டுக் கெடக்கறது பக்கத்துக் கிராமத்துக்கார பயலுவோளுக்கெ தெரியதாப்போ ஒஞ்ஞளுக்கு எப்பிடித் தெரியும்ன்னு? கேள்வி மேல கேட்டா ஒரு கட்டத்துல போலீஸ்காரவோ நெலமயச் சமாளிக்க முடியமா தாளமுத்துக் குடும்பத்துலேந்து போன்னு வந்ததெச் சொன்னா கெராமத்துல எல்லாத்துக்கும் அவ்வேம் குடும்பத்து மேல கோவம். இந்தப் பஞ்சாயத்துக்கு ஸ்டேசனுக்கு கிராமத்துலேந்து எல்லாரும் வந்திருக்காவோ. தாளமுத்து குடும்பத்துலேந்து மட்டும் யாரும் வாரல. சந்தேகமும் உறுதியாயிப் போச்சா. நாட்டாமகாரவுகச் சேந்து கொஞ்சம் சமாதானமா பேசி வுட்டாக. கிராமத்துச் சார்பா பத்தாயிரம் கொடுத்துப்புடுறதுன்னும், அதுக்காக மணல்ல அள்ளுன குடுபம்பத்துலேந்து பாகத்தெ பிரிச்சி பணத்தெ வசூலு பண்ணிக்கிறதுன்னும், அதெ தவுத்து நம்ம டாட்டா ஏஸூ வண்டிய வுட ரண்டாயிரம் கொடுத்துப்புடறதுன்னும், டூவீலர்ர எடுத்துக்க ஐநூத்து ரூவா சம்பந்தப்பட்டவங்க கொடுத்துப்புடறதுன்னும் பேசுன பெறவு நாம்மளும், கிராமத்துல இருந்த ஆளுங்களும் வண்டிய எடுத்தாந்தாச்சு. இதுக்கு மேல மணல்ல அள்ளணும்ன்னா டிப்பருக்கு முந்நூத்து ரூவாய ஸ்டேசன்ல வெட்டிட்டுத்தாம் அள்ளணும்ன்னு அதுக்கும் ஒரு பஞ்சாயத்து. ஆச்சுதா பஞ்சாயத்து அத்தோட. அள்ளிப் போட்டு வெச்சிருந்த மணலுக்கு ஒப்பா பாத்தா ஸ்டேசன்ல கொடுக்கறதா‍ பேசிட்டு வந்த அத்து ஒண்ணும் பெரிய காசில்ல. இருந்தாலும் இதெ ஸ்டேசன் வரைக்கும் பெரச்சனையா தாளமுத்துக் குடும்பத்துலக் கொண்டுப் போயிட்டானுவோனேங்ற கோவத்துலயும், இனுமே மணலு எடுக்கணும்ன்னா பணத்தெ ஸ்டேசன்ல கப்பமா கட்டுனங்ற கோவத்துலயும் கெராமத்துலக் கெடந்த வெடலப் பசங்க சில பேத்து தாளமுத்துவே கடைத்தெருவுல வுட்டு அடிச்சிப்புட்டானுவோ. அவனுங்க அடிச்சதுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் கெடையாதுன்னு வெச்சிக்கிங்குளேம். ஆன்னா தாளமுத்துக் குடும்பத்துல நெனைப்பு என்னாங்குறீயே? நாம்மத்தாம் அந்தப் பசங்கள தூண்டி வுட்டுப்புட்டு அடிச்சிட்டதா நெனைக்குறானுவோ. அதுக்குத் தகுந்தாப்புல பாத்தீயன்னா அந்தப் பயலுவோ அத்தனெ பேரும் நம்மட தாய்மண் முன்னேற்ற கழகத்துல வேற இருக்கானுவோ. அந்தப் பயலுவோள எல்லாத்தையும் கூப்புட்டு நாம்ம கண்டிச்சேம். அடிக்கிறதா இருந்தா நம்மகிட்டெ ஒரு வார்த்தெ சொல்லிட்டுலடா அடிக்கணும். ஒரு ஊருக்காரப் பயலுவோளா இருந்துகிட்டு நீஞ்ஞப் பாட்டுக்கு அடிச்சா ன்னா அர்த்தம்? நாம்ம சொல்லி அடிச்சதாவுலடா பேச்சாவும்ன்னு எல்லாமும் கேக்குறேம். அந்தப் பயலுவோ நாம்ம எப்பிடியும் தாளமுத்துவே அடிக்கச் சொல்லுவேம்ன்னும், நாம்ம சொல்ற வரைக்கும் ஏம் காத்துக்கிட்டுக் கெடக்கணும்ன்னு நெனைச்சி அடிச்சிப்புட்டதா சொல்றானுவோ. ஆச்சுதா வெனெ. நாம்ம கெளரவம் பாக்கல. அவ்வேம் தாளமுத்து பண்ணது தப்புன்னாலும் ஊர்க்காரனா போயிட்டானேன்னு நாமளே யப்பாவ அழைச்சிக்கிட்டுப் போயி நடந்ததெ சொல்லி அதுக்குத் தேவையில்லாம மன்னிப்பும் கேட்டுட்டும் வந்தாச்சு. ஊர்ல நாட்டாமெகாரவுகிட்டெயும் இந்த மாதிரிக்கிச் சங்கதி மன்னிப்புல்லாம் கேட்டாச்சுன்னு சொல்லியாச்சு. நாம்ம பேச போனப்பல்லாம் நைச்சியமா நல்ல வெதமாப் பேசி வூட்டுல காப்பித்தண்ணி பலவாரம்லாம் செஞ்சிக் கொடுத்துட்டு தாளமுத்துக் குடும்பத்துல பண்ண வேலயப் பாருங்க! தாசில்தாருக்குப் போனப் போட்டு வுட்டு, மொட்டக் கடுதாசியையும் எழுதிப்புட்டானுவோ. செமத்தியா முதுகுல குத்திட்டானுவோ. அன்னிக்கு மூணு மணி இருக்கும். தாசில்தாரு ஜீப்ப எடுத்துக்கிட்டு ஆளுகளோட வூட்டுக்கு வந்துட்டாரு. கொல்லயப் பாக்கணும் வழிய வுடுங்கங்றாரு. நாம்ம சொல்லிட்டேம், இத்து நம்மட வூடு. ஆளாளுக்கு வந்தெல்லாம் பாக்க அனுமதிக்க முடியாதுன்னேம். ஒஞ்ஞ கொல்லையில சட்டத்துக்குப் பொறம்பா பொரம்போக்கத் தோண்டி மணல்ல அடிச்சி வெச்சிருக்கிறதா புகாரு வந்திருக்குன்னாரு தாசில்தாரு. நாம்ம சொன்னேம், அதெல்லாம் ஸ்டேசன்ல வெச்சி பேசி முடிச்சாச்சு, நீஞ்ஞ மேக்கொண்டு ஒண்ணும் அதெ நோண்ட வேணாம்ன்னு. தாசில்தாரு அதெ கேக்காம கொல்லப் பக்கம் போவப் பாத்தாரு பாருங்க. நாம்ம சத்தமா சொன்னேம், இத்து ஏம் வூடு, ஏம் வூட்டுக் கொல்ல. இதுல சம்பந்தமில்லாம கண்ட கண்ட ஆளுங்களுக்குப் போறதுக்கு அனுமதியல்லன்னேம். மீறிப் போன அடிப்பேம்ன்னும் சொன்னேம். கண்ட கண்ட பயெ பேச்சக் கேட்டுக்கிட்டு எம்மட கொல்லையில நொழையுறதா யிருந்தா அந்தக் கண்ட கண்ட பயலுகளோட கொல்லையில நொழைஞ்சிப் பாத்துப்புட்டு நம்மட கொல்லையில நொழையுங்கன்னேம். தாசில்தாரு கேக்கல. ஒட்டுமொத்த தாலுக்காவுக்கே அவருதாங் எல்லாம்ன்னு சொல்லி உள்ள நொழைஞ்சாரு. அதெ அவரு எதிர்பாக்கல. நாம்ம ஓடிப் போயி அவரு மேல மோதி தள்ளி வுட்டேம் பாருங்க. தடுமாறி நெலைகொழைஞ்சி வுழப் போனவரு எப்பிடியோ சமாளிச்சி நெதானிச்சு நின்னுட்டாரு. நாம்ம அத்தோட வுட்டுருக்கலாம். ஆத்திரம் தாங்கல பக்கத்துல ஒரு கட்டெ கெடந்துச்சுப் பாருங்க. அதெ எடுத்து செமத்தியா வெச்சேம். நாம்மத்தாம் அடிச்சேம்ன்னா எஞ்ஞ யம்மா, ஏம் பொண்டாட்டில்லாம் ச்சும்மா இருக்கணுமில்ல. நாம்ம அடிச்சதெப் பாத்துப்புட்டு அதுக கையில கெடைச்ச வெளக்கமாத்து, கட்டெகழின்னு எடுத்தாந்து அடிக்க ஓடியாந்துட்டுங்க. அதுல அடிக்காம அமைதியா நின்னது எஞ்ஞ யப்பாரு மட்டுந்தாம். ஆளாளுக்கு அவர்ர வெலாசுனதுல அவரு எழும்பி வெளியில ஓடுனவருதாம். அவருக்கு மின்னாடியே நாம்ம அடிச்சதெப் பாத்துட்டு கூட வந்து ஆளுங்க எல்லாம் ஜீப்புல கெளம்பி ஓடிட்டுங்க. அவரு தெருவுல கொஞ்ச தூரம் ஓடித்தாம் தூரத்துல நின்னுட்டு இருந்த ஜீப்புல ஏறிப் போனாரு!"ன்னு சொல்லி நிறுத்துனாப்புல கோவிந்து ரொம்ப தூரம் ஓடியாந்தவேம் மூச்சிரைக்க நிக்குறாப்புல.

            "அண்ணே கதெ சொல்ல ஆரம்பிச்சிட்டா நிறுத்த முடியாது!"ன்னாப்புல மகேந்திரன் இன்னும் கொஞ்சம் ஓடி அடங்கித்தாம் நிப்பாங்கங்றாப்புல.

            "அட என்னப்பா நீஞ்ஞ? உண்மெயில நடந்ததெ கதெங்றீயே? நீஞ்ஞல்லாம்தான் அந்த வெசாரணைப்பல்லாம் வந்தீயளே?"ன்னாப்புல கோவிந்து நடந்ததெ சொன்னாலும் நக்கல் பண்ணாம வுட மாட்டேங்றீங்களேங்றாப்புல.

            "நாஞ்ஞ நடக்கலன்னா சொல்றேம். நீஞ்ஞ சொல்றதெ கதெ போல சொல்றதாத்தான்னே சொல்றேம்!"ன்னாப்புல பெத்தநாயகம் கதெ கதெயாம் காரணமாம், காரணத்துக்குள்ளெ தோரணமாங்றாப்புல.

            "பெறவு என்னாச்சு?"ன்னாம் விகடு பாதி கெணத்தெ தாண்டுனவேம் அத்தோட நின்னுட முடியாதுங்றாப்புல.

            "வாத்தியாரு கதெ கேக்க ஆரம்பிச்சா, எல்லாத்தையும் மறந்துடுவாப்புல போலருக்கே!"ன்னாரு மகேந்திரன் குடிக்குற பால்ல ஈயி வுழுந்தா கூட பாலு குடி நெனைப்புல கண்ண மூடிட்டுக் காங்காம சப்புக் கொட்டி குடிக்கிறீயேங்றாப்புல.

            "பெறவு என்னாவா? அதெ ஏம் கேக்குறீயே? அரசாங்க அதிகாரிய அடிச்சா சும்மாவா? போலீசு வந்து பிடிச்சிட்டுப் போயி ஜெயில்லப் போட்டு, நம்மள ஜாமீன்ல எடுக்க வேண்டியதாப் போச்சு. நல்ல வேளையா வூட்டுல இருந்த பொம்பளைங்க மேல அந்த ஆளு எந்தக் கேஸ்ஸூம் கொடுக்கலங்க. அவருதாம் மனுஷம். நேருக்கு நேரா மோதுனாரு பாருங்க நல்லதோ கெட்டதோ. அப்பிடில்லா இருக்கணும். ஜாமீன் போட்டு எடுத்தது, அதுக்குப் பெறவு கேஸ்ஸ நடத்தி முடிச்சது எல்லாம் சிவபாதம்தாம். மூணு வருஷம் நடந்திருக்குங்க அந்த கேஸ்ஸூ. அந்த வெசாரண தேதிக்குல்லாம் நம்ம பயலுவோ அத்தனெ பேரும் வந்திருக்கானுவோளே கேளுங்களேம். கடெசியில எப்பிடியோ வெளியில கொண்டாந்துட்டாரு சிவபாதம். ரொம்ப கிரிட்டிக்கலான கேஸ்ஸூ. அடிச்சதுக்கு வலுவான சாட்சியங்க இருக்கு. வீயேவோ ஸ்டேட்மெண்டு எல்லாம் இருக்கு. எப்பிடியோ அதெ ஒடைச்சி நம்மள அந்த கேஸ்ஸ வுட்டு வெளியில கொண்டாந்தாரு. அதுக்குத்தாம் சொல்றேம் சிவபாதந்தாம் இதுக்கு சரி!"ன்னு சொல்லி முடிச்சாரு கோவிந்து கொடுக்குறதெ மிச்சம் மீதி வஞ்சகமில்லாம கொடுக்குறதெப் போல சொல்றதெ குத்தம் கொறையில்லாம முழுசா ஒண்ணு பாக்கியில்லாம சொல்லிடுறாப்புல.

            "தாளமுத்து வூட்டுலப் போயி பெறவு யாரும் பாக்கலையா?"ன்னாம் விகடு கல்லெறிஞ்சவனெ வுட்டுப்புட்டு கல்லப் போட்டு கடிச்சு கொதறியிருக்கீங்களேங்றாப்புல.

            "அவனெயெல்லாம் யிப்போ ஊர்ல யாரும் மதிக்கிறதேயில்ல. நூறு ரூவாயா பத்து பத்து ரூவாயா சில்லரெ மாத்தி வெச்சிக்கிட்டு அதுக்கு ஒரு நாலு பேத்த வெச்சிக்கிட்டு, அவனுங்ககிட்டெ அதெ கொடுத்து டீத்தண்ணிய வாங்கிக் குடிச்சிட்டு வா, போண்டா வாங்கித் தின்னுட்டு வான்னு திரிஞ்சிக்கிட்டு கெடக்குறாம். கடைத்தெருவுக்கு வர்றதும், போறதும் யிப்பிடி நாலு பேத்த வெச்சிக்கிட்டுப் பந்தா பண்ணுறதுமா அலையுறாம். செரித்தாம் பன்னாட அலைஞ்சிட்டுக் கெடக்கட்டும்ன்னு நாமளும் அவனெ கண்டுக்கிடறதில்ல. ஆன்னா இந்தச் சம்பவத்துக்குப் பெறவு நம்ம கிராமத்துக்குள்ள போலீசு, தாசில்தார்ன்னு யாரும் எட்டிக் கூட பாக்குறதில்ல. அதுல கிராமத்து ஆளுங்ககிட்டெ நமக்கு ஒரு பேருதாம். காத்தாங் கொளத்துல பொட்டு மணல்லு யில்லாம சனங்க எல்லாம் சேந்து மொட்டையடிச்சிடுச்சு. கொளத்த யிப்போ வறண்டு கெடக்கறப்ப பாத்தீயன்னா கெணறு போல ஆழமா கெடக்குது. கோடையிலயும் தண்ணி வத்தவே மாட்டேங்குது. மீனு பிடிக்கணும்ன்னா ஆறெழு நாளுக்கு பம்புசெட்ட வெச்சி எறைக்குறாப்புல ஆவுது! அத்து கொளமா கெணறான்னு பாக்குற நமக்கே சந்தேவமா இருக்கு. ஊருல இருந்த கொளம் ஒண்ணு காணாமப் போயி கெணறு உண்டாயிடுச்சு. ஏத்தோ நம்மாள முடிஞ்சது ஊருக்கொரு கெணத்தெ வெட்டிக் கொடுத்தாச்சு!"ன்னாப்புல கோவிந்து சிரிப்பொண்ண சிரிச்சுக்கிட்டு கிராப்பு வெட்டுறேன்னு போயி மொட்டையடிச்சிட்டு வந்தவேம் கதெயெ சொல்றாப்புல ஊருல கொளம் ஒண்ணு கெணறு ஆன கதெயெ.

            "செரி! யிப்போ யினுமே ஆவ வேண்டிய கதெயப் பேசுறதுதாம் செரி. நீஞ்ஞ சொல்றப்போ சிவபாதம் வக்கீல வெச்சி அப்பிடியே பண்ணிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு போற பாதை சரிதாம்ங்றப்போ அதுல பயணிக்க வேண்டியதுதாம்ங்றாப்புல.

            "அப்பிடின்னா நல்ல வெசயத்தெ ஏம் தள்ளிப் போட்டுக்கிட்டு? இப்பவே ஆபீஸ்ல வக்கீலு ப்ரியா யிருந்தா போயிப் பாத்துடுவேம்!"ன்னு கோவிந்து சிவபாதம் வக்கீலுக்குப் போனப் போட்டுக் கேட்டாரு பொண்ணு பிடிச்சிருந்தா பாக்கு வெத்தல மாத்தி தட்டெடுத்துக் கொடுத்துப்புடலாம்ங்றாப்புல.

சிவபாதம் வக்கீலு ப்ரியா இருக்குறதாவும் வரச் சொன்னதாவும் கோவிந்து சொல்ல அவர்ரப் பாக்க எல்லாரும் கெளம்புனாங்க. நெலமெயப் பாக்குறப்போ சட்டுன்னு மாறுற வானிலையப் போலத்தாம் இருந்துச்சு. அதுக்கேத்தாப்புல வானமும் கொஞ்சம் தூத்தல் போடுறெ வுட்டுருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...