30 Jan 2021

இப்போ நேரம் சரியில்ல!

இப்போ நேரம் சரியில்ல!

செய்யு - 702

            டிவியெஸ் பிப்டியை எடுத்தாந்தப் பெறவுதாம் விகடு பல்ல துலக்குனாம், குளிச்சி முடிச்சாம். சுப்பு வாத்தியாருக்குப் போன அடிச்சாம். அடிச்சதுமே அவரு கேட்ட மொத கேள்வி, "வண்டிய எடுத்தாந்திட்டீயாடாம்பீ? ரொம்ப கஷ்டப்பட்டு வாங்குன வண்டிடாம்பீ!"ன்னுத்தாம். மொத மொதலான விசயங்க வாழ்க்கையோட கடைசி வரைக்கும் மறக்கிறதில்ல. மனுஷன் பொறந்ததும் மொதல்ல பண்டுறது அழுவுறதுதானே. அதாலோ என்னவோ அதெ அவ்வேம்மால கடெசி வரைக்கும் மறக்க முடியாம அப்பைக்கப்போ அழுதுகிட்டெ இருக்காம் போல. வெளியில செருப்ப வுட்டவேம் கோயிலுக்கு உள்ள போன பெற்பாடும் அதெ ஞாபவமா சாமியக் கும்புடுறது போல சுப்பு வாத்தியாரு ராத்திரி முழுக்க வண்டி ஞாபவமாவே கெடந்திருப்பாரு போல. வண்டிய ராத்திரி ஆரம்பிச்சி, காலையில மெனக்கெட்டு ஸ்டேசன்ல எடுத்தாந்த கதெ வரைக்கும் சொல்லி முடிச்சாம் விகடு விக்கிரமாதித்யம் வேதாள சாகசக் கதெயெப் போல. "அதென்னடா இத்து நம்ம வூட்டுப் பொண்ண வூடு பூந்து தூக்குறாவோ. நம்ம வூட்டு வண்டியக் கேட்டா அம்மாம் இழுப்பு இழுக்குறாவோ. நம்ம வூட்டுல பூந்துத் தூக்க பெரசிடண்ட்ட கேட்டா செஞ்சாவோ? வண்டியக் கேட்டா மட்டும் பெரசிடண்டு சொன்னதும் வுட்டுடுறாவோ. எல்லாம் ஆளுக்குத் தவுந்த ஞாயந்தாம். ராத்திரியே பெரசிடெண்டுக்கு அடிச்சிருந்தீயன்னா காலைல அலைச்சல் இருந்திருக்காது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பாத்தவுடனே அடிச்சிருந்தா பாம்பெ வெரட்டிப் பிடிச்சு செருமப்பட்டு அடிக்க வேண்டியதில்லங்ற மாதிரிக்கு.

            "ராத்திரின்னா மணி பன்னெண்ட நெருங்கிட்டுப்பா. தூங்கிட்டு இருப்பாவோன்னு வுட்டாச்சு. அத்தோட காத்தால வந்தா கொடுத்துப்புடுறதா வேற சொன்னாவோப்பா. அதாங் காத்தால பாத்துட்டு அவுங்க கொடுக்கலன்னதுந்தாம் பெறவு அந்த யோசனெ வந்துச்சு!"ன்னாம் விகடு முதலை வாயால சொன்னதெ நம்பி மொதலுக்கு மோசம் வாராதுன்னு நம்புனதெ சொல்றாப்புல.

            "வண்டிய அஞ்ஞ போட்டுட்டு வந்தது தப்புடாம்பீ!"ன்னு வருத்தப்பட்டுக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு நடந்த தப்புல தானும் கொஞ்சம் பங்கெ போட்டுக்கிடுறாப்புல.

            "இட்டிலியச் சுட்டு எடுத்துக்கிட்டு அப்பிடியே ஆயியயும் அழைச்சிக்கிட்டு வர்றேம்ப்பா!"ன்னாம் விகடு அந்தக் கதெ அத்தோட அத்தோட முடியட்டும், அடுத்து ஆவப் போற கதெயெ ஆரம்பிப்போம்ன்னு.

            "வேண்டாம்டாம்பீ! நீயி சாப்பாட்ட முடிச்சிட்டுப் பள்ளியோடத்துக்குக் கெளம்பு. லீவு வேற ரொம்ப போட்டிருக்கே. நாம்மத்தாம் இஞ்ஞ தொணைக்கு இருக்கேமே. பெறவு நீயி வேற ஏம் அலைஞ்சிக்கிட்டுக் கெடக்கே? நாம்ம இஞ்ஞயே பதினோரு மணி வரைக்கும் இருந்துட்டு அதுக்குப் பெறவு கெளம்பி வூடு வர்றேம். வந்தேம்ன்னா குளிச்சி முடிச்சிட்டு கொஞ்சம் தூக்கத்தப் போட்டா நீயி பள்ளியோடம் வுட்டு வந்ததுடுவே. ராத்திரி கொசுக்கடியில இஞ்ஞ நல்ல தூக்கமில்லடாம்பீ! பொரண்டு பொரண்டு படுத்து கண்ணெல்லாம் எரிச்சலாயிருக்கு. நாம்ம இஞ்ஞ இருந்து பாக்க வேண்டியதப் பாத்துக் கொடுத்துட்டுக் கெளம்பி வூடு வந்துடுறேம். பெறவு அப்பிடியே ரண்டு பேருமா கெளம்பி ஆஸ்பத்திரிக்கி வந்தா நீயும் பாத்துட்டு அப்பிடியே நம்மளயும் வுட்டுப்புட்டு ராத்திரிக்கு வூடு வந்துப்புடலாம்."ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரு ராத்திரி கழிஞ்சது ஓராயிரம் ராத்திரி கழிஞ்சதெப் போல.

            "இட்டிலி வேற நெறையச் சுட்டு, சட்டினி வேற நெறைய அரைச்சாயிடுச்சுப்பா! ஆயி வேற பாக்கணுங்றா?"ன்னாம் விகடு திட்டம் பண்ணதெ மாத்துனா சங்கட்டம் ஆயிடும்ங்றாப்புல.

            "அதெயே மத்தியானச் சாப்பாட்டுக்கு வெச்சிக்கிடலாம். வேணும்ன்னா சாயுங்காலம் கெளம்புறப்ப இட்டிலியும், சட்டினியும் செஞ்சு எடுத்துகிட்டுக் கெளம்பலாம்! அதெ வேணும்ன்னா இன்னொரு நாளு அழைச்சாந்து காட்டிக்கிடலாம். யிப்போ வாணாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சங்கட்டத்தையும் சாதவமா பண்ணிக்கிடலாம்ங்றாப்புல.

            "டாக்கடருமாருங்க வந்துப் பாத்தாங்களா? என்னத்தெ சொன்னாங்கப்பா?"ன்னாம் விகடு இட்டிலி சட்டினி நெனைப்பெ தூக்கி அந்தாண்ட வெச்சிட்டுத் தங்காச்சி நெனைப்பு வந்தாப்புல.

            "நாம்ம உள்ளாரப் போயி டீத்தண்ணியும், பன்னும் வாங்கிக் கொடுத்துட்டு வந்துதாம்டாம்பீ! என்ன நடந்துச்சுன்னு கேக்கலடாம்பீ! காலச் சாப்பாட்ட முடிச்சிட்டுக் கேக்கணும்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இனுமே ஆவுற கதெ அத்துப் பாட்டுக்கு ஆவும்ங்றாப்புல.

            செரித்தாம்ன்னு சொல்லிட்டு போன வெச்சிட்டு ஆயிகிட்டெ சேதியச் சொன்னாம் விகடு. "எப்பவும் எடுத்தா ஒரு முடிவுல நிக்க மாட்டீயளே? மாத்தி மாத்திட்டு இருப்பீயேளே! நாம்ம கெளம்பிப் போயிப் பாத்துட்டு வந்தாத்தாம் ன்னா? அவுக அத்தையும், செய்யுவும் ன்னா நெனைப்பாங்க? ஆஸ்பத்திரியில கெடக்குற நம்மள வந்துப் பாக்கலன்னுத்தாம் நெனைப்பாங்க. நீஞ்ஞ ஒஞ்ஞ இஷ்டத்துக்கு ஆடுறதுக்கு நாம்ம கெட்டப் பேர்ர வாங்கிக் கட்டிக்கிடணமாக்கும்?"ன்னு அவ்வே சுட்ட தொசையெ திருப்பித் திருப்பிச் சுட்டு எடுக்குறாப்புல ஒரு பாட்ட வெச்சா.

            "யப்பா மத்தியானத்துக்கு மின்னாடி சாப்பாட்டுக்கு வந்துடுவாங்க. நீயே கேட்டுக்கோ ன்னா ஏதுன்னு? மத்தியானச் சாப்பாட்ட பண்ணிப்புடுறீயா ன்னா?"ன்னாம் விகடு ஒம் பாட்டெ கேக்குறதுக்கும் ரசிக்கிறதுக்கும் நமக்கு நேரமில்லங்ற மாதிரிக்கு.

            "இட்டிலிய வேற கணக்கில்லாமச் சுட்டுப் போட்டு அது வேறயா? செரி செஞ்சி வைக்கிறேம். மாமாகிட்டெ கேட்டு ஒரு பெரயோஜனமும் யில்ல. இஞ்ஞ வூட்டுல பேத்தியாளப் பாத்துட்டுக் கெட, நாஞ்ஞ அஞ்ஞ அவுங்களப் பாத்துக்கிடுறேம்பாக. ஒஞ்ஞகிட்டெ கேக்குறதும் வீணு. மாமாகிட்டெயும் கேக்கறதும் வீணு. நாமளே ஒஞ்ஞ யாருகிட்டெயும் சொல்லாம கெளம்பிப் போயி பாத்துட்டு வந்தாத்தாம் செரிபட்டு வாரும்!"ன்னு சொல்லிட்டு பாடுன பாட்டெல்லாம் காத்தோட கரைஞ்ச மாதிரிக்குத்தாம்ன்னு தம் பாட்டுக்கு வேலையப் பாக்க ஆரம்பிச்சா.

            விகடு சாப்புட்டு முடிச்சிட்டுப் பள்ளியோடம் கெளம்புனாம். மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆறு இட்டிலியச் சாப்பாட்டு டப்பாவுல எடுத்துக் கொடுத்தா ஆயி. "வாணாம்! யப்பா வேற வர்றதா சொல்லிருக்காங்க. வந்து என்ன ஏதுன்ன வெவரம் வெசாரிட்டு அப்பிடியே சாப்புட்டுப்புட்டுப் போயிடுறேம்!"ன்னாம் விகடு, போற எடத்துக்குத் தகுந்தாப்புல நெறத்தெ மாத்திக்குமாமே பச்சோந்தி, அதெ போல அப்பைக்கப்போ யோஜனைக்கேத்தாப்புல திட்டத்தெ மாத்திக்கிறாப்புல.

            "அப்பிடின்னா வண்டிய எடுத்துக்கிட்டுப் போங்க. சைக்கிள மிதிச்சிக்கிட்டு மாங்கு மாங்குன்னு போயிகிட்டும், வந்துக்கிட்டும் கெடக்காதீயே!"ன்னா ஆயி மாத்துன யோஜனைக்கேத்தாப்புல வண்டிய மாத்தி எடுத்துட்டுப் போங்றாப்புல. செரின்னு பள்ளியோடத்துக்கு அன்னிக்குத்தாம் மொத மொதலா டிவியெஸ் வண்டியக் கெளப்பிக்கிட்டுப் போனாம். புள்ளியோ ஹோய்ன்னு சத்தத்தெ போட்டுக்கிட்டெ வண்டி பின்னாடியே ஓடியாந்துச்சுங்க. "நம்ம அய்யா வண்டியில வர்றாங்கடோய்!"ன்னு வண்டியச் சுத்திக்கிட்டுங்க திருவாரூரு தேரு தஞ்சாவூருக்கு வந்துப்புட்டதெப் போல. "அய்யா வண்டில்லாமா வெச்சிருக்கீயே?"ன்னு ஒவ்வொரு புள்ளீயோளும் சுத்தி நின்னு கேள்விய்க கேட்டு நச்சரிச்சிட்டுங்க. "இத்து நம்ம வண்டில்ல. யப்பாவோட வண்டி!"ன்னாம் லிப்ட் கேட்டுப் போறவேம் வண்டிய ஓட்டிட்டுப் போறதெப் போல. "இனுமே இந்த வண்டியிலயே வாங்கய்யா!"ன்னுச்சுங்க புள்ளீயோ சைக்கிளப் போட்டு மிதிமிதின்னு மிதிக்காம வண்டியில வாகா வாங்கங்றாப்புல. ஆன்னா சைக்கிளப் போறதெப் போல சொகமான அனுபவம் ஏதுமில்ல. தங் காலே தனக்கு உதவிங்றாப்புல சைக்கிளு சொல்லித் தர்ற பாடத்தெ பெட்ரோல்ல போவுற வண்டியால சொல்லித் தர்ற முடியாது. ஒரு மிதி மிதிச்சா நாலு அடி நம்மள தள்ளிட்டுப் போவும் சைக்கிளு. ஒடம்புல சேர்ற சர்க்கரையையும் கொழுப்பையும் ஒவ்வொரு மிதிக்கும் கரைச்சிட்டே இருக்கும் சைக்கிளு. அந்த வெதத்துல நாமளே மிதிச்சு அதாச்சு நாமளே ஒழைச்சு சைக்கிள்ல போறப்ப ஒடம்புலயும் செரி, காத்துலயும் செரி எந்த மாசும் சேர்றதில்ல. ஒழைக்காம உக்காந்து போற மோட்டார் வண்டியால ஒடம்புல சர்க்கரையும் கொழுப்பும் சேர்றதோட காத்துலயும் மாசுதாம் சேருது. சைக்கிள் மோதிச் செத்தவேம் இல்ல. மோட்டார் வண்டி மோதிச் செத்தவேம் இருக்காம். பஞ்சர் ஆனாலும் தள்ளிட்டு வர்ற சைக்கிளப் போல மோட்டார் வண்டியெ தள்ளிட்டு வர்ற முடியாது. சைக்கிளு தர்ற சௌகரியமே தனித்தாம். நாம்ம பாத்த வரைக்கும் மோட்டார் வண்டியில போறவனெ வுட சைக்கிள்ல போறவேம் நல்லாவே இருக்காம். அதெ வுட இன்னொரு உண்மெ சைக்கிளும் வுடத் தெரியாம நடந்தே போறவேம் இன்னும் ரொம்ப நல்லா இருக்காம். எல்லாத்துக்கும் வேகந்தாம் காரணம். போற வேகத்துக்கு ஏத்தாப்புல வேகமா போயிச் சேந்துப்புடுறாம் போல.

            பள்ளியோடம் ஆரம்பிச்ச பெற்பாடும் புள்ளீயோ வண்டியப் பத்தி வண்டிய வண்டியா பேசிட்டே இருந்துச்சுங்க. அதுகளப் பொருத்த வரைக்கும் சைக்கிள வுட மோட்டார் வண்டித்தாம் பெரிசு. ஆன்னா மோட்டார் வண்டியெ வுட சைக்கிள்தாம் பெரிசு. சைக்கிள வுட சொந்தக் கால்ல நடக்குறதுதாம் பெரிசு. அதுக்கு ஒண்ணும் காசி பணம் தேவையில்ல. ஆன்னா ஆரோக்கியமான ஒடம்பு தேவை. சைக்கிளையும் வாங்கிப்புடலாம், மோட்டார் வண்டியையும் வாங்கிப்புடலாம். ஆன்னா ஆரோக்கியத்தெ வாங்கிப்புட முடியாதே. இதுல என்னா ஒரு விசயம்ன்னா மோட்டார் வண்டிய வாங்காம இருந்தாலே அத்து ஆரோக்கியத்தைக் காசி கொடுக்காம வாங்குனதெப் போலத்தாம்ன்னு வயசான பெற்பாடுத்தாம் புரியும். இப்பிடிப் பேசிட்டு இருக்குறப்போ புள்ளீயோ மோட்டார் வண்டிய ஒசத்திச் சொன்னா விகடு சைக்கிள ஒசத்திச் சொன்னாம். செரித்தாம் வாத்தியாரு சொல்றாரேன்னு புள்ளியோ சைக்கிள ஒசத்திச் சொல்றப்போ விகடு நடந்துப் போறதெ ஒசத்தியா சொன்னாம்.

வுட்டா இன்னிய பொழுது வண்டி புராணமா போயிடுமோன்னு ஊடால பாடத்தெ கோத்து அத்துச் சம்பந்தமா புள்ளீயோளோட பேச்ச இழுத்தாந்தாம் விகடு. புள்ளீயோளோட பேசிட்டு இருக்க இருக்க எந்த ஞாபவமும் இல்லாம பாடமும் பேச்சும் ஒழுங்காப் போயிட்டு இருந்துச்சு. எதாச்சும் ஒரு பயிற்சிய எழுதிப் போட்டு அதெ எழுதி முடிங்கன்னு புள்ளியோள்ட்டெ சொன்னா போதும் நேத்தி நடந்த சம்பவமாவே ஞாபவத்துக்கு வந்துச்சு விகடுக்கு. ஒடனே அவனோட நெனைப்புப் பலவெதமா போயிகிட்டெ இருந்துச்சு. அந்த நெனைப்பு வந்தா ஒடனே ஆஸ்பிட்டலுக்குப் போன அடிச்சிக் கேட்டுக்கிட்டெ இருந்தாம். டாக்கடர்ரு வந்துப் பாத்தாங்களா? என்னத்தெ சொன்னாங்க? எத்தனெ நாளு ஆஸ்பிட்டல்ல இருக்கணும்ன்னு அவ்வேம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவெயாவது போன அடிச்சிட்டுக் கெடந்தாம் பங்குச் சந்தையில பங்கெ வாங்கிப் போட்டவேம் வேல ஏறியிருக்கா இல்லியான்னு நொடிக்கொரு தரம் வெலையப் பாத்துக்கிட்டுக் கெடக்குறதெப் போல. திரும்ப பாடத்தெ நடத்த ஆரம்பிச்சாத்தாம் வெதவெதமா வந்த அந்த நெனைப்புகப் போனுச்சு. பாத்தாம் விகடு அன்னிக்கு பாடத்தெ அவ்வேம் பாட்டுக்கு நடத்திக்கிட்டெ இருந்தாம். எதையும் எழுதிப்போட்டு புள்ளீயோள அன்னிக்கு எழுதவே சொல்லல. மத்தியானம் ஆனதும் மணிய அடிச்சி வுட்டுட்டு புள்ளீயோள பத்திரமா அமைப்பாளருக்கிட்டெ பாத்திருக்கச் சொல்லிட்டு, நாம்ம வந்தப் பெறவு கெளம்பலாம்ன்னு சொல்லிட்டு வந்தாம்.

            விகடு வூட்டுக்கு வந்தப்போ சுப்பு வாத்தியாரு குளிச்சி முடிச்சிட்டு உக்காந்திருந்தாரு. வந்ததும் வாரதுமா, "டாக்கடருங்க ன்னா சொன்னாங்க?"ன்னாம் விகடு ஒத்தெ பாட்டுக்கார்ரேம் அதெயெ பாடிக் கெடுக்குறாப்புல.

            "முதுவுல அடிபட்டதுக்கு எக்ஸ்ரே எடுக்கணும்ன்னு சொல்லிருக்காவோன்னு சொன்னேம்ல்லா. ஊசில்லாம் போட்டு வுட்டு, மாத்திரெ மருந்தெல்லாம் கொடுத்து வுட்டுருக்காவோ. நாம்ம கெளம்புற நேரத்துல இதுக எக்ஸ்ரே எடுக்குறதுக்கா நின்னுட்டு இருந்துச்சுங்க. நின்னா நேரமாயிடும்ன்னு நாம்ம கையில இருந்த பணத்தெ கொடுத்துட்டுக் கெளம்பிட்டெம்டாம்பீ! போலீஸ்காரவுக இம்மாம் மோசமா நடந்துப்பாவோன்னு நெனைக்கலடாம்பீ! நாம்ம கூட பொண்ணு மேல இன்னிய வரைக்கும் ஒன்னிய கூட அடிச்சிருக்கேம், மவளெ ஒரு அடி அடிச்சிதில்லடாம்பீ! அவனுக்குக் கட்டிக் கொடுத்து அவ்வேம் அடிச்சி, அவனெ கலியாணத்த பண்ணி வுட்டதுக்கு போலீஸ்லயும் அடி வாங்க வுட்டு, எல்லாம் தலயெழுத்துடாம்பீ! ஸ்டேசன்லயும் போயி இந்த மாதிரிக்கி நிக்க வேண்டியதா ஆயிடுச்சு! எல்லாந் நேரந்தாம்டாம்பீ!"ன்னு சுப்பு வாத்தியாரு சொல்ல கண்ணு கலங்குனுச்சு. அடி மேல அடி வுழுந்தா ஓரிடத்துல கெடக்குற அம்மிக்கல்லும் நவுந்துத்தானே போவும். அப்பிடி மனசு நவுந்துப் போயிப் பேசுனாரு சுப்பு வாத்தியாரு. விகடுவுக்கு என்னத்தெ சொல்றது, எப்பிடி ஆறுதல் சொல்றதுன்னு புரியாம தவிச்சி நின்னாம்.

            "செரி நீயிச் சாப்புட்டுக் கெளம்புடாம்பீ! இந்நேரத்துக்கு நீயி வரவே வேண்டியதில்லடாம்பீ! புள்ளீயோ வேற அஞ்ஞ கெடக்குமுங்க. கெளம்பு சட்டுன்னு. சாப்பாட்ட எடுத்துக்கிட்டுக் கூட அஞ்ஞப் போயி சாப்புடுடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நம்ம கதெ அதுவா எழுதிக்கும், நாம்ம எழுத வேண்டிய கதெயெ சரியா எழுதிப்புடணும்ங்றாப்புல.

            "சாப்பாடு சமைச்சிருக்கேம்லா மாமா! சூடா சாப்புட்டுப் போவட்டும் மாமா!"ன்னா ஆயி ரண்டு வாயிச் சூடா சாப்புட்டுப் போறதால கதெயில ஒண்ணும் குடி முழுகிப் போயிடாதுங்றாப்புல.

            "அதாங் இட்டிலி நெறையச் சுட்டுக் கெடக்குன்னான்னே! அதெ சாப்புட்டுக்க மாட்டேமா? ஏம் சாப்பாடு வேற செஞ்சே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு நீயி வேற ஏம் புதுக்கதெயெ ஆரம்பிக்கிறேங்றாப்புல.

            "அஞ்ஞ ஓட்டல்லயும் நேத்திலேந்து இட்டிலி, தொசென்னு சாப்புட்டுக் கெடந்திருப்பீயே! அதாங் ஒரு வேளையாச்சும் சாப்பாடா இருக்கட்டுமேன்னு பண்ணிட்டேம்! நாமளும் இன்னிக்கே வந்து ரண்டு பேத்தையும் பாத்துட்டு வந்துப்புடுறேனே?"ன்னா ஆயி நடக்குற கதெயில தன்னையும் கொஞ்சம் சேத்துக்குங்கங்றாப்புல.

            "நீயி இஞ்ஞ குடும்பத்தெப் பாத்துட்டுக் கெட. இப்போதைக்கு நீயி பண்ண வேண்டியது அத்துதாம். அதாங் அங்க யத்தெ கெடக்குல்லா. பாத்துக்கிடட்டும். நாளைக்கோ நாளா நாளிக்கோ அழைச்சிட்டு வந்துப்புடலாம். அதுக்கு நீயி வேற ஏம் வந்துப் பாத்துக்கிட்டு? இஞ்ஞ வந்த ஒடனே பாத்துக்கிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தாம் பண்டுன பாவத்தெ தானே அனுபவிக்கணும்ங்றாப்புல.

            "நெனைச்சேம் மாமா! நீஞ்ஞ யிப்பிடித்தாம் சொல்லுவீயன்னு!"ன்னா ஆயி எழுதுன கதெயில யாரும் மாத்தம் பண்ண மாட்டாங்கங்றாப்புல.

            "அதெல்லாம் யிப்போ இருக்குற நேரமே சரியில்ல ஆயி! அதாங் இவனெ கூட காலம்பர வர வாணாம்ன்னு சொல்லிட்டேம்! எல்லாம் கொஞ்ச நாளுக்கு வெளிக் கெளம்பாம வூட்டோட இருக்குறதுதாங் நல்லது! வெளியில கௌம்பிப் போயி சமாளிக்கிறேம்ன்னுத்தாம் இம்புட்டும் ஆயிக் கெடக்கு!"ன்னு சொன்னவரு, "நீயி சாப்புட்டுப்புட்டு சட்டுப்புட்டுன்னு பள்ளியோடம் கெளம்பு. முடிச்சிட்டு வா. நாம்ம கெளம்பி தயாரா இருக்கேம்!"ன்னு விகடுவெப் பாத்துச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு நமக்கு நடக்குறது சரியா இல்லன்னாலும் நாம்ம நடந்துக்கிடறது சரியா இருக்கணும்ங்றாப்புல. அதெ கேட்டதும் அவ்சர அவ்சரமா நாலு வாயிச் சோத்தெ அள்ளி வாயிலப் போட்டுக்கிட்டு நெதானமா சாப்புட வகையில்லாத குருவியப் போல விழுங்குனது பாதி, விழுங்காதது பாதின்னு கௌம்பிட்டாம் விகடு.

            சாயுங்காலம் பள்ளியோடம் விட்டு வந்தாம் விகடு. அவ்வேம் கூட சுப்பு வாத்தியாரு கெளம்ப தயாரா இருந்தப்போ ஒரு பெரிய வாளியில இட்டிலியும், சின்ன வாளியில சட்டினியும் செஞ்சு தயாரா வெச்சிருந்தா ஆயி. அதெ எடுத்துக்கிட்டு வண்டிக்கு மின்னாடி மாட்டிக்கிட்டு ரண்டு பேரும் கெளம்புனாங்க. விகடு வண்டிய ஓட்டுனாம். சுப்பு வாத்தியாரு பின்னாடி உக்காந்துகிட்டாரு. கெளம்புறப்ப வானத்தெப் பாத்தப்போ மேக மூட்டமாத்தாம் இருந்துச்சு. காடுவெட்டிய நெருங்குற வரைக்கும் மழெ மேகம் தன்னோட வேலையக் காட்டல. அதுக்குப் பெறவு மழெ லேசா தூற ஆரம்பிச்சிது. வண்டிய நிறுத்துறதா, ஓட்டுறதாங்ற கொழப்பத்துல இருந்த விகடுகிட்டெ, "போயிட்டே இருடாம்பீ! பெலமா வந்தா பாத்து நிறுத்திக்கிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இப்போ போயிக்கிட்டெ இருக்குறதுதாம் பயணத்துக்கு நல்லதுங்றாப்புல.

வழுக்குப் பாதை

            கூத்தாநல்லூர் சார் பதிவாளர் ஆபீஸூக்கு எதுத்தாப்புல இருக்குற பாலத்து வழியாப் பூந்து மரக்கடை ரோட்டுல வுட்டு லட்சுமாங்குடிக்கு வெளியில இருக்குற ரோட்டுலப் போயிச் சேந்தாம் விகடு. மழெ கொஞ்சம் பலமா பெய்ய ஆரம்பிச்சிருந்தது. அந்த எடத்துலேந்து கோரைாயத்தாங்கரை வரைக்கும் கொளத்துலேந்து டிப்பர்ல டிராக்கடர்ர வெச்சி மண்ணு அடிச்சிருப்பாங்க போல. அங்கங்க கொளத்து களிமண்ணு கட்டிக் கட்டியா வுழுந்து செதறிக் கெடந்துச்சு. அது நச நசன்னு பேஞ்ச மழையில வழுக்கி வுடுற களியப் போல ரோட்டுலக் கெடந்துச்சு. வண்டியிலப் போறவங்ளெ அந்தக் களிமண்ணு வழுக்கி வுட ஆரம்பிச்சது. பனியில ஸ்கேட்டிங் போறவங்களப் போல வண்டிச் சக்கரம் அது பாட்டுக்குக் களியில உண்டான உலையில வழுக்கிக்கிட்டுப் போவ ஆரம்பிச்சது. அதெப் பாத்ததும் சுப்பு வாத்தியாரு மவ்வேங்கிட்டெ, "பாத்துப் போவணும்டாம்பீ! இத்து வழுக்கி வுட்டதுன்னா வண்டியோட சறுக்கிக்கிட்டு வுழுவ வேண்டித்தாம். ஒடம்பெல்லாம் செராய்ச்சி தேய்ச்சி எடுத்துப்புடும்! வண்டியிலேந்து வுழுந்தா ரண்டு மாசத்துக்கு வலியில் உசுரு போயிடும்!"ன்னாரு சூடு கண்ட பூனைக்குத்தாம் சூட்டோட வேதனெ தெரியும்ங்றாப்புல.

            "மெதுவாத்தாம் போறேம்!"ன்னாம் விகடு எந்தக் காலத்துல நாமெல்லாம் வண்டியில வேகமா போனேம்ங்றாப்புல.

            "இதுல போவவே வாணாம். எறங்கித் தள்ளிட்டுப் போயிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எடம் சரியில்லன்னா எறங்கிப் போறதுல தப்பில்லங்ற மாதிரிக்கு.

            "மழெ பலமா பிடிக்கிறதுக்குள்ளார மெதுவாப் போயிட்டெ யிருந்தா மழைக்கி மின்னாடி ஆஸ்பிட்டலுப் போயிச் சேந்துப்புடலாம்!"ன்னாம் விகடு காலத்தோட கடந்தா எடத்தெ மாத்திப்புடலாம்ங்றாப்புல.

            "சொன்னா கேக்க மாட்டீயேடாம்பீ! பாத்து மொல்லமா வுடு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நேரம் செரியில்லன்னா மொல்லமாத்தாம் போவணுங்றாப்புல. அவரு சொல்லிட்டு இருக்குறப்பவே இவுங்களத் தாண்டிப் போன கவர்மெண்டு பஸ்ஸூ சேத்துல வழுக்கிக்கிட்டுப் போயி ரோட்ட வுட்டு எறங்கி வாய்க்கால்லத் தாண்டி வயல்ல நோக்கி விருட்டுன்னு போனுச்சு. நல்லவங்க சொல்லுக்குக் கட்டுப்படாம போயி நிக்குற காவாளி மனுஷங்கப் போல பிரேக்குக்குக் கட்டுப்படாமப் போன பஸ்ஸூ அதுவா வயல்ல கெடந்த சகதி உலையில சிக்கி நகர முடியாம நின்னுச்சு. நல்ல வேளையா அந்த நேரத்துல அந்தப் பஸ்ஸூக்கு மின்னாடி யாரும் வர்றாமப் போனாங்க. வந்திருந்தா அவுங்களையும் மோதித் தூக்கி வாய்க்கால்ல தள்ளி வயலோட அணைச்சிருந்திருக்கும். வண்டியோட பின்னாடிச் சக்கரம் வாய்க்காலுக்குள்ள இருந்துச்சு. முன்னாடி சக்கரம் வயலுக்குள்ள பாய்ஞ்சிருந்துச்சு. நல்லவேளையா வண்டி தலைகுப்புற கவுழவோ, சாயவோ யில்ல. ரோட்டுலேந்து வெலகி வயல்லப் பாஞ்சாப்புல நின்னுச்சு. பஸ்லேந்து சனங்களோட சத்தம் குய்யோ முய்யோன்னு கேக்க ஆரம்பிச்சிது. அதெ நேரடியா கண்ணால பாத்ததும் அப்பிடியே பகீர்ன்னு தூக்கி வாரிப் போட்டுச்சு விகடுவுக்கு.

            "சோன்னேம்லடாம்பீ! நாலு பக்கமும் சக்கரமிருக்குற வண்டியே பாரு கிரிப்புக் ‍கெடைக்காம பிரேக்குக்கும் நிக்காம வாய்க்கால்லத் தாண்டி வயலுக்குள்ள கெடக்குது பாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அவ்சரப்பட்டா அவதியிலத்தாம் போயிக் கெடக்கணும்ங்றாப்புல.

            அக்கம் பக்கத்துல வண்டியில போயிட்டு இருந்த அத்தனெ பேரும் அந்த எடத்துல நின்னுட்டாங்க. பஸ்ல இருந்த சனங்கள பின்னாடி படிக்கட்டு வழியா வர்றச் சொல்லி வாய்க்காலுப் பக்கத்துல நின்னுகிட்டுக் கையக் கொடுத்து ரோட்டுப் பக்கம் இழுத்து வுட்டு ஒவ்வொருத்தரா எறங்கச் சொன்னாங்க. மழெ தூத்தல் போட்டது நிக்கவே யில்ல.

            "கொளத்துலேந்து மண்ண அடிக்கிற அனுமதிக் கொடுக்குறவனுவோ சிந்தாம செதறாம மண்ண அடிக்குறானுவோளான்னு பாக்கணுமா யில்லியா? நாம்ம வூட்டுக்கு ஒரு வண்டி மணல்ல அடிச்சாப் ‍போதும் ஆயிரத்தெட்டு கேள்வியக் கேட்டு வர்ற வண்டிய வர வுடாம அடிச்சிப்புடுவானுவோ. யிப்போ எத்தனெ டிப்பர்ல எத்தனெ வண்டி கொளத்து மண்ணுப் போயிருக்கு. இந்த ரோடு இப்பிடி கெடக்குதுன்னு ஒருத்தனாவது வந்துப் பாக்கறானுவோளா? யில்ல டிப்பர்ல அடிச்சப் பயலுவோலாவது அடிச்சி முடிச்சிப் பெற்பாடு இந்த மண்ண எதாச்சிம் வெச்சி சொரண்டி அந்தாண்ட இந்தாண்ட போட்டானுவோளா? இந்த மண்ணால ரோட்டுல போறவனுக்கும் எடைஞ்சல். இத்துக் காஞ்சுதுன்னா அப்பிடியே தார்ரப் பேத்துட்டு ரோட்டுக்கும் எடைஞ்சல். இந்த மண்ணு மழையில நனைஞ்சா பெருமழைப் பிடிச்சி மழையா அடிச்சி அந்தாண்ட கரைச்சி வுட்டாத்தாம் உண்டு. இவனுவோ கண்டுக்கிடவே மாட்டானுவோ. இதுல எத்தனெ பேரு வுழுந்தா என்ன? எத்தனெ பேரு வழுக்கிட்டுப் போயி செத்தா என்னான்னு இருப்பானுவோ!"ன்னு பஸ்லேந்து சனங்க எறங்கி ஒதவிப் பண்ணிட்டு இருந்த ஒருத்தரு சத்தம் போட்டாரு. பஸ்லேந்து எல்லாரும் எறங்கி முடிச்சி வெளியில வர்ற வரைக்கும் விகடுவும், சுப்பு வாத்தியாரும் அதெப் பாத்துக்கிட்டு நின்னாங்க.

            "ரோட்டுல கெடக்குற கொளத்து மண்ண மட்டும் நம்பக் கூடாதுடாம்பீ! வூட்டுக்குள்ளாரயே இருக்குற துரோகியும், ரோட்டுக்கு மேல கெடக்குற இந்த மண்ணும் ஒண்ணுடாம்பீ! சமயத்துல ஆளயே சாய்ச்சிப்புடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தோண்டுறவரெ தாங்குற நெலம்ன்னாலும் வழுக்குறப்போ சாய்ச்சுப்புடும்ங்றாப்புல.

            எல்லா சனமும் எறங்கி அங்க இங்கப் போவ ஆரம்பிச்சதும் வண்டியில வந்தவங்களும் கெளம்ப ஆரம்பிச்சாங்க. பஸ்லேந்து எறங்குன கண்டக்டரு போன அடிச்சி வண்டியோட நெலையப் பத்தி டிப்போவுக்குச் சொல்லிட்டு இருந்தாரு.

வேடிக்கெ பாத்தது போதும்ங்றாப்புல வண்டியில நின்ன சனங்க ஒவ்வொண்ணா வண்டிய கௌப்ப ஆரம்பிச்சதுங்க. விகடுவும் வண்டியக் கெளப்ப சுப்பு வாத்தியாரு ஏறி உக்காந்தாரு. கோரையாத்தாங்கரையத் தாண்டி நாலாநல்லூர்ர நெருங்குறதுக்குள்ள மழெ பலமா பிடிக்க ஆரம்பிச்சது. அஞ்ஞப் பக்கத்துல இருந்த அரப்ஸாப் தர்க்காவுல சனங்க ஒதுங்கி நின்னாங்க. விகடுவும் சுப்பு வாத்தியாரும் வண்டிய மழையிலயே நிறுத்திட்டு மழைக்கு ஒதுங்குனாங்க அங்க. பெய்யுற மழையில ஒதுங்கலன்னா காய்ச்சல்ல முழிப் பிதுங்கணும்பாங்க கிராமத்துல.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...