29 Jan 2021

வண்டியை மீட்ட சுந்தரபாண்டியன்!

வண்டியை மீட்ட சுந்தரபாண்டியன்!

செய்யு - 701

            காலங்காத்தால சரியா ஆறு மணிக்கெல்லாம் வூட்டுக்கு மின்னாடி வந்து ஹாரன் அடிச்சாரு பரமுவோட அப்பா. அந்த ஹாரன் சத்தம் கேட்டுத்தாம் விகடு எழுந்திரிச்சாம். எழுந்து வாசப்பக்கம் ஓடிச் சட்டுன்னு கதவெ தொறந்து வுட்டாம். ஒரு நிமிஷம்ன்னு சொல்லி உள்ளார ஓடியாந்தவெம் ஒடனே கல்யாணம்ன்னு சொன்னாலும் ஒடனே அழுக்கு வேட்டிய அந்தாண்ட வாரி எறிஞ்சுப்புட்டுப் பட்டு வேட்டிக்கு மாறிக்கிடுற பல நாளு காத்திருந்த மாப்புள்ளையப் போல வாயக் கொப்புளிச்சிட்டு, மொகத்தக் கழுவிட்டு, சட்டுன்னு பேண்டு சட்டையை மாட்டிக்கிட்டுப் பரமுவோட அப்பா வண்டியில ஏறுனாம்.

            "ஏம்டா நேத்திக்கே சொல்லிட்டுதானே போனேம். காத்தால ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவேன்னு. நாம்ம வந்து நின்ன பெறவு எழுந்திரிச்சி ஓடியாறீயே, சுனாமி வாரதுன்னு சொன்ன பெறவும் சாவகாசமா எண்ணெய் குளியலு போட்டுக்கிட்டு நிக்குறவனாட்டம்?"ன்னாரு பரமுவோட அப்பா தன்னோட வேல அலமலப்பெ காட்டுறாப்புல.

            "ராத்திரி முழுக்க தூக்கமில்லே. நடந்ததெப் பத்தி ஒரே பேச்சு. ராத்திரி பேசிட்டு இருக்கிறப்பவே எப்ப தூங்குனேம்ன்னு நெனைப்பில்லாம தூங்குனதுதாம். எழும்பு முடியல!"ன்னாம் விகடு ராத்திரி நல்லா தூங்குறவனெ பகலு பத்து மணி வரைக்கும் தூங்குறப்பே நாம்ம என்ன செய்ய முடியும்ங்றாப்புல.

            "வண்டிய எடுத்துட்டு நேரா ஆர்குடிப் போறீயா? யில்ல பள்ளியோடம் போவப் போறீயா?"ன்னாரு பரமுவோட அப்பா ரெட்டை வழியில எந்த வழியில வண்டிய வுட போறேம்ங்றாப்புல.

            "பள்ளியோடத்துக்கு லீவப் போட்டுட்டு ஆர்குடிக்குப் போறாப்புலத்தாம் யோஜனெ. வூட்டுல சமைச்சித் தர்றேன்னு சொல்லிருக்கு. அதெ எடுத்துக்கிட்டு வூட்டுலயும் அழைச்சிட்டுக் கெளம்பணும்!"ன்னாம் விகடு போற தெசையிலத்தாம் போவணும்ங்றாப்புல.

            "ஸ்டேசன்ல மட்டும் வண்டியப் போடக் கூடாதுடா. அதாங் அடிச்சிப் பிடிச்சிட்டு காலங்காத்தாலயே ஓடியாந்து எழுப்புறேம்!"ன்னாரு பரமுவோட அப்பா சந்தைக்கடையில போறப்போ பணத்தெ சட்டைப் பையில மட்டும் வைக்கக் கூடாதுங்றாப்புல. பரமுவோட அப்பாவுக்கு வேற வேல இருக்கும் போல. இந்த வேலைய முடிச்சிக் கொடுத்துட்டு அவரு அடுத்த வேலையப் பாக்கப் போவணுங்ற திட்டத்துல கொஞ்சம் வண்டியில வேகமாவே கௌப்பிக்கிட்டுப் போனாரு. வண்டி தட தடன்னு அதிர்றது தலைமுடி வரைக்கும் தெறிச்சு ஓடுனது.

            வடவாதி போலீஸ் ஸ்டேசன்ல போயி வண்டிய நிறுத்தி உள்ளாரப் போனதும் ராத்திரிக்கி இருந்தாப்புல ரண்டு போலீஸ்காரவுங்கத்தாம் இருந்தாங்க. அதுல ஒருத்தரு இடுப்புல துண்டெ கட்டிக்கிட்டு ஒரு வாளிய எடுத்துக்கிட்டுக் குளிக்க தயாரா இருக்குறாப்புல வெளியில வந்து நின்னு இருந்தாரு. ராத்திரி பாத்த ஞாபவம் இல்லாததப் போல, "ன்னா விசயம்?"ன்னாரு மேலுதட்டெ மூக்கு மேல சுளிச்சுக்கிட்டு.

            "ராத்திரிக்கி வந்தோம்ல வண்டியக் கேட்டுக்கிட்டு. நீஞ்ஞ கூட காத்தால வந்து வாங்கிக்கோங்கன்னு சொன்னீயளே!"ன்னாம் விகடு அம்னீஷியாவுல மறந்துப் போனவங்களுக்கு அத்தனையையும் நெனைவுக்குக் கொண்டு வர்றாப்புல.

            "ராத்திரி சொன்னேனா? அப்பிடிச் சொல்லிருந்தா அய்யா வந்துதாம் கொடுக்க முடியும்ன்னு சொல்லிருப்பேனே!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு பரீட்சையில எந்தக் கேள்வி கேட்டாலும் அதுக்குப் பதிலு இதாம்ன்னு எல்லா கேள்விக்கும் ஒரே பதிலெ எழுதி வைக்குற ஒத்த புத்தி புள்ளையப் போல.

            "ஆமாம் சொன்னீயே!"ன்னாம் விகடு திருவாரூரு மாவட்டத்துல நின்னுகிட்டு தஞ்சாவூரு மாவட்டத்துத் தலையாட்டிப் பொம்மையப் போல தலைய கெழக்குக்கும் மேற்குக்குமா ஆட்டிக்கிட்டு.

            "அப்போ அய்யா வாரட்டும். இப்போ கெளம்பிப் போயிட்டு அய்யா வந்தப் பெறவு வாஞ்ஞ. காலங்காத்தாலயே வந்து கழுத்தறுக்காதீயே. நாஞ்ஞளும் மனுஷங்த்தானே. எழும்பி லட்ரின் போவ வேண்டியதில்ல. குளிக்க வேண்டியதில்ல. இப்பிடியா கடங்கொடுத்தவனெப் போல காத்தாலயே வந்து நிக்குறது?"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு பொழுது விடிஞ்சுதும் அழுது நிக்குறவனெ அடிச்சு வெரட்டுறதெப் போல.

            "யாருப்பா அது?"ன்னு கேட்டுக்கிட்டெ இன்னொரு போலீஸ்காரரு கொட்டாவி வுட்டுக்கிட்டெ வெளியில வந்தாரு. வர்றப்பவே அப்பிடியே பிட்டத்தெ கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி வாயு பிரியுற சத்தத்தையும் சத்தம் கொடுத்துட்டே வர்ற ஆம்புலன்ஸ்ஸப் போல கொடுத்துக்கிட்டே வந்தாரு.

            "ராத்திரி வந்து தூக்கத்தெ கெடுத்துச்சுங்களே ரண்டு கேஸூ. வண்டி வேணும்ன்னு வந்திருக்குவோ!"ன்னாரு வெளியில நின்னுட்டு இருந்த போலீஸ்காரரு விடிஞ்சதும் விடியாததுமா வந்துட்டுங்க மூதேவின்னுப் பாத்து மொகத்தெ சுளிக்குறாப்புல.

            "வண்டி வேணும்ன்னா கடையிலப் போயி வாங்கிக்கிட சொல்லு. ஸ்டேசன்ல வந்து நின்னா? நாம்ம ன்னா வண்டிய தயாரு பண்ணி விக்குற கடையா நடத்துறேம்? நீயிப் போயி குளிச்சிட்டு சட்டுன்னு வர்ற சோலியப் பாரு. அய்யா வர்றதுக்கு மின்னாடி நாமளும் குளிச்சாவணும்!"ன்னாரு உள்ளாரயிருந்து வந்த போலீஸ்காரரு ஆக்கங்கெட்ட கழுதைகள அடிச்சுத் தொரத்துங்றாப்புல. அதுக்கு மேல என்னத்தெ பேசுறதுன்னு விகடுவுக்குப் புரியல. பரமுவோட அப்பாத்தாம் பேசுனாரு. "நாஞ்ஞ திட்டையிலேந்து வர்றோம். திட்டை கிராமக் கமிட்டியில நாம்ம துணைத் தலைவர்ரா இருக்கேம்!"ன்னு ஆரம்பிச்சாரு பரமுவோட அப்பா பவர்ரக் காட்டி பவர்ப்புலா காரியத்தெ முடிச்சுப்புடலாம்ங்றாப்புல.

            "இந்த ஸ்டேசனோட கன்ட்ரோல்ல முப்பத்தெட்டு கிராமங்க இருக்குது. அதுலேந்து நீ எதுல வேணும்ன்னாலும் வா! நீயி எந்தக் கமிட்டியில வேணும்ன்னாலும் என்னாவா வேணும்ன்னாலும் இருந்துக்கோ! அதெப் பத்தியல்லாம் ஒண்ணும் பெரச்சனெயில்ல. இஞ்ஞ அய்யா வந்தாத்தாம் வேல ஆவும். அவரு வர்றாம இஞ்ஞயிருந்து ஒரு துரும்பக் கூட அந்தாண்ட இந்தாண்ட நவுத்த முடியாது. வந்தது வந்துட்டே. அந்தத் தூக்க எடுத்துட்டுப் போயி ஒலகநாதன் கடையில ஸ்ட்ராங்கா ரண்டு பார்சல் டீ வாங்கியா. ஸ்டேசனுக்குன்னு சொல்லி வாங்கியா. அவ்வேம் பாட்டுக்கு தண்ணிய ஊத்துனாப்புலப் போட்டுக் கொடுத்துடப் போறாம். அய்யா வந்து நிக்குறப்போ டீத்தண்ணி தயாரா இருக்கணும் ஆங்!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு டியூப்லைட்டுக்கு மின்னாடி டார்ச் லைட்டெ அடிச்சிக்கிட்டு நிக்காதேங்றாப்புல. பரமுவோட அப்பாவப் பாக்க பாவமா இருந்துச்சு. பத்து ஊரு சனங்க கூடி நிக்குறப்போ வேட்டி அவுந்துப் போயி பட்டாபட்டி டிராயரோட நிக்குறாப்புல அவரோட மொகம் ஆயிடுச்சு. அதெ வெளிக்காட்டிக்கிட விரும்பாம பரமுவோட அப்பா டேபிளுக்குக் கீழே இருந்த அந்தத் தூக்க எடுத்தாரு. "மறக்காம நாலு பேப்பர் கப்பு வாங்கியார மறந்துடாதே!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு எச்சில துப்புறவேம் அத்து எப்பிடி இருக்குன்னு சுவைச்சுப் பாருன்னு சொல்றாப்புல. அதுக்கு ஒண்ணும் சொல்லாம பரமுவோட அப்பா ஸ்டேசனுக்கு வெளியில வந்து வண்டிய ஸ்டார்ட் பண்ணாரு. விகடு பின்னாடி ஏறி உக்காந்தாம்.

            "காலங்காத்தாலயே டீ வாளிய தூக்க வுட்டுட்டான்னுவோளே? இன்னும் வூட்டுக்குப் பால கறந்து கொடுக்கலடா. இஞ்ஞ வந்து இவனுகளுக்கு டீத்தண்ணிய வாங்கி ஊத்த வேண்டிதா இருக்கு! வூட்டுல இன்னும் பொண்டாட்டி, மருமவ்வே, பேரப்புள்ள டீத்தண்ணிக் குடிக்காம கெடக்கு! இங்க மாட்டுக்குத் தண்ணிய காட்டுறதெப் போல டீத்தண்ணிய காட்டணும்ன்னு தலையில எழுதிருக்கு!"ன்னாரு பரமுவோட அப்பா இந்த நாள் நொந்த நாள் ஆயிடுச்சுங்றாப்புல.

            "டீத்தண்ணிய வாங்கியாந்து ஊத்துனா வண்டியக் கொடுத்துடுவாங்களா பரமு யப்பா?"ன்னாம் விகடு வேட்டிப் பறந்துப் போறதெ பத்தியென்ன கோவணம் கெட்டியா இருக்குமாங்றாப்புல.

            "மாடு தண்ணியக் காட்டுனா புண்ணாக்கு வேணும்ன்னு சொல்லும்டா!"ன்னு சலிச்சாப்புல சொன்னாரு பரமுவோட அப்பா கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஏத்துறவனெப் பத்தி கழுதைக்கு என்ன கவலெ, கழுதையோட கவலெயெல்லாம் காயிதம்தாம்ங்றாப்புல.

ஒலகநாதன் டீக்கடையில நல்ல கூட்டமா இருந்துச்சு கடையில மொய்க்குற டீயை வுட. பரமுவோட அப்பா கூட்டத்தெப் பாக்காம முண்டி அடிச்சுக்கிட்டு மின்னாடிப் போயி ரண்டு பார்சல் டீ வாங்கிட்டு, மறக்காம நாலு பேப்பர் கப்போட வெளியில வந்தாரு.

            "நீஞ்ஞ ஒரு டீன்னா அடிக்கிறியளா?"ன்னாம் விகடு சூடா எதாச்சும் குடிச்சா மனசோட சூடு கொறையும்ங்றாப்புல.

            "தயவுபண்ணி இந்த ஊர்ல டீயெல்லாம் சாப்புடச் சொல்லதடா! இந்த ஊர்ல இருக்குற இன்னிய நாளு வரைக்கும் இந்த ஊர்லயும் சரித்தாம், அக்கம் பக்கத்து ஊர்லயும் சரித்தாம் டீத்தண்ணியோ, காப்பித்தண்ணியோ, பலவார பட்சணமோ வாங்கிச் சாப்புட்டதில்ல. டவுனுக்குப் போனா எப்பவாச்சும் சாப்புட்டதும் முப்பது வருஷத்துக்கு மின்னாடி நடந்த கதெ. இவனுவோ போடுறதெல்லாம் ஒரு டீத்தண்ணின்னு, அதெ வாங்கி நக்கிக் குடிக்கிறதுக்கு இவ்ளோ பயலுங்க நிக்குறானுவோ! இவனுவோல்லாம் கயனித் தண்ணிய பட்டச் சரக்குன்னு நெனைச்சு அடிக்குற பயலுவோ! இவனுங்களுக்கு எத்து டீன்னும் தெரியாது, எது வெந்நியின்னும் தெரியாது. காலங்காத்தால சூடா உள்ளார எறங்கணும். அதுக்கு நெருப்பள்ளிப் போட்டுக்கிட வேண்டித்தானடா உள்ளார!"ன்னாரு பரமுவோட அப்பா எரியுற கொள்ளிக்கு ஏகப்பட்ட சொட்டு நெய்யி கெடைச்சாப்புல. பரமுவோட அப்பா இப்படித்தாம். சமயத்துல பேச ஆரம்பிச்சார்ன்னா பேசிட்டே இருப்பாரு. அதுக்கு என்ன பதிலச் சொல்றதுன்னு புரியாது. தப்பித்தவறி எதாச்சும் பதிலச் சொல்லிப்புட்டா அதெ வெச்சு நாலு வண்டி கதெயெ எடுத்து வுட ஆரம்பிச்சிடுவாரு. இப்போ இருக்குற அவசர கால நெலமையில எதுவும் பேசாம இருக்கிறதுதாம் நல்லதுன்னு பட்டுச்சு விகடுவுக்கு. அவ்வேம் பேயாம இருக்கு பரமுவோட அப்பாவும் எதுவும் பேயாம வண்டிய எடுக்க விகடு தூக்கயும், பேப்பர் கப்புகளயும் வாங்கி கையில வெச்சிக்கிட்டு பின்னாடி உக்காந்தாம்.

            ஸ்டேசனுக்குப் போனதும் குளிக்கப் போன போலீஸ்காரரு குளிச்சி முடிச்சி போலீஸ் உடுப்புக்கு மாறியிருந்தாரு. குளிக்கப் போறதா சொன்ன போலீஸ்காரரு, "அய்யா வந்துடட்டும். நாம்ம சொல்லிட்டு வூட்டுக்குப் போயே குளிச்சிக்கிறேம்!"ன்னு சோம்பலா உக்காந்தாரு நாட்டுல எவ்வேம் காலங்காத்தால இந்தக் குளிக்குற கருமத்தெல்லாம் கண்டுபிடிச்சாம்ங்றாப்புல. விகடு டீத்தண்ணிய வாங்கியாந்த தூக்க மேச மேல வெச்சிருந்தாம்.

            "அப்பிடியே மேச மேல வெச்சிட்டா யாரு ஊத்திக் கொடுப்பா? எடுத்து கப்புல ஊத்திக் கொண்டா! ஸ்டராங்கப் போட்டு வாங்கியாந்தியா? ஸ்டேசனுக்குன்னுச் சொன்னீயா?"ன்னாரு போலீஸ்காரரு ஓசியில வாங்குனாலும் தராதரம் பாத்து வாங்கணும்ங்றாப்புல. விகடு தலைய ஆட்டிக்கிட்டே பேப்பர் கப்புல ஊத்தி ரண்டு போலீஸ்காரவுகளுக்கும் கொடுத்தாம். அதெ வாங்கி உஸ் உஸ்ன்னு கொறட்டெ சத்தம் வர்றாப்புல உறிஞ்சிக் குடிச்சுப்புட்டு இன்னொரு கப்புக்கு ஊத்தச் சொன்னாங்க. விகடு தூக்கக் கொண்டுப் போயி அவுங்க குடிச்சக் கப்புலயே ஊத்துனாம். அதெயும் கரட்டு கரட்டுங்ற சத்தத்தோட உறிஞ்சிக் குடிச்சிட்டு, "மிச்சமிருக்கா?"ன்னாரு போலீஸ்காரரு ஒடைஞ்ச பானையில எம்மாம் தண்ணி மிச்சமிருக்குங்றாப்புல. விகடு இருக்குங்றாப்புல தலைய ஆட்டுனாம். "அதெ நீஞ்ஞ ரண்டு பேரும் ஆளுக்குக் கொஞ்சம் ஊத்திக் குடிங்க. அய்யா வர்றதுக்கு எப்பிடியும் எட்டு மணி ஆவும் போலருக்கு! ஆறிப் போன டீயெல்லாம் அய்யா குடிக்க மாட்டாக!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு பெருந்தன்மையா அவரு கையி காசியப் போட்டு வாங்கிக் கொடுத்த டீயைக் குடிக்கச் சொல்றாப்புல.

            "நாஞ்ஞ கடையில குடிச்சிட்டேம்!"ன்னாரு பரமுவோட அப்பா அதெ குடிக்கிறதுக்கு இஷ்டமில்லாம தானொரு ரோஷக்கார்ரேம்ங்றதெ மறைமுகமா காட்டுறாப்புல.

            "வெவரமான ஆளாத்தாம்யா இருக்கீயே! நாஞ்ஞ குடிக்கிறதுக்கு மின்னாடி குடிச்சிட்டு வாங்கி வந்திருக்கீயே! செரி அப்பிடிப் போயி அந்தப் பெஞ்சுல உக்காருங்க. அய்யா வாரட்டும்!"ன்னாரு போலீஸ்காரரு காரியம் முடிஞ்சிட்டா கரும்புச் சக்கெயெ கண்டமேனிக்குத் தூக்கி அந்தாண்ட எறியுறாப்புல.

            "இந்தத் தம்பீ வண்டிய எடுத்துக்கிட்டு ஆர்குடி போவ வேண்டிய வேல இருக்கு. நேத்தி நீஞ்ஞ அழைச்சிட்டுப் போன பொண்ணோட அண்ணன் இவரு. அஞ்ஞ ஸ்டேசன்ல வெச்சி நாற்காலியோட தள்ளி வுட்டதுல ஒடம்புக்கு முடியாம ஆஸ்பிட்டல்ல கெடக்கு. கொஞ்சம் மனசு வெச்சியள்ன்னா வண்டிய எடுத்துக்கிட்டு ஆஸ்பிட்டல்லப் போயிப் பாத்துட்டு வர்றதுக்கு ஒதவியா இருக்கும். ஒஞ்ஞளுக்குப் புண்ணியமா போவும்!"ன்னாரு பரமுவோட அப்பா நயமா பேசி நாசுக்கா காரியத்தெ சாதிச்சுப்புடலாம்ங்றாப்புல.

            "பாருடா பாவ புண்ணியம்ன்னு. ஒஞ்ஞளுக்குப் பாவ புண்ணியம் பாத்தா அய்யாகிட்டெ பாட்ட வாங்கிக் கட்டிக்கிறது யாரு? பேயாம சித்தெ உக்காருங்கய்யா. என்னவோ நாட்டுல ஒஞ்ஙளுக்குத்தாம் வேல கெடக்குறதெப் போலயும், நாஞ்ஞல்லாம் வேல யில்லாம இஞ்ஞ பெஞ்ச தேய்ச்சிக்கிட்டு இருக்குறாப்புலல்லயும் பேசுறீயே? இன்னும் சித்த நேரத்துல பாரு. கூட்டம் கூட்டமா வருவானுவோ அந்தப் பெரச்சனெ, இந்தப் பெரச்சனென்னு. நெதமும் சிங்கம் புலிக்கு மத்தியில வாழ்றாப்புல பெரச்சனைக்கு மத்தியில வாழ்ற ஆளுங்கய்யா நாஞ்ஞ!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு நாசுக்கா இருக்க நெனைக்குறவனுக்கு போலீசு ஸ்டேசன்ல என்ன வேலைங்றாப்புல. அதுக்கு மேல என்னத்தெ சொல்றதுன்னு பெஞ்சுல வந்து உக்காந்தாரு பரமுவோட அப்பா. விகடுவும் வந்து உக்காந்தாம்.

            "ன்னடா வூட்டுல வேற வேல கெடக்கு. இஞ்ஞ உக்காந்தா வூட்டு வேலய யாருடா பாக்குறது? இப்பிடி இஞ்ஞ உக்கார வைக்குறானுவோளே. எதாச்சும் புண்ணியம் இருந்தாலும் உக்காரலாம். காலங் காத்தாலயே யிப்பிடி உக்காந்துக் கெடந்தா ஒடம்புல சோம்பலு பூத்துப் போயிடுமேடா? இன்னிக்கு ஆவ வேண்டிய காரியம் ஆனாப்புலத்தாம்!"ன்னாரு பரமுவோட அப்பா நாளொண்ணு நாசமா போச்சுங்றாப்புல.

            "நாம்ம வேணும்ன்னா பிரசிடெண்டுக்குப் போன அடிக்கவா?"ன்னாம் விகடு பரமுவோட அப்பாவுக்கு மட்டும் கேக்குறாப்புல மொல்லமா.

            "யாரு திருச்செல்வத்துக்கா? அவ்வேம் யண்ணேம் ரகுநாதெம்கிட்டத்தாம் நமக்குப் பழக்கம். இவ்வேங்கிட்டல்லாம் நாம்ம பேசுறதெ யில்ல. அவ்வேம் இந்தப் பக்கம் நின்னா நாம்ம அந்தப் பக்கம் வந்துடுறது. மனுஷன்னா ரகுநாதெம் மனுஷம். அவ்வேம் பேர்ர வெச்சிக்கிட்டு இவ்வேம் பெரசிடென்ட்டு ஆயிட்டாம். அதால நாம்ம போன அடிக்க முடியாது. நீயி வேணும்ன்னா அடிச்சிப் பாரு. அதுக்குப் பேயாம ஒரு எருநூத்து ரூவாய எடுத்து நீட்டுனா வண்டிய வுட்டுப்புடுவானுவோடா! அதுக்குத்தாம் அடிப் போடுறானுவோ!"ன்னாரு பரமுவோட அப்பா விகடுவோட காதுக்கு மட்டும் கேக்குறாப்புல மொல்லமா.

            "வர்ற அவசரத்துல வண்டியோட சாவியையும் போனையும் மட்டுந்தாம் சட்டப்பையில எடுத்துப் போட்டேம். பைசா காசிய எடுத்துப் பையில போடல!"ன்னாம் விகடு என்னவோ வூடு நெறைய பீரோ முழுக்க பணத்தெ கொட்டி வெச்சிருக்கிறாப்புல அதாச்சி, சட்டியைப் பாக்காதவங்ககிட்டெ ஏம் போயி சட்டியில இருந்தாத்தாம் அகப்பையில வாரும்ன்னு சொல்லிக்கிட்டுங்றாப்புல.

            "நல்ல ஆளுடா நீயி! ஸ்டேசனுக்கு வர்ற நீயி பணம் யில்லாம வரலாமா? கடைக்குப் போறன்னா கூட பணத்தெ மறந்துட்டுப் போவலாம். கடனா கொடுங்கன்னு சொல்லிட்டு வாங்கியாந்திடலாம். இத்து ஸ்டேசன்டா. இஞ்ஞ அப்பிடில்லாம் கடனா கேக்க முடியாதுடா! இஞ்ஞ உக்காந்துப் பேசுனா சுத்தப்படாது. வாடா வெளியில போவேம்! பச்சத் தண்ணியில வெண்ணெய்ய எடுத்துப்புடலாம். போலீஸ் ஸ்டேசன்ல தவிப்புன்னாலும் சொட்டுத் தண்ணிய வாங்கிட முடியாது! செரியான ஒலகம் தெரியாம பயெ! மண்ணுமுட்டுடா நீயி!"ன்னாரு மெல்லமா சிரிச்சிக்கிட்டெ பரமுவோட அப்பா. ரண்டு பேருமா கெளம்பி ஸ்டேசனுக்கு வெளியில வந்தாங்க. ரோட்டத் தாண்டி எதுத்தாப்புல இருக்குற மாமரத்தடிக்கு வந்து நின்னாங்க.

            "நாம்ம போன அடிக்கிறேம்!"ன்னு சொல்லிட்டு பிரசிடெண்டுக்குப் போன அடிச்சாம் விகடு. காலங்காத்தால ஊரு சுத்துற குருவிக்கு இரைய ஒண்ணுத்தையாவது கண்ணுல பாக்குதோ இல்லையோ இல்லையோ, காலங்காத்தால போறவங்க பாக்க நெனைக்கிறவங்களப் பாத்துப்புடலாம். காலங்காத்தால செய்யுற காரியத்தோட மகிமெ அது. அந்த மகிமெ நல்லா வேல செய்யுறதப் போல அந்த மகிமெ பிரகாரம் திருச்செல்வம் போன எடுத்தாரு. அலோன்னு அவரு சொல்றப்பவே கொட்டாவி வுடுறதும் கேட்டது.

            "நாம்ம சுப்பு வாத்தியாரு மவ்வேம் விகடு பேசுறேம்! கோட்டகத்துல வாத்தியார்ரா இருக்கேம்ல்லா!"ன்னாம் விகடு இன்னாரு பேசுறேம்ன்னு அடையாளம் காட்டிக்கிறாப்புல.

            சர்ட்டுன்னு விசயத்தெ புரிஞ்சிக்கிட்டவர்ரப் போல, "சொல்லுங்கம்பீ! நேத்திக்கு விசயம் கேள்விப்பட்டேம். ஆர்குடி ஆஸ்பிட்டல்ல சேத்துருக்கிறதா கேள்விப்பட்டேம். நேத்திக்கே வாரணும்ன்னு பாத்தேம். மாவட்டத்தப் பாக்க போயி வர்றதுக்கு லேட்டாயிடுச்சு. இன்னிக்கு வந்துடுறேம்பீ! நீஞ்ஞ ஒண்ணும் கவலெப்படாதீயே. என்ன பெரச்சனெ யிருந்தாலும் ஆக்கினையப் பண்ணிடுவோம்பீ!"ன்னாரு திருச்செல்வம் நேரடியா விசயத்துக்கு வந்தவர்ரப் போல.

            "ரொம்ப நல்லதுங்க!"ன்னாம் விகடு பாதாளத்துல வுழுவுறவனுக்குப் பாதியில கொம்பொன்னு கெடைச்சாப்புல.

            "வேற எதாச்சும் ஒதவின்னாலும் சொல்லுங்க. செஞ்சிப் புடுவேம். ஆர்குடி ஆஸ்பிட்டலோட ஹெட் டாக்கடர்ட்டப் பேசிச் சொல்லி வுடவா? ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசன்ல எதாச்சும் பேசி வுடணுமா?"ன்னாரு திருச்செல்வம் அவசரக் கால உதவி ஏதோ தேவைன்னு புரிஞ்சிக்கிட்டாப்புல.

            "நம்ம வடவாதி ‍போலீஸ் ஸ்டேசன்ல நேத்திக்கு வந்தப்போ யப்பாவோட வண்டியப் போட்டுட்டு ஜீப்புல ஏறிப் போவுறாப்புல ஆச்சு. யிப்போ வண்டி இஞ்ஞ ஸ்டேசன்ல கெடக்கு. நேத்தி ராத்திரிக்கே வந்து கேட்டேம். காத்தால வாரச் சொன்னாங்க. இப்போ வந்து கேக்குறப்போ அய்யா வர்ற வரைக்கும் ஒக்காரச் சொல்லிருக்காங்க. வண்டி கொஞ்சம் ஒடனடியா கெடைச்சதுன்னா ஆர்குடி ஆஸ்பிட்டலுக்குப் போயி அஞ்ஞ இருக்குற தங்காச்சி, யம்மா, யப்பாவப் போயி பாக்க வேண்டிக் கெடக்கு!"ன்னாம் விகடு கையொடைஞ்சு நிக்குறவனுக்கு வைத்தியத்தெ பாக்காம கையில உள்ள கவரிங் மோதிரத்தெ பிடுங்கப் பாக்குறாங்கங்றாப்புல.

            "யிப்போ எஞ்ஞ இருக்கீயே?"ன்னாரு திருச்செல்வம் பட்டுன்னு ஏதோ ஒரு வகையில காரியத்தெ முடிச்சு வுடுறதுக்குத் தோதா.

            "ஸ்டேசன்லத்தாம் இருக்கேம். ஸ்டேசனுக்கு மின்னாடி நிக்குறேம்!"ன்னாம் விகடு சம்பவ எடத்துலத்தாம் சங்கடப்பட்டு நிக்குறேம்ங்றதெ சொல்றாப்புல.

            "உள்ளார நம்ம காத்தமுத்து இருக்காப்புலயா?"ன்னாரு திருச்செல்வம் படிக்காம வந்த நிக்குற புள்ளைக்கிட்டெ சரியா அந்தக கேள்விக்கான பதிலெ சொல்லுன்னு கேக்குற வாத்தியார்ரப் போல..

            "பேருல்லாம் தெரியல. ரண்டு போலீஸ்காரவுங்க மட்டும் இருக்காக!"ன்னாம் விகடு ஸ்டேசன்ல இருக்குறவங்களுக்கெல்லாம் போலீஸ்ங்றது மட்டுந்தாம் பேருங்றாப்புல.

            "செரி உள்ளாரப் போயி யாரா இருந்தாலும் திட்டை கிராமத்துப் பெரசிடண்ட்ன்னு நம்மப் பேர்ரச் சொல்லிப் போனக் கொடுங்க. பாப்பேம்!"ன்னாரு திருச்செல்வம் யார்ரா இருந்தாலும் பேசிப் பாக்கிறேம்ங்றாப்புல.

            விகடு வேக வேகமா ரோட்டத் தாண்டி ஸ்டேசனுக்கு உள்ளாரப் போயி, "எஞ்ஞ திட்டை கிராமத்துப் பஞ்சாயத்துப் பெரசிடெண்ட்டு திருச்செல்வம் அய்யா பேசுணும்ங்றாவோ!"ன்னாம் நீட்டோலைவாசியப் போல.

            "ஏம்ப்பா பெரசிடண்ட்டு ஆளுவோன்னு சொல்லக் கூடாதா?"ன்னு சொல்லிட்டுப் போன வாங்குனாரு போலீஸ்காரரு ஊரு, பேர சொல்றதுக்கு மின்னாடி யாரோட ஆளுங்றதெ சொல்லணுமா இல்லியாங்றாப்புல. மயிலே மயிலேன்னா எந்த மயிலு எறகெப் போடும். ஆன்னா சொல்றவங்க சொன்னா சொல்றதுக்கு மின்னாடியே போடும்ங்றாப்புல திருச்செல்வம் பேச பேச பண்ணிப்புடலாம், செஞ்சிப்புடலாம்ன்னு சொல்லிட்டெ வந்தாரு அந்தப் போலீஸ்காரரு. கடெசீயா, "ஸ்டேசனுக்குல்லாம் வந்து அடிக்கடி கவனிச்சிட்டுப் பாத்துட்டுப் போங்க தலைவரே!"ன்னு சொல்லி முடிச்சிட்டு போன கட் பண்ணிட்டு, விகடுவப் பாத்து, "போயி வண்டிய எடுத்துக்கோ!"ன்னு உள்ளாரப் பாத்துக் கண்ணக் காட்டுனாரு. விகடு அவர்ரப் பாத்து, "போனு!"ன்னாம் வண்டிய மீட்கிறதுக்கு மின்னாடி போன மீட்கணும்ங்றாப்புல. அவரு செல்போன அவ்வேங்கிட்டெ நீட்டுனாரு. அதெ வாங்கிட்டுப் போயி உள்ளார கெடந்த சுப்பு வாத்தியாரோட டிவியெஸ் பிப்டிய எடுத்துட்டு வெளியில வந்தாம்.

            பரமுவோட அப்பா விகடுவெப் பாத்துச் சிரிச்சாரு. "கெட்டிக்காரப் பயத்தாம்டா நீயி! எரநூத்து ரூவாய இன்னிக்கு மிச்சம் பண்ணிட்டீயே! காசில்லாம்ம ஸ்டேசனுக்கு வந்துக் காரியம் சாதிச்சுப்புட்டீயே!"ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளார அந்தப் போலீஸ்காரரு வெளியில வந்து, "ஒரு நூத்து ரூவா பணம் இருந்தா கொடுத்துட்டுப் போயேம்!"ன்னாரு ராத்திரி முழுக்க கெடந்த வண்டிக்கு வாடகெ கேக்குறாப்புல. விகடு சட்டப்பைய வெளியில இழுத்து வுட்டுக் காலிப் பையக் காட்டி, "இருந்த காசிக்கு டீத்தண்ணிய வாங்கியாச்சுங்கய்யா!"ன்னாம் வாடகெக் காசிய டீக்காசியில கழிச்சுக்குங்கங்றாப்புல.

            "செரியான சாவுகிராக்கி ஆளுங்கள இருப்பீயே போலருக்கு. கெளம்பு கெளம்பு. அய்யா வர்றதுக்கு மின்னாடி எடத்தெ காலி பண்ணு!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு காசில்லாத வெறும் பயலுகளுக்கெல்லாம் சந்தையில என்னா வேலைங்றாப்புல.

            "ஏம்டா டீத்தண்ணிய எங் காசியில வாங்குனேம். நீயி வாங்கிக் கொடுத்ததா சொல்லி நல்லாவே சமாளிக்கிறீயேடா! நீதாம்டா நெசத்துல மதுரைய மீட்ட சுந்தரப்பாண்டியனப் போல, அப்பங்காரரோட வண்டிய மீட்ட சுந்தரப்பாண்டியன்!"ன்னு விகடுவுக்குக் கேக்குறாப்புல மொல்லமா கொல்லிகிட்டெ சிரிச்சிக்கிட்டெ பரமுவோட அப்பா வண்டிய நின்ன படிக்கு ஸ்டார்ட் பண்ணாரு. விகடு வண்டிய ஸ்டாண்டுப் போட்டு ஸ்டார்ட் பண்ணாம். ரண்டு பேரும் வண்டியக் கெளப்பிக்கிட்டு வூட்ட நோக்கிப் போவ ஆரம்பிச்சாங்க. புகை மட்டும் பின்னாடி போலீஸ் ஸ்டேசன்ன நோக்கிப் போவ ஆரம்பிச்சது கருகருன்னு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...