28 Jan 2021

காசிருந்தா கடவுளையும் காத்திருக்காம சந்திச்சிடலாம்!

காசிருந்தா கடவுளையும் காத்திருக்காம சந்திச்சிடலாம்!

செய்யு - 700

            வெங்கு வந்து ரண்டாம் நம்பர் பஸ்ல எறங்குனதும் அதெ அழைச்சிக்கிட்டு எல்லாருமா சேர்ந்து ஆஸ்பத்திரியில நொழைஞ்சாங்க. அது வரைக்கும் மனசுக்குள்ள இருந்த வேதனையெல்லாம் அடக்கிட்டு வந்து வெங்கு ஒடைஞ்சு அழுதுச்சு, "ன்னடா ஆச்சு எம் பொண்ணுக்கு? நீயி ஆஸ்பத்திரின்னு சொன்னதுமே தெரிஞ்சிப் போச்சுட்டா ஏதோ அசம்பாவிதமா ஆயிப் போச்சுன்னு. அதெ கேட்டு வூட்டுலயே அழுதா மருமவ்வே தாங்க மாட்டான்னு ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டு, ஆட்டோவுல வர்றப்பயும் அழுவ முடியாம, பஸ்ல வர்றப்பயும் அழுவ முடியாம… என்னடா ஆச்சு எம் பொண்ணுக்கு? நீஞ்ஞல்லாம் இருந்துமா எம் பொண்ண ஆஸ்பிட்டல்ல சேக்குறாப்புல ஆச்சு?"ன்னு அப்பிடியே உருகி ஊத்துற ஐஸ் கட்டியாட்டம்.

            "அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. நீஞ்ஞ தேவயில்லாம அழுவாதீயே. எல்லாம் யிருந்து நல்லபடியா பாத்தாச்சு. இஞ்ஞ வெச்சு கொஞ்சம் கொணம் கண்டு அழைச்சிட்டுப் போனா வேல முடிஞ்சது!"ன்னாரு ஆஸ்பத்திரி வராண்டாவுல சுப்பு வாத்தியாருக்கு தொணையா வெளியில உக்காந்திருந்த பரமுவோட அப்பா எதுவும் நடக்கல, எதுக்கும் கலங்க வேண்டாம்ங்றாப்புல.

            "எம் பொண்ண எஞ்ஞ வெச்சிருக்காக? மொதல்ல கொண்டுப் போயிக் காட்டுங்களேம்!"ன்னுச்சு வெங்கு. அதெ அழைச்சிக்கிட்டு உள்ளார நொழைஞ்சா அங்க பெட்ல செய்யு இல்ல. சுப்பு வாத்தியாரு மட்டும் உக்காந்திருந்தாரு. தேடிப் போயி தேடுனது இல்லன்னா வாடுனாப்புல ஆயிடுமே மனசு. அப்படியாயிடுச்சு வெங்குவோட மனசு.

            "எஞ்ஞ எம் பொண்ணு?"ன்னுச்சு வெங்கு பாக்கலாம்ன்னு பாக்க முடியலேங்ற ஏக்கம்தொண்டைய அடைச்சாப்புல.

            "உள்ளார அழைச்சிட்டுப் போயிருக்காங்க. ரண்டாவது மாடியில நூத்தி எட்டுன்னு நம்பரு சொன்னாங்க. இந்நேரத்துக்கு ஆம்பளைவோ உள்ளார நொழைய அனுமதியில்லன்னு சொன்னாங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு உணர்ச்சியெ பிய்ச்சுத் தனியா வெச்சிப்புட்டு சேதிய மட்டும் சொல்றாப்புல.

            “நாம்ம வராண்டாவுலத்தானே உக்காந்திருக்கேம். நம்ம கண்ணுல மண்ணெ தூவிட்டு எப்பிடிக் கொண்டு போனாங்க?”ன்னாரு பரமுவோட அப்பா ஒலகத்துல என்னென்னவோ அதிசயம்லாம் நடக்குதுங்றே மாதிரிக்கு ஆச்சரியப்பட்டாப்புல.

            “இப்பிடியே இந்தப் பக்கமா கொண்டு போனாங்க!”ன்னாரு சுப்பு வாத்தியாரு பரமுவோட அப்பா உக்காந்திருந்த வராண்டாவுக்கு எதிர்ப்பக்கமா இருந்த வழியக் காட்டி.

            "மணி ஒம்போதே முக்காலுக்கு மேல ஆச்சுல்ல. பத்தெ நெருங்குதுல்ல. உள்ளார வுட மாட்டாங்க. வாஞ்ஞ நம்மளோட ஒரு ரண்டு, மூணு பேரு மட்டும். நாம்ம அழைச்சிட்டுப் போறேம்!"ன்னு கோவிந்து கையில கட்டியிருந்த கடியாரத்தெ ஒரு பார்வெ பாத்துக்கிட்டு சுப்பு வாத்தியாரு, வெங்கு, விகடுவெ மட்டும் அழைச்சிக்கிட்டு இன்பேஷண்ட்டு வார்டுக்குள்ள நொழைஞ்சாரு. மித்த எல்லாரும் அதுக்கேத்தாப்புல போயிட்டு வாங்கங்றாப்புல கண்ணெ காட்டுனாங்க.

            இன்பேஷண்ட் வார்டுக்குள்ளார உள்ளார நொழையப் பாத்தா, "ஏம்ப்பா! இந்நேரத்துக்கு உள்ளார வாரக் கூடாதுன்னு தெரியாதா?"ன்னு வழியில நின்ன காவல்காரரு மறைச்சாரு போக்கத்த தனமா உள்ளார நொழையக் கூடாதுங்றாப்புல.

            "பொண்ணு உள்ளார இருக்கு. இப்பத்தாம் அம்மாக்காரவுங்க வந்திருக்காங்க. அவுங்களுக்கு எடம் புரியாது. கொண்டுப் போயி வுட்டுப்புட்டு வந்துடுறேம்!"ன்னாரு கோவிந்து ஒரு சிரிப்பெ சிரிச்சு ஆரம்பிச்சிக்கிட்டுத் தோரணையான கொரல்ல.

            "நம்மள கவனிச்சி வுட்டுட்டுப் போப்பா!"ன்னாரு அந்தக் காவல்காரரு தலையில சொரிஞ்சுக்கிட்டெ ஒரு இளிப்பெ இளிச்சுக்கிட்டு.

கோவிந்து பையிலேந்து இருவது ரூவா நோட்டு ஒண்ணுத்த எடுத்து அவரோட பையில வெச்சி, "வெச்சுக்கோங்க தலைவா!"ன்னதும், "போயிட்டு சீக்கிரமா வந்துடுப்பா! சீப் டாக்டர்ரு ரவுண்ட்ஸ் வந்தா பெரச்சனையா போயிடும்!"ன்னாரு காவல்காரரு கோயில்ல காசியக் கொடுத்ததும் விரைவு தரிசனத்துக்கு வெரசா உள்ளார அனுப்புறாப்புல.

            உள்ளாரப் போவப் போவ ஆர்குடி டவுன் ஆஸ்பத்திரி சுத்தமாத்தாம் இருந்துச்சு. ரண்டாவது மாடியில லேடிஸ் வார்டுல நோழைஞ்சப்ப உள்ளார நொழையக் கூடாதுன்னு அங்க ஒரு அம்மா நின்னுகிட்டு செக்போஸ்ட்டெ போட்டுத் தடுக்குறாப்புல தடுத்துச்சு.கோவிந்து அந்த அம்மாகிட்டெ ஒரு இருவது ரூவா நோட்ட திணிச்சதும், "சீக்கிரமா போயிட்டு வந்துடுங்க கண்ணுகளா! சட்டப்படி இந்த நேரத்துல லேடீஸ் வார்டுக்குள்ள ஆம்பளைங்கள நொழையவே வுடக் கூடாது. வெரசா போயிட்டு வெரசா வந்துப்புடுங்க கண்ணுகளா!"ன்னுச்சு அந்த அம்மா தட்கல்ல அட்மிஷன் கார்டெ போட்டு சட்டுப்புட்டுன்னு உள்ளார அனுப்புறாப்புல. கோவிந்து எல்லாரையும் வேகமா அழைச்சிக்கிட்டுப் போயி நூத்தி எட்டாவது பெட்டுக்கு மின்னாடி நின்னாரு. அவருக்கு இந்த மாதிரி பல தடவெ உள்ளார வந்த அனுபவம் இருக்கும் போலருக்கு. எல்லா வேலையையும் புரோகிராம் பண்ணப்பட்ட ரோபோட்டெப் போல சட்டு சட்டுன்னு செஞ்சாரு.

            பெட்டுல செய்யுவப் பாத்ததும் வெங்குவுக்கு அழுகைய அடக்க முடியல. அப்பிடியே ஓடிப் போயிச் செய்யுவக் கட்டிப் பிடிச்சு அழுதுச்சு. "ன்னாடியம்மா ஆச்சுது?"ன்னுச்சு பிரிஞ்சுப் போன கன்னுக்குட்டி புலிகிட்டெ சிக்கி முழுசா திரும்பியிருக்கிறதெப் பாக்குறாப்புல.

            "நாற்காலியிலேந்து உருட்டித் தள்ளி வுட்டதுல முதுகெல்லாம் வலி தாங்கலம்மா. மயக்கமடிச்சிட்டேம். அதாங் இஞ்ஞ கொண்டாந்து சேத்திருக்காங்க!"ன்னா செய்யு முதுகெ லேசா நெட்டி முறிச்சாப்புல உக்காந்தபடிக்கு.

            "அடி பெலமா? காயமாச்சாடி?"ன்னுச்சு வெங்கு செய்யுவோட முதுகுப்பக்கத்தெ பாத்தபடிக்கு அதெ கையால தடவிக்கிட்டெ.

            "காயம்லாம் யில்லம்மா. ஆன்னா வலி தாங்கல. நேரம் ஆவ ஆவ வலி அதிகமாயிட்டே இருக்கு. ஊசியப் போட்டு வுட்டு, மாத்திரெ கொடுத்திருக்காங்க. காலையிலத்தாம் எக்ஸ்ரே எடுக்கணும்ன்னு சொல்லிருக்காங்க!"ன்னா செய்யு தன்னோட இருப்பெ படம் பிடிச்சுச் சொல்றாப்புல.

            "அய்யோ உஞ்சினி அய்யனாரே! ஒன்னத்தானே மல போல நம்பியிருந்தேம். தொணைக்கு வர்றாம போயிட்டீரேய்யா!"ன்னு வெங்கு அழுதுச்சு திக்கத்த நேரத்துல தெய்வம் கூட தொணையில்லங்ற மாதிரிக்கு.

            "சாப்பாடு கொடுத்து முடிஞ்சிருக்கும். இந்தாங்க சாப்பாடு. இதெ சாப்புட்டுக்குங்க. காலையில ஆறு மணிக்கு மேல உள்ளார அனுமதிப்பாங்க. அப்போ வாத்தியார்ரே நீஞ்ஞ உள்ளார வந்துப் பாத்து டீத்தண்ணியோ, காப்பித்தண்ணியோ வேணும்ன்னா வாங்கிக் கொடுங்க. யம்மா பழகிட்டாங்கன்னா அவுங்களே கூட வெளியில கேண்டீன்லயோ, கடையிலயோ வந்து வாங்கிக்கிடலாம். ப்ளாஸ்க்கு ஒண்ணு வெச்சிருக்கீயளே?"ன்னாரு கோவிந்து ராத்திரி முழுக்க ஆயும் மவளும் பேச வேண்டியதெ பேசிக்கிடலாம், ஆன்னா இப்போ பேச வேண்டியது இதாங்றாப்புல.

            "கெளம்புறப்பவே அதெயெல்லாம் பையில்ல எடுத்து வெச்சிட்டேம்பீ! ரண்டு தட்டு, ரண்டு தம்பளர், தண்ணிப் பாட்டில், ஒரு லோட்டா, ரண்டு பொடவே, ரண்டு துண்டுன்னு எல்லாம் தயாராத்தாம் கெளம்புனேம்!"ன்னுச்சு வெங்கு என்னாச்சோ, ஏதாச்சோங்ற அம்புட்டுப் பதற்றத்துலயும் பக்குவமா எல்லாத்தையும் எடுத்து வந்ததெ சொல்றாப்புல.

            "பெறவென்ன? இஞ்ஞயே பத்து நாளு தங்கச் சொன்னாலும் சமாளிச்சிப்புடலாம். நாம்ம வெளியில நிக்குற யம்மாகிட்டெ சொல்லிட்டுப் போறேம். எதாச்சும் வேணும்ன்னாலும் அதுவே வாங்கிக் கொடுத்துடும். இஞ்ஞ கொடுக்குற சாப்பாடே போதும். வேணும்ன்னாலும் காசியக் கொடுத்து வெளியிலயும் வாங்கிக்கிடலாம். இஞ்ஞ கொடுக்கற சாப்பாடு நல்லாவே இருக்கும்! யம்மா இஞ்ஞயே தொணைக்கு இருங்க. நாஞ்ஞ இஞ்ஞ ரொம்ப நேரமா நிக்க முடியாது. நாஞ்ஞ கெளம்புறேம்! எல்லாரும் சித்தெ வெரசா கெளம்புங்க."ன்னாப்புல கோவிந்து சிறைக்கூடத்துல ரொம்ப நேரத்துக்குக் கைதியப் பாத்துப் பேசிட்டு இருக்க முடியாதுங்றாப்புல. அதெ புரிஞ்சிக்கிட்டதெப் போல சுப்பு வாத்தியாரும் விகடுவும் கோவிந்தோட கெளம்பி வெளியில வந்தப்போ ரண்டாவது மாடிக்கான காவல்கார அம்மா கோவிந்துக்கு ஒரு வணக்கத்தெ போட்டு, "அடிக்கடி வந்துட்டுப் போ கண்ணு!"ன்னுச்சு என்னவோ ஒறவுக்கார வூட்டுக்கு அடிக்கடி வந்துட்டுப் போங்கன்னு சொல்றாப்புல.

கோவிந்து, "இருவது ரூவா நோட்டு கம்மியாத்தாம் இருக்கு! அடிக்கடி வந்தா தட்டுபாடா ஆயிப் போயிடும்!"ன்னாப்புல ஒரு சிரிப்பெ சிரிச்சுக்கிட்டு.

"அதுக்கென்ன ஒரு தவா கொடுக்கலன்னா அடுத்த தவா சேத்துக் கொடு. ஓடியா போயிடப் போறே எங் கண்ணு?"ன்னுச்சு அந்த அம்மா பணம் கொடுக்குற மகராசனுங்களுக்கு எப்பவும் உள்தாழ்ப்பாளு தொறந்திருக்கும்ங்றாப்புல. அதெ கேட்டும் கேக்காததப் போல கோவிந்து வேகமா வந்தாரு.

இன்பேஷண்ட் வார்ட வுட்டு வெளியில வர்றப்போ அங்க நின்ன காவல்காரரும் கோவிந்தப் பாத்து வணக்கத்தெ வெச்சாரு. "அடிக்கடி வந்துட்டுப் போப்பா!"ன்னாரு காவல்காரரு அக்கறையா பணங்காசியோட சம்பாதிச்சு வர்ற மவனோட வருகைய எதிர்பாத்துக்கிட்டு இருக்குறாப்புல.

"அடுத்த தடவெல்லாம் விசிட்டிங் அவர்லத்தாம் வருவேம்! இருவது ரூவா நோட்டெ கொடுத்தாவே நாட்டுல ஒரு மாதிரியா பாக்குறாங்கப்பா!"ன்னு சிரிச்சடிபடிக்குச் சொல்லிட்டு நவுந்த கோவிந்துகிட்டெ, "எப்ப வந்தாலும் செரித்தாம்! கவனிச்சிட்டுப் போ தலைவரே!"ன்னாரு காவல்காரரு காசி வரத்தெ கண்ணுல காட்டிட்டுப் போ கடவுளேங்றாப்புல.

எல்லாத்துக்கும் பதிலெ தயாரா வெச்சிருக்கிறாப்புல, “நோட்டிக்கிற மிஷினு இருந்தா கவனிக்கலாம்!”ன்னு சிரிச்சிக்கிட்டெ எல்லாத்தோடயும் வெளியில வந்தாரு கோவிந்து.

            வெளியில வந்ததும் கோவிந்து, "இஞ்ஞ கூட யாரும் இருக்க வாணாம். எல்லாரும் கெளம்பிடலாம்!"ன்னாப்புல ரண்டு அடுக்கு காவல் இருக்குற எடத்துல எதுக்கு வாட்ச்மேன் வேல பாத்துக்கிட்டுங்றாப்புல.

            "யில்லம்பீ! நாம்ம இஞ்ஞ தங்கியிருந்து காலயில சாப்பாடு, டீத்தண்ணிய வாங்கிக் கொடுத்துட்டு கெளம்புறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு என்னத்தாம் பண்ணையாளு வேலயப் பாத்தாலும் வயக்கார்ரேம் இருந்து மேம்பார்வெ பாக்குறதுப் போவ ஆவுமாங்றாப்புல.

            "இஞ்ஞ கொசுக்கடியிலத்தாம் படுத்துக் கெடந்தாவணும். அதுக்கு வூட்டுல வந்து நல்லா படுத்துத் தூங்கிட்டு மொத பஸ்ஸ பிடிச்சி இஞ்ஞ வந்து எறங்கிக் கூட நீஞ்ஞ கேட்குறதெ வாங்கிக் கொடுக்கலாம்!"ன்னாப்புல கோவிந்து ஆக்கங்கெட்ட தனமா கெடந்து தூக்கத்தெ கெடுத்துக்கிட வாணாம்ங்றாப்புல.

            "வூட்டுக்கு வந்தாலும் நமக்குத் தூக்கம் பிடிக்காது. அதுக்கு இஞ்ஞயே கொசுக்கடியில கெடந்து படுத்துறதுதாம் நல்லது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இனுமே தாம் வூட்டுல கெடக்குறதும் ஒண்ணுதாம், ரோட்டுல கெடக்குறதும் ஒண்ணுதாம்ங்றாப்புல.

            "அப்பிடின்னா இஞ்ஞயே இப்பிடிப் படுத்துக்கோங்க வாத்தியார்ரே! நாம்ம வாட்ச்மேன்கிட்டெ சொல்லிட்டுப் போறேம். தண்ணி வெச்சிருக்கீயளா? ல்லன்னா பெத்தநாயகம் ஒரு தண்ணிப் பாட்டில வாங்கியாந்து வாத்தியார்ட்டெ கொடு!"ன்னாப்புல கோவிந்து அதுக்கும் ஏத்தாப்புல சில ஏற்பாடுகளப் பண்டிக்கணும்ங்றாப்புல. ஒடனே அதுக்கேத்தாப்புல பெத்தநாயகம் தண்ணிப் பாட்டில வாங்க ஓடுனாப்புல.

            "மணி பத்தெ கடந்துட்டு. கெளம்புவோம். நாளைக்கி வந்துப் பாக்குறேம்."ன்னுச்சு கோவிந்து சுப்பு வாத்தியார்ரப் பாத்து இன்னிய இரவெ விடிய வெச்சிப்புடுவோம்ங்றாப்புல. சுப்பு வாத்தியாரு கோவிந்தெப் பாத்து கையெடுத்துக் கும்புட்டாரு. அவரோட கையிரண்டையும் பிடிச்சுக்கிட்டு, இதெல்லாம் பெரிய விசயம் இல்லங்ற மாதிரிக்கு அதெ பேச்சுல கொண்டு வர்றாம தெசெய திருப்புறாப்புல, "நீங்ஞ எப்பிடி கெளம்புறீயே வாத்தியாரே?"ன்னுச்சு விகடுவெப் பாத்து.

            விகடு பரமுவோட அப்பாவக் காட்டி, "இவுங்க வண்டியில கெளம்பிடுறேம்!"ன்னாம் போற வழிக்கு வண்டி இருக்குங்றாப்புல.

            "போறப்ப வடவாதி போலீஸ் ஸ்டேசன்ல வண்டிக் கெடக்குது. அதெ எடுத்துக்கிட்டு போடாம்பீ! ஸ்டேசன்ல வண்டி கெடந்தா உருப்படியா இருக்காது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சட்டுன்னு தன்னோட வண்டி ஞாபவம் வந்து, வண்டியோட சாவிய எடுத்து விகடுகிட்டெ கொடுத்த படிக்கு.

            "செரிப்பா! பாதுத்துக்குங்க!"ன்னு சொல்லிட்டு விகடு வெளியில வந்தாம். எல்லாரும் அந்தபடிக்குச் சொன்னபடியே கௌம்புறதுக்கு வெளியில வந்தாங்க. பரமுவோட அப்பா டிவியெஸ் எக்செல்ல ஸ்டார்ட் பண்ணாரு. விகடு பின்னாடி ஏறி உக்காந்தாம். கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகம் எல்லாருமா அவுங்களோட யமஹா கிரக்ஸ்ஸ ஸ்டார்ட் பண்ணாங்க.

            "நீஞ்ஞ பெரிய வண்டி. வெரசா வேகமா போங்க. நாம்ம சின்ன வண்டி. மெதுவாத்தாம் வர்ற முடியும்!"ன்னாரு பரமுவோட அப்பா அவுங்கவங்கள அவுங்க வேகத்துல போவ வுடுறதாம் ஞாயம்ங்றாப்புல.

            "செரி! யப்போ நாஞ்ஞ கெளம்புறேம். நாளைக்கிப் பாக்கலாம்!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புனாங்க கோவிந்தோட எல்லாரும் வண்டிய கௌப்புனா சக்கரம் அறுவது கிலோ மீட்டர் வேகத்துல சொழலாம நிக்காதுங்றாப்புல. பரமுவோட அப்பாவும் வண்டியக் கெளப்புனாரு நம்மோட வேகத்துல நாம்ம போயிட்டு இருப்போம்ங்றாப்புல.

            அப்பத்தாம் விகடுவுக்கு பரமுவோட யப்பா சாப்புடுலங்ற சங்கதியே புத்தியில ஒரைச்சது. நடந்த சம்பவத்துலயும் பேச்சுப் பராக்குலயும் அவர்ர நெனைக்காமலே இருந்ததெ நெனைச்சதும் அவ்வேமுக்குத் தம் மேலயே கோவம் வந்தாப்புல ஆயிடுச்சு. "பாவம்! ஒஞ்ஞளுக்குத்தாம் ரொம்ப செருமம் கொடுக்குறாப்புல ஆயிடுச்சு! சாப்புடக் கூட ல்லியே? ஓட்டல்ல சாப்புட்டுக் கௌம்புவோமே?"ன்னாம் விகடு பண்ண தப்புக்கு ஒடனே பரிகாரத்தெ பண்ணிப்புடணும்ங்றாப்புல.

            "யப்பாடி! நமக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கிடாதுப்பா. அதாங் கூட நின்னா அஞ்ஞ இஞ்ஞன்னு அழைச்சிட்டுப் போயிடுவீயோன்னு நைசா வராண்டா ஓரத்துல கெடந்த நாற்காலியெ கதியென்னு கண்ணுல படாம கழண்டுகிட்டேம். வெளியில எஞ்ஞப் போனாலும் சரித்தாம், ராத்திரி எம்மாம் நேரம் ஆனாலும் செரித்தாம், வூடுப் போயித்தாம் சாப்பாடு. ஓட்டல்ல சாப்புடறதெ வுட்டு முப்பது வருஷத்துக்கு மேல ஆவுதுப்பா. இனுமே இந்த வயசுல போயி திரும்பவும் அந்தப் பழக்கத்துககு ஆளாக்கி வுட்டுப்புடாதே. எந்நேரத்துக்கு வூட்டுக்குப் போனாலும் மாவு தயாரா இருக்கும். ரண்டு நிமிஷத்துல பரமுவோட யம்மா பாட்டுக்குத் தோசெயெ கண்ணெ மூடி தொறக்குறதுக்குள்ளார சுட்டுப் போட்டுப்புடும். அதால ஓட்டல் சாப்பாட்டெப் பத்தி மட்டும் பேயாதே. நமக்கு இதால செருமம்ன்னும் நெனைச்சிப்புடாதே. ஏன்னா இதுல ன்னா செருமம் வந்துக் கெடக்கு? பாத்துக்கிடலாம் வா!"ன்னாரு பரமுவோட அப்பா கோடிய கொட்டிக் கொடுத்தாலும் ஒட்டல்ல மட்டும் சாப்புட மாட்டேம்ங்றாப்புல. இதுக்கு மேல பரமுவோட யப்பாகிட்டெ என்னத்தெ பேசுறதுன்னு புரியாம அமைதியானாம் விகடு. வண்டி சீரான வேகத்தோட போவ ஆரம்பிச்சிது. போற வழியெல்லாம் மேக்கொண்டு பண்ண வேண்டியதப் பத்தியே பேசிட்டுப் போனாங்க பரமுவோட அப்பாவும், விகடுவும். மனச்சொமையோட வந்த ரோட்டுல யிப்போ சொமையேறங்குனாப்புல விகடு பரமுவோட அப்பாவோட டிவியெஸ் எக்செல்ல உக்காந்துட்டு வந்தாம். போறப்ப வண்டிச் சொமையோட போன மாடுங்க சொமையெறங்குன பெற்பாடு வண்டிய இழுத்துக்கிட்டு வர்றதப் போல இருந்துச்சு விகடுவுக்கு இப்போ. பேச்சுத் தொணைக்கு ஆளிருந்தா பாத தூரமும் தெரியாது, வழிச்சொமையும் தெரியாதும்பாங்க. அப்பிடித்தாம் இருந்துச்சு பரமுவோட அப்பாவோட போனதும் வர்றதும் விகடுவுக்கு.

உங்க வண்டிங்றதுக்கு என்ன ஆதாரம்?

            வடவாதி போலீஸ் ஸ்டேசன் வந்ததும் வண்டிய நிறுத்துனாரு பரமுவோட அப்பா சேப்பு வௌக்கு எரியுறப்போ சிக்னல்ல வண்டிய நிப்பாட்டிப்புடுறாப்புல. வெளியில ஒரு லைட்டு மட்டும் அனாதியா எரிஞ்சிட்டு இருந்துச்சு. ஸ்டேசனுக்கு உள்ளார ஒரு டியூப் லைட்டு மட்டும் ஒண்டிக்கு ஒண்டியா எரிஞ்சது. வெளியில சுத்திலும் விகடுப் பாத்தாம். டிவியெஸ் பிப்டி கண்ணுக்குப் படல. உள்ளார ரண்டு போலீஸ்காரவுங்க மேசையில தலைய வெச்சாப்புல தூங்கிட்டு இருந்தாங்க. இவுங்க ரண்டு பேத்தோட காலடிச் சத்தம் கேட்டதும் ரண்டு போலீஸ்காரவுங்களும் தலைய நிமுத்திப் பாத்து என்னாங்ற மாதிரிக்கிப் பார்வெ பாத்தாங்க.

            "எஞ்ஞ டிவியெஸ்ஸூ பிப்டி இஞ்ஞ கெடக்குது?"ன்னாம் விகடு ஸ்டேசனுக்குள்ள வந்ததுக்கான காரணத்தெ சொல்றாப்புல.

            "இஞ்ஞ ஆயிரத்தெட்டு வண்டிக கெடக்குது? ஒஞ்ஞ வண்டி இதாங்ற ஆதரமில்லாம எப்பிடிக் கொடுக்குறது?"ன்னாரு ஒரு போலீஸ்காரரு கண்ட நேரத்துல கண்டதையும் கேட்டா எப்பிடிக்குக் கொடுக்குறதுங்றாப்புல.

            "மத்தியானத்துக்கு மேல திட்டையில ஒரு வாத்தியாரு வூட்டுலேந்து பொண்ண அழைச்சாந்தீங்களே! அவுங்களோட வண்டியத்தாம் கேக்குறேம்!"ன்னாரு பரமுவோட அப்பா பொருளுக்கு உரிமெக்கார்ரேம் ஆதாரமில்லாமகேக்க மாட்டாங்றாப்புல.

            "ஒரு நாளைக்கு நூத்துக்கு மேல கேஸ்ஸூங்க வருது. நாம்ம இப்பத்தாம் நைட் டியூட்டிக்கு வந்திருக்கேம். மத்தியானம் நடந்ததெல்லாம் நமக்குத் தெரியாது!"ன்னாரு இன்னொரு போலீஸ்காரரு அத்தாட்சி இருந்தாலும் அதெ கொடுக்கணுங்ற அவசியமில்லன்னு அதுக்கொரு காரணத்தெ சொல்றாப்புல.

            "எஞ்ஞ வண்டிதாங்க. இஞ்ஞயிருந்து ஒடனே ஆர்குடிக்குப் போவணும்ன்னு ஜீப்புல ஏறச் சொன்னதால இஞ்ஞயேப் போட்டுட்டு ஏறுறாப்புல ஆயிடுச்சு!"ன்னாம் விகடு போலீஸ் ஸ்டேசன்லயே வந்து பொய்யச் சொல்லி களவாடிட்டுல்லாம் போறதுக்கு வாரலங்றாப்புல.

            "வண்டில்லாம் உள்ளாரத்தாம் பாதுக்காப்பா கெடக்குது. யாரு வண்டிங்ற வெவரம் யில்லாம கொடுக்க முடியாது. காலங்காத்தால அய்யா வந்துப் பாத்தாங்கன்னா நம்மளத்தாம் சத்தம் போடுவாக. நீஞ்ஞ ஒண்ணு பண்ணுங்க. கெளம்பிப் போயிட்டுக் காத்தால வாஞ்ஞ. அய்யா வந்ததும் அவருகிட்டெ கேட்டுக்கிட்டு எடுத்துக்கிட்டுப் போங்க!"ன்னாரு போலீஸ்காரரு தன்னோட அதிகார வரம்புக்குள்ள இதெல்லாம் வாராதுங்றாப்புல.

            "காலங்காத்தாலேயே எஞ்ஞளுக்கு ஆர்குடிக்குப் போற வேல இருக்குங்கய்யா!"ன்னாம் விகடு நொண்டிக்கிட்டு நிக்குறவேம் நெடுந்தூரம் வண்டியில்லாம்ம எப்பிடி போறதுங்றாப்புல.

            "அதாங். காலாங்காத்தாலயே வாஞ்ஞ. அய்யா வந்துடுவாங்க. அவுங்ககிட்டெ கேட்டுக்கிட்டு ஸ்டேசனையே வாணான்னாலும் தூக்கிட்டுப் போங்க. அய்யா யில்லாம சின்ன துரும்ப கூட இஞ்ஞயிருந்து வுட முடியாது! டியூட்டியில நாம்ம ஸ்ட்ரிக்ட்!"ன்னாரு போலீஸ்காரரு என்னத்தெ பேசுனாலும் எப்பிடித்தாம் கெஞ்சுனாலும் இளகிப் போயி மட்டும் எதெயும் கொடுக்குறதில்லங்றாப்புல.

அதுக்கு மேல அவுங்ககிட்டெ ‍பேசுறது வீண்தாங்றப்புல பரமுவோட அப்பா, "வாடா! காத்தால வந்துப் பாத்துக்கிடலாம். காத்தால ஆறு மணிக்கெல்லாம் கெளம்பித் தயாரா இரு. நாம்ம வந்துடுறேம். வந்து வண்டிய எடுத்துக்கிட்டுப் போயிடலாம். வண்டி உள்ளார அந்தாத்தாம் கெடக்கு. பாத்துக்கிடலாம் வாடா!"ன்னு விடியட்டும் வெச்சுக்கிறேம்ஙறாப்புல விகடுவோட கையப் பிடிச்சி அழைச்சிக்கிட்டு வெளியில வந்தாரு.

            அங்கேயிருந்து வெறுங் கையும் வீசுன கையுமா வூடு வந்துச் சேந்து எறங்குனப்போ பரமுவோட யப்பாவப் பாத்துக் கையெடுத்துக் கும்புட்டாம் விகடு எல்லாத்துக்கும் சேத்து எப்பிடி நன்றிய காட்டுறதுங்றது புரியாம. “அதெல்லாம் ஒண்ணுமில்லடா. எதெயும் நெனைச்சுக்காம்ம போயிப் படு. காத்தால வர்றேம். பாத்துக்கிடலாம்!”ன்னு சொல்லிட்டு வண்டியெ கௌப்பிக்கிட்டு சர்ட்டுன்னு கௌம்பிட்டாரு பரமுவோட அப்பா.

உள்ளார வந்தவனெ ஆயி சொவத்துல சாஞ்சாப்படிக்குப் பாத்தா. அவ்வே இந்நேரம் வரைக்கும் சாப்புடாம இருந்தா. பவ்வுப் பாப்பா சாப்புட்டுப்புட்டு தாத்தா எஞ்ஞன்னு கேட்டுட்டு அழுதுகிட்டே ஒறங்கிப் போனதா சொன்னா. அவ்வே நடந்தெ கதெய ஒவ்வொண்ணா கேட்டா. விகடு ஒவ்வொண்ணா சொல்லிட்டே வந்தாம். என்ன நடந்துச்சோ, ஏது நடந்துச்சோ, இப்போ என்ன நடக்குதுங்றோ தவிப்பு அவ்வே பேச்சோட ஒவ்வொரு வார்த்தையிலயும் தெறிச்சு வுழுந்துச்சு.

            "நாமளும் சொன்னேம்ங்க. செய்யுத்தாம் ஆவேசமா வாங்கன்னு போலீசு அழைச்சக் கொரலுக்குக் கெளம்பிப் போயிடுச்சு. மாமா அதுக்கு மேல. இஞ்ஞ வடவாதி ஸ்டேசன்லத்தானேன்னு கெளம்பிப் போனாங்க. யத்தெ வுடல. சத்தம் போட்டுப் பாத்தாங்க. அவுங்கப் பேச்ச யாரும் கேக்கறாப்புல யில்ல. போலீஸ்ன்னு பாக்கல, பயப்படல யத்தே அன்னச் சத்தம்!"ன்னா ஆயி யாரு பேச்சும் எடுபடாம அதது பாட்டுக்கு அததுப் போக்குல போயி முட்டிக்கிட்டு நின்னெ கதயெ ஒண்ணும் செய்ய முடியாம பாத்துக்கிட்டு நின்னதெ சொல்றாப்புல. அதெ சொல்லிட்டு ஒரு நிமிஷம் மேக்கொண்டு என்னத்தெ சொல்றதுன்னு புரியாம அமைதியா இருந்தவெ, "யிப்போ செய்யு பரவால்லயாங்க?"ன்னா ஆனது ஆயிப் போச்சு, இனுமே அதெயையா நெனைச்சிக்கிட்டு இருக்க முடியும், நம்ம வூட்டுப் பொண்ணையல்லோ பாக்க வேணும்ங்றாப்புல.

            "பரவால்ல. காத்தாலப் போயிப் பாத்தாத்தாம் தெரியும். டிவியெஸ்ஸூ பிப்டி வண்டி வேற ஸ்டேசன்லயே கெடக்குது. வர்றப்பவே ஸ்டேசன்லேந்து எடுத்துப்புடலாம்ன்னு பாத்தேம். யப்பா கௌம்புறப்ப அதத்தாம் சொன்னாவோ. முடியல. அதெ வேற காத்தால எடுத்தாவணும். சீக்கிரமா எடுத்தா அப்பிடியே ஆர்குடிக்குப் போயிட்டு வந்துடலாம். நாளைக்கிப் பள்ளியோடத்துக்கு லீவு போடலாம்ன்னு இருக்கேம்!"ன்னாம் விகடு விடிஞ்சதும் வெரசா பண்ண வேண்டியதெ திட்டம் பண்ணிக்கிடுறாப்புல.

            "வாஞ்ஞ லீவப் போட்டுட்டு நாமளும் கெளம்பிப் போயிப் பாத்துட்டு வந்துப்புடலாம்!"ன்னா ஆயி விகடு சொன்னதுதாம் சரிங்றாப்புல. அதுக்குப் பெறவுதாம் தாம் இன்னும் சாப்புடலங்ற சங்கதியச் சொல்லி ஆயி ரண்டு தோசையச் சுட்டுச் சாப்புட்டுப் படுத்தது. விகடுவையும் சாப்புடச் சொன்னா. அவ்வேம் ஓட்டல்ல சாப்புட்டதாச் சொல்லி வேணாம்ன்னுட்டாம். படுத்தும் ரண்டு பேரால ஒடனே தூங்க முடியல. மனசுலயும் வெளியிலயும் பெரச்சனைன்னா நெனைச்ச நேரத்துக்குத் தூங்கிப்புட முடியாது. அதுவா தூக்கம் வந்தாத்தாம் உண்டு. ஒலகத்தையே வெல பேசி வாங்குனாலும் தூக்கத்தெ வாங்கிப்புட முடியாது. அதிர்ஷ்ட்ம் கூட அதுவா வந்துப்புடும். ஆன்னா இந்தத் தூக்கம் மட்டும் அதுவா வர்றப்பத்தாம் வரும். அதால ரொம்ப நேரம் நடந்த சம்பவத்தப் பத்தியே பேசிக்கிட்டெ கெடந்தாங்க. இப்பிடிப் பண்ணிருந்தா சரியா இருந்திருக்குமா? அப்பிடிச் செஞ்சிருந்தா சரியிருக்குமான்னு அவுங்க பேசி முடிச்சி அவுங்கள அறியாம தூங்குனப்ப மணி அநேகமா ராத்திரி ரண்டுக்கு மேல இருக்கும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...