30 Dec 2020

யாருக்கான வக்கீல் நீங்க?

யாருக்கான வக்கீல் நீங்க?

செய்யு - 671

            செய்யுவோட மனசுல பல கேள்விங்க உண்டாச்சு. எதிர்தரப்பு வக்கீல் ஆஜராவ மாட்டார்ன்னு நம்ம வக்கீல் போன் பண்ணிச் சொல்றாரு. ஆன்னா எதிர்தரப்பு வக்கீல் சரியா ஆஜராவுறாரு. இந்தக் குறுக்கு விசாரணையில அடிஷனலா தாக்கல பண்ண மனுவெ வெச்சித்தாம் வெசாரணைப் பண்ணுவாங்கங்கறப்போ அதுல ஒரு காப்பிய எப்பிடி நமக்குக் கொடுக்காம வுட்டாரு. ஏதோ மறதியில கொடுக்காம வுட்டுருந்தாலும் காலங்காத்தால சீக்கிரமா கோர்ட்டுக்கு வந்த ஒடனே அந்த அடிஷனல பெட்டிஷனக் கொடுத்து படிச்சிப் பாத்துக்கன்னோ அல்லது அதுல இருக்குற சங்கதி இன்னதுன்னோ சொல்லணுமா இல்லியா? அன்னிக்கு எதிர்தரப்பு வக்கீல் வர்ற மாட்டாங்றதெ என்னவோ பெரிசா போன் போட்டுச் சொன்னவருக்கு அடிஷனல் பெட்டிஷன்ல இருக்குறதெ போன் போட்டுச் சொல்றதுக்கு எம்மாம் நேரம் ஆவப் போவுது? அப்பிடியே போன் போட்டுச் சொல்ல முடியாட்டியும் ஆபீஸூக்கு வான்னு வந்து வாங்கிட்டுப் போவக் கூட சொல்லக் கூடாதா? இந்தக் கேள்விங்க அவளோட மனசெ அரிக்க ஆரம்பிச்சதும் இதெப் பத்தி வக்கீல்கிட்டெ கேக்காம வர்ற மாட்டேம்ன்னு சொல்லிட்டு கோர்ட்டு வாசலோட நெலைப்படிக்கிட்டெயே நின்னா செய்யு.

            அதெப் பாத்துப்புட்டு கைப்புள்ள, "அதாம் முடிஞ்சிடுச்சே. வா! மொதல்ல கேண்டீனுக்குக் கெளம்புவேம்! அந்தப் பயலுங்க எடத்தெ காலி பண்ணி கால் மணி நேரம் ஆவுது பாரு!"ன்னாரு ஆட்டம் முடிஞ்சா படுதா காலி ஆவணுங்றதெ சொல்றதப் போல.

            "நம்ம வக்கீல் வெளியில வாரட்டும். அவருகிட்டெ சில கேள்விகளக் கேட்டுப்புட்டுத்தாம் வெளியில வருவேம்!"ன்னா செய்யு பிடிவாதம் பிடிக்குறாப்புல.

            "யப்பா யண்ணங்கார்ரா நீயி ஒடனிருந்து அழைச்சிட்டு வா! நாமளும் யப்பாவும் போயி கேண்டீன்ல டீய அடிச்சாத்தாம் இதுக்கு மேல ஒடம்பு வேல செய்யும்! நாம்ம அஞ்ஞப் போயி டீத்தண்ணிய தொண்டையில எறக்குறதுக்குள்ள வக்கீலும் வந்துப்புடுவாரு. அஞ்ஞயே வெச்சு வக்கீல்ட்டயும் பேசிப்புடலாம். ஒந் தங்காச்சி சொன்னா கேக்காது இப்போ இருக்குற நெலமையில. குறுக்கு வெசாரணெ பரவாயில்ல. முடிஞ்சிடுச்சு. இனுமே இந்த எடத்துல நிக்கக் கூடாது. எடதெ காலி பண்டுறதுதாம் நல்லது! சீக்கிரமா கௌப்பிட்டு வா!"ன்னு சுப்பு வாத்தியார்ர அழைச்சிக்கிட்டுக் கோர்ட்டு கேண்டீன் இருக்குறப் பக்கமா பாத்துப் போனாரு.

            வக்கீல் திருநீலகண்டன் கொஞ்ச நேரம் வரைக்கும் கோர்ட்டு உள்ளாரயே உக்காந்து திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தாரு. செய்யுவும், விகடுவும் வெளியில நிக்குறதப் பாத்துட்டு கேஸ் கட்டுகள கலைச்சிப் போட்டு அதுல என்னவோ தேடுறாப்புல பாத்துக்கிட்டு இருந்தாரு. அவருக்கென்னவோ இப்போ வெளியில வர்றதுக்கு இஷ்டம் இல்லாதப் போல இருந்துச்சு அவரு பண்ணுன வேலைக. கொஞ்ச நேரத்துல மத்த கேஸ்களுக்காக ஆஜராவ வக்கீலுங்க உள்ள வந்து எடம் இல்லாம நின்னுகிட்டு இருந்தாங்க. அவர்ல ஒருத்தரு கட்டுகள பிரிச்சி மேய்ஞ்சிக்கிட்டு இருந்த திருநீலகண்டனப் பாத்து, "கேஸ்ஸூ இருக்கா?"ன்னு கேக்க, திருநீலகண்டன் இல்லங்ற மாதிரிக்கு தலைய ஆட்ட, "நவந்தீங்கன்னா நாஞ்ஞ சித்தெ உக்காந்து கேஸ்ஸப் பாப்பேம்!"ன்னு சொல்ல திருநீலகண்டன் எழும்பி வெளியில வந்தாரு.

            "ஏம்ங்கய்யா! அடிஷனல் பெட்டிஷன்லேந்து கேள்விகளக் கேப்பாங்கங்ற வெசயத்தப் பத்திச் சொல்லவே யில்ல?"ன்னா செய்யு வரண்டாவுக்கு வெளியில வந்த வக்கீலப் பாத்து.

            "அவ்வேம் இப்பிடில்லாம் கேப்பான்னு நாம்ம நினைக்கல. மொதல்ல அந்த வக்கீலு இன்னிக்கு வருவாம்ன்னே நினைக்கல. அன்னிக்கு ராத்திரி ஒனக்குப் போன அடிச்சேனம்மா. அதுக்கு மிந்தி அவ்வேம் அப்பிடித்தாம் பேசுனாம். இனுமே ஒம் ஆம்படையான் சார்பா ஆஜராவப் போறதில்லன்னு. அதுக்குப் பிறகு என்ன மாயம் நடந்துச்சோ? மந்திரம் நடந்துச்சோ? தெரியல. வந்து ஆஜராயிட்டாம். நாம்ம கேக்குறேம், ஆஜராவ மாட்டேங்றதெ போன அடிச்சிச் சொன்னவேம், ஆஜராவப் போறதெ போன அடிச்சிச் சொல்லணுமா இல்லியா? அப்படிச் சொல்லிருந்தா நாம்ம தயாரு ஆயி வந்திருப்பேம் இல்லியா?"ன்னாரு வக்கீல் தன்னோட சங்கடத்தெ சொல்றாப்புல.

            "செரித்தாம்ங்கய்யா! ஒஞ்ஞ நெனைப்பு தப்புல்ல. அந்த வக்கீல் ஆஜராவாட்டி ன்னா? வேற வக்கீலு ஆஜராவலாமில்லியா? அதெ வுடுங்க ஏம் பாலாமணியே குறுக்கு வெசாரணையப் பண்றேம்ன்னு எறங்கலாமில்லியா? அதெ நெனைச்சாச்சும் நீஞ்ஞ இந்த வெசாரணையில என்னென்ன மாதிரியான கேள்விங்க வாரலாங்றதெ கொஞ்சம் கோடுப் போட்டுக் காட்டியிருக்கலாமில்லியா?"ன்னா செய்யு விக்கித்துப் போயிக் கேக்குறாப்புல.

            "அதாம் நீயி ந்நல்லா பதிலச் சொல்லீட்டியே? ஜட்ஜே ஒரு நிமிஷம் அசந்துப் போயித்தாம் பாத்தாரு. அந்தப் பயெ மூக்கொடைஞ்சித்தானே போறாம் போ!"ன்னாரு வக்கீல் சமாதானம் காட்டுறாப்புல.

            "அத்து வேறங்கய்யா! எப்பிடியே சமாளிச்சிட்டேங்றது. ஆன்னா நாம்ம கொஞ்சமாவது கணிச்சி முன்னேற்பாடோட யிருக்கணுமா யில்லியா? அப்பிடி அந்த அடிஷனல் பெட்டிஷன்ல என்னத்தாம் இருந்துச்சு?"ன்னா செய்யு ஞாயம் கேக்க வேண்டிய வக்கீல்கிட்டெயே ஞாயம் கேக்குறாப்புல.

            "முப்பத்தஞ்சு பக்கத்துக்கு அந்தப் பெய கிறுக்கி வெச்சிருந்ததால அதெ நாமளும் படிக்கலம்மா. எவ்வேம்மா அத்தனெ பக்கம் படிக்கிறது? அவ்வேம் கிராஸ் பண்ண பண்ணத்தாம் இஞ்ஞ கோர்ட்லயே உக்காந்து வேக வேகமா படிச்சேம். சுத்தமா வழக்குக்கேச் சம்பந்தம் இல்லாம, பரீட்சையில ஆன்ஸர் தெரியாத பயெ கதெ அடிப்பாம் பாரு. அந்த மாதிரிக்கி அடிச்சி வெச்சிருக்காம். ஒம் குடும்ப வரலாறையே ஆரம்பத்துலேந்து இப்ப வரைக்கும் அவனா திரிச்சித் திரிச்சி எழுதி வெச்சிருக்காம். அதெ விடு. அதெல்லாம் இந்த வழக்குக்குக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாததுதாம். இருந்தாலும், இவ்வளவு விவரம் ஒங் குடும்பத்தப் பத்தி அவனுக்கு எப்படி தெரியும்? ஒம் உறவுலயே ஒனக்கு எதிர்ப்பா யாரோ இருக்காங்க. அவுங்கத்தாம் இதெயெல்லாம் சொல்லிருக்கணும். ஒங்களுக்கு நெருக்கமா தெரிஞ்ச யாரோ சொல்லாம இவ்வளவு நுணுக்கமா எழுதிட முடியாது. அதெ மொதல்ல யாருன்னு கண்டுபிடி?"ன்னாரு வக்கீலு கெழக்கப் போவ வழி கேட்ட மேற்குல நோக்கி வழியக் காட்டுறாப்புல.

            "அதெ கண்டுபிடிச்சி என்னாவப் போவுதுங்கய்யா?"ன்னா செய்யு கொதிக்க வெச்ச பால் பொசுக்குன்னுப் பொங்கித் தளும்புறாப்புல.

            "என்னம்மா இப்பிடிச் சொல்லிப்புட்டே? அதெ கண்டுபிடிச்சித் தடுக்கணுமா இல்லியா?"ன்னாரு வக்கீல் பொங்கி வர்ற பால்ல தணிக்கிறதுக்கு அடுப்புத் தீய கொறைக்குறாப்புல.

            "என்னிக்குக் கலியாணம் ஆயி நாம்ம வாழவெட்டியா எம்மட யப்பா வூட்டுக்கு வந்தேன்னோ அன்னிலேந்தே எல்லா சொந்தமும், ஊரு ஒலகமும் எஞ்ஞளுக்கு எதிரியாயிட்டாங்க. ஒருத்தரு, ரண்டு பேருன்னா இவருதாம் எதிரின்னு கண்டுபிடிச்சி சொல்லலாம். எல்லாமே எதிரின்னா அதுல கண்டுபிடிச்சிச் சொல்றதுக்கு என்ன இருக்கு? எஞ்ஞச் சொந்தக்காரங்க பூராவும் எஞ்ஞ எதிரித்தாம்யா நம்மட தாய்மாமேம் உட்பட! போற எடமெல்லாம் எஞ்ஞளுக்கு எல்லாம் எதிரியாவே ஆவுறாக நீஞ்ஞ உட்பட!"ன்னா செய்யு கால்ல வுழுவுறவேம் சட்டுன்னு கால்ல எடறி வுடுறாப்புல.

            "நாம்ம என்னம்மா எதிரியானேம்?"ன்னாரு வக்கீலு சட்டுன்னு நெலைகொழைஞ்சாப்புல.

            "யிப்போ கொஞ்ச நேரத்துக்கு மின்னாடி நம்மள தயார் பண்ணாமலே கூண்டுல ஏத்தி விட்டு, எடையில எந்த இடத்துலயும் அப்ஜக்சன் பண்ணாமலயே உக்காந்திருந்தீங்க யில்ல."ன்னா செய்யு தப்பு பண்ணுறவனெ வகையா வெச்சு பிடிச்சாப்புல.

            "இந்தாரும்மா! நீயே நல்லா மட்டையடியாத்தாம் அடிச்சே. நாம்ம குறுக்கிட்டிருந்தா அந்த அடி அவனுக்கு விழுந்திருக்காது. அதுவும் இல்லாம அவனுங்களாவே ஓவரா பண்ணி ஜட்ஜூகிட்டெ வாங்கிக் கட்டிக்கிட்டானுவோ. இந்த மாதிரி குறுக்கு விசாரணையில எவனும் அசிங்கப்பட்டு நாம்ம பாத்ததில்ல. ஜட்ஜூமே புரிஞ்சிக்கிட்டாரு. கிராஸ் கேள்விகள்ல எதுவும் வக்கீலோட கேள்விங்க இல்லன்னும், எல்லாம் பாலாமணி எழுதிக் கொடுத்து மனப்பாடம் பண்ணி ஒப்பிவிச்ச கேள்விங்கன்னு. இதெ விட ஒரு வக்கீலுக்கு என்னா அசிங்கம் வேணும்? அந்த அசிங்கம் பிடிச்ச வக்கீலு பண்ணுனதெ அப்ஜக்சன் பண்ணலன்னு வேற நீ சொல்றே?"ன்னாரு வக்கீலு குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்காத அளவுக்கு.

            "எஞ்ஞகிட்டெத்தாம் நல்லாத்தாம் பேசுதீயே? அவனுங்ககிட்டெத்தாம் சரியாப் பேசவே மாட்டேங்குதீயே!"ன்னா செய்யு வக்கீலையும் மட்டையடியா அடிச்சுச் சாய்க்குறாப்புல.

            "அடுத்த அவனெத்தான கிராஸ் பண்ணப் போறம். அப்பப் பாரு! அதுல எதாச்சும் குறைபாடுக இருந்தா சொல்லு. ச்சும்மா கூண்டுல வெச்சிச் செய்யுறன்னா இல்லியான்னு மட்டும் பாரு!"ன்னாரு வக்கீலு வரண்டா சாட்சியா சவால் வுடுறாப்புல.

            அப்போ சுப்பு வாத்தியாரு உள்ளார வேக வேகமா ஓடியாந்து எல்லாரையும் வெளியிலக் கூப்புட்டாரு. கைப்புள்ள கேண்டீன் பக்கமா ரொம்ப உக்கிரமா நின்னுகிட்டு இருந்தாரு. மொகத்துல கோவம் கொப்புளிச்சிக்கிட்டு இருந்துச்சு.

            "ஏம் என்னாச்சு?"ன்னாம் விகடு சட்டுன்னு நெலமெ புரியாம.

            "கேண்டீனுக்கு டீத்தண்ணியக் குடிக்கலாம்ன்னு வந்தா அந்தப் பயலுவோ நாம்ம எப்போ வெளியில வருவேம், வம்பு வைக்கலாம்ன்னு நின்னுருப்பானுவோ போலருக்கு. நாமளும் கைப்புள்ளயும் வந்ததெப் பாத்து அந்தத் தடிமாட்டுப் பயெ பையித்தூக்கி இருக்காம்ல அவ்வேம் கைப்புள்ளயப் பாத்து, ‘டேய் கொட்டாப்புளி ஒன்னய மூட்டெப் பூச்சிய அடிச்சி நசுக்குற மாதிரிக்கி நசுக்காம வுட மாட்டேம்’ன்னாம் பாரு! கைப்புள்ளைக்குக் கோவம் வந்து ‘ஒழுங்கு மருவாதியா ஊருப் போயிச் சேருங்கடா. டவுன் எல்லயத் தாண்டி அந்தாண்டப் போவ முடியாது’ன்னாரு. ஒடனே அந்தப் பயெ ‘கோர்ட்டு காம்பெளண்டுக்குள்ளயே ஒன்னயக் கொன்னுப் போட்டுட்டு அந்தாண்டப் போவவா?’ன்னு கேட்டாம் பாரு, கைப்புள்ளைக்கு வேகம் வந்து, ‘எஞ்ஞ வந்துக் கொல்லுப் பாப்பேம், அதுவரைக்கும் எம் கையில பூப்பறிக்குமா?’ன்னாரு. ஒடனே அந்தப் பயலும் ஓடியாந்து கைப்புள்ளக் கையப் பிடிச்சி அப்பிடியே பின்னாடி வளைச்சி முதுகுக்குக் கொண்டுப் போயி வெச்சி முறுக்குறாம். கைப்புள்ளெ வலி தாங்க முடியாம வுட்டுட்டுடா வுட்டுடான்னு கத்துறாரு. நாமளும் அவ்வேனெ வுட்டுப்புடுடான்னு அந்தாண்ட தள்ளப் பாக்குறேம். முடியல. அவரு கஷ்டப்படுறதெ கொஞ்ச நேரம் ரசிச்சுப் பாத்துப்புட்டு அந்த பாலாமணி பயெ இன்னிக்கு இத்துப் போதும் விட்டுட்டுப்புட்டு வான்னு சொன்னதுக்குப் பெறவு வுட்டுப்புட்டுப் போறாம். போறப்ப அந்தப் ‘பயெ பாத்தீயாடா பன்னாடெ ஒஞ்ஞ எடத்துல ஒஞ்ஞ மாவட்டத்துலயே வந்து எஞ்ஞளால இப்பிடி பண்ண முடியுதுன்னா எஞ்ஞளால யின்னும் என்னென்ன பண்ண முடியும்ன்னு பாத்துக்கோ!’ன்னு சொல்லிட்டுப் வண்டியில ஏறிட்டுக் கெளம்பிப் போறாம்! ரொம்ப சங்கடமா போயிட்டுங்கய்யா! நமக்காகத் தொணைக்கு வந்து அவருக்கு அசிங்கப்படுறாப்புல ஆயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யாரு அந்தப் பயெ?"ன்னாரு வக்கீல் ஒரு அதட்டலப் போடுறாப்புல.

            "அதாம்ங்கய்யா! கறுப்பா ஒரு தோலு பையத் தூக்கிட்டு, மின்னாடி சூட்கேஸ்ஸ கூட எடுத்துட்டு வந்தாம்ல. அவ்வேம் தாடிக்கார கெழவம் இருக்காம்ல அவ்வனோட அண்ணன் மவ்வேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அந்தப் பயலோட தோற்றத்த கண் முன்னாடி நிறுத்துறாப்புல.

            "ஒங்கள யார் சார் தனியா வர்ற போவச் சொன்னது? எல்லாரும் சேர்ந்து போவ வர வேண்டித்தானே?"ன்னாரு வக்கீலு கைப்புள்ளையப் பாத்து என்னவோ செய்யக் கூடாத தப்பெ பண்ணவர்ரப் போல.

            "யாருங்கய்யா தனியா வந்தது? நாமளும் வாத்தியாருமா சேந்துதாம் வர்றேம். அதுவும் கோர்ட்டு வளாகத்துக்குள்ளாரயே வெச்சி இந்த மாதிரிக்கிப் பண்ணிப்புட்டு சவாலு வுட்டுப்புட்டுப் போறாம். அதெ கேக்காம நீஞ்ஞ பாட்டுக்கு எஞ்ஞளுக்கு பெலாக்கணம் வெச்சிட்டு இருக்கீயே?"ன்னாரு கைப்புள்ள வெகுண்டுப் போயி வக்கீலு மேல பாயுறாப்புல.

            "நாமளும் கொஞ்சம் வார்த்தையப் பதனமா வுடணும்! கேஸ் முடிஞ்சா கௌம்ப வேண்டியதுதானே? ஏன் தேவையில்லாத வீண் பேச்சு?"ன்னாரு வக்கீல் கைப்புள்ள குத்தம் வைக்குறாப்புல.

            "யோவ் வக்கீலு! நீயி நம்மப் பக்கமா? அவனுவோ பக்கமா? கோர்ட்டுல வெச்சி ன்னா பேச்சுப் பேசுறானுவோ? அதெப் பத்தி ஒண்ணும் கேக்க மாட்டேங்றே? யிப்போ நம்ம கையப் பிடிச்சி முறுக்க வர்றாம்ன்னா அதெப் பத்தியும் ஒண்ணுஞ் சொல்ல மாட்டேங்றே. என்னவோ ஏம் பேசுனே? எதுக்கு தனியா வந்தேன்னு எஞ்ஞகிட்டெ அவனுவோ பக்கமா வக்காலத்து வாங்கிட்டு நிக்குதீயே?"ன்னாரு கைப்புள்ள போதையில இருக்குற குடிகாரனெ தெளிவு பண்ணுறாப்புல.

            "கோவப்பட்டா எப்பிடீங்க தலைவா? இப்போ என்னா பண்ணணும்ங்றீங்க? அதெச் சொல்லுங்க செஞ்சிப்புடுவேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் ஒரு பச்சோந்தி சட்டுன்னு மாறிக்கும் பாருங்க அப்படி.

            "அந்தப் பயலுவோ மேல மொதல்ல ஸ்டேசன்ல கம்ப்ளய்ண்ட் கொடுத்தாவணும்!"ன்னாரு கைப்புள்ள வக்கீல்கிட்டெயே ஒரு வக்கீலப் போல.

            அதுக்கு வக்கீல், "கோர்ட்டு வளாகத்துக்குள்ள நடந்ததுக்கு உள்ளார வந்து போலீஸ் என்கொயரிப் பண்ண மாட்டாங்க!"ன்னாரு சட்டுன்னு சட்ட நெலமைய எடுத்துக் காட்டுறாப்புல.

            "யப்போ ஜட்ஜ்கிட்டயெ போயிச் சொல்லுவேம்!"ன்னாரு கைப்புள்ள விடாப்புடியா வம்பெ வைக்குறாப்புல.

            "கேஸூக்கும் ஒங்களுக்கும் என்னா சம்பந்தம்? நீங்க ஏம் கோர்ட்டுக்குள்ளார வந்தீங்க சம்பந்தமில்லாமன்னு கேட்டா என்னா பதிலச் சொல்லுவீங்க?"ன்னாரு வக்கீல் தம் பக்கத்தையே தானே மடக்குறாப்புல.

            "யோவ் இந்தப் பாருய்யா? நீயி அவுங்ககிட்டெ எதாச்சும் காசி வாங்கிட்டீயா ன்னா? எதெ கேட்டாலும் அவனுக்குச் சாதவமா சகிச்சிக்கிட்டுப் போயித் தொலைங்ற மாதிரிக்கே மறைமுகமா சொல்லுதீயே? இந்தாருய்யா இந்தக் கேஸையும் சேத்து ஒமக்கு எத்தனெ கேஸ்ஸப் பிடிச்சி விட்டுருப்பேம். இன்னிக்கு நாம்ம அவமானப்பட்டு நிக்குறேம்ங்றேம். அதுக்கு எதாச்சும் பண்ணுய்யான்னா இஞ்ஞ போலீஸ் வந்து வெசாரண பண்ண மாட்டாங்கங்றே, ஜட்ஜூ ஏம் வந்தேன்னு கேப்பாருங்றே? நாம்ம யிப்பிடியே இந்த அசிங்கத்தோடயே போயித் தொலையவா?"ன்னாரு கைப்புள்ள வெறுத்துப் போனாப்புல.

            "இப்போ என்னத்தாம் பண்ணணும் தலைவா? அதெச் சொல்லுங்க மொதல்ல!"ன்னாரு வக்கீல் பாடுன பின்பாட்டையே மறுக்கா பாடுறாப்புல.

            "ஏம்யா மொதல்லேந்து ஸ்டேசன் போவணுங்றேம். மறுக்கா மறுக்கா ன்னா பண்ணணுங்றீயே?"ன்னாரு கைப்புள்ள வெடிச்சிச் செதறுறாப்புல.

            வக்கீல் திருநீலகண்டன் ஒரு நிமிஷம் நெத்தியச் சுருக்கிச் யோசிச்சாரு. "சரி கோர்ட்டுக்கு வெளியில வெச்சு வாய்த் தகராறு பண்ணதா டவுன் போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணுவோம். ஏன்னா இது டவுன் லிமிட்லத்தாம் வரும். அதெ வேணும்ன்னாலும் பண்ணலாம்!"ன்னாரு வக்கீலு ஒரு வழியக் காட்டுறாப்புல.

            "அப்பிடிப் பண்ணா அவனுகளெ பிடிச்சி உள்ளார போடுவானுங்களா?"ன்னாரு கைப்புள்ள பொங்கிட்டு வர்ற கோவத்தெ நிறுத்த முடியாம.

            "இப்போ ச்சும்மா ஒரு புகாருதாம். இதுக்கே அரண்டுப் போயிடுவானுவோ கூப்ட்டு விசாரிச்சா. இதெ வெச்சிக்கிட்டு அடுத்ததா இதெ மாதிரிக்கிப் பண்ணுனானுவோன்னா நடவடிக்கெ எடுப்பாங்க! அதுக்காகச் சும்மா அனுப்பிட மாட்டாங்க. ஒரு மெரட்டு மெரட்டித்தாம் அனுப்புவாங்க!"ன்னாரு வக்கீலு கைப்புள்ளைய சாந்தம் பண்டுறாப்புல.

            "யப்போ வாஞ்ஞ மொதல்ல அதெ பண்ணுவேம். எஞ்ஞ இருக்கு டவுன் போலீஸ் ஸ்டேசன்?"ன்னாரு கைப்புள்ள பரபரப்புக் கொறையாம.

            "எல்லாம் கலக்டரேட்குள்ளத்தாம் இருக்கு வாங்க!"ன்னு வக்கீல் கெளம்ப அவரு பின்னால எல்லாரும் போனாங்க. சட்டுன்னு நெலமெ இப்பிடி திடீர்ன்னு மாறும்ன்னு யாரும் எதிர்பாக்கல.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...