31 Dec 2020

வந்தச் சுவடு தெரியாமப் போவணும்!

வந்தச் சுவடு தெரியாமப் போவணும்!

செய்யு - 672

            டவுன் போலீஸ் ஸ்டேசன்ல போயித் தகவலச் சொன்னதும், வெளியில நின்னுகிட்டு இருந்த போலீஸ்காரரு உள்ளார கம்ப்யூட்டர் மின்னாடி உக்காந்திருந்த ஒரு போலீஸ்காரர்ரப் பாத்து அவருகிட்டெ சொல்லுங்கன்னு அனுப்பி வெச்சாரு. அங்கப் போயி அந்தப் போலீஸ்காரர்ட்டெ கைப்புள்ள தகவலச்‍ சொன்னதும், "ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதுங்க. அவ்வேம் போன் நம்பர்  இருந்தா மொதல்ல கொடுங்க!"ன்னாரு அங்க இருந்த போலீஸ்காரரு.

            போன் நம்பர்ர கொடுத்ததும் அதெ வாங்கி போலீஸ்காரரு போனப் போட்டா பாலாமணி எடுத்துப் பேசுறாம். "யாருய்யா?"ன்னு எரிச்சலா கேக்குறாம்.

            "திருவாரூரு டவுன் போலீஸ் ஸ்டேசன்லேந்து பேசுறேம்!"ன்னதும் கொஞ்சம் அடங்குனாப்புல, "ன்னா விசயம்?"ங்றாம் பாலாமணி.

            "ஒஞ்ஞ மேல ஒரு கம்ப்ளெய்ண்ட் பண்ணிருக்காங்க. கொஞ்சம் திருவாரூரு டவுன் போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப் போவ முடியுமா?"ன்னாரு போலீஸ்காரரு.

            "நாம்ம பாக்குக்கோட்டைங்க. நமக்குத் திருவாரூருக்கும் சம்பந்தம் இல்லீங்க. நாம்மப் பாக்குக்கோட்டைலேந்து எப்பிடி திருவாரூருக்கு வர்ற முடியும்?"ன்னாம் பாலாமணி சாமர்த்தியமா பதிலச் சொல்றாப்புல.

            "அவரு பேரு என்னா சொன்னீங்க?"ன்னு போலீஸ்காரரு கைப்புள்ளயப் பாத்துக் கேட்டாரு.

            "பாலாமணிங்க!"ன்னாரு கைப்புள்ள. அதெ கேட்டுக்கிட்ட போலீஸ்காரரு, "நீஞ்ஞ பாலாமணிதானே?"ன்னாரு.

            "டாக்டர் பாலாமணி!"ன்னாம் பாலாமணி.

            "அப்ப நீங்கத்தாம். பத்தே நிமிஷத்துல கலக்ட்டரேட் பின்னாடி இருக்குற டவுன் போலீஸ் ஸ்டேசன்ல இருக்கணும்!"ன்னாரு போலீஸ்காரரு கண்டிப்புக் காட்டுறாப்புல.

            "நாஞ்ஞ பாக்குக்கோட்டைங்றேம். நீஞ்ஞப் பாட்டுக்குப் பேசிக்கிட்டெ இருக்கீயே?"ன்னாம் பாலாமணி போன்லயே வெசனக் கடுப்பெடுத்தவேம் போல.

            "சித்தெ நேரத்துக்கு மின்னாடி இஞ்ஞ திருவாரூரு கோர்ட்டுக்கு மின்னாடி வெச்சி ஒருத்தர்கிட்டெ வம்பு வெச்சிருக்கீங்க. அவரு இஞ்ஞ வந்து புகாரு பண்ணிட்டாரு. நீஞ்ஞ திருவாரூரு டவுன் லிமிட்டெ தாண்டி அந்தாண்ட போயிருக்க முடியாது. நீஞ்ஞளா வந்தா நல்லது. ல்லன்னா ஒஞ்ஞ வண்டி நம்பர் வரைக்கும் நோட் பண்ணிக் கொடுத்திருக்காரு. செக் போஸ்ட்ட அலர்ட் பண்ணி ஒஞ்ஞள கொண்டு வர்றாப்புல இருக்கும். எப்பிடி வசதி?"ன்னாரு போலீஸ்காரரு உருட்டித் தெரட்டி மெரட்டுறாப்புல.

            "ந்தா வர்றேம் சார்!"ன்னு சொல்லிட்டுப் பாலாமணி எரிச்சலா போன கட் பண்ணாம்.

            "என்னமா டபாய்க்கிறாம். செரியான ஆளாத்தாம் இருப்பாம் போலருக்கு. வர்றட்டும் கவனிச்சாத்தாம் சரிபட்டு வருவாம்! இவனெ போல எத்தனெ பேத்த பாத்திருப்பேம்?"ன்னாரு போலீஸ்காரரு தன்னோட அனுபவத்தச் சொல்றாப்புல.

            அடுத்த ரண்டே நிமிஷத்துல இன்னோவா கார்ல வந்து நிக்குறாம் பாலாமணி தன்னோட பட்டாளத்தோட. வேக வேகமா எறங்கி, "யார் சார் கம்ப்ளெய்ண்ட் பண்ணது? நாஞ்ஞளும் கம்ப்ளெய்ண்ட் பண்றோம். அவுங்கள அரெஸ்ட் பண்ணுங்க?"ன்னாம் சீறிப் பாயுறாப்புல.

            "அவசரப்படாதீங்கய்யா!"ன்னு கைப்புள்ளயக் காட்டி, "இந்த ஆளுக்கு எதுக்குக் கொலெ மெரட்டல் விடுத்தீங்க? அவர்ரு கையப் பிடிச்சி பின்னாடி வெச்சி முறுக்கி கையி வலிக்குதுங்றாரு. மூட்டு நவுந்திருக்கோமோன்னு பயப்படுறாரு!"ன்னாரு போலீஸ்காரரு.

            ஒடனே ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் தன்னோட கைய யாரோ முறுக்குனாப்புல வெச்சிக்கிட்டு, "ந்தா பாருங்க சார்! அந்த ஆளு நம்ம கைய முறுக்குனதுல வலி தாங்கல. அதெ காட்டத்தாம் ஆஸ்பிட்டல் வரைக்கும் போயிட்டு இருந்தேம்!"ன்னாம் சட்டுன்னு ஜகதால பதிலெ தயாரா வெச்சிருக்குறாப்புல.

            "ன்னாடா கதயா வுடுறீங்க? மொதல்ல போன் பண்ணிக் கேட்டப்ப இஞ்ஞ யில்லவே யில்லன்னீங்க. பாக்குக்கோட்டையில இருக்கறதா சொன்னீங்க. யிப்ப என்னான்னா அந்த ஆளு கைய முறுக்குனதுக்கு ஆஸ்பத்திரிய தேடுறேம்ங்றீங்க! பாக்குக்கோட்டையில இருந்தா பாக்குக்கோட்டையிலத்தானடா கைய முறுக்கியிருக்கணும். அதுக்கு ஏம்டா பாக்குக்கோட்டைய வுட்டுப்புட்டு இஞ்ஞ வந்து ஆஸ்பிட்டல தேடுறீயே? அஞ்ஞ யில்லாத ஆஸ்பிட்டலா ன்னா?"ன்னாரு போலீஸ்காரரு. அதெ கேட்டுட்டு கைப்புள்ளயும், சுப்பு வாத்தியாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

            "மொதல்ல அந்த ஆளுங்கள சிரிக்குறதெ நிப்பாட்டச் சொல்லுங்க. அந்தச் சிரிப்பப் பாத்தாலே உண்மெ ல்லங்றது தெரியலியா?"ன்னாம் பாலாமணி போலீஸ்காரரப் பாத்து.

            "நீஞ்ஞ சொல்றது யப்பிடித்தானய்யா இருக்குச் சிரிக்கிறாப்புல. ஏம்யா கையப் பிடிச்சி முறுக்குனீயன்னா கேட்டா ஒடனே நீஞ்ஞ கைய முறுக்குனாப்புல வெச்சிக்கிட்டு நடிப்பக் காட்டுன்னா சிரிக்காம என்னத்தெ சொல்லுங்க. இந்தப் பையேம் இருக்குற ஒடம்புக்கு எப்பிடிய்யா வயசான ஆளா பிடிமானமே இல்லாம இருக்குற அவரு கையப் பிடிச்சி முறுக்க முடியும்? பொய்யியச் சொன்னாலும் பொருந்தச் சொல்றதா ல்லியா?"ன்னாரு போலீஸ்காரரு கைப்புள்ளயக் கண்ணாலக் காட்டி.

            "முடிவா யிப்ப என்னப் பண்ணச் சொல்றீங்க?"ன்னாம் பாலாமணி நேரடியா விசயத்துக்கு வர்றாப்புல.

            "யப்போ முறுக்குனது உண்மெ! கொல மெரட்டல் கொடுத்தது உண்மெ!"ன்னாரு போலீஸ்காரரு பாலாமணியப் பாத்து.

            அந்த எடத்துல கங்காதரன் வக்கீல் பேச்சுக்கு உள்ளார வந்து, "சாதாரண வாய்ச் சண்டெதாம் சார். பெறவு அவுங்கப் போயிட்டாங்க. நாஞ்ஞளும் போயிட்டேம். அவுங்கத்தாம் என்னவோ பள்ளியோடத்து புள்ளீயோ மாதிரி இஞ்ஞ வந்து கோளு வெச்சிக்கிட்டு இருக்காங்க!"ன்னாரு நமுட்டுச் சிரிப்பெ வெச்சிக்கிட்டு.

            "யப்போ வாய்ச்சண்டெ நடந்தது உண்மெதானே? அதுக்கு நடவடிக்கெ எடுக்கலாம்லா?"ன்னாரு போலீஸ்காரரு வக்கீல் சொன்னதெ வெச்சு அவரு ரூட்லயே நடவடிக்கெ எடுக்குறாப்புல.

            "மொதல்ல கம்ப்ளெய்ண்ட் காட்டுங்க. கேஸ்ஸப் போடுங்க. நாம்ம கோர்ட்டுல பாத்துக்கிறேம்!"ன்னாரு கங்காதரன் தன்னோட மொத்த தெனாவெட்டையும் ஒத்தையா நின்னுக் காட்டுறாப்புல. போலீஸ்காரரு கைப்புள்ளயப் பாத்தாரு. அவரு அப்பத்தாம் பக்கத்துல கெடந்த மேசைக்கு மேல காகிதத்துல வெச்சு நின்னபடியே நாலு வரிய எழுதியிருந்தாரு. அவரால சட்டுன்னு யோசிச்சு இந்தப் பேச்சுக்கு மத்தியில எழுத முடியல. அவரோட கையி வேற நடுங்கிக்கிட்டெ இருந்துச்சு. நின்னுருந்த இம்மாம் நேரத்துல வக்கீலு திருநீலகண்டன் அதெ எழுதி கையெழுத்த வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவரு என்னவோ பொம்மையப் போல நின்னிருந்தாரு.

            போலீஸ்காரவுங்ககிட்டெ கம்ப்ளெய்ண்ட் இல்லன்னு தெரிஞ்சதும், கங்காதரன் வக்கீல் எகிற ஆரம்பிச்சாரு. "ன்னா சார் நெனைச்சிட்டு இருக்கீயே? போலீஸ்ன்னா ன்னா வேணும்ன்னா செய்வீங்களா? கம்ப்ளெய்ண்டய எழுதி வாங்காம கூப்ட்டு வெச்சி மெரட்டுறீயே? எதுத்தாப்புலத்தாம் எஸ்.பி. ஆபீஸ். போயி ஒரு புகார்ர வெச்சேம்னா வெச்சுக்கோங்க. ஒஞ்ஞ வேலப் போயிடும்!"ன்னாரு ஆக்ரோஷமா கங்காதரன்.

            "அவ்சரப்படாதீயே சார்! விசயத்தெ சொல்லி கம்ப்ளெய்ண்ட்ட எழுதிக்கிட்டு இருந்தாரு. அதுக்குள்ள நீஞ்ஞ வந்திட்டீயே. சித்தெப் பொறுங்க. இதோ கம்ப்ளெய்ண்ட்ட எழுதித் தந்துடுவாரு!"ன்னாரு போலீஸ்காரரு கங்காதரன் வக்கீலச் சமாளிக்கிறாப்புல.

            "யப்பாடி யப்பா! அப்பிடின்னா பேனா பேப்பர்ர எடுத்து நம்மப் பக்கமும் ஒரு கம்ப்ளெய்ண்ட்ட எழுதுங்க. அதெயும் இஞ்ஞ கொடுப்பேம்!"ன்னாரு கங்காதரன். ஒடனே ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் இன்னோவா காருக்கு ஓடி அதுல வெச்சிருந்த சூட்கேஸ்ஸ எடுத்தாந்து அதுலேந்து காயிதத்தெ எடுத்து வக்கீல் கங்காதரன்கிட்டெ கொடுத்தாம். அந்த சூட்கேஸ்ஸ கங்காதரனுக்கு இடுப்புக்கு நேரா எழுதுறாப்புல பாலாமணி பிடிச்சிக்க கங்காதரன் வேக வேகமா எழுத ஆரம்பிச்சாரு. அதெ பாத்துப்புட்டுக் கைப்புள்ள நெலமையப் புரிஞ்சிக்கிட்டுச் சட்டுன்னு விகடுவெக் கூப்புட்டு எழுதச் சொன்னாரு. அப்பவும் வக்கீல் திருநீலகண்டன் அதெப் பாத்துக்கிட்டுத்தாம் நின்னாரே தவுர ஒண்ணும் ஒதவிப் பண்ணல. எதுவும் பேசல. இப்பவும் கைப்புள்ள கையெல்லாம் நடுங்கிக்கிட்டு இருந்துச்சு. இருந்தாலும் அவரோட வாயிலேந்து வாசகம் அதுப் பாட்டுக்கு எழுதுறதுக்கேத்தாப்புல கொட்டிக்கிட்டெ இருந்துச்சு. அவரு சொன்னபடி எழுதுனதுல அவர்ர தகாத வார்த்தைகளால திட்டி, கொலை மிரட்டல விடுத்து, தாக்க முயற்சிப் பண்ணுனதா அந்தப் புகாரோட சாரம்சம் அமைஞ்சிருந்துச்சு. அதெ கைப்புள்ள கொண்டுப் போயிக் கொடுத்ததும் போலீஸ்காரரு அதெ சட்டுன்னு வாங்கி, கம்ப்யூட்டர்லப் போயி டக்கு டக்குன்ன டைப் பண்ண ஆரம்பிச்சாரு.

            பாதி எழுதிக்கிட்டு இருந்த கங்காதரன் ஓடியாந்து, "எஞ்ஞ கம்ப்ளெய்ண்டயும் வாங்கிட்டு எதுவா இருந்தாலும் பதிவப் பண்ணுங்க!"ன்னாரு வெடுக்குன்னு கொட்டுற தேளப் போல.

            "இவுங்கத்தாம் பர்ஸ்ட் கம்ப்ளெய்ண்ட் பண்ணிருக்காங்க. அதுக்காக வேணும்ன்னுத்தேம் நீஞ்ஞ கம்ப்ளெய்ண்ட் பண்ண நெனைக்குறீயே. அதெ ஏத்துக்க முடியாது!"ன்னாரு போலீஸ்காரரு அறுத்துக் கட்டிப் பேசுறாப்புல.

            "யிப்ப என்ன பண்ணப் போறீங்க?"ன்னாரு கங்காதரன் முடிவா கேக்குறாப்புல.

            "ஒரு சிஐஆர் போடப் போறேம்!"ன்னாரு போலீஸ்காரரு பண்ணப் போறதெ சொல்றாப்புல.

            "சிஐஆர்தானே போட்டுக்குங்க. பாத்துக்கிறேம்! அதோட காப்பி ஒண்ணு எஞ்ஞளுக்கு வேணும்!"ன்னு கங்காதரன் சொல்லிட்டு சூட்கேஸ் மேல பாதி எழுதி வெச்சிருந்த காயிதத்தெ கசக்கித் தூக்கி எறிஞ்சாரு.

            அதெப் பாத்துட்டு இருந்த போலீஸ்காரரு, "கண்ட எடத்துலயும் குப்பையப் போடாதீயே. அதெ ‍பொறுக்கிப் பக்கத்துல இருக்குற குப்பைத் தொட்டியிலப் போடுங்க. ஸ்டேசன்ல எதுக்குக் குப்பைத் தொட்டிய வெச்சிருக்கேம் இப்பிடிக் குப்பையப் போடவா?"ன்னாரு கோவத்தோட.

            "சார்! பாத்து மருவாதியப் பேசுங்க. நாம்ம ஒரு வக்கீல்!"ன்னாரு கங்காதரன் மொகத்த உள்ளுக்குள்ள இழுத்துக்கிட்டுப் பேசுறாப்புல.

            "நீயி யார்ரா யிருந்தா என்னா? இத்து போலீஸ் ஸ்டேசன். இஞ்ஞ நாஞ்ஞத்தாம் பெரிய ஆளு. வேணும்ன்னா ஒன்னோட கோர்ட்டுல நீயி பெரிய ஆளா இருந்துக்கோ. ஒம் இஷ்டத்துக்குக் காயிதத்தெ கசக்கித் தூக்கி எறிஞ்சிப்புட்டு வக்கீலுங்றயே? வக்கீலுன்னா யிப்படி பண்ணலாம்ன்னு ஒஞ் சட்டப் புத்தகத்துல எழுதிருக்கா? எழுதிருந்தா கொண்டா பாப்பேம்?"ன்னாரு போலீஸ்காரரு. அதுக்குள்ள அவரு சிஐஆர்ரப் போட்டு அதுல கைப்புள்ளைகிட்டெ கையெழுத்து வாங்கிக்கிட்டு அவருக்கு ஒரு காப்பியும், கங்காதரன்கிட்டெ ஒரு காப்பியும் கொடுத்தாரு. அதெ வாங்குன கங்காதரன், "இத்து ஒண்ணு போதும். இதெ வெச்சி யிப்பவோ எஸ்.பி. ஆபீஸ்ல புகார்ரக் கொடுக்குறேம் பாரு. எட்றா வண்டியெ. இன்னிக்கு யாருன்னு பாத்தாத்தாம் சரிபட்டு வரும். இப்பிடியே வுட்டா நாளைக்கு நாம்ம இஞ்ஞ வர்றதா ன்னா?"ன்னாரு சபதம் எடுக்குறாப்புல.

            போலீஸ்காரரு ஒடனே கொரலக் கொடுத்து, "உள்ளார யாரு? இஞ்ஞ கொஞ்சம் வாப்பா! போயி அந்த இன்னோவா கார்ர ஓரங் கட்டு. ஸ்டேசன் மின்னாடி பாதைய அடைச்சிக்கிட்டு தப்பா நிப்பாட்டிக்கிறதாவும், ஸ்டேசன்ல இருக்குற காவலர்கள பணி செய்ய விடாம இன்னோவார கார்ல வந்து மெரட்டுறதாவும் ஒரு கம்ப்ளெய்ண்டப் போடு. அப்பத்தாம் அடங்குவானுவோ. பிடிச்சி உள்ளாரப் போட்டு இன்னோவாவ போயிக் கோர்ட்டுல எடுத்துக்கன்னு வுட்டாத்தாம் சரிபட்டு வருவானுவோ!"ன்னு போலீஸ்காரரு சொன்னதும் கங்காதரன் பேச்சு கொஞ்சம் அடங்குனுச்சு. சட்டுன்னு அவரோட கொரலே மாறுனுச்சு. "ன்னா சார்! யிப்பிடி பட்டுன்னு அவசரப்பட்டா? நீஞ்ஞளும் கோவப்பட்டீயே? நாஞ்ஞளும் கொஞ்சம் கோவப்பட்டேம்! அவ்வளவுதாம். அதுக்குப் போயி?"ன்னாரு கங்காதரன் வளைஞ்சு நெளிஞ்சு சுருள்றாப்புல.

            "நீயி யாருய்யா எம் மாமம் மச்சானா? எம் மேல நீயி கோவப்படவும், ஒம் மேல நாம்ம கோவப்படவும்? கம்ப்ளெய்ண்ட் ஆவுதுய்யான்னா, அதுக்குத் தகுந்தாப்புல நயந்தாப்புல பேசி முடிச்சிக்கிட்டுச் சமாதானமா இனுமே பண்ண மாட்டேன்னு போவீயோ? அதெ வுட்டுப்புட்டு கம்ப்ளெய்ண்ட் ஆயிருக்கா? மண்ணாங்கட்டியான்னு கேட்டு யிப்போ சிஐஆர் வரைக்கும் போட வெச்சிருக்கே. ச்சும்மா மெரட்டிக் கொஞ்சம் எச்சரிச்சு அனுப்புலாம்ன்னு பாத்தா எகுறுறீயே? எப்.ஐ.ஆர்ரப் போட்டுடுவேம் பாத்துக்கோ. போட்டேன்னா இன்னோவா ஸ்டேசனுக்கு எதுத்தாப்புலயே கெடந்து மழையிலயும் வெயில்லயும் துரு பிடிச்சி பழைய இரும்புக்குக் கூட போவ முடியாத அளவுக்கு ஆயிடும் பாத்துக்கோ!"ன்னாரு போலீஸ்காரரு அடிவயித்துல அமிலத்தைக் கரைக்குறாப்புல.

            "சாரி சார்! கொஞ்சம் பேச்சு முத்திப் போனது உண்மெதாம். இனுமே யப்படி நடக்காது!"ன்னாரு கங்காதரன் ரொம்ப தளும்புன கொரல்ல.

            "நீயி சட்டம் தெரிஞ்ச ஆளா இருக்கலாம். அதுக்கா பண்ண தப்பைல்லாம் பண்ணலன்னு சட்டத்தெ வெச்சி மறைச்சிப்புடலாம்ன்னு நெனைச்சிக்காதே. நீயி என்னத்தெ சட்டத்தெ படிச்சிப்பிட்டு நின்னாலும் கோர்ட்டுல நாஞ்ஞ தாக்கல் பண்ணுற எப்ஐஆர்ர வெச்சித்தாம் கேஸ்ஸ நடத்தியாவணும். ஒங் கேஸூக்கு ஆன்னா ஆவன்னாவே இஞ்ஞத்தாம் எழுதுவேம் தெரிஞ்சிக்கோ!"ன்னாரு போலீஸ்காரரு கங்காதரனோட தலையில செரியா குட்டி வுடுறாப்புல.

            "தப்பா நெனைச்சிக்க வாணாம். கோவப்படா வாணாம் சார்!"ன்னாரு கங்காதரன் இப்போ நயப்பாடா பேசுற தொனியில. அவரோட பேச்சுல இருந்த வக்கீல் தொரணையெல்லாம் போன எடம் தெரியல.

            "எதுக்கு நீஞ்ஞ திருவாரூரு லிமிட்ல வர்றீயே?"ன்னாரு போலீஸ்காரரு கங்காதரனக் கேள்வியால தொளைச்சுக் கட்டுறாப்புல.

            "கேஸ்ல ஆஜராவத்தாம்!"ன்னாரு வக்கீல் கங்காதரன் முதுகெ கொஞ்சம் முன்னாடி வளைச்சிக்கிட்டு.

            "அதுக்கு எதுக்கு இத்தனெ பேரு? இத்தனெ பேரு மேலயும் கேஸ் இருக்கா?"ன்னாரு போலீஸ்காரரு கங்காதரனெ கழுவி ஊத்துறாப்புல.

            "டாக்டர்ரு பாலாமணி பேர்ல மட்டுந்தாம்!"ன்னாரு கங்காதரன் முப்பது டிகிரி கோணத்துல சாஞ்சாப்புல.

            "இனுமே அவரும் நீஞ்ஞளுந்தாம் வாரணும். கோர்ட்டுக்கு வந்தோமோ போனோமான்னு சொவடு தெரியாமப் போயிகிட்டெ இருக்கணும். மறுக்கா எதாச்சும் இந்த மாதிரி பெரச்சனெ ஆயிடுச்சுன்னா இந்த சிஐஆர் அப்பிடியே எப்ஐஆர்ரா மாத்திக் கோர்ட்டுக்கு அனுப்பிச்சிடுவேம் பாத்துக்க. நீயி இஞ்ஞ பேசுனது நடந்துகிட்டது எல்லாம் இஞ்ஞ சிசிடிவி கேமராவுல பதிவாயிருக்கு. மின்னாடி இன்னோவா கார்ர விருட்டுன்னு கொண்டாந்து நிப்பாட்டி பாஞ்சு வந்தது வரைக்கும். அதொட புட்டேஜ்ஜ சேவ் பண்ணி வைக்கச் சொல்றேம். அந்த ஆதாரத்தோட வெச்சே எப்ஐஆர்ரப் போடுவேம் பாத்துக்கோ! வக்கீல்ன்னா வக்கீல் மாதிரி நடந்துக்கய்யா! கிளைண்ட்டுகிட்ட கூட வர்றவங்கிட்ட எப்பிடி நடந்துக்கணும்ன்னு எடுத்துச் சொல்லிக் கொடுய்யா. நீயே அவுங்கள கொலயப் பண்ணிட்டு வா, காப்பாத்துவேன்னு சொல்லுவே போலருக்கே. அதாங் பயலுவோ அப்பிடித் தாவுறானுவோ, தவ்வுறானுவோ! கெளம்புங்கய்யா மொதல்ல இஞ்ஞயிருந்து!"ன்னு போலீஸ்காரரு கடுப்படிக்கிறாப்புல சொன்னதும் ஒண்ணும் சொல்ல முடியாம இன்னோவா கார்ல ஏறி கெளம்புனாங்க பாலாமணி, ராசாமணி தாத்தா, ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன், கங்காதரன், இன்னோவா காரோட டிரைவரு எல்லாரும் மொகத்தத் தொங்கப் போட்டுகிட்டு.

            இன்னோவா கார்ல்ல ஏறுன அவுங்க ஒரு ரிவர்ஸ் அடிச்சி அங்கேயிருந்து இடது பக்கமோ வலது பக்கமோ இருக்குற ரோட்டுல கெளம்பாம டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு எதுத்தாப்புல இருந்த எஸ்.பி ஆபீஸ்ஸ நோக்கி இன்னோவால போனாங்க. அதெ பாத்துப்புட்டு கைப்புள்ள சொன்னாரு, "பாருங்க! நீஞ்ஞ அவ்வளவு சொல்லியும் எஞ்ஞப் போறானுவோ?"ன்னு.

            "போவட்டும். அப்பத்தாம் இத்து சீரியஸாவும். இன்னோவாவப் பிடிச்சிப் பிடுங்கிப் போடலாம்!"ன்னாரு போலீஸ்காரரு. அவரு சொல்லி முடிக்கல உள்ளாரப் போன இன்னோவா காரு ஒடனே பட்டுன்னு திரும்பி வெளியில வந்துச்சு.

            அதெப் பாத்துட்டு போலீஸ்காரரு சொன்னாரு, "நம்மள நோட்டம் பாக்குறானுவோ, நாம்ம சட்டுன்னு வெளியில ஓடியாந்து பாக்குறோமா என்னான்னு? அப்பிடிப் பாத்தா எஸ்.பி. ஆபீஸ்குள்ள நொழைவானுவோ! யாரும் வெளியில போயிப் பாக்கலன்னதும் திரும்புறானுவோ. இதுக்குன்னே ஒரு பயெ பின்னாடியே பாத்துட்டு உள்ளார உக்காந்திருப்பாம். இவனெ போல எத்தனெ கேஸ்களப் பாத்துக்கிட்டு இருக்கேம். அடுத்த மொறை இந்தப் பயலுவோ பெரச்சனெ பண்ணா ஒடனே வாஞ்ஞ. இந்தக் கம்ப்ளெய்ண்ட்ட அப்பிடியே அடியில அந்த இன்னோவா காரோட நம்பரையும் சேத்து எழுதுங்க!"ன்னாரு போலீஸ்காரரு. கைப்புள்ள நம்பர்ர சொல்ல விகடு, கம்ப்ளெய்ண்டுக்குக் கீழே இன்னோவாவோட நம்பர்ர எழுதுனாம். கைப்புள்ள ரொம்ப உஷாரா இன்னோவா காரோட நம்பரையெல்லாம் பாத்து வெச்சிருந்தது ஆச்சரியமா இருந்துச்சு. காரியத்துல எறங்குறதுன்னா எவ்ளோ வெவரமா இருக்கணுங்றதுக்கு கைப்புள்ள சரியான ஆளுதாம்.

*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...