29 Dec 2020

நானும் குறுக்கு விசாரணை பண்ணணும்!

நானும் குறுக்கு விசாரணை பண்ணணும்!

செய்யு - 670

            சுப்பு வாத்தியாரு அன்னிக்கு ராத்திரி சொன்னது சரிதாங்ற மாதிரிக்கி திங்கக் கெழமெ நடந்த வெசாரணையினப்போ வக்கீல் கங்காதரன் பாலாமணி சார்பா ஆஜரானாரு. பாலாமணிக்கும் கங்காதரனுக்கும் இடையில பெரச்சனெ உண்டாயிருந்தாலும் அது இடைபட்ட ரண்டு நாள்ல தீந்திருக்கணும் அல்லது லாலு மாமா எடையில பூந்து சமரசம் பண்ணி விட்டுருக்கணும். அதுல ஏதோ நடந்திருக்கணும். அதெப் பத்தி மேக்கொண்டு நெனைக்க முடியாதப்படி பதினொரு மணிக்கெல்லாம் குறுக்கு விசாரணை ஆரம்பமாயிருந்துச்சு.

            போன மொறையே ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் துடுக்கா பேசி டென்ஷன் பண்ணுறதெப் பாத்த கைப்புள்ள இவுகளெ தனியா போவ வுட்டுத் தவிக்க வுடாம இனுமே ஒவ்வொரு தவாவும் கோர்ட்டுக்கு வந்து ஒத்தாசையா இருந்து எதாச்சும் பேசி வுடணுங்ற முடிவோடயே வந்திருந்தாரு. இந்த மொறையும் ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் கோர்ட்டு வராண்டாவுக்குள்ள நொழைஞ்சதுமே அங்க நின்னுகிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு தரப்பப் பாத்து சும்மா இல்லாம, "இதுவரைக்கும் நடந்ததல்லாம் டிரய்லரு. மெயின் பிக்சர்ரே இன்னிக்குத்தாம் காட்டப் போறேம்! இனுமேத்தாம் டப்பா டான்ஸ் ஆடப் போவுது. டவுசரு கிழியப் போவுது!"ன்னாம். கைப்புள்ள சும்மா இல்ல, "இதேதாம்டா அடுத்த குறுக்கு விசாரணையில ஒம்மட டாக்கடருக்கு டப்பா டான்ஸ் ஆடும், டவுசரு கிழியும். எஞ்ஞளுக்கு இன்னோட முடியப் போவுது. அடுத்ததா ஒஞ்ஞளுக்குத்தாம்டா அஷ்டம சனியே அஷ்ட கோணலா ஆரம்பமாவப் போவுது!"ன்னாரு. அதெ கேட்டுட்டு மேக்கொண்டு பேச வந்தவனெ என்ன நெனைச்சாரோ கங்காதரன் வக்கீல் கையப் பிடிச்சி இழுத்துட்டுப் போயிட்டாரு. இல்லன்னா இன்னும் கொஞ்சம் அவ்வேம் பேசிருப்பாம்.

            மூணு மாசமா இந்த ஜீவனாம்ச வழக்கு எப்பிடித் தேங்கிக் கெடந்துச்சோ அதுக்கு நேர்மாறா மொத்தத்துக்கும் சேத்து இப்போ வேகம் எடுக்க ஆரம்ப்பிச்சிருந்துச்சு. கோர்ட்டு ஆரம்பிச்சதும் வாய்தா தேதிக கொடுத்து முடிச்சு பத்தரைக்கெல்லாம் கங்காதரன் செய்யுவ கூண்டுல ஏத்தி விசாரிக்க ஆரம்பிச்சிருந்தாரு.

            "உங்களுக்கு வேலங்குடியில இருக்குற இன்னொரு மாமன் மகன் தாசு என்பவரோட நிச்சயம் ஆயி, கலியாணம் ஆயி சில காலம் வாழ்ந்து பின்பு பிரிஞ்சு வந்து என்னோட கட்சிக்காரர் பாலாமணியோட வாழ்ந்தது உண்மையா இல்லீங்களா?"ன்னாரு கங்காதரன் ஆரம்பத்துலயே டென்ஷனெ கௌப்பி வுடுறாப்புல. போன குறுக்கு வெசாரணையிலயே கங்காதரன் வக்கீலு செய்யுவோட மனப்பாட்டை நல்லாவே நாடி பிடிச்சிருந்ததால எங்க அடிச்சு ஆரம்பிக்கணுமோ அங்க அடிச்சே ஆரம்பிச்சாரு.

            "இல்ல!"ன்னு ஒத்த வார்த்தையில பதிலச் சொன்னா செய்யு. போன மொறெ பட்ட அனுபவத்துல உணர்ச்சிவசப்படாத நெதானமான மனநெலைக்கு வந்திருந்தா செய்யு. இப்படி ஒத்த வார்த்தையில பதிலு வாரும்ன்னு கங்காதரன் வக்கீலு எதிர்பாக்கல. குட்டையக் கொழப்பணுமேன்னு அவரு கிண்டிக் கலக்கி வுடுற வேலையில எறங்க ஆரம்பிச்சாரு.

            "கோர்ட்ல பொய்யெல்லாம் சொல்லக் கூடாதுன்னு சத்தியப் பிரமாணம் எடுத்துட்டு வாயில வந்த பொய்ய எல்லாம் சொல்லக் கூடாது! ஒஞ்ஞ ரண்டு பேத்துக்கும் கலியாணம் ஆயிருக்கு. சில காலம் ஒண்ணா வாழ்ந்திருக்கீங்க. பின்பு பிரிஞ்சி வந்திருக்கீங்க"ன்னு கங்காதரன் சொல்லிட்டு இருக்குறப்பவே செய்யு அவ்வே பாட்டுக்கு, "ஒஞ்ஞளுக்கு இருக்குற எஞ்ஞ மாமன் மவனோட எல்லாம் கலியாணத்தெ பண்ணி வைக்குறதுதாம் வேலயா? ஒரு கலியாணத்தெயே பண்ணிட்டு இஞ்ஞ கோர்ட்டுல வந்து சிரிப்பா சிரிச்சிக்கிட்டு நிக்குறது ஒஞ்ஞ கண்ணுக்குத் தெரியலயா?"ன்னா நெதானமான மனநெலைய லேசா தவற வுட்டாப்புல.

            "கேள்வியக் கேக்கறதுக்கு மின்னாடி அவசரப்பட்டு குறுக்கப் பூரக் கூடாது. நல்ல கேள்விய வாங்கிக்கிடணும். பிறகு பதிலச் சொல்லணும்!"ன்னாரு ஜட்ஜ் குறுக்கு வெசாரணையில எப்படி நடந்துக்கணுங்றதெ சொல்றாப்புல.

            "இவரு கேக்குற சங்கதி பெட்டிஷன்ல எதுலயும் யில்ல!"ன்னா செய்யு தாம் குறுக்க பூந்ததற்கான ஞாயத்தெ வைக்குறாப்புல.

            "அடிஷனல் பெட்டிஷன்ல இருக்கே. அதெ நீங்கப் படிக்கலையா?"ன்னாரு கங்காதரன் செய்யுவோட அறியாத்தனத்தெ சுட்டிக் காட்டுறாப்புல. அப்பத்தாம் செய்யுவுக்கு திருநீலகண்டன் வக்கீல் அடிஷன் பெட்டிஷனோட காப்பியத் தர்றததையும் அதெப் பத்தி அதுல உள்ள சங்கதியப் பத்திச் சொல்லததும் ஞாபவத்துக்கு வந்துச்சு. அன்னிக்கு ராத்திரிப் போனப் போட்டு உருப்படாத விசயத்தெ சொன்னதுக்கு இதெப் பத்திச் சொல்லிருந்தா இன்னிக்கு குறுக்கு விசாரணையையாவது சமாளிச்சிருக்கலாம்ன்னு நெனைச்சா. அவ்வே அப்படி நெனைச்சுக்கிட்டு இருக்குறப்பவே கங்காதரன் தொடர்ந்தாரு, "உறவினர்கள் மட்டும் அறிந்து நடந்த கலியாணம்ங்றதாலயும், அதெ நீஞ்ஞ பதிவு பண்ணாததாலயும் அதெ நீஞ்ஞ உட்பட யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சிப்புட்டீங்க. ஆன்னா உண்மெங்றது பல நாளு கழிச்சாவது வெளியில வந்துத்தாம் தீரும். ஒரு மாமன் மவ்வேம் போனா என்னான்னுத்தாம் நீஞ்ஞ கோவில்பெருமாள்ல இருக்குற இன்னொரு மாமன் மவ்வேனப் பிடிச்சிருக்கீங்க. அதுக்குள்ள ஏமாந்த சோனகிரியா வந்து என்னோட கட்சிக்காரர் உங்களோட கலியாண வலையில விழுந்துட்டாரு!"ன்னு கங்காதரன் பேச, ஜட்ஜ் குறுக்கிட்டு, "தயவு பண்ணி கதெயல்லாம் அளக்காதீங்க. இது என்னா சினிமாவுல காட்டுற கோர்ட்டுன்னு நெனைச்சிக்கிட்டீங்களா? கேள்வி என்னவோ அதெ கேளுங்க? அப்பிடியில்லன்னா குறுக்கு விசாரணைய இத்தோட நிறுத்துறாப்புல ஆயிடும்!"ன்னு ஜட்ஜ் மொறைப்பு காட்டுனாப்புல கண்டிப்பு காட்டுனதும், அது வரைக்கும் கங்காதரனுக்கு இருந்த துணிச்சலெல்லாம் போன எடம் தெரியாம டக்குன்னு கையி காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. அவருக்கு அடுத்ததா கேக்க வேண்டிய கேள்விக மறந்துப் போயிருக்கும் போல. கையில வெச்சிருந்த பேப்பர்களப் பாத்து சில நிமிஷங்க அப்பிடியே தடுமாறிட்டு நின்னாரு.

            உள்ளார நின்னிருந்த பாலாமணி சட்டுன்னு வெளியில நின்ன ராசாமணி தாத்தாவோட அண்ணன் மவ்வேன் கையில இருந்த பைய்ய வாங்கி அதுலேந்து கொஞ்சம் காயிதத் கத்தைய எடுத்து கங்காதரனுக்கு மின்னாடி வந்து, "இதெ கேளுங்க!"ன்னு எடுத்துக் கொடுத்தாம் பாருங்க, ஜட்ஜூக்குக் கோவம் வந்துடுச்சு மின்னல் அடிச்சாப்புல.

            "ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்! இதென்னா கோர்ட்டா என்னான்னு நெனைச்சிக்கிட்டு இருக்கே? ஆர் யூ எ டாக்டர்? நீ பாட்டுக்கு வெளியிலருந்து பைய வாங்கி அதுலேந்து பேப்பர்ர எடுத்து அட்வகேட்டுக்கிட்டு கொடுக்குறே. அதெ வாங்கி மொதல்ல வெளியில போடுங்க மொதல்ல!"ன்னாரு ஜட்ஜ். டவாலி ஓடியாந்து அந்தக் காயிதத்தெ வாங்கி வெளியில வீசி எறிஞ்சாரு. அடுத்ததா ஜட்ஜ் பாலாமணியப் பாத்து, "ஓரமா நில்லு! கையக் கட்டு! அந்தாண்ட இந்தாண்ட அசைஞ்சே! நடக்குறதே வேற!"ன்னாரு. கங்காதரனப் பாத்து, "இப்பிடித்தாம் கிளையண்ட்ட தயாரு பண்ணி கோர்ட்டுக்குக் கொண்டு வாரதா? கோர்ட்டுல எப்பிடி நடந்துக்கணும்ன்னு சொல்றது இல்லையா?"ன்னாரு கண்ணு ரண்டும் செவந்துப் போறாப்புல. வந்த நாள்லேந்து அந்த ஜட்ஜ் உச்சமா கோவம் காட்டுனது அன்னிக்காத்தாம் இருக்கும். கோர்ட்டு முழுமைக்கும் மயான அமைதியில இருக்குறாப்புல ஒரு சின்ன சத்தம் கூட கேக்காம சவுண்ட்டு புரூப் பண்ணுன அறையப் போல இருந்துச்சு அந்த நேரத்துல.

            "இல்லீங்கய்யா..."ன்னு கங்காதரன் இழுத்ததும், "இந்த இல்லீங்கய்யா, நொள்ளீங்கய்யால்லாம் இனுமே இருக்கக் கூடாது. கோர்ட்டுக்கு உரிய கண்ணியத்தோட இங்க குறுக்கு விசாரணை நடக்கணும். அநாவசியமா கோர்ட்டோட டயத்தெ வீணடிச்சிட்டு இருந்தா கன்டெம்ட் ஆப் த கோர்ட்டு ஆயிடும் ஜாக்கிரதெ!"ன்னாரு ஜட்ஜ். கங்காதரனுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போயிடுச்சு. அவரு கையில வழிஞ்ச வேர்வையில காயிதமெல்லாம் நனைய ஆரம்பிச்சது. அவரு ரொம்ப தடுமாற ஆரம்பிச்சாரு. கையில வெச்சிருந்த காயிதத்தெ மாத்தி மாத்திப் பாக்க ஆரம்பிச்சாரு. அப்புறமா கொஞ்சம் நெதானிச்சாப்புல, "ஒங்களுக்கு பலபேர்ர கலியாணம் பண்ணி ஏமாத்துற பழக்கம் இருக்கா?"ன்னாரு.

            "என்னத்ததாம் ஒருத்தரு கலியாணம் பண்ணி ஏமாத்திருக்காரு. நாம்ம யாரையும் ஏமாத்தல!"ன்னா செய்யு. அவ்வே பதிலச் சொன்னதுக்கு அப்புறமா, "இதெல்லாம் என்னா கேள்வி கருமத்தெ!"ன்னு ஜட்ஜ் தலையில அடிச்சிக்கிறாப்புல கையக் கொண்டு போனாரு. கங்காதரனோட நடுக்கம் இன்னும் அதிகமாயிடுச்சு. அடுத்ததா என்னத்தெ கேக்குறதுங்றதுல தடுமாற ஆரம்பிச்சாரு. ஒரு வழியா கொஞ்சம் நெதானிச்சவரு அடுத்தக் கேள்விக்குத் தாவுனாரு. மின்ன மாதிரி நீட்டி மொழங்காம சட்டுன்னு கேள்விக்கு வந்தாரு.

            "ஒங்களோட எம்பில் படிப்பு முடிஞ்சதா?"ன்னாரு கங்காதரன். அவரு கேட்குறதுல ஒரு கொழறல் இருந்துச்சு.

            "முடிஞ்சிடும்!"ன்னா செய்யு மொல்லமா.

            "முடிஞ்சிதா? முடியலயா?"ன்னாரு கங்காதரன் கண்டிப்புக் காட்டிக் கேக்குறாப்புல. தடுமாறுறாப்புல இருந்தவருக்குச் சட்டுன்னு வக்கீலோட தொரணெ வந்துச் சேந்ததப் பாக்க ஆச்சரியமாத்தாம் இருந்துச்சு.

            "நீஞ்ஞ இப்பிடி கோர்ட்டுல போட்டு படுத்துற பாட்டால இன்னும் நம்மாள முடிக்க முடியலங்கய்யா! போதுமா? புராஜக்ட் சமிட் பண்ணா முடிஞ்சடும்! கோர்ட்டுக்கு அலைஞ்சிகிட்டு இருக்குறதால அங்க இங்க அலைஞ்சி அதெ முடிக்க முடியல!"ன்னா செய்யு தன்னோட கடுப்பெ காட்டுறாப்புல.

            "பதிலச் சுருக்கமா சொல்லுங்க. நீங்க சொல்றதெ இங்க டைப் பண்ணணும் இல்லையா?"ன்னாரு ஜட்ஜ் செய்யுவப் பாத்து. அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல நெதானம் தப்பி உணர்ச்சி வேகத்துல பதிலச் சொல்றதெ உணர்ந்தவளா, "பிராஜக்ட் சப்மிஷன் மட்டுந்தாம் பாக்கியிருக்கு!"ன்னா செய்யு.

            "அதாச்சி எம்பில்ல முடிக்கிற தறுவாயில இருக்குற நீஞ்ஞ கூடிய சீக்கிரமே வேலைக்குச் செல்லும் நிலையில இருக்கும் போது ஒஞ்ஞளுக்கு ஏன் ஜீவனாம்சம் கொடுக்கணும்ன்னு எதிர்பாக்குறீங்க?"ன்னாரு கங்காதரன்.

            அதுக்கு எந்தப் பதிலையும் சொல்லாம ‍அமைதியா நின்னா செய்யு.

            "பதிலச் சொன்னீயள்ன்னா அடுத்தக் கேள்விக்குப் போவலாம்!"ன்னாரு கங்காதரன் நக்கலா.

            "இதுக்கும் சுருக்கமா பதிலச் சொல்லணுமாங்காய்யா?"ன்னா செய்யு ஜட்ஜப் பாத்து.

            "மொதல்ல சொல்லும்மா! பெறவு சுருக்கிக்கலாம்!"ன்னாரு ஜட்ஜ்.

            "இந்தக் கோர்ட்டுக்கு வர்ற ஒவ்வொரு நாளும் நாம்ம சாப்புடமாத்தாம் வர்றேம். இஞ்ஞ வந்து பதினோரு மணி ஆன்னா பசி தாங்க மாட்டேங்குது. சமயத்துல மயக்கம் வந்துடுறாப்புலயம் இருக்கு. ஒரு டீ! ஒரே ஒரு டீ! குடிக்கலாம்ன்னா எங் கையில பைசா காசியில்ல. ஒரு டீத்தண்ணியக் குடிக்கணும்ன்னாலும் அதுக்கான காசிய எஞ்ஞ யப்பாகிட்டயோ, எஞ்ஞ யண்ணங்கிட்டயோ கேட்டு வாங்கித்தாம் குடிக்க வேண்டியதா இருக்கு. நமக்கு வெக்கமா இருக்குங்கய்யா. அவுங்களா வாங்கிக் கொடுத்தா கொடுக்கட்டும்ன்னு அப்பிடியே நின்னுடுறேம். நாமளா கேக்க கூச்சமா இருக்கு. எங் கையில ஒரு பத்து ரூவா யிருந்தா நாம்ம அவுங்கள எதிர்பாக்க வேண்டியதில்லப் பாருங்க! இப்படித்தாம் பல நேரங்கள்ல வெளியில வர்றப்போ பஸ்ஸூக்குக் காசு, பசின்னா ஒரு டீத்தண்ணிய வாங்கிக் கொடுக்க காசின்னு யாருகிட்டெயோ கைய நீட்டி எதிர்பாத்துட்டு வாங்கிட்டுப் போற நெலையில இருக்கேம். இப்பிடி கைநீட்டி வாழ்ந்துகிட்டு இருக்குற வாழ்க்கைக்கு ஜீவனாம்சம் ஏன்னு கேட்டா அதுக்கு நாம்ம என்னத்தெப் பதிலச் சொல்றது? அந்தப் பதில எப்பிடிச் சுருக்கமா சொல்றதுன்னும் தெரியலீங்களேய்யா!"ன்னு சொல்லிட்டு செய்யு தன்னையும் அறியாம அழுவ ஆரம்பிச்சிட்டா. கண்ணுத் தண்ணி அவ்வே கன்னம் முழுக்க நனைக்க ஆரம்பிச்சிடுச்சு. சட்டுன்னு அதெ புரிஞ்சிகிட்டதெப் போல அதெ தொடைக்குறதுக்குள்ள, "கோர்ட்டுல அழுகாச்சி வெச்சி நடிச்சி யாரையும் ஏமாத்த வாணாம்!"ன்னாரு கங்காதரன் மொகத்தெ சுளிச்சாப்புல.

            "நாம்மத்தாம் ஏமாந்துப் போயி நிக்குறேம். நாம்ம யாரையும் ஏமாத்துல. கையில பைசா காசி யில்லாம எல்லாத்துக்கும் மித்தவங்கள எதிர்பாத்துட்டு நின்னு இருந்துப் பாருங்க. யப்போ தெரியும் அதோட வலியும் வேதனையும்!"ன்னா செய்யு ஒடைஞ்சுப் போன கொரல்ல கங்காதரனப் பாத்து.

            “உணர்ச்சிவசப்படாம நெதானமா பதிலச் சொல்லணும்!”ன்னாரு ஜட்ஜ். அவரு மொகத்தப் பாக்குறப்ப அவருக்கும் மனச்சங்கடமாத்தாம் இருந்திருக்கும் போல, சொல்லி முடிச்சதும் கண்ணாடிய கழட்டித் திரும்ப மாட்டிக்கிட்டாரு.

            "நீஞ்ஞ சொல்றது விசித்திரமால்லா இருக்கு. ஒஞ்ஞ யப்பாவுக்கு ஓகையூர்லயும், திட்டையிலயும் பல ஏக்கர் கணக்குல நிலபுலங்கள் இருக்கிறது. ஒஞ்ஞ யண்ணன் ஒரு அரசாங்க வாத்தியாரு. கை நெறைய சம்பளம் வாங்குறவரு. நெலமெ அப்பிடி இருக்குறப்ப நீஞ்ஞ பஞ்சப்பாட்டு பாடுறது விசித்திரமா இருக்கு!"ன்னாரு கங்காதரன் செய்யுவ மடக்கி வீசுற அனுதாப அலைய அடிச்சித் தொரத்துறாப்புல.

            "அதாங் நீஞ்ஞளே சொல்லிட்டீங்களே. எல்லாம் அவுங்ககிட்டத்தாம் இருக்கு. எஞ்ஞகிட்டயா இருக்கு? அவுங்ககிட்டெ யிருந்தா அவுங்க வெச்சிப்பாங்களா? எங்கிட்டெ கொடுப்பாங்களா? அவுங்கவுங்க சம்பாதிச்சி இந்தக் காலத்துல அவுங்கவுங்க குடும்பத்தத்தாம் பாக்க வேண்டிக் கெடக்கு. நாட்டுல வெலவாசி அப்பிடித்தானே இருக்கு!"ன்னா செய்யு தன்னோட நெலைப்பாட்டைச் சரியா எடுத்துச் சொல்றாப்புல.

            "ஏம் ஒஞ்ஞ யப்பா, ஒஞ்ஞ யண்ணன் கொடுக்கறதுக்கு ன்னா?"ன்னாரு கங்காதரன் ஒரு புடி பிடிக்குறாப்புல.

            "தாலியக் கட்டுன புருஷனே ஜீவனாம்சத்தெ கொடுக்குறதுக்கு கோர்ட்டுல வெச்சி இம்மாம் கேள்விகள கேட்டு கொடுக்க வுடாம அடிக்கிறப்போ, எஞ்ஞ யப்பாவும் எஞ்ஞ யண்ணனும் நமக்குச் செய்யணும்ன்னு ன்னா சட்டமா எழுதிருக்கு? சட்டப்படி வர்ற வேண்டியதெய யப்பிடி வர்ற வுடாம அடிக்கத்தானே நீஞ்ஞ யிப்பிடி பேசுதீயே?"ன்னா செய்யு அப்பாவித்தனமா பேசுறாப்புல. அதெ கேட்டுட்டு கோர்ட்டுல இருந்த வக்கீலுங்க, டாவலி, கிளார்க் உட்பட எல்லாரும் சிரிச்சிட்டாங்க. ஜட்ஜ் அதுக்கு வெளிப்படையா சிரிக்காட்டியும் உள்ளுக்குள்ள சிரிச்சிகிட்டதெ அவரோட மொகம் காட்டுனுச்சு. அவரு முகம் திடீர்ன்னு கொஞ்சம் கடுப்பானாப்புல கங்காதரனப் பாத்து, "யோவ் கிராஸ்ஸ ஒழுங்கா கொண்டுப் போயி சட்டுன்னு முடி! அடுத்தடுத்த வழக்குக இருக்கு. எப்பப் பார்த்தாலும் உன்னோட பெரிய ரப்சர்ரா இருக்கு? குறுக்கு வெசாரணை பண்ணுன்னா சிவாஜி படத்துக்குக் கதெ வசனம் எழுதுறாப்புல சோடனெ பண்ணிட்டு இருக்கே!"ன்னாரு. மறுக்கா கங்காதரனுக்கு ஒடம்பெல்லாம் ஆட்டம் காண ஆரம்பிச்சிடுச்சு.

            அந்த தடுமாற்றத்தெ காட்டிக்காதபடி கொரலெல்லாம் கொழறுனாப்புல, "ஒஞ்ஞ யண்ணன், ஒஞ்ஞ யப்பா உதவியில்லாம நீஞ்ஞ எப்பிடி எம்பில் படிக்க முடியும்?"ன்னாரு கங்காதரன் தன்னோட குறுக்கு வெசாரணையோட சரியான போக்கே காட்டுறாப்புல.

            "அதெத்தாம் சொல்றேம். அவுங்க காசிலத்தாம் படிக்கிறேம். எங் கையில பைசா காசியில்ல!"ன்னா செய்யு தாம் சொல்ற பதிலுல்ல இருக்குற அழுத்தத்தெ காட்டுறாப்புல.

            "தொடர்ந்து அவுங்க ஒஞ்ஞளுக்கு செய்யுறதுக்கு ன்னா?"ன்னாரு கங்காதரன் கிடுக்கிப்பிடி போடுறாப்புல.

            "கலியாணத்துக்கு மின்னாடி எம்மாம் வேணும்ன்னாலும் செய்வாங்கய்யா. கலியாணம் அனதுக்குப் பின்னாடி எம்மாம் செய்வாங்க சொல்லுங்க. ஓரளவுக்கு மேல பொண்ணுங்களுக்கு வர்ற பீரியட் டயத்துல நமக்கு ஒரு நாப்கின் பேட் வாங்கணும்ன்னாலும் அதுக்கும் போயிக் காசிக் கொடுங்கன்னு சொல்லிட்டுக் கேட்டுகிட்டு நிக்கச் சொல்லுதீங்களா? எம் நெலமே அப்பிடி இருக்கு!"ன்னா செய்யு. அந்தப் பதிலு கங்காதரன ஒரு நிமிஷம் ஆட்டம் காண வெச்சிடுச்சு. அவரு சர்ட்டு சர்ட்டுன்னு கையில வெச்சிருந்த காயிதத்தெ பொரட்ட ஆரம்பிச்சாரு. அடுத்ததா அவரு கேக்க நெனைச்சக் கேள்வி காயிதத்துல எங்கயோ மாட்டிக்கிட்டதப் போல காயிதங்கள திருப்பி திருப்பி பாத்துட்டே இருந்தாரு. அதுல சில நிமிஷங்க கழிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. கோர்ட்டுல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் இதெ பாக்க ரொம்ப ரசமா இருந்ததெப் போல ரொம்ப ஆவலாதியாப் பாத்துட்டு நின்னாங்க. அக்கம் பக்கத்து கோர்ட்டுல நின்ன சனங்களும் சன்னல் வழியா சுத்திலும் நின்னுகிட்டு இந்த கேஸ்ஸ எட்டிப் பாக்க ஆரம்பிச்சதுங்க.

            நேரமாயிட்டெ இருந்ததெப் பாத்த ஜட்ஜ், "அடுத்த வழக்கு காத்திட்டு இருக்கு. கோர்ட்டோட நேரத்த வீணடிக்காம அடுத்தக் கேள்வியக் கேளுங்க. யில்ல கிராஸ்ஸ முடிங்க இத்தோட!"ன்னாரு கையில கட்டியிருந்த கடியாரத்தெ ஒரு மொறெ பாத்துட்டு.

            "அத்து வந்து... அத்து வந்து..." ன்னு சொல்லிக்கிட்டெ, "கோவில்பெருமாளில் இருக்கும் மாமன் மகன் சற்குணத்தோடு இருக்கும் தொடர்பை விட்டு விட்டு வந்தால் எனது கட்சிக்காரர் வாழ வைக்க தயாராக இருப்பதால், பெட்டிஷனர் எம்பில் படித்திருப்பதால் விரைவில் வேலைக்குச் செல்ல இருப்பதால் ரெஸ்பாண்டன்ட் தரப்பில் எந்த ஜீவனாம்சமும் வழங்க வேண்டியதில்லை!"ன்னு சொல்லிட்டு படபடப்பா கங்காதரன் போயி வக்கீலுங்க உக்காந்திருக்குற மேசைக்கு மின்னாடி இருந்த நாற்காலியில உக்காந்திட்டாரு. அவரு உக்காந்ததும், செய்யு, "என் மீது ஆதரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சாட்டி என் பெண்மையை இழிவுபடுத்துவதால், என்னை வாழ வைப்பதாகச் சொல்லி என் கணவர் என்னை அழைத்துச் சென்று என் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையை உருவாக்க நினைப்பதால் என் கணவர் எனக்கு ஜீவனாம்சத்தோடு, என்னை இழிவுபடுத்தியதற்கு உரிய மானநஷ்டத்துக்கு ஈடான இழப்பீடையும் தர வேண்டும்!"ன்னா தானும் தம் பக்கத்துக்கு தானே ஒரு வக்கீலா மாறிட்டதெப் போல. திடீருன்னு ஒரு நெனைப்பும் தெகிரியமும் அவளுக்கு எப்படி வந்துச்சோ இப்படிப் பேசிட்டு நின்னா. 

            "இதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது. ஒங்க வக்கீல் சொல்லணும். நீங்க பாக்ஸ் வுட்டு எறங்குங்க!"ன்னாரு ஜட்ஜ் செய்யுவப் பாத்து நெத்தியச் சுருக்குனாப்புல. ஒடனே பாலாமணி நின்ன எடத்துலேந்து நாலடி மின்னாடி வந்து, "நாம்ம அவுங்கள குறுக்கு வெசாரணை பண்ணணும்!"ன்னாம் ஜட்ஜப் பாத்து.

            "நெனைச்சேன். என்னா மிஸ்டர் கங்காதரன் ஒங்க கட்சிக்காரர் இதெ கோர்ட்டுன்னு நெனைக்குறாரா? யில்ல வேறெதும்ன்னு நெனைக்கிறாரா? இப்பிடி ஆளாளுக்கு கிராஸ் பண்ணணும்ன்னா என்னா அர்த்தம்? நீதிமன்ற அவமதிப்புன்னு தூக்கி உள்ளாரப் போடுறாப்புல ஆயிடும்! என்னா நெனைச்சிட்டு இருக்கீங்க கோர்ட்டப் பத்தி?"ன்னு கங்காதரனப் பாத்துச் சொன்னாரு ஜட்ஜ் வெடிச்சிச் செதறுறாப்புல.

            "நம்மளோட வக்கீல் சரியா கிராஸ் பண்ணல. அதாங் நாம்ம பண்ணணும்ன்னு கேக்குறேம்!"ன்னாம் பாலாமணி தாம் கேக்குறதோட ஞாயத்தெ எடுத்து வைக்குறாப்புல.

            ஜட்ஜ் பாலாமணிய வெறிச்சாப்புல பாத்தாரு. அப்படியே பக்கத்துல நின்னுகிட்டு இருந்த போலீஸ்காரரப்பாத்து, "இந்த ஆளெ பிடிச்சி வெளியில தள்ளுங்க! இதென்ன கோர்ட்டா? சந்தெக்கடையா? ஆளாளுக்கு வந்து வெசாரணை பண்ணும்ன்னா?"ன்னாரு கோவமா. மொத்த கோர்ட்டுமே நடக்குறதெ ஒரு சினிமா படத்தெ பாக்குறாப்புல வெச்ச கண்ணு இமைக்காம பாத்துக்கிட்டு இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...