29 May 2020

பார்த்தால் பறந்தோடும்!

செய்யு - 463

            சின்னவரு வூட்டுல இருந்தபடியே வேலங்குடி பெரியவரு சத்தம் போட்டாரு, "எலே கொமாரு! சட்டெ, கடியாரம், தெனசரித் தாளெ, துணிப் பையெ எடுத்துட்டு வெரசா வாடா இஞ்ஞப் பக்கத்துல!"ன்னு.
            குமாரு அத்தான் கொரலு போயிச் சேர்ந்த ரெண்டு நிமிஷத்துல பெரியவரு கேட்டதெ எடுத்துட்டு சின்னவரு வூட்டுக்கு ஓடியாந்துச்சு. ரொம்ப நாளுக்குப் பெறவு குமாரு அத்தானும் இப்பத்தாம் சின்னவரு வூட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்குது. அரசல் புரசலா பக்த்து வூட்டுல நடக்குற சங்கதிங்க இங்க பெரியவரு வூட்டுல செயா அத்தைக்கும், குமாரு அத்தானுக்கும் வுட்ட கொறையா தொட்ட கொறையா கொஞ்ச கொஞ்சம் தெரியத்தாம் செய்யுது. அதுக்குன்னே தயாரா இருந்ததெப் போல, குமாரு அத்தான் கொண்டாந்ததை வேக வேகமா போட்டுகிட்டே, "யம்பீ! அவ்வேம் கிட்டாம் சைக்கிள எடுத்து வெளியில வையுங்க. நேரம் ஆவக் கூடாது. நீஞ்ஞ வண்டியப் பிடிச்சுக்கோங்க. எலே குமாரு யண்ணனப் பிடிடா! கைத்தாங்கலா கொண்டு போயி கேரியர்ல உக்கார வெச்சிட்டு இந்தப் பக்கம் நாமளும், அந்தப் பக்கம் நீயும் பிடிச்சிகிட்டீன்னா ராயநல்லூரு வரைக்கும் வேக வேகமா தள்ளிட்டுப் போயிடுவேம். அஞ்ஞ பஸ்ஸப் பிடிச்சா, திருவாரூரு டவுனு போனா அஞ்ஞயிருந்து ஆட்டோவ பிடிக்கிறது, ஆஸ்பிட்டல்ல எறக்கிடுறது. இப்ப இதாங் திட்டம்!"ன்னாரு பெரியவரு. அவரு சொன்னபடியே ஆயிடுச்சு.
            ரசா அத்தை, "யத்தாம் நாமளும் வாரட்டுமா?"ன்னுச்சு.
            "வாண்டாம் ஆயி! ராயநல்லூரு போற வரைக்குந்தாம் கஷ்டம். ராயநல்லூரு போயாச்சுன்னா திருவாரூரு போன மாதிரிக்கித்தாம். கூட கொமாரு இருக்காம்லா பாத்துக்கிடுறேம். இந்தாருடா கொமாரு ராயநல்லூர்ல வுட்டுப்புட்டு சைக்கிள்ல வந்து இஞ்ஞ சித்தப்பா வூட்டுல அதெ போட்டுப்புடு. போட்டுப்புட்டு அவ்வேம் தாசு பயலயும் கெளப்பிக்கிட்டு கமலாலயக் கரெ ஆஸ்பத்திரி பக்கம் வா! வாரதுக்கு மின்னாடி வயக்காட்டுப் பக்கம் போயி மம்புட்டியும், பில்லு அறுக்குற அருவாளும் கெடக்கும். எடுத்தாந்து வூட்டுல போட்டுப்புட்டு கெளம்புடா!"ன்னாரு பெரியவரு.
            இப்போ, பெரியவரு சொன்னபடியே சுப்பு வாத்தியாரு சைக்கிளப் பிடிச்சிக்கிட்டு நின்னாரு. பெரியவரும் குமாரு அத்தானும் கார்த்தேசு அத்தானை எழுப்பி கைத்தாங்கலா கொண்டாந்து சைக்கிளு கேரியர்ல உக்கார வெச்சா, சுப்பு வாத்தியாரு தள்ளிக்கிட்டே போவ, பெரியவரும், குமாரு அத்தானும் கார்த்தேசு அத்தானை பிடிச்சவாக்குலயே அந்தக் கப்பி கெழண்ட ரோட்டுல வேக வேகமா போறாங்க. தெருவுலயும் கிட்டதட்ட சேதி பரவியிருக்கும் போலருக்கு. தெருவுல நின்ன ஒண்ணு ரண்டு பேரு கவனிச்சிப்புட்டு கேட்குறாங்க. "இப்போ சேதி சொல்ல நேரமுல்ல. வந்துப் பெறவு சொல்றேம்!"ன்னு பெரியவரு சொல்லிகிட்டே வெரசா போறதுல கவனமா இருக்காங்க. இவுங்க ராயநல்லூரு போன நேரமா பாத்து திருத்துறைப்பூண்டி பஸ் ஒண்ணு பஸ் ஸ்டாப்புல திருவாரூருக்குப் போறதுக்கு நின்னுச்சு. கார்த்தேசு அத்தானை பாத்துப் பதனமா பஸ்ல ஏத்திக்கிட்டு பெரியவரும் சுப்பு வாத்தியாரும் பயணப்பட்டாங்க.
            அவுங்க முடிவுப்படியே டவுன்ல எறங்கி ஆட்டோவ எடுத்துக்கிட்டு கமலாலய கரையில இருந்த ஸ்ரீதரன் ஆஸ்பிட்டல்ல கொண்டுப் போயிச் சேத்துப்புட்டாங்க. பெரியவரு கையில கட்டியிருந்த கடியாரத்தப் பாத்தாரு பத்து மணிய நெருங்குனுச்சு நேரம்.
            "டாக்கடரு வர்ற நேரந்தாம் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "டாக்கடரு வந்ததும் வராதுமா மொத ஆளா காட்டிப்புடணும்!"ன்னாரு பெரியவரு. அவுங்க பேசிட்டு இருக்குறப்பவே ஸ்ரீதரன் டாக்கடரு உள்ள நொழைஞ்சாரு. பெரியவரு போயி டாக்கடரோட கையப் பிடிச்சிட்டாரு. அவர்ரப் பாக்குறதுக்குன்னு கூட்டம் ரெண்டு பெஞ்சு நெறைய உக்காந்திருக்கு. ஸ்ரீதரன் டாக்கடரு புரிஞ்சிக்கிட்டாரு.
            "கம் இன்சைட்!"ன்னு சொல்லிட்டு உள்ளாரப் போனாரு டாக்கடரு.
            சுப்பு வாத்தியாரும், பெரியவரும் கார்த்தேசு அத்தானைக் கைத்தாங்கலா டாக்கடரு பாக்குற அறைக்குள்ள உள்ளார கொண்டு போனாங்க. பாத்த ஒடனேயே கணிக்கிற டாக்கடருல்லா ஸ்ரீதரன். அவரு ஒரு பார்வெ பாத்துப்புட்டார்ன்னா வெயாதி துண்டெ காணும், துணியெக் காணும்னு ஓடித்தாம் ஆவணும். பாக்குற பார்வையிலயே, நோயாளியோட பாவனையிலயே எல்லாத்தையும் கப்புன்னு பிடிச்சிடுவாரு. அப்பிடி ஒரு பார்‍வெ அவருக்கு. அதுல அத்தனெ வருஷ அனுபவம் அவருக்கு. கைத்தாங்கலா பிடிச்சிட்டு வர்றப்போ, கார்த்தேசு அத்தானோட நடந்து வர்ற நடை, கண்ணு முழி, ஒடம்பு எல்லாத்தையும் மேலயிருந்து கீழே வரைக்கும் என்னவோ ரசிச்சுப் பாக்குறாப்புல ஒரு பார்வையப் பாத்தாரு. ஒடம்பத் தொட்டும் பாக்கல, கழுத்துல போட்டுருக்குற ஸ்டெத்தாஸ்கோப்ப வெச்சியும் பாக்கல. கார்த்தேசு அத்தானப் பாத்து, "நாக்கெ நீட்டு!"ன்னாரு ஸ்ரீதரன் டாக்கடரு.
            கார்த்தேசு அத்தான் புரியாத மாதிரிக்கி திருதிருன்னு முழச்சிச்சு. "மவனே! நாக்கெ நீட்டுடா!"ன்ன பெரியவரு அவரோட நாக்கை எப்படி நீட்டணும்னு புரிய வைக்கிற மாதிரிக்கி நாக்கெ நீட்டிக் காட்டுனாரு. கார்த்தேசு அத்தானுக்கு அப்பத்தாம் புரியுறாப்புல இருந்துச்சு. கார்த்தேசு அத்தான் நாக்க நீட்டிக் காட்டுனுச்சு. நாக்கு அப்பிடியே வெள்ளைப் பெயிண்டு வெச்சாப்புல வெள்ளை வெளேர்ன்னு இருக்கு.
            ஸ்ரீதரன் டாக்கடரு ஒதட்டை ஒரு சுளிப்பு சுளிச்சிக்கிட்டு, "டைபாய்டு! தட்ஸ் ஆல்!"ன்னாரு பாருங்க, பெரியவருக்கும், சுப்பு வாத்தியாருக்கும் ஆச்சரியம் தாங்கல.
            ஒடனே டாக்கடரு சீட்டுல மருந்து மாத்திரைகள எழுதுனாரு. எழுதி முடிச்சிட்டு, "கொஞ்சம் முத்துன கேஸூத்தாம். தங்கிப் பாக்குறதுன்னாலும் பாத்துக்கிடலாம். வூட்டுக்கு அழைச்சிட்டுப் போயி பாத்துக்கிடறதுன்னாலும் பாத்துக்கிடலாம். ரெண்டு மூணு நாளைக்கி சரியா சாப்பாடு செல்லாது. மல்லுக்கட்டித்தாம் சாப்புடணும். சாப்புட்ட பெறவுத்தாம் மாத்திரையப் போடணும். சாப்பாடு கொள்ளலன்னு சாப்புடாம போட்டா பெறவு வயிறு புண்ணாயி அதுக்குத் திரும்ப வைத்தியம் பண்ணுறாப்புல ஆயிடும்!"ன்னு சொல்லிக்கிட்டெ மருந்து மாத்திரை எழுதுன சீட்டைக் கிழிச்சி சுப்பு வாத்தியாருகிட்டெ கொடுத்தாரு.
            "ஒண்ணும் பயப்படுற மாதிரியில்லயில்லங்க! டெஸ்ட்டுல்லாம் எதாச்சிம்?" ன்னாரு பெரியவரு.

            "அதாங் முத்துன கேஸூன்னு சொன்னேம்ல. டெஸ்ட் எடுத்தாலும் நாம்ம சொல்றதுதாங் வரும். வேணும்ன்னா அதுக்கு எரநூறு முந்நூறு செலவு பண்ணிட்டு எடுத்துட்டு வாங்க!"ன்னு சொல்லிட்டு சிரிச்சவரு, தொடர்ந்து, "கொணம் காணுறதுக்கு பத்து நாளுக்கு மேல ஆவும். ஒடம்பு தேறுறதுக்கு ஒரு மாசம் வரைக்கும் ஆவும்! மாத்திரைய மட்டும் சொன்னபடிக்குச் சரியா கொடுங்க. மற்றபடின்னா தங்குறதுன்னா தங்கலாம். அழைச்சிட்டுப் போறதுன்னா ஒரு வாரம் கழிச்சி மறக்காம வந்துப் பாக்கணும். கொஞ்சம் கொணம் கண்டுச்சு விட்டுப்புடலாம்ன்னு நெனைச்சிப்புடக் கூடாது. கிருமி உள்ளார அப்பிடியே இருக்கும்! அதெ கம்ப்ளீட்டா அழிச்சிட்டு கியூர் பண்ணியாவணும்!"ன்னாரு டாக்கடரு.
            டாக்கடரு சொல்றதெ கேட்டு வாயைப் பொளந்துட்டாரு பெரியவரு. "அடேங்கப்பா பாத்த ஒடனேயில்ல புட்டு புட்டு வைக்குறாம் மனுஷன். வைத்தியத்துல பெரிய நூலறுந்த கொம்பனா இருப்பாம் போலருக்கு, ஒடம்புக்கு முடியலன்னு போனா ரத்தத்தெ டெஸ்ட்டு எடும்பானுவோ, ஒண்ணுக்கு அடிக்கிறதெ புடிச்சி வந்து டெஸ்ட்டு எடுக்கணும்பானுவோ, இவரு என்னான்னா ஒடம்பத் தொட்டுக் கூட பாக்கல, நடந்த நடையப் பாத்தாரு, நின்ன நெலையப் பாத்தாரு, உக்காந்த நெலையப் பாத்தாரு, நாக்கெ நீட்டச் சொன்னாரு, சட்டுன்னு இதாங் வெயாதின்னு ஒரே அடியா அடிச்சி, மருந்து மாத்திரையை எழுதி அஞ்சு நிமிஷத்துல மொத்த சோலியையும் முடிச்சிப்புட்டாரே! டாக்கடருன்னா இப்பிடில்லா இருக்கணும்!"ன்னு நெனைச்சுக்கிட்டாரு. பெரியவரு அப்படி நெனைச்சுட்டு இருக்குறப்பவே, "இப்போ வூட்டுக்கு அழைச்சிட்டுப் போவலாமா டாக்கடரு? டைபாய்டுன்னு வேற சொல்றீஞ்ஞ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            பெரியவருக்குக் கடெசியா ஒரு சந்தேகம் மனச வுட்டுப் போவல, ஊசிப் போடாலன்னா அவரு என்னா டாக்கடருன்னு? ஒரு ஊசிப் போட்டாத்தானே வெயாதி சட்டுன்னு மட்டுப்படும்னு நெனைச்சவரு, "ஊசி ஏதும் போடலீங்களா டாக்கடரு?"ன்னாரு பெரியவரு.
            "அழைச்சிட்டுப் போவலாம், நத்திங் டூ ஒர்ரி. ஊசில்லாம் வேண்டாம். வியாதி இதுதான்னு சரியா டயக்னஸ் பண்ணிட்டா, அதுக்குச் சரியா மருந்தெ கொடுத்துட்டா போதும். இப்போ இருக்குற மருந்துல்லாம் அப்பிடி பவர்புல். கொணம் பண்ணிடும். நம்மளப் பொருத்தவரை வியாதி இதுவா இருக்குமா? அதுவா இருக்குமா?ன்னு சந்கேம் பண்ணிட்டு மருந்து மாத்திரைய எழுதுறதில்ல. இதுதாம் வியாதின்னு தெரிஞ்சித்தாம் எழுதுவேம். நம்மகிட்டெ வர்ற பேஷண்ட்ஸ் அதிகபட்சம் ரண்டு தடவெ, மூணு தடவெ வந்தா பெரிசு. கொணமாயிடுவாங்க. தண்ணி மட்டும் காய்ச்சுன வெந்நியாத்தாம் இருக்கணும். கண்ட கண்ட தண்ணியக் குடிக்கக் கூடாது. காய்ச்சுன தண்ணின்னா அப்பைக்கப்போ காய்ச்சுனதா இருக்கணும். காலையில காய்ச்சிப் போட்டுப்புட்டு அதெ ராத்திரி வரைக்கும் குடிக்கக் கூடாது! அவ்வளவுதாங். கெளம்பலாம்!"ன்னுட்டாரு டாக்கடாரு ரெண்டு பேருக்கும் சேத்தாப்புல பதிலச் சொல்றாப்புல.
            கைத்தாங்கலா கார்த்தேசு அத்தானைப் பிடிச்சிட்டு ரெண்டு பேருமா வெளியில வந்தாங்க. வெளியில வந்து, டாக்கடருக்கான பீஸ் அப்போ எம்பது ரூவா. அப்போ அது பெரிய காசுத்தாம். வடவாதியில இருந்து டாக்கடருமாருகல்லாம் இருவது ரூவாயோ, முப்பது ரூவாயோத்தாம் பீஸா வாங்குவாங்க. அவுங்ககிட்டப் போயி கொணம் காணணும்ன்னா ரெண்டு மூணு தவா போயி வந்தாவணும். மொத்தத்துல ரெண்டு மூணு தவா போயி வந்தா பீஸ் காசு இவரு வாங்குற அளவுக்கு வந்துப்புடும். ஸ்ரீதரன் டாக்கடருகிட்டெ பெரும்பாலும் ஒரு தடவெத்தாம் வரது. ஒடம்பு கொணம் கண்டுடும். மறுதவா வந்து பாத்துட்டுப் போவணும்னுத்தாம் சொல்வாரு. பெரும்பாலும் யாரும் போறதில்ல. எம்பது ரூவாய டோக்கன் போட்டுட்டு உக்காந்திருக்குற பொண்ணுகிட்டெ கொடுத்தாரு சுப்பு வாத்தியாரு.  பக்கத்துல இருக்குற மருந்துக் கடையில மருந்து மாத்திரைகள வாங்குனாரு சுப்பு வாத்தியாரு. அது ஐநூத்து அறுவது ரூவாய்க்கி வந்துச்சு. அத்தோட ஒடம்பு சரியில்லாம இருக்குறதால ஒரு ஆர்லிக்ஸ் பாட்டிலையும் சேத்து வாங்கிட்டாரு. அவரு வாங்க வாங்க அதையெல்லாம் வாங்கி கையோட கொண்டாந்த துணிப்பையில போட்டுக்கிட்டாரு பெரியவரு.
            ஸ்ரீதரன் ஆஸ்பிட்டலுக்குப் பக்கத்தாலயே ஒரு பிராமணாள் சாப்பாட்டுக் கடை இருந்துச்சு அப்போ. கார்த்தேசு அத்தானைத் தவுர ரெண்டு பேத்துக்கும் தாங்க முடியா பசி. மூணு பேருமா சேர்ந்து கடைக்குள்ள நொழைஞ்சு ஆளுக்கு நாலு இட்டிலிய வைக்கச் சொன்னாங்க. சுப்பு வாத்தியாரும், பெரியவரும் இருந்த பசியில நாலு இட்டிலி போன தெசை தெரியல. இன்னொரு நாலு இட்டிலிய வாங்கி கெட்டிச் சட்டினியும், சாம்பாருமா ஒரு அடி அடிச்சி முடிச்சாங்க. கார்த்தேசு அத்தான் ஒண்ணரை இட்டிலிய திங்குறதுக்குள்ள படாத பாடு பட்டுச்சு.
            "சாப்புடுடா யம்பீ! அப்பத்தாம் மருந்து மாத்திரைய திங்க முடியும்! அதெ தின்னாத்தாம் கொணம் காண முடியும்!"ன்னாரு பெரியவரு. கார்த்தேசு அத்தான் மல்லுகட்டி தின்னுச்சு. ரண்டரை இட்டிலி வரைக்கும் உள்ளப் போனுச்சு. அதுக்கு மேல போவல. "செரித்தாம் வுடுடா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. டாக்கடரைப் பாத்ததுலயும், இப்போ கொஞ்சம் சாப்புட்டதுலயும் ஒடம்பு தெம்பா இருக்குறது போல இருந்துச்சு கார்த்தேசு அத்தானுக்கு. அதுக்குள்ள பெரியவரு சாப்பாட்டு கடைக்குள்ளாற போயி கொதிக்க கொதிக்க தண்ணியப் போட்டு வாங்கியாந்து அதெ ரெண்டு தம்பளர்ர வெச்சி ஆத்திட்டு இருந்தாரு. ஆத்தி முடிச்சிட்டு துணிப் பையில கைய வுட்டு மருந்து மாத்திரைகள எடுத்து வெளியில வெச்சாரு. சுப்பு வாத்தியாரு ஒவ்வொரு காகித உறையா பாத்து எந்த மாத்திரைய எப்ப கொடுக்கணும்னு பாத்து காலைக்கு உள்ள மாத்திரைகளக் கொடுத்தாரு. அதெ வாங்கி வாயில போட்டு, பெரியவரு ஆத்திக் கொடுத்த தண்ணிய ஊத்தி முழுங்குனுச்சு கார்த்தேசு அத்தான். மாத்திரைய முழுங்கி ரெண்டு நிமிஷம் இருக்காது, "மாம்மா! பெரிப்பா! நமக்கு மயக்கமா வர்ற மாதிரி இருக்கு!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "அப்பிடியே படுறாம்பீ!"ன்னு உக்காந்திருந்த பெஞ்சுலயே கார்த்தேசு அத்தானோட கால தூக்கி மடியில வெச்சிக்கிட்டாரு பெரியவரு. தலையத் தூக்கி தன்னோட மடியில வெச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. "இந்த மாத்திரைச் சாப்புட்டா சித்தெ நேரம் அப்பிடித்தாம்டா இருக்கும்! சரியா பூடும்! படு சித்தே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒடம்புல கைய வெச்சிப் பார்ரேம்பீ! இப்போ காய்ச்சலு இல்ல பாரு!"ன்னாரு பெரியவரு.
            சுப்பு வாத்தியாரு நெத்தி, நெஞ்சுன்னு கைய வெச்சிப் பாத்துட்டு, "கொணம் கண்டுப்புடும் யத்தாம்! ஒடம்பெ சரி பண்ணிக் கொண்டாந்தாவணும். அதாங் பெரும்பாடு. சத்தான ஆகாரமா சாப்புட வைக்கணும். கொஞ்சம் மெனக்கெட்டுப் பாத்தாதாங் ஒடம்பு தேறும். மருந்து மாத்திரை ஒடம்ப கொணம் பண்ணாலும் அதுவே பாதி ஒடம்பு அடிச்சிப்புடும் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம பக்கத்துலத்தான யம்பீ இருக்குறேம். பாத்துக்கிடறேம். பாலுதாங் வூட்டுல கறக்குது. நல்லா சுண்டக் காய்ச்சி ஒரு லிட்டரு பால அரை லிட்டரு பாலா ஆக்கிக் கொடுக்குறேம். மாட்டுப் பாலுக்குத் தேறாத மனுஷ ஒடம்பு எந்த ஊர்ல இருக்குச் சொல்லு? நீயி கூட இந்த ஆர்லிக்ஸ் பாட்டில்ல வாங்கிருக்க வேண்டில்லா. என்னவோ வாங்கிப்புட்டே. வாங்குறப்ப என்னத்தெ வேணாம்னு சொல்றதுன்னு வுட்டுப்புட்டேம். கேவுரு, கம்பு, தெனை மூணையும் ஒண்ணா கலந்து அரைச்சி அத்தோட பொரியரிசி மாவைக் கலந்து கஞ்சிப் பண்ணிக் கொடுத்தா தேறாத ஒடம்பும் தேறிப் போவுமுல்லா! வூட்டுல சுத்தமான தேனு வெச்சிருக்கேம் ஒரு பாட்டில்ல. தேனுக்கும் ‍‍தெனை மாவுக்கும் தேறாத ஒடம்பா? பயித்தங் கஞ்சி, வாழக்காயி இருக்கு. வாழக்காயி வறுவலு ஒண்ணு பத்தாதா? கத்திரிக்காயி ஒத்துக்கிட்டா கரைப்பாம் இல்லாத ஒடம்புன்னா அத்து ஒண்ணு போதும்பீ! நம்ம காக்கா புள்ளே வூட்டுல மாதுளங்காயி இருக்கு. பத்தாதா? பெறவு நமக்குத் தெரியாத ஆகாரமா? நாமளே நம்ம கையாலயே பண்ணி இவனெ தேத்தி வுட்டுப்புட்டுத்தாம் மறுவேல பாப்பேம் பாத்துக்கோ!"ன்னாரு பெரியவரு.
            ஒரு பத்து நிமிஷம் பெஞ்சுல படுத்ததுல ஒடம்பு தெளிஞ்சாப்புல இருந்துச்சு கார்த்தேசு அத்தானுக்கு. "இப்போ பரவால்ல. கெளம்பலாம் மாமா!"ன்னுச்சு.
            கிளப்புக் கடையில சாப்புட்டதுக்கு பணத்தெ கொடுத்துட்டு, மூணு பேருமா வெளியில வந்தாங்க. கார்த்தேசு அத்தானுக்கு ஒடம்பு ரொம்ப களைப்பா இருந்துச்சு. கொஞ்சம் நடந்து கமலாலயக் கரையில தெற்குப் பக்கமா திரும்பியிருப்பாங்க, குமாரு அத்தானும், தாசு அத்தானும் எதுத்தாப்புல நடந்து வந்துச்சுங்க.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...