செய்யு - 462
வேலங்குடி போயி எறங்குற வரைக்கும் சுப்பு
வாத்தியாருக்கு ஒரே சந்தேகம்தாம், சின்னவரு உண்மையச் சொல்றாரா? எதாச்சிம் அடிச்சி
வுடுறாரான்னு. போயிப் பாத்தா சின்னவரு சொன்னதெல்லாம் உண்மைதாம். சுப்பு வாத்தியாரு
வர்றதப் பாத்துட்டு ரசா அத்தை அழுவுது. "வந்துட்டீயாடா யம்பீ! எப்பிடிக் கெடக்குறாம்
பாருடாம்பீ! நமக்கு ஒண்ணும் புரியல! எதுவும் வெளங்கல! கையும் ஓட மாட்டேங்குது, காலும்
ஓட மாட்டேங்குது. காலங்காத்தல அஞ்சு மணி வாக்குல முடியாம கொள்ளாம ராயநல்லூர்ல எறங்கி
நடந்தே வந்திருக்காம். இவனெப் பாத்ததும் ஒடனே யத்தான கெளப்பி வுட்டுப்புட்டேம்டா. கொஞ்ச
நேரம் சொரம் அடிக்குது. கொஞ்ச நேரத்துலயே ஒடம்புக் குளுந்து போவுது. ஒண்ணும் புரியலடாம்பீ.
ஒரு டீத்தண்ணியப் போட்டுக் கொடுத்து குடிடான்னா வாயெல்லாம் கசக்கிங்றாம். சாப்புட்டு
ரண்டு நாளாச்சுங்றாம். கொஞ்சம் கஞ்சித்தண்ணியப் போட்டு ஆத்தி வெச்சிருக்கேம்டாம்பீ!
ஒண்ணுத்தையும், ஒரு மண்ணையும் சாப்புட்டுத் தொலைய மாட்டேங்றாம்!"ன்னுச்சு ரசா
அத்தை.
சுப்பு வாத்தியாரு கார்த்தேசு அத்தானைப்
பாத்தாரு. கார்த்தேசு அத்தான் போர்வையப் போட்டு படுத்திருந்துச்சு. கார்த்தேசு அத்தானோட
ஒடம்பு நல்ல தெடகாத்திரமான ஒடம்பு. அப்பிடியே வாடி வதங்கி சுருங்கிப் போன இலையாட்டம்
இருந்துச்சு இப்போ பாக்குறப்போ. அதெ பாக்குறப்போ சுப்பு வாத்தியாருக்கு கண்ணுத்
தண்ணி அது பாட்டுக்கு தளும்பி ஊத்துனுச்சு. போர்வைய வெலக்கி வுட்டு ஒடம்பப் பாத்தாரு.
அவருக்கு மயக்கமே வந்துப்புடும் போல இருந்துச்சு. போர்வைய வெலக்குனா ஒடனே போர்வைய
இழுத்துப் புடிச்சி அதெ போத்திக்க நெனைக்குது கார்த்தேசு அத்தான்.
"பெரிய யத்தாம் வந்துப் பாத்துச்சா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அவ்வேம் பண்ண வேலத்தாம்பீ! ஏத்தோ
தகடு வெச்சிப்புட்டாம் ஒம் மாப்புள்ளைக்கி. அவனெ ச்சும்மா வுடக் கூடாது யம்பீ!"ன்னாரு
சின்னவரு.
சுப்பு வாத்தியாரு அப்பிடியே மொறைச்சிப்
பாத்தாரு. சின்னவரு ஒண்ணும் சொல்ல முடியாம பம்முனாரு.
அதெ பாத்துப்புட்டு, "ஒண்ணும் பேசாதீங்க!
அவ்வேம் யம்பீ கோவப்படுறாம்ல!"ன்னுச்சு ரசா அத்தை.
"உண்மையக் கூட சொல்லக் கூடாதுங்றீங்களா?"ன்னாரு
சின்னவரு.
"வாயெ மூடுங்க யத்தாம்! இப்பிடித்தாம்
ஒண்ணு கெடக்க ஒண்ணு யோஜிக்கிறது. யாரு சொல்றதயும் கேக்குறதில்ல! சித்தெ ச்சும்மா
இருக்கீங்களா?"ன்னு சொன்ன சுப்பு வாத்தியாரு ரசா அத்தை பக்கம் திரும்புனாரு.
"இந்தாரு யக்கா! இந்த விசயத்துல யத்தான
வெச்சிக்கிட்டுல்லாம் எந்த வேலையும் பண்ண முடியாது. அவர்ர கொஞ்ச நாளு ஒதுங்கி இருக்கச்
சொல்லு. இதுக்கும் அவருக்கும் சம்மந்தம் யில்ல. ன்னா?" அப்பிடின்னாரு சுப்பு
வாத்தியாரு.
"யம்பீ சொல்றாம்ல காதுல வுழுவுதுல்ல?"ன்னுச்சு
ரசா அத்தை.
"ஏம்பீ இப்பிடிப் பேசுதீயே? நமக்கும்
இதுக்கும் இனுமே சம்பந்தம் யில்ல, போதும்லா? நீஞ்ஞ ன்னா பண்ணாலும் செரித்தாம். நாம்ம
இதுல தலையிட மாட்டேம். பயலத் தேத்திக் கொண்டாந்தா செரித்தாம். நாம்ம ஒண்ணும் சொல்ல
மாட்டேம்பீ! எல்லா குத்தமும் நம்ம மேல வந்துப்புட்டதா நெனைக்குது யம்பீ! நெனைக்கட்டும்.
யாரு மச்சாம்தான்னே. அதுக்குக் கூட உரிமெ யில்லன்னா எப்பூடி?"ன்னாரு சின்னவரு.
சுப்பு வாத்தியாரு மறுக்கா இன்னொரு தவா
மொறைச்சாரு சின்னவர்ரப் பாத்து. சின்னவரு தோள்ல கெடந்த துண்டெ எடுத்து கண்ணுல வழிஞ்ச
தண்ணியைத் தொடச்சிக்கிட்டு, கூடத்துலேந்து திண்ணைப் பக்கம் போயி பெஞ்சுல உக்காந்துகிட்டு
கேவிக் கேவி அழுதாரு.
"இப்போ என்னடாம்பீ பண்ணுறது?"ன்னுச்சு
ரசா அத்தை.
"ஒண்ணுமில்லக்க மொறைக்காய்ச்சலு
மாதிரிக்கி நமக்குத் தெரியுது. கமலாலய வட கரையில ஒரு டாக்கடரு. நமக்குல்லாம் குடும்ப
டாக்கடரு மாதிரிக்கி. அவருகிட்டத்தாம் கொண்டு போவணும். கொண்டு போவணும்ன்னா நமக்கு
ஒரு தொணை வேணும் பய இருக்குற நெலையில!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நாம்ம வர்றேம்டா யம்பீ! யில்லாட்டி
தாசு பயல அழைச்சுக்கோ!"ன்னுச்சு ரசா அத்தை.
"நீயி சரிபட்டு வாராது யக்கா! அவ்வேம்
தாசு பரவால்லத்தாம். இருந்தாலும் அவனும் வேணாம். நாம்ம பெரிய யத்தான அழைச்சிக்கிறேம்.
இந்த மாதிரி விசயத்துல அவருதாங் தோது பட்டு வருவாரு. பயல ஒடம்பத் தேத்தி வுட்டுப்புட்டுத்தாம்
மறுவேல பாப்பாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நாம்ம சோன்னேம்டாம்பீ! போயிப்
பாத்து கூப்புட்டு வா மனுஷான்னு. யில்ல நாமளாவது போறேம்ன்னும் சொன்னேம். ஒரு ஆபத்துச்
சமயத்துல ஒதவுறதுக்குதானடா பக்கத்துல இருக்கேம். அதெ புரிஞ்சிக்காம நெலையா நின்னாரு
பாருடாம்பீ! நமக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது. பெறவுத்தாம் அடிச்சித் தொரத்தி ஒன்னையாவது
அழைச்சிட்டு வாரச் சொன்னேம். ஆன்னா மனுஷம் வறட்டுக் கெளரவத்துல புள்ள உசுரு போனாலும்
போவட்டும்ன்னு உக்காந்துப்புடுவாருடாம்பீ! எண்ணஞ் சரியில்லா ஆளுடாம்பீ! நம்ம புள்ளைக்கி
மின்னாடி நமக்கு என்னடாம்பீ வேணும் சொல்லு?"ன்னுச்சு ரசா அத்தை.
"செரிக்கா! நீயி சித்தெ பாத்துக்கோ.
இவ்வேம் சாப்புடுற மாதிரிக்கிக் கொஞ்சம் கஞ்சிய சாப்புட முடிஞ்சா சாப்புட வையி. ஒடம்புக்கு
அப்பத்தாம் கொஞ்சம் தெம்பாவும். அப்பிடிச் சாப்புடலன்னா ஒரு வாளியில ஊத்தி தயாரு பண்ணிக்கோ.
நாம்ம போயிப் பெரிய யத்தானப் பாத்து கெளப்பிட்டு வர்றேம். இந்நேரத்துக்கு வயக்காட்டுப்
பக்கம்லா போயிருப்பாரு! எந்த எடத்துல நிக்குறாரோ? என்ன வேல பண்ணிட்டுக் கெடக்குறாரோ?
சித்தெ பாத்துக்கோ. போனதும் வரதும்மா வந்துப்புடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நீயி இருடாம்பீ! நாம்ம தாசு பயலப்
பாத்துட்டு அப்பிடியே கெளப்பிட்டு வாரச் சோல்றேம்!"ன்னுச்சு ரசா அத்தை.
"அத்துச் சுத்தப்படாது யக்கா! பெரிய
யத்தாம் எப்பிடி ஆச்சு? என்ன வாச்சு?ன்னு ஆயிரத்தெட்டு பேச்ச வெச்சி அதுல நேரமாக்கிப்புடுவாரு.
நாம்ம போனாத்தாம் சங்கதி இன்னதுன்னு சுருக்கமா சொல்லிக் கெளப்பிட்டு வார முடியும்.
மனுஷன் பேச்சுல பிடிச்சா வயக்காட்டுலயே இன்னிய பொழுது போயிடும்!"ன்னு சுப்பு
வாத்தியாரு வெளியில கெளம்பி கெழக்கு வாக்குல இருக்குற வயக்காட்டுப் பக்கமா வேக வேகமா
ஓட்டமும் நடையுமா ஓடுனாரு.
வேலங்குடி பெரியவரு சுப்பு வாத்தியாரு
நெனைச்சப்படி வயலோட கடைக்கோடியிலத்தாம் நின்னாரு. சின்னவரோட வயல்ல தாண்டி வயலுக்குன்னு
போற ரோடு முடியுற எடத்துல தெற்கால திரும்பி நாலஞ்சு வயலுக வழியா வரப்பு வழியே நடந்துப்
போன பெரியவரோட வயலுங்க ஆரம்பிக்கும். அங்கேயிருந்து மேற்காலப் பாத்தா கண்ணுக்கு எட்டுன
தூரம் வரைக்கும் தொடர்ச்சியா பெரியவரோட வயலுகதாம். அந்த வயலுகளோட கடைக்கோடியில
பெரியவரு நிக்குறது தெரியுது சுப்பு வாத்தியாருக்கு. வரப்பு வழியா வேக வேகமா தாண்டித்
தாண்டிப் போனாரு சுப்பு வாத்தியாரு. இவரு பாதி தூரம் போறப்பவே பெரியவரு அடையாளங்
கண்டுகிட்டாரு.
"ஏ ஏய் யம்பீ! அஞ்ஞயே நில்லும்பீ!"ன்னு
பெரியவரு சத்தத்தெ போட்டுட்டு அவரும் எதுத்தாப்புல ஓடியாறாரு. வூட்டுப்பக்கம் வர்ற
மச்சாங்கார்ரேம் இப்பிடி வயப்பக்கம் வெரசா ஓடியாறுதுன்னா ஏதோ வெசயம் வெவகாரமாத்தாம்
இருக்கும்ன்னு பெரியவரோட மனசு கெடந்து அடிச்சிக்கிது. ரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர்ற
நெருங்கி வர்ற வரைக்கும் ஓடியாறத நிப்பாட்டல. ரெண்டு பேரும் வயக்காட்டுக்கு நடுக்காட்டுல
சந்திச்சா ரண்டு பேருக்குமே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது.
"என்னம்பீ! இப்பிடிக் காலங்காத்தாலயே
வயக்காட்டுப் பக்கம் வுழுந்து ஓடியார்றே? அவ்வேம் குமாரு பயகிட்டெ ஒரு வார்த்தெ சொல்லி
வுட்டீன்னா வர்ற மாட்டேனா?"ன்னாரு பெரியவரு.
"அவசரமான சங்கதி யத்தாம்! கொஞ்சம்
திருவாரூரு கமலாலயக்கரை ஆஸ்பத்திரி வரைக்கும் கெளம்பணும் யத்தாம்! பேசிட்டு இருக்க
நேரமில்ல. அதாங் யத்தாம் நாமளே வந்தேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யாருக்கும்பீ? என்னாச்சு? அப்பிடி
அவசரங் காட்டுற அளவுக்கு ஒடம்பு முடியாம யாரு கெடக்கா?"ன்னாரு பெரியவரு.
"வெளக்கமா பெறவு சொல்றேம் யத்தாம்!
சின்னவரு மவ்வேம் கார்த்தேசு இருக்காம்ல அவ்வேம்தாம் ஒடம்புச் சொகமில்லாம கெடக்குறாம்.
ஒடனே போயி டாக்கடருகிட்டெ காட்டுனாத்தாம் ஆளு பொழைப்பாம் போலருக்கு!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அட படு பாவிப் பயெ! நாம்ம எஞ்ஞ பத்து
ஊரு தள்ளியா இருக்கேம்? பக்கத்துலத்தாம்லா இருக்கேம். ஒரு சத்தம் வுட்டா ஓடிப் போயிப்
பாத்திருக்க மாட்டேனா? நீயி எஞ்ஞயிருந்து கெளம்பி வந்து ஒம் மூலமா சேதி தெரியணும்னு
இருக்குப் பாரேம். அவ்வேம் என்னவோ கொஞ்ச நாளு ஊர்ல இல்லன்னு பேச்சாக் கெடந்துச்சு.
நாம்ம எதாச்சிம் அவ்வேம் வூட்டுச் சங்கதியப் பத்தி வெசாரிச்சாப் போதும், கிட்டாம்
பயெ சாடை மாடையா வாசல்ல நின்னு அவ்வேம் பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிடுறாம். செரித்தாம்
நாமக்கேம் வம்புன்னு வெசாரிக்கல. பயெ எஞ்ஞப் போயி ந்நல்லா இருந்தாலும் செரித்தாம்னு
நெனைச்சிக்கிட்டேம். எஞ்ஞயோ ஓசூருக்கோ, பெங்களூருக்கோ போனதா கேள்வி. மேக்கொண்டு
நாம்ம அதெ வெசாரிக்கலப்பா!"ன்னாரு பெரியவரு.
"போற வழியில பேச வேண்டியதெ பேசிக்குவேம்.
கெளம்புலாம் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ம்! கெளம்பு! ஒரு மம்புட்டியும்
புல்லு அருவாளுந்தாம் அஞ்ஞ வரப்புல கெடக்கு. எவ்வேம் எடுக்கப் போறாம்? பாத்துக்கிடலாம்.
குமாரு பயகிட்டெ சொன்னாலும் எடுத்தாந்துப் போட்டுப்புடுவாம். ஒரு நிமிஷம் மட்டும்
பொறு. கையும் காலும் சேறா இருக்கு. வாய்க்கால்ல சித்தெ எறங்கி அலம்பிப்புடுறேம்!"ன்னு
சொல்லி சட்டுபுட்டுன்னு அலம்பி முடிச்சாரு பெரியவரு. அலம்பி முடிச்சார்ரோ இல்லியோ
வேக வேகமா நடையக் கட்ட ஆரம்பிச்சாரு. அரையில ஒரு வேட்டியும், ஒடம்புல காதியில எடுத்த
ஒரு பனியனும், தலையில ஒரு துண்டுந்தாம் இருந்துச்சு. தலையில இருந்த துண்ட உருவி போற
வழியிலயே கையி, கால நடந்துக்கிட்டெ வேகம் தடைபடாம தொடைச்சிக்கிட்டாரு. பெரியவரு நடைக்குச்
சுப்பு வாத்தியாரு ஓட வேண்டியதா இருந்துச்சு.
வயலுக்கான ரோடு முடிஞ்சி ஊருக்கான தெரு
ரோடு வந்து ஏறுனவரு திரும்புற மொனையில இருக்குற சின்னவரு வூட்டுல அவரு பாட்டுக்கு
உள்ள நொழைஞ்சிப் போயி பாத்தாரு. சின்னவரோட வூட்டுல காலடி எடுத்து வெச்சு ரொம்ப
நாளு ஆவப் போவுது பெரியவருக்கு. பக்கத்துலயே தம்பிக்கார்ரேம் வூடு இருந்தாலும் இப்பத்தாம்
காலடி எடுத்து வைக்கணும்னு அவருக்கு எழுதியிருக்கு. திண்ணையில உக்காந்திருந்த சின்னவரு
அண்ணங்கார்ரேம் வந்ததப் பாத்து எழுந்து நின்னதுதாம். வேற ஒரு வார்த்தெ பேசல. ரசா அத்தைத்தாம்,
"யத்தாம்!"ன்னு ஒரு கேவல் கேவுனுச்சு.
"ஒண்ணும் வெசனப்படாதே!"ன்னு
கார்த்தேசு அத்தானை போர்வைய வெலக்கி வுட்டுப் பாத்தாரு பெரியவரு. நெத்தி, கன்னம்,
நெஞ்சு, கையி, காலுன்னு ஒரு எடம் வுடாம தொட்டுத் தொட்டுப் பாத்தாரு.
"கஷாயம் வெச்சிக் கொடுத்தீயா ஆயி,
பொரி அரிசிய வறுத்து, சுக்கு, மெளவு, திப்பிலிய எல்லாத்தையும் ஒடைச்சிப் போட்டு,
ஆடாதொட, வேப்பிலையப் போட்டு கொதிக்க வெச்சி?"ன்னாரு பெரியவரு.
"இல்லத்தாம்! ஒண்ணுத்தையும் சாப்புட
மாட்டேங்றாம். கருக்கலங்காட்டித்தாம் பட்டணம் போனவேம் வந்தாம்!"ன்னுச்சு ரசா
அத்தை.
"ஏங் கண்ணு! இந்த வாச வழியாத்தானே
காலங்காத்தால வயக்காட்டுப் பக்கம் போறேம். செரி ஒரு வேள போறதெ கவனிக்கல, வயக்காடு
ஏழு கடல் தாண்டியா இருக்கு? வூட்டுல ஒரு பயல வுட்டு அனுப்பி வுட்டா ன்னா சேதியச் சொல்ல?
யம்பீ அஞ்ஞ ஊர்லேந்து வந்து நம்மள வயக்காட்டுக்கு ஓடியாந்துக் கூப்ட்டு வருது! செரி
நம்மகிட்டெ சொல்ல வாணாம். யக்கா பக்கத்துல ஒரு வேலி தாண்டுன்னா இருக்குல்லா. ஒரு சத்தம்
கொடுத்தா ஓடியாந்திடாதா?"ன்னாரு பெரியவரு.
"யத்தாம் பேசுறதுக்கு நேரமில்லெ.
பயல தூக்கிட்டுக் கெளம்ப வேண்டித்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"கை வைத்தியமா கொஞ்சம் பண்ணிப் பாப்போமா?"ன்னாரு
பெரியவரு.
"அதுக்கான்ன காலங் கெடந்துட்டு யத்தாம்!
பயெ ரொம்ப நாளா வெவரம் தெரியாம ஏதேதோ மாத்திரைய முழுங்கிட்டுக் கெடந்திருப்பாம் போலருக்கு.
சாப்புடாம வேற கெடக்காம். மயங்கிட்டான்னா செருமமாப் போயிடும். முங்கூட்டியே முழிச்சிக்கிடுறதுதாங்
நல்லது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
*****
No comments:
Post a Comment