30 May 2020

துளியில் நனையும் கடல்

துளியில் நனையும் கடல்

            சீனாவிலிருந்து வந்ததில் வழக்கம் போல் கொரோனா சோதனைக்கருவிகள் தரமற்றவைகளாகி விட, கொரோனா கிருமி மட்டும் எப்படியோ தரமாகப் போய் விட்டது.
*****
            முதலில், உற்பத்தி செய்யும் மதுபானத் தொழிற்சாலைகளை மூடச் சொல்லாமல் மதுபானக் கடைகளை மூடச் சொல்ல முடியாது.
*****
            மதுக்கடைகளைத் திறந்தால் மட்டும் எப்படியோ கொரோனா பயம் போய் விடுகிறது.
*****
            உழைத்தக் காசில் செய்யப்படும் ஒரு ரூபாய் உதவி எப்போதும் வெளியில் தெரிவதில்லை. கொள்ளையடித்த காசில் செய்யப்படும் ஆயிரம் ரூபாய் உதவிகளே எப்போதும் வெளியில் தெரிகின்றன.
*****
            நியாயமான விலையில் பொருள்களை விற்பவர்கள் மனித சமூகத்துக்கு மாபெரும் உதவியைச் செய்தவர்கள் ஆகிறார்கள். அதுவும் கொரோனா காலத்தில் ஒரு பிடி உப்பை ஒரு பைசா உயர்த்தாமல் நியாயமாகக் கொடுப்பவர்கள் மாபெரும் தர்மவான்கள்.
*****
            அம்மாக்களும் அதையே சொல்கிறார்கள், கொரோனா கிருமியும் அதையே சொல்கிறது, "வீடடங்கி இரு!". இரண்டுக்கும் ஒரே மரபணுதான் போல, தொற்றினால் விடுவதில்லை.
*****
            கொரோனா கிருமி இல்லாத நிலையில்தான் எந்த ஒரு நாடும் துணிந்து சொல்ல முடியும், தங்கள் நாட்டில் China Products இல்லை என்பதை.
*****
            கொரோனா ஊரடங்களிலிருந்து வெளியே வந்தவன் சலூன் கடையையும், மதுக்கடையையும் பார்த்ததில் குழம்பிப் போனான், எந்த கட்டிங்கை முதலில் போடுவதென்று?!
*****
            எப்போதும் வீட்டிலேயே அடைந்துக் கிடக்கும் பெண்களுக்குத்தான் தெரியும், கொரோனா என்பது ஆண்கள் வடிவில் அந்தக் காலத்திலிருந்தே இருக்கும் கிருமியென்பது.
*****
            வீட்டிலேயே நீண்ட காலம் அடைந்த கிடக்க முடியாத மனிதன் ஒருவன்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியும்.
*****
            வாசிப்புப் பயணத்தை எந்தக் கொரோனா கால ஊரடங்கும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. நாள்தோறும் பயணிப்பவர்கள் எந்த பாஸூம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
*****
            சில இசங்களைச் சொல்லி அவை எந்தப் புள்ளியில் சந்திக்கும் என்று கேட்கிறார்கள். அவை எந்தப் புள்ளியிலும் சந்திக்காது. ஏனென்றால் அவை இணைகோடுகள்.
*****
            வாய்மை வெல்வதுமில்லை, தோற்பதுமில்லை. அதற்குப் பொய்மையோடு போட்டிப் போட ஒரு போதும் பிடிப்பதில்லை.
*****
            அறிவுரைச் சொல்பவரோடு ஒன்றி விடுங்கள். அவரைப் போல் தூங்க வைக்கும் வேறோரு மனிதரை இந்த உலகில் பார்க்க முடியாது.
*****
            நம்மை அதிகம் தாங்கிக் கொண்டிருப்பவரை நாம் ஒரு போதும் மதிப்பதில்லை. உதாரணம் செருப்பு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...