31 May 2020

31.0


31.0
            தொடர்ச்சியாக எழுத வேண்டிய ஒரு நாவலை ஓர் இடைவெளி விட்டு எழுதுவது என்பது அபத்தம். அதுவும் அந்த இடைவெளி சிறிது என்று கூறி விட்டு அதை பெரிதாக்கிய குற்றத்திற்கு நாவலாசிரியர் வாசகர்களிடம் மன்னிப்பைக் கோருவதைத் தவிர வழியில்லை. அநேகமாக இந்த நாவல் என்னது என்பது குறித்து வாசகர்கள் மறந்திருக்கலாம். அது நல்லது. நல்லது என்றால் மிகவும் நல்லது. எந்த ஒன்றும் நினைவில் இருப்பதைப் போன்ற சுமை வேறெதுவும் இல்லை. உங்களை மறதியில் தள்ளி இந்த நாவல் தன்னைத் தானே விடுவித்திருந்தால் அதற்காக நீங்கள் இந்த நாவலுக்கு நன்றிச் சொல்லத்தான் வேண்டும்.
            உலகில் இருக்கும் மோசமான நாவல்கள் செய்யும் மோசமான வேலையை இந்த நாவல் செய்யாது. ஒரு சோகத்தை உங்கள் மனதில் சுமக்க வைப்பதையோ, உற்சாகத்தை உங்கள் உள்ளுக்குள் அள்ளி நிரப்புவதையோ, ஒரு பாரத்தை உங்கள் நெஞ்சாங்கூட்டில் போட்டு வைப்பதையோ செய்யாத உன்னத நாவலாக இதை நீங்கள் பார்க்கலாம்.
            இந்த நாவலை முன்பு தொடர்ச்சியாகப் படித்ததெல்லாம் மறந்து போயிருந்தால் அதற்காக நீங்கள் முன்பு சென்று படித்து விட்டு இப்போது இந்த இடத்திலிருந்து தொடர வேண்டியதில்லை. இந்த நாவலை நீங்கள் எந்த இடத்திலிருந்தும் தொடரலாம். இந்த நாவலின் பெயரே வாசகர்கள் பல நாள் வாசித்த பின்புதான் வெளியானது. பல நாட்கள் பெயரற்ற நாவலாக வாசிக்கப்பட்ட இந்த நாவலின் தலைப்பு மறந்திருந்தால் அதுவும் நல்லதுதான். அப்படி மறந்திருந்தால் உங்களைப் பொருத்த வரையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம். அதுதான் வேண்டும். தாக்கம் என்பது மோசமானது. அது தாக்குதலை விட மோசமானது.
            நாவலின் தாக்கம் என்பது நாவலைப் பின்பற்றும் பல மனநோயாளிகளை உருவாக்கியிருக்கிறது. மனநோயாளிகள் பாவம், சிறைபட்ட கைதிகளைப் போல. அவர்களுக்கான சிறைகள் யாராலும் கட்டப்படுவதில்லை, அவர்களே கட்டிக் கொள்வது. அதற்குப் பெரும்பாலான நாவல்கள் செங்கற்களை வழங்கியிருக்கின்றன. மாறாக இந்த நாவல் கட்டிய கட்டடங்களை உடைத்தெறியும் ராட்சச எந்திரத்தைப் போன்றது.
            கட்டுவது நீண்ட கால செயல்முறை, உடைத்தெறிவது சில மணி நேர செயல்துறை என்றுதானே நினைத்திருக்கிறீர்கள். அதுதான் தவறு. மனதைப் பொருத்த வரையில் அது அப்படியே உல்டா. கட்டியது சில நொடி செயல்முறையாக இருக்கும். அதை இடித்தெறிவது என்பது நீண்ட கால செயல்முறை. என்றாலும் அது மின்னலைப் போல சில நொடிகளுக்குள் நிகழக்கூடியது. அப்பிடி நிகழ நெடுங்காலம் பிடிக்கும். ஏனென்றால் ஒரு மின்னல் உருவாவதற்கு பூமியில் இருக்கும் நீரை உறிஞ்சியெடுத்து, மேகத்தை உண்டு பண்ணி, அதை மோத விட்டு என்னென்னவோ வேலைகளை வானம் செய்ய வேண்டியிருக்கிறது. பார்ப்பதற்கு உங்களுக்கு அது சில நோடி நேர வேலையைப் போல தெரிகிறது. அது நீண்ட கால கண்ணோட்டமுடைய செயல் என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லா செயல்பாடுகளும் நீண்ட கால செயல்பாடுகள்தான். விளைவுகள் பட்டென மின்னி மறைபவை. உங்களால் அந்த நீண்ட கால ரசவாதத்தைப் பார்க்க முடியாது.
            மீண்டும் இந்த நாவலின் தலைப்பு குறித்து ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நாவலின் தலைப்பு உங்களுக்கு நினைவு இருந்தால் நீங்கள் அதை நாவலாசியருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறீர்கள். தன்னை மறந்து எழுதும் நாவலாசிரியருக்கு வாசகர்கள் அதை அடிக்கடி நினைவுபடுத்த கடமைப்பட்டவர்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. அத்துடன் வாசிக்கும் நீங்களும், எழுதும் நாவலாசிரியரும் கலந்தே இந்த நாவலைப் படைக்கிறோம் என்பதை எந்த இடத்திலும் அசட்டையாக விட்டு விடக் கூடாது.
            இந்த நாவல் செழுமை அடைய வேண்டும் என்றால் அநேகமாக நீங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வழங்கிய பின் உங்களிடம் ஒன்றும் இருக்காது பாருங்கள். அந்த வெற்றிடம் உண்டாக வேண்டும். அந்த வெற்றிடத்தில்தான் இந்த நாவல் வந்து உக்கார முடியும். இந்த நாவல் மிகப்பெரிய வெற்றிடம். ஆகவே உட்கார மிகப்பெரிய வெற்றிடம் தேவை. அதை உருவாக்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது. இந்த நாவலை அவ்வளவு சீக்கிரமாக முடிக்க நாவலாசிரியர் பிரியப்படவில்லை. அதற்கான பிரதான பயங்களுள் ஒன்று, சீக்கிரமாக முடித்தால் இதை யாரேனும் புத்தகமாகப் போட முயற்சிக்கலாம். அது நடப்பதனால் உண்டாகும் எந்திரங்களின் சத்தத்தைக் கேட்டாலே காதுகள் படபடக்கின்றன. பாவம் அச்சடிப்பாளர்கள் தடக் தடக் படக் படக் சத்தத்தோடு போராடுகிறார்கள். வாசிப்பவர் அந்த இம்சை இல்லாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார் பேரொலிகளை உணரும் பிரக்ஞையில்லாமல்.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...