30 May 2020

பழனியாண்டவா! ஆஞ்சநேயா!

செய்யு - 464

            "இவனெ நடக்க வுட்டா செரிப்படாது. ஒரு ஆட்டோவ பிடிம்பீ!"ன்னாரு பெரியவரு.
            "ஆட்டோவப் பிடிச்சி அப்பிடியே அதுலயே கூட வூட்டுக்குக் போயிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஏம் பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போயி பஸ்ஸப் பிடிச்சிக்கிடலாம்! எம்மாம் காசும்பீ செலவு பண்ணுறது?"ன்னாரு பெரியவரு.
            "பஸ்ஸப் பிடிச்சி ராயநல்லூர்ல எறங்கி பெறவு வேலங்குடிப் போவணும். ரோடு சரியில்ல. அந்த ரோட்டுல வந்துட்டுப் போறதுக்கோ வைத்தியம் பாக்குறாப்புல ஆயிடும். வாணாம் யத்தாம்! ஆட்டோலயே போயிடலாம்! பயலோட ஒடம்பெ வுட காசியா முக்கியம்?"ன்னுட்டாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்த ரண்டு பயலுகள வேற வரச் சொல்லிட்டோமே! பாவம் தண்டமா திரும்புறாப்புல இருக்கு! இப்பிடிக் காரியம் சுலுவா முடியும்ன்னா வந்திருக்க சொல்ல வேண்டியதில்லே. அவனோளும் வந்துட்டுனாவோ. நல்லதாச் போச்சு. போறதுதாங் போறோம். அப்பிடியே கீழ வீதி தேரடி முட்டிக்கிட்டெ போயி பழனியாண்டவர் சந்நிதிக்கும், அப்பிடியே எதுத்தாப்புல ஆஞ்சநேயரு கோயிலுக்கும் போயி பயலுக்கு ஒரு அர்ச்சனையப் பண்ணிப்புட்டா சீக்கிரமா கொணம் கண்டுப்புடுவாம். நம்ம கையில ன்னாம்பீ இருக்கு? நாம்ம தூக்கியாரலாம், டாக்கடருகிட்டெ காட்டலாம். கொணப்படுத்துறது அவ்வேம் நெனைச்சாத்தாம்!"ன்னாரு பெரியவரு கைய மேல காட்டுனாப்புல.
            சுப்பு வாத்தியாரு ஆட்டோவைப் பிடிச்சாரு. பெரியவரு, சுப்பு வாத்தியாரு ரெண்டு பக்கமும் உக்காந்துக்க, கார்த்தேசு அத்தான் நடுவுல உக்காந்துகிட்டது. குமாரு அத்தானும், தாசு அத்தானும் டிரைவரு பக்கத்துல ஆளுக்கொரு பக்கமா உக்காந்துகிட்டாங்க. ஆட்டோ வடக்குவீதியச் சுத்தி பழனியாண்டவர் சந்நிதியில நின்னுச்சு. எல்லாரையும் எறக்கி வுட்டு பெரியவரு அர்ச்சனைத் தட்டு ஒண்ணுத்த வாங்கிக்கிட்டு, கொஞ்சம் வெசாரிச்சாரு, கொஞ்சம் நெதானிச்சாரு. பெறவுத்தாம் எல்லாத்தையும் கூப்புட்டுக்கிட்டு பழனியாண்டவரு சந்நிதியில காலடி எடுத்து வெச்சாரு. பழனியாண்டவரு ராசா கோலத்துல காட்சித் தந்தாரு.  கார்த்தேசு அத்தான் பேர்ல ஒரு அர்ச்சனையப் பண்ணாரு. அர்ச்சனைப் பண்ணி, சாமி தரிசனத்து முடிச்சிட்டு ஒடனே கெளம்பக் கூடாதுன்னு ஒரு அஞ்சு நிமிஷம் எல்லாரையும் உக்காரப் போட்டாரு.
            அப்பிடி உக்காரப் போட்டப்போ பெரியவரு ஒரு சங்கதியச் சொன்னாரு, "பழனியாண்டவரு சந்நிதி இருக்குல்லா ரொம்ப சக்தி வாய்ஞ்சது. பழனியில இருக்குற முருகங் கோயிலுக்கு நெகரானது. அஞ்ஞப் போவ முடியாதவங்க இஞ்ஞயே கும்புட்டுக்கிடலாம். இருந்தாலும் அதுலயும் ஒரு வெசயம் இருக்கு. நெறையப் பேத்துக்குத் தெரியாது. இஞ்ஞ வந்து கோயில்ல பாக்குறப்போ முருகனெ எந்தக் கோலத்துல பாக்குறோமோ அந்தக் கோலத்துக்கு வாழ்க்கை வந்துப்புடும். நீயி வந்து பாக்குறப்போ முருகஞ் செல சோடிக்காம ஆண்டிக் கோலத்தோட இருந்தா ஆண்டியா போயிடுவே! அப்பிடில்லாம்ம சோடிச்சி ராசா கணக்கா முருகஞ் செல இருந்துச்சுன்னா நீயும் அந்தச் செல மாதிரிக்கி ராசாவா போயிடுவே. பழனியாண்டவரு கோயிலுக்கு வர்றப்போ மட்டும் நேரம் காலம் பாத்து சுத்தி நிக்குற ஆளுககிட்டெ கோயில்ல என்னா நடக்குதுன்னு வெசாரிச்சுக் கேட்டுப்புட்டு வெவரம் அறிஞ்ச பின்னாடித்தாம் வாரணும். அது புரியாமா வந்து நின்னுப்புட்டு பழனியாண்டவர் சந்திக்குப் போனேம், அரசனா இருந்த நாம்ம ஆண்டியாயிட்டேம்னு சொல்லப் படாது. ஆண்டியா இருக்குறவெங் அரசனா ஆவுற நேரம் பாத்து வாரணும். அதுலத்தாம இருக்கு சூக்குமம். இப்போ நாம்ம வந்த நேரம் பாத்தியா? நாம்ம அர்ச்சனெ தட்டு வாங்குறப்பவெ வெசாரிச்சிட்டேம். கார்த்தேசு வந்த நேரம் முருகஞ் செல சோடிச்சு எம்மாம் அம்சமா இருந்துச்சு. அதெ பாத்திருக்காம் கார்த்தேசு. இனுமே அவனும் வாழ்ககையில எம்மாம் அம்சமா ராசா கணக்கா வாரப் போறாம் பாரு!"ன்னாரு பெரியவரு.
            சுப்பு வாத்தியாரு அதெ கேட்டுச் சிரிச்சிக்கிட்டாரு. "என்னாம்பீ சிரிப்பு? நாம்ம போய்யிச் சொல்றேம்ன்னு கதெ வுடுறேம்ன்னு நெனைக்குதீயளா?"ன்னாரு பெரியவரு.
            "அப்பிடியில்ல யத்தாம்! நாம்ம செல புத்தகங்கள்ல படிச்சிருக்கேம், முருகனோட ஆண்டிக் கோலங்றது ஞானக் கோலம்ன்னும், சோடிச்சக் கோலங்றது ராசக் கோலம்ன்னும். ராசா மாதிரி அனுபவிக்கிறப்போ ஞானம் கெடைக்காதுன்னும், ஞானம்கெடைச்சி பின்னே ராசா மாதிரி அனுபவிக்கிற மனசு வாரதுன்னும், எதாச்சிம் ஒண்ணுலத்தாம் மனுஷ வாழ்க்கெ நிக்க முடியுங்றதெ காட்டுறாப்புலத்தாம் அதெ பத்திக் கேள்விப்பட்டிருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் செரி! குடும்பத்துல இருக்குற நாம்ம ஆண்டிக் கோலம் போட்டுக்கிட்டு ஞானந்தாம் பெரிசுன்னு போயிட முடியுமா? ராசா மாதிரிக்கி இருந்தாத்தாம் புள்ளீயோள வளத்து ஆளாக்கலாம், நாலு பேத்து மின்னாடி எப்பிடி குடித்தனம் பண்றேம்ன்னு பெருமெ பேசலாம்! தொறந்து போறவங்களுக்கு ஒரு கோலம், குடித்தனம் பண்ண போறவங்களுக்கு ஒரு கோலம்ன்னு ரெண்டு கோலத்துலயும் நின்னு ரண்டு பேத்துக்குமே காட்சித் தர்றவேம் முருகன்னுத்தாம் நாம்ம அதெ அர்த்தம் பண்ணிக்கிடணும். நாம்ம முருகனோட ராசா கோலத்தத்தாம் பாக்க நெனைக்கணும். இதோட அர்த்தம் என்னான்னா, எங்கனாச்சும் போனா சட்டுபுட்டுன்னு எதுலயும் உள்ளார நொழைஞ்சிடக் கூடாது? நெலமெ எப்பிடி என்ன மாதிரி இருக்குங்றதெ அனுமானிச்சிக்கணும், வெசாரிச்சிக்கணும், பெறவுத்தாம் காலடி எடுத்து வைக்கணுங்றதுதாம் பழனியாண்டவர் சந்நிதி சொல்ற சேதி. கோயிலுக்கே இப்பிடின்னா, தெய்வத்தெ பாக்க வாரப்பயே இப்பிடி இருக்குன்னா ஒரு வூடு, வேலன்னு போறப்போ எததெ எப்பிடி இருக்குன்னு மொதல்ல வெசாரிச்சிக்கணும். பெறவு அடியெடுத்து வெச்சோம்ன்னா ராசா மாதிரிக்கி இருக்கலாம்லா!"ன்னாரு பெரியவரு.

            "ஏம் மாமா முருகனுக்கு வள்ளி, தேவானன்னு ரண்டு பொண்டாட்டில்லா. அதுக்கு என்னா அர்த்தம்?"ன்னுச்சு இப்போ கார்த்தேசு அத்தான் கொஞ்சம் வேடிக்கையான மனநெலைக்கு வந்தாப்புல.
            "ரண்டு பொண்டாட்டியக் கட்டுனாலும் குடும்பமா ரண்டையும் வெச்சு ஒத்துமையா இருக்கணுங்றதுதாம் அர்த்தம். ரண்டு பொண்டாட்டின்னு ரண்டு குடித்தனம் பண்ணக் கூடாது. குடித்தனங்றது ஒண்ணுத்தாம். நம்மக் குடும்பத்தையே எடுத்துக்கோ. ரண்டா பிரிஞ்சிக் கெடக்குறேம். எங் குடும்பத்துல அஞ்சு சிங்கப் புள்ளீயோ, ஒங் குடும்பத்துல ரண்டு சிங்கப் புள்ளீயோ. ஏழு சிங்கப் புள்ளீயோ இருக்குறதுக்கு ஊருல எப்பிடி இருக்கணும்? ஊரையே நாம்மத்தானே ஆளணும். ஆன்னா பிரிஞ்சுல்லா கெடக்குறேம். அப்பிடிக் கெடக்கக் கூடாதுங்றதுதாம் அர்த்தம். முருகனெ பாரு எஞ்ஞப் பாத்தாலும் வள்ளி தேவானையோடத்தாம் பாக்கலாம். சரி சமமா வெச்சி நிப்பாரு. அவரு அப்பங்கூட சிவனாரு புள்ளே பார்வதிய வெச்சிருக்கிறது தெரியும், கங்கய வெச்சிருக்கிறது வெசயம் தெரிஞ்சவுங்களுக்த்தாம்தெரியும். பெருமாளுப் புள்ளைய எடுத்துக்கிட்டாலும் சீதேவிய வெச்சிருக்கிறது தெரியும், பூமா தேவிய வெச்சிருக்கிறது வெசயம் புரிங்சவங்களுக்குத்தாம் தெரியும். முருகப் புள்ளே அப்பிடில்ல. இந்த வெசயத்துல அப்பனுக்கே பாடம் எடுத்தவருல்லா! அவரு மாதிரிக்கி ரண்டு பொண்டாட்டில்லாம் கட்டிக்கணும்னு நிக்காதே. ஒண்ணு போதும். அண்ணம் தம்பிகளோட அந்தபடிக்கி ஒத்துமையா இரு. அதுதாங் வெசயம்! ஒனக்குந்தாம் கலியாண வயசு ஆவப் போவதுல்லா. சொல்ல வேண்டிய வெசயம்தான்னு!" ன்னாரு பெரியவரு கண்ண அடிச்சிக்கிட்டே.
            "யத்தாம் ஆட்டோ வேற கெடக்குது. நேரம் ஆயிட்டே போவுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் செரி! பேச்சுல பிடிச்சா இப்பிடித்தாம். ஆன்னா இந்தப் பேச்சுதாம்பீ கொணம்ங்றது. அத்துத்தாம் கொணம் காணப் பண்ணும். மனசெ வுட்டுப் பேசிப்புபட்டாவே ஒடம்புல ஒண்ணு தங்காது. நோயி நொடில்லாம் ஓடிப்போயிடும். அப்பிடியே ஒரு எட்டு எதுத்தாப்புலத்தானே ஆஞ்சநேயரு கோயிலுக்கு போயிட்டுக் கெளம்பிடலாம் சட்டுபுட்டுன்னு!"ன்னாரு பெரியவரு.
            "ராசா கோலத்துக்கு முருகனெ பாத்தாச்சு! கார்த்தேசு ராசாவாப் போறாம். யடுத்து பெரம்மச்சரியக் கோலத்துக்கு ஆஞ்சநேயரா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டெ.
            "அங்கத்தாம் யம்பீ தப்புப் பண்றீயே! புத்தகத்தெ படிச்சவம்லாம் இப்பிடித்தாம் எகனைக்கு மொகனையா இருக்கீயே! அத்துவா அர்த்தம் அதுல. ராமன் சீத்தா குடித்தனத்துக்கு ஒத்தாசியா இருந்தது யாரு? ஆஞ்சநேயருதானே. ரண்டு பேத்தையும் ஒண்ணு பண்ணது யாரு? ஆஞ்சநேயருதானே. அப்பிடி இருக்கணுங்ற பாடத்தெ படிக்கணும். இந்த ஊர்லத்தாம்பீ இப்பிடி டாக்கடர்ர பாத்துட்டு கோயிலப் பாக்கலாம். எந்த ஊர்லயும் இல்லாத விசேசம் இத்து, டாக்கடரும், சாமியும் ஒண்ணா இருக்குறது. அத்துல ஒரு விசயத்தெப் பாரு! லங்கா யுத்தத்துல ராமனும், லட்சுமணனும் மயங்கிப் போயிடுறாங்க. அப்போ சஞ்சீவி மூலிகையக் கொண்டாந்தாத்தாம் ரண்டு பேத்தையும் பொழைக்க வைக்கலாங்ற நெலமெ. அதெ கொண்டாந்து பொழைக்க வெச்சது யாரு? ஆஞ்சநேயருல்லா. அதால ஒருத்தெம் என்ன நெலமையில கொணமாவ முடியா நெலையில இருந்தாலும் செரித்தாம் ஆஞ்சநேயான்னு போயிக் கால்ல வுழுந்துட்டா போதும், அவரு பாத்துப்பாரு. எந்த சஞ்சீவி மூலிகையெ கொடுக்கணும்னு அவருக்குத் தெரியும். இப்போ அவருதாம் பயலுக்கு முக்கியமான மருந்து. அவரெ ஒரு எட்டுப் பாத்துட்டுப் போயிட்டா வேல முடிஞ்சிது. பெறவு பாரு பய எப்பிடி ஆஞ்சநேயரு மாதிரிக்கி நெஞ்ச நிமுத்திக்கிட்டு நடக்குறாம்னு!"ன்னாரு பெரியவரு.
            பெரியவரு ரோட்டுக்கு குறுக்கால நடந்து ஆஞ்சநேயரு கோயிலுக்குப் போனாரு. எல்லா சனமும் அவரு பின்னாடி சேர்ந்து போனுச்சு. "ஆஞ்சநேயர்ர நல்ல வேண்டிட்டு கொடுக்குற துளசித் தீர்த்தத்தெ வாங்கிக் குடி! வடெ மால சாத்துறேம்ன்னு வேண்டிக்கோ! பெறவு பாருடாம்பீ!"ன்னாரு பெரியவரு. கார்த்தேசு அத்தான் அப்பிடியே பண்ணுச்சு.
            "பேருக்கு சித்தெ உக்காந்து கெளம்புங்க! நேரமாயிட்டு இருக்கு. வடென்னு சொன்னதும்தாம்பீ ஞாபவத்துக்கு வருது பாரு. உளுத்தம் வடைய வுடவா ஒடம்ப பலம் பண்ணுறதுக்கு ஒண்ணு இருக்குங்றே? அத்து ஒண்ணுப் போதும்பீ! ஒடம்பு நல்லா உருண்டு தெரண்டு வந்துப்புடும். சாமிக்கு படையல்ன்னு வெச்சிருக்காங்க பாரும்பீ உளுத்தம் வடெ, மெளகுப் பொங்கலு, கொண்டைக்கடலெ, புளியஞ்சாதம், தயிரு சாதம், இனிப்பு அடெ, சர்க்கரைப் பொங்கலுன்னு. அதாங் ஆகாரம். அதெ பண்ணிப் போட்டாவே போதும்பீ பயெ திமுரிக்கிட்டுக் கெளம்பிடுவாம்!"ன்னு பெரியவரு சொல்றப்பவே கார்த்தேசு அத்தானுக்கு ஒடம்புல ஒரு தெம்பு வந்தாப்புல இருந்துச்சு.
            "இனுமே எத்து பேசுறதா இருந்தாலும் ஆட்டோவ்ல போயிக்கிட்டெ பேசுவோம் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்பாடிகளா மாமாவுக்குக் கோவம் வந்துப்புட்டுடா! வந்து ஏறுங்கடா சட்டுபுட்டன்னு ஆட்டோவுல! ஆஞ்சநேயரு சந்நிதிலத்தாம் ரொம்ப பேச முடியல. ஆஞ்சநேயரு வாயைக் கட்டிப்புட்டாரு. அவரு பேசுற தெய்வமில்லெ, காரியத்துல செஞ்சுக் காட்டுற தெய்வம்ல்லா. அந்தப் படிக்கி இருக்கணுங்றதெ இப்பிடிக் காட்டுறாரு போல, சக்தி வாய்ஞ்ச தெய்வமுல்லா!"ன்னாரு பெரியவரு.
            சனம் ஒவ்வொண்ணும் சட்டுப்புட்டுன்ன கெளம்ப தயாரானுச்சு. எல்லாரும் ஏறுனதும் ஆட்டொ கெளம்புனுச்சு.
            ஆட்டோ கெளம்புனதும் பெரியவரு சொன்னாரு, "யம்பீ! இவுனோள பஸ் ஸ்டாண்டுல எறக்கி வுட்டப்புட்டு பஸ்ல ஏறி வந்துடச் சொல்லிப்புடலாம். பாவம் டிரைவரு யம்பீ செருமப்பட்டு உக்காந்துகிட்டு இருக்கு!"ன்னாரு பெரியவரு.
            அதுபடியே தாசு அத்தானையும், குமாரு அத்தனையும் பஸ் ஸ்டாண்டுல எறக்கி வுட்டுப்புட்டு ஆட்டோ வேலங்குடி நோக்கிக் கெளம்புனுச்சு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...