31 May 2020

நல்லா வருவே! வெசனப்படாதே!

செய்யு - 465

            ஆட்டோ குண்டுலயும் குழியிலயும் விழுந்து ஆடிட்டுப் போற ரம்மியமே தனித்தாம். அப்பிடியே தொட்டில்ல கொழந்தைய வெச்சு தாலாட்டுறாப்புல ஒரு நெனைப்பு வந்துப்புடும். அத்தோட பெரியவரோட பேச்சும் சேந்துப்புட்டா சொல்லவா வேணும். சுப்பு வாத்தியாரு நடந்தக் கதைய இப்பத்தாம் சொல்ல ஆரம்பிச்சாரு பெரியவருகிட்டெ. சொல்ல சொல்ல அதெ பொறுமையா கேட்டுக்கிட்டாரு பெரியவரு.
            "என்னவோ அவ்வேம் அப்பிடி நெனைக்கிறாம்! நம்ம குடும்பத்துலேந்து போயி நல்லா இருந்தா நமக்குத்தானேம்பீ பெருமெ. பட்டணத்துல எவனெவனோ போயி எப்பிடியில்லாம் ஆவுறாம். அந்த எடத்துல நம்ம பயலுவோ அப்பிடி ஆனா அதுல சந்தோஷந்தானே யம்பீ! கிட்டாம் சின்ன புள்ளயிலேந்தே அப்பிடித்தாம். எல்லாத்துலயும் ஒரு படி ஒசத்திங்ற நெனைப்பு. செரி இருந்துட்டுப் போவட்டும். அதுக்காக நம்ம பயலுக எல்லாம் அஞ்ஞத்தான கெடக்குறானுவோ! ஒரு வார்த்தெ சொன்னா போயிப் பாத்துக்கிட மாட்டானுவோளா? ஏம்டா கார்த்தேசு அங்க கெடக்குறதுல்லாம் ஒம்மட அண்ணங்காரனுவோ, தம்பிக்காரனுவோத்தானெ. மலரு யக்கா இருக்கு, அத்தான் கெடக்குறாரு. அப்பிடியே அரும்பாக்கத்துல ஒரு எட்டு வெச்சிருந்தா ன்னா?"ன்னாரு பெரியவரு.
            "யப்பாத்தாம் வாணாம்னுச்சு! அதாங் யோசிச்சேம் பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "நீயி ஒஞ்ஞ அப்பம் போல ஒரு ஆளுடா. அரும்பாக்கத்துல போயி பாக்குறது இஞ்ஞ வேலங்குடிக்குத் தெரியுதாக்கும்? போயிப் பாத்தீன்னா அப்பிடியா ஒன்னய ஒண்ணுந் தெரியாதவேம் மாதிரியா வுட்டுப்புடுவானுவோ? ஏம்டா இப்பிடி இருக்கீயே? ஏத்தோ நமக்குள்ளுத்தாம் இப்பிடி ஆயிக் கெடக்குதுன்னா, சின்னப் பயலுவோ நீஞ்ஞல்லாம் ஒண்ணடி மண்ணடியுமா கெடக்குறதில்லையா?"ன்னாரு பெரியவரு.
            "நமக்கு அஞ்ஞ அண்ணனோட அட்ரஸ்ஸூ தெரியாதுல்ல பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "சென்னைப் பட்டணம் போறதுக்கு மின்னாடி நம்மள தெரியாம வந்துப் பாத்திருந்தா ஒரு சிட்டுல எழுதிக் கொடுத்திருக்க மாட்டேனா? அவ்வேம் போனுல்லாம் வெச்சிருக்காம். அந்த நம்பர்ர சொல்லிருந்தா கூட ஞாபவத்துல வெச்சிருக்க மாட்டீயா நீயி? இப்பிடி இருந்திருக்கீயேடா?"ன்னாரு பெரியவரு.
            "இன்னொரு வெசயம் பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "சொல்லு!"ன்னாரு பெரியவரு.
            "சந்தானம் அண்ணன் நம்மள ஒரு தவா எழும்பூர்ல வெச்சுப் பாத்துச்சு பெரிப்பா. அண்ணன் ராஜ்தூத் பைக்ல போனப்ப எதேச்சையா நம்மளப் பாத்துட்டு நம்மள கூப்புட்டு நெருங்கி வந்துச்சு. நாம்ம பாக்காத மாதிரிக்கி கூட்டத்துல கலந்துப் போயிட்டேம் பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "அறிவுக் கெட்ட பயலே! அக்கப்போரு! அதாங் பார்ரேம்! சந்தானம் பாத்திருக்காம்லா. ஒமக்கு வர்ற ஆபத்து தெரியப் போயி கண்ணுல பட்டுருக்காம்லாம்டா. நீயி ஓடி ஒளிஞ்சிக்கிட்டா அவ்வேம் என்னடா பண்ணுவாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு கொஞ்சம் காட்டாம.
            "அட போடா கிறுக்குப் பயெ புள்ளே! அதாங் பாத்திருக்காம், கூப்புட்டுருக்காம். அப்பவாச்சும் அவனெ பிடிச்சிக்கணுமா இல்லியா? சந்தானம் அஞ்ஞ பட்டணம் பூரா சுத்தி வந்துப்புடுவாம். அதாங் நீயி எஞ்ஞ இண்டு இருக்குல இருந்தாலும் ஒன்னயப் பாத்திருக்காம இருக்க மாட்டான்னேன்னு மனசுல நெனைக்குறேம். நீயும் அதுக்குத் தகுந்தாப்புல சேதி சொல்றெ பாரு. அவனெப் பாத்துப் பேசிருந்தீன்னா அஞ்ஞ மலரு யக்கா வூட்டுல கொண்டு போயி வெச்சிருப்பாம். வூட்டுச் சாப்பாடு. நல்ல தண்ணி. ஒடம்புக் கெட்டுப் போயிருக்காது. அவனெ பாத்து ஒன்னய ஒரு நல்ல எடமாவும் வேலையில சேத்து வுட்டுருப்பாம்! நாம்ம இப்போ அவ்வேனுக்குப் போனு பண்ணல. பண்ணிருந்தா சொல்லிருப்பாம். அதாம்னே பாத்தேம் ஆண்டவனா பாத்து காப்பாத்தி வுட நெனைச்சாலும் இவுனுவோ பிடிச்சிக்க மாட்டானுவோ போலருக்கே! இப்பிடிப் பண்ணிட்டு வந்து நிக்குதீயே? இப்ப ஒடம்ப வுட்டுப்புட்டீயே! என்னத்தெ பண்ணுவே? ஒடம்பு இருந்தாத்தானே ஒழைச்சிச் சம்பாதிக்கலாம்! சம்பாதிக்கிறது எதுக்குடா? ஒடம்புக்குத்தானே. அதெ வுட்டுப்புட்டுச் சம்பாதிக்கிறானாம் சம்பாதிப்பு? பாருங்கம்பீ! இவுனுவோல்லாம் எப்பிடி இருக்கானுவோ?"ன்னு சுப்பு வாத்தியார்ர பாத்துச் சொன்னாரு பெரியவரு.
            "நாம்ம சின்னத்தாம்கிட்டெ சொல்லிட்டேம் யத்தாம்! எதெயும் அப்போ உள்வாங்குற நெலையில யில்ல. அதாங் கதையெல்லாம் சொன்னேம்ல. இதெ மனசுல வெச்சிக்கிட்டு இத்து மாதிரி எதாச்சிம் ஆயிப்புடும்னுத்தாம் நெனைச்சி அப்போ சொன்னேம். எந்த நேரத்துல சொன்னேன்னோ அப்பிடியே ஆயிப் போயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அவ்வேம் பேச்சுல்லாம் கேக்கக் கூடாதும்பீ! நீஞ்ஞளாவது நம்மகிட்டெ ரகசியமா ஒரு வார்த்தெ சொல்லிருந்தா அவ்வேம் சந்தானத்தெ வுட்டு சென்னைப் பட்டணத்தைச் சல்லடைப் போட்டு சலிச்சாவது பிடிச்சாந்து வூட்டுல போட்டுக்கடான்னு சொல்லிருப்பேம்! எஞ்ஞ நீஞ்ஞளுந்தாம் சொல்லல. பெறவு என்னத்தெ பண்ணுறது?"ன்னாரு பெரியவரு.
            "போனது போயாச்சு! அதெ வுடுங்கத்தாம்! மேக்கொண்டு ஆவுறதெப் பத்தித்தாம் பேசியாவணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒடம்பு கொணம் காணட்டும் யம்பீ! நாமளே சந்தானத்துக்குப் போன போட்டு வேலங்குடிக்கு வாரச் சொல்லி இவனெ பயலெ அழைச்சிட்டுப் போவச் சொல்றேம். அஞ்ஞ கொஞ்ச நாளைக்கி மலரு வூட்டுலத்தாம் இவனெ வுடணும். பெறவு வேணும்ன்னா சந்தானத்து ஆபீஸ்லயோ, பயலுவோ ரூம்லயோ தங்கிடட்டும். அதாஞ் செய்யணும்!"ன்னாரு பெரியவரு.

            கார்த்தேசு அத்தான் ஒண்ணுஞ் சொல்ல முடியாம தவிச்சுப் போச்சு.
            "நாம்ம கூட இருந்த வரைக்கும் ஒங்கப்பனுக்குப் பாத்துப் பாத்துத்தாம் செஞ்சி வெச்சேம். இப்போ பிரிஞ்சிப் போயி நிக்குறாம். பிரிஞ்சிப் போனதோட நிக்காம நம்மளோட எதிரிப் போட்டுக்கிட்டு வேற நிக்குறாம். இந்தக் கூத்தெ நாம்ம எஞ்ஞப் போயிச் சொல்ல? செரித்தாம் கழுதெ கெட்டா குட்டிச் சொவர்ன்னு விட்டுப்புட்டேம்! இப்போ புள்ளய இப்பிடிப் பண்ணி வெச்சிருக்காம்னே! அதெ நெனைச்சாத்தாம்பீ நமக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது!"ன்னாரு பெரியவரு.
            "அதெ வுடுங்கத்தாம்! எல்லாம் நல்லதுக்குன்னு நெனைச்சுக்குங்க. இப்பிடி ஒரு சம்பவம் நடக்கலன்னு வெச்சுக்கோங்க, சின்னத்தான்ன யாரு வழிக்குக் கொண்டார முடியும்னு நெனைக்குறீங்க? கெட்டதுலயும் ஒரு நல்லதுங்ற மாதிரிக்கி, இனுமே இவனுவோ தலைமொறையாவது ஒண்ணா கெடந்துட்டுப் போறானுவோ. வெளி எடத்துல, பெறத்தியாருக்கு மின்னாடி ஒண்ணா இருந்தாத்தான மதிப்பு. அப்பத்தான நம்மள நாலு பேத்து மதிப்பாம். இப்பிடி ஒத்த மரமா நின்னா தூக்கிப் போட்டுத்தாம் மிதிப்பாம். அதாங் பாருங்களேம் ஒடம்பு முடியாதவனெ சென்னைப் பட்டணத்துலேந்து ஒத்தையா ரயிலேத்தி அனுப்பி வுட்டுருக்கானுவோளே கூட இருந்த பயலுவோ? வழியில எஞ்ஞயாச்சும் மயங்கி வுழுந்து கெடந்தான்னா என்னாவுறது நெனைச்சிப் பாருங்க யத்தாம்? நல்ல வேளையா அப்பிடில்லாம் ஒண்ணும் நடக்காம வூடு வந்து சேந்திருக்காம் பயெ! அதெ நெனைச்சித்தாம் திருப்திப்பட்டுக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் செரிடாம்பீ! சென்னைப் பட்டணத்துல எஞ்ஞடா கெடந்தே நீயி?"ன்னாரு பெரியவரு கார்த்தேசு அத்தானப் பாத்து.
            "எழும்பூரு பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "அதாம்பீ! நாம்ம ரயிலுல போயி எறங்குவோம்ல!"ன்னாரு பெரியவரு சுப்பு வாத்தியார்ர பாத்து.
            "தெரியுது யத்தான்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நடந்தது நடந்துச்சு. இனுமே ஒனக்கு எல்லாம் நல்ல காலந்தாம். நீயி சந்தானத்தோட வேல பாத்தாலும் செரித்தாம், யில்ல நீயி படிச்சப் படிப்புக்கு ஏத்த மாதிரிக்கி வேலையில இருக்குறதுன்னாலும் செரித்தாம், அதெ சந்தானம் பாத்துப்பாம். மாரி, ராமு, சுப்புணின்னு எல்லா பயலும் அஞ்ஞத்தாம் போயிக் கெடக்குறானுவோ. ஒண்ணுக்கு நாலா தொணையா இருப்பானுவோ. நீயும் அவனுவோ கூட கெடக்கலாம். அவனுவோளும் ஒங் கூட கெடப்பானுவோ. அஞ்ஞ ரூமு ஒண்ணுத்தெ எடுத்துக்கிட்டு எல்லா பயலும் மலரு அக்கா வூட்டுலத்தாம் சாப்புட்டுக்கிறானுவோ. ஒன்னய வேணும்னாலும் ஒடம்பு முடியாம தேறுறதால மலரு யக்கா வூட்டுலயே போட்டுப்புடுவேம். ஒமக்கென்னடா மவராசம்டா! நல்ல வருவே வா!"ன்னாரு பெரியவரு.
            இதையெல்லாம் கேக்க கேக்க கார்த்தேசு அத்தானுக்குக் கண்ணுல தண்ணிக் கோத்துக்குது. கன்னத்துல தண்ணியா வழியுது. பெரியவரு அதெ பாத்துட்டு தொடைச்சி வுடுறாரு.
            "அழாதடாம்பீ! ஒமக்கு எல்லாம் இனுமே எப்பிடி நடக்குதுன்னு பாரு! நீயும் சென்னைப் பட்டணத்துக்குப் போயி தம்பியையும் அழைச்சுக்கோ! நம்ம வேலங்குடியிலேந்து எத்தனெ பேரு அஞ்ஞ சந்தானத்துக்கிட்டெ போயி என்னமா சம்பாதிச்சிட்டுக் கெடக்கானுவோ? என்னம்மா வளந்து நிக்குறானுவோ? எவனெவனுக்கோ செய்யுறப்போ தம்பிக்காரனுக்குச் செய்ய மாட்டானாடா என்னடாம்பீ? எதுக்குடாம்பீ நீயி வெசனப்படுறே? பழனியாண்டவரு இருக்காரு, ஆஞ்சநேயரு இருக்காரு ஒன்னயப் பாத்துக்கோ!"ன்னு பெரியவரு சொல்லி முடிச்சாரு.
            இவுங்க பேசிட்டு இருக்குறதுக்கு இடையில இப்படிப் போங்க, அப்பிடி திருப்புங்கன்னு சுப்பு வாத்தியாரு வழியச் சொல்லிட்டு வர்றாரு. ஆட்டோ ட்ர்ருட்டு டர்ருட்டுன்னு சத்தத்தெ கேக்க வுட்டுப்புட்டு அது பாட்டுக்குப் போயிட்டு இருக்கு. பேச்சும் ஓடிட்டு இருக்கு. முடிவா இப்போ ஆட்டோ வேலங்குடி சின்னவரு வூட்டுக்கு மின்னாடி நின்னுச்சு.
            ஆட்டோ நின்னு சுப்பு வாத்தியாரு எறங்கி, கார்த்தேசு அத்தான் எறங்குது. அதுக்குப் பெறவு பெரியவரு எறங்குறாரு. இதெப் பாத்துப்புட்டு சின்னவரு ஓடியாந்து மவனெ கட்டிப் பிடிச்சிக்கிறாரு. ரசா அத்தையும் வெளியில வந்துடுச்சு.
            "ஆஸ்பத்திரியில என்னாம்பீ சொன்னாங்க? டாக்கடரு என்னாம்பீ சொன்னாரு?"ன்ன தழுதழுக்குறாரு சின்னவரு சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
            "உள்ள வாஞ்ஞ மொதல்ல. உக்காந்து நெதானமாப் பேசுவோம். ஆட்டோக்கார யம்பீ உள்ள வார்றது? ஒரு வாயி டீத்தண்ணியக் குடிச்சிட்டுக் கெளம்பலாம்!"ன்னாரு பெரியவரு.
            "நூத்து இருவது ரூவாயக் கொடுத்து முடிச்சீங்கன்னா அடுத்தச் சவாரியப் போயிப் பாப்பேம் பெரியவர்ரே!"ன்னாரு ஆட்டோ டிரைவரு.
            "நூத்து இருவது ரூவாயா? நூத்து ரூவாத்தாம்!"ன்னாரு பெரியவரு.
            "வெயிட்டீங்கலாம் போட்டீயேல்லா! அரை நாளு ஆக்கிப் பூட்டீங்க. சவாரி போயிடுச்சு. ஒடம்பு முடியாம அழைச்சிட்டு வார்றீங்கன்னுத்தாம் கொறைச்சிச் சொல்றேம்!"ன்னாரு ஆட்டோ டிரைவரு.
            "நூத்து ரூவாயக் கொடுங்கம்பீ!"ன்னாரு பெரியவரு சுப்பு வாத்தியார்ரப் பாத்து. சுப்பு வாத்தியாரு சட்டைப் பையிலேந்து நூத்து ரூவாய் நோட்டு ஒண்ணுத்தையும், இருவது ரூவாயி நோட்டு ஒண்ணுத்தையும் எடுத்துக் கொடுத்தாரு. ஆட்டோ டிரைவரு அதெ வாங்கிட்டு சந்தோஷமா, "ரொம்ப நன்றிங்க அண்ணாத்தே!"ன்னு சொல்லிட்டுக் கெளம்பிட்டாரு.
            பெரியவரு சுப்பு வாத்தியார்ர ஒரு பார்வைப் பாத்தாரு பாருங்க, அதுக்குச் சுப்பு வாத்தியாரு, "சந்தோஷமா போவட்டும் யத்தாம்! நம்மள்ல ஒருத்தரு போல கெடந்திருக்காரு! நம்ம பயெ கொணம் கண்டா போதும்!"ன்னாரு.
            "கொடுக்குறதுன்னு முடிவெ பண்ணிப்புட்டே! பெறவு நாம்மச் சொல்லியா கேக்கப் போறே?"ன்னுட்டு பெரியவரு எல்லாத்தையும் உள்ளார அழைச்சாந்து, சாமி மாடத்துக்கு மின்னாடி வாங்கியாந்த மருந்து மாத்திரை, ஆர்லிக்ஸ் பாட்டிலு எல்லாத்தையும் எடுத்து வெச்சாரு. "யப்பா பழனியாண்டவா! நீந்தாம் எல்லாத்தியும் காபந்து பண்ணி வுடணும். ஆஞ்சநேயா நீந்தாம் எல்லாத்துக்கும் மனசுல தெம்ப கொடுக்கணும்! ஆஸ்பிட்டலுக்குப் போயாச்சு. டாக்கடர்ர பாத்தாச்சு. கொணம் பண்ணிப்புடலாம்ன்னு மருந்து மாத்திரையல்லாம் எழுதிக் கொடுத்துட்டாரு. நேரா நேரத்துக்கு அதெ சரியா கொடுக்கணும். ந்நல்ல சத்தான ஆகாரமா பண்ணிக் கொடுத்தாவணும். இப்போ கொஞ்ச நாளுக்குச் சாப்பாடு எறங்காதாம். கஞ்சித் தண்ணி, இட்டலி, இடியாப்பம்னுத்தாம் கொடுத்து ஆர்லிக்ஸூத்தாம் ஆத்திக் கொடுத்தாவணும். அதுக்குப் பெறவு ஒடம்பெ தேத்தியாவணும். என்னத்தெ பண்ணணுங்றதெ நாம்ம சொல்றேம். நாமளெ வந்துப் பண்ணிக் கொடுக்குறேம்!"ன்னு சொல்லிக்கிட்டே, பழனியாண்டவர் சந்நிதியில மடிச்சி எடுத்தாந்த விபூதியை எல்லாரு நெத்தியிலயும் பூசி வுட்டாரு பெரியவரு. 
            சின்னவரு ஒண்ணும் பேசல. அப்பிடியே நெடுஞ்சாண்கிடையா பெரியவரு கால்ல வுழுந்தாரு. பெரியவருக்குக் கண்ணு கலங்கிட்டு. "நாம்ம அப்பங்கார்ரனா இருந்து என்னத்தெ புண்ணியம்? நீந்தானே நம்மட தானத்துல நின்னுப் போயிச் செய்யுறே!"ன்னாரு சின்னவரும் கண்ணு கலங்க இப்பத்தாம் பெரியவருகிட்டெ வாயைத் தொறந்துப் பேசுனாரு.
            "அவ்வேம் நம்மட யம்பீக்குத்தாம் அலைச்சலு! அவ்வேம் இல்லன்னா இஞ்ஞ நம்மக் குடும்பம் யில்ல!"ன்னுச்சு ரசா அத்தை.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...