27 Feb 2020

மவனுக்கு முன்னாடி! மவளுக்குப் பின்னாடி!

செய்யு - 371

            நாட்டியத்தாங்குடி சோசியரு சொன்னதெ வெச்சி மவ்வேம், மவளோட சாதவத்தெப் பத்தி ஒரு கருத்து உண்டாயிருந்திச்சு சுப்பு வாத்தியாருக்கு. அதெ மனசுல அசை போட்டுக்கிட்டே அவரோட டிவியெஸ் வண்டி அந்த கருக்கலான பொழுதுல கொத்தூரை நோக்கிப் போவுது. வடவாதியிலேந்து கொத்தூருக்குப் போறதுன்னா ஒரு அத்துவான தீவுக்குள்ள போறாப்புலத்தாம். ரண்டு பக்கமும் வயலுவெளிகளா இருக்குற பொட்டலுத்தாம் ஊரு. அங்கங்க கொஞ்சம் வூடுக. போயிட்டு இருக்குற ரோடே பல நேரத்துல அநாதியாத்தாம் கெடக்கும் பாவப்பட்ட சென்மத்தப் போல. அதுவும் இந்தக் காலைக் கருக்கல்லன்னா சொல்லவா வேணும்? அங்கங்க மரத்துல இருக்குற குருவிகளோட சத்தமும், வாய்க்கால வரப்புல கெடக்குற தவளையோட சத்தமும், வண்டுபூச்சிகளோட ரீங்கார சத்தமும் அதுக்கு இடையில சுப்பு வாத்தியாரு போற வண்டியோட டர் டுர் சத்தமும்தாம் கேக்குது. இன்னும் கொஞ்சம் பொழுது விடியணும் அந்த ரோட்டுக்கு ஆளு நடமாட்டம் வர. அந்த ரோடே படுத்துத் தூங்கிட்டுக் கெடக்குறாப்புலத்தாம் இருக்கு.
            சங்கு சுப்பிரமணியெம் வூட்ட நெருங்குறப்போ அங்கங்க வூடுகள்ல வாசல் தெளிக்குற பொம்மனாட்டிகள் மட்டும் எழுந்திரிச்சி சாணிய தெளிச்சி கூட்டிட்டு இருக்காங்க. சோசியரு வூட்டுக்கு மின்னாடி லைட் எரியுது. சுப்பு வாத்தியாரு அங்க வண்டிய நிறுத்திச் சுத்திலும் ஒரு பார்வைப் பாக்குறாரு. அங்க கூட்டிக்கிட்டு இருக்குற ஒரு பொம்மனாட்டிச் சொல்றாங்க, "வாத்தியாரய்யாவத்தாம்னா பாக்க வந்திருக்கீங்க! கேட்டைத் தொறந்துகிட்டு உள்ளார போங்க. யோகம் பண்ணிட்டு உக்காந்திருப்பாக."
            அதுக்குச் சுப்பு வாத்தியாரு, "கூட்டமா இருக்கும்னு நெனைச்சேம். ஒருத்தருங் காங்கலியே?" அப்பிடின்னு.
            "ஒரு நாளு அப்பிடியும் இருக்கி. சில நாளு இப்பிடியும் இருக்கி. இதாங் நல்லது. ஒங்களுக்கு யோகம். வெலாவாரியா நல்லா‍ கேட்டுக்கிடலாம். ஒத்த ஆளா அவர்ர பாக்குறது கெடைக்காது. வெரசா போங்க உள்ளார. யாரு வாணாலும் எப்ப வாணாலும் வரலாங்!" அப்பிடின்னு சொல்றாங்க அந்தப் பொம்மனாட்டி.
            டக்குன்னு மஞ்சப் பையில போட்டு வெச்சிருக்கிற சாதக நோட்ட எடுத்துக்கிட்டு உள்ளார நொழையுறாரு சுப்பு வாத்தியாரு. அந்தப் பொம்மனாட்டிச் சொன்னது சரித்தாம். ஒரு மர நாற்காலியில சம்மணத்தெ போட்டு கட்டிக்கிட்டு, கண்ணெ மூடிட்டு, கையி ரண்டையும் ஏதோ முத்திரையில வெச்சிக்கிட்டு உக்காந்திருந்தவரு, காலடிச் சத்தத்தெ கேட்டுகிட்டதும் கண்ணெ தொறந்து பாக்குறாரு. பாத்துப்புட்டு, "வாஞ்ஞ! எந்த ஊரு?"ங்றாரு சங்கு சுப்பிரமணியெம்.
            "நாம்ம சுப்பு வாத்தியாரு. திட்டெ."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "திட்டெயில ஆரு நமக்குத் தெரியாமா வாத்தியாரு? அப்பம் பேரு சொல்லுங்க பாப்பேம்."ங்றாரு சங்கு.  
            "நமக்கு பூர்வீகம் குடவாசலு பக்கத்துல விருத்தியூரு. அப்பா சாமிநாதெம். இஞ்ஞ வாத்தியாரு பொழைப்புக்காக வந்தது!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "சமூகம் ன்னவாம்?"ங்றாரு சங்கு.
            "தச்சுச் சமூகமுங்க"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ன்னா விஷேசம்?"
            "ந்நல்ல விஷேசம்தாம்! மவ்வேம், மவ்வே யாருக்கு முந்திக் கலியாணத்தெ பண்ணலாம்னு பாத்துச் சொல்லணும்!"
            "மவளுக்கு மிந்திக்கிட்டா நல்லது. கட்டத்தத்தாம் பாக்கணும். யாருக்கு மிந்தி யோகமிருக்குமின்னு?"

            மவ்வேன், மவ ரண்டு பேத்தோட சாதக நோட்டையும் மஞ்சப் பையிலேந்து எடுத்து நீட்டுறாரு சுப்பு வாத்தியாரு. அதுல மொத சாதகமா மவனோட நோட்டு இருக்கு. அதெ எடுத்து நொட்டாங்கையில வெச்சிக்கிட்டு, மவ சாதகத்தெ எடுத்து தொடையில வெச்சிக்கிட்டு, சோத்தாங் கையில கட்டெ வெரலா மித்த நாலு வெரல்களயும் தொட்டு தொட்டு அழுத்திக்கிட்டு கணக்கெப் போடுறாரு. ஒவ்வொரு சோசியரும் ஒவ்வொரு கையில கணக்கெப் போடுறாங்க. அவுங்கவங்களுக்குத் தோதுபட்ட கையில போடுவாங்க போல. எழுதுறதுல சோத்தாங்கையில எழுதுற ஆளும் இருக்கு, நொட்டாங்கையில எழுதுற ஆளும் இருக்குல்லா, அந்த மாதிரிக்கிப் போல. சங்குகிட்ட எதுவும் தாளு கணக்குக் கெடையாது. எல்லாம் மனக்கணக்குத்தாம். சட்டுபுட்டுன்னுப் போட்டுப் பாத்தவரு. "இந்நேரத்துக்குக் கலியாணம் முடிஞ்சிருக்கணும்ங்றது கட்டம். பொண்ணு பாக்கலியோ? இன்னிக்குப் பாக்க ஆரம்பிச்சாலும் நாளைக்கிக் கல்யாணத்தெ முடிச்சிடலாம்!"ங்றாரு சங்கு.
            "எந்தத் தெசையிலன்னு சொன்னாக்கா நல்லாருக்கும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "தஞ்சாரூக்குக் தெற்கால. இல்லாட்டி கும்பகோணத்துக்கு வடக்கால. தஞ்சாருக்கு தெற்கால பவரு சாஸ்தியா இருக்கு. அஞ்ஞப் பக்கம் போனீங்கன்னா சட்டுபுட்டுன்னு முடிச்சிடலாங். கும்பகோணமும் தோதுபடும்தாம். தஞ்சாரூ தெக்கால பொண்ணா, கும்பகோணத்து வடக்காலப் பொண்ணாங்றது ஒஞ்ஞ முடிவு!"ங்றாரு சங்கு சுப்பிரமணியெம்.
            "வேற சாதவத்துல..."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "தோஷம் கெடையா. அம்சமான சாதவெம். வேற?"ங்றாரு சங்கு.
            "வேற... அதாங்..."ன்னு சுப்பு வாத்தியாரு கேக்குறப்பவே, "கொழந்தைக் குட்டிகளப் பத்தித்தானே கேக்குறீங்க! அதுவும் இருக்குத்தாம். பொண்ணா போறந்தா நல்லது. பயலா பொறக்குறதெ பத்திக் கேக்க வாணாம். அதெ சொல்றதுக்கில்ல. அத்து செரி பொண்ணு பொறக்குமா? பய பொறப்பானா?ங்றது நம்ம கையிலயா இருக்கு. பொண்ணாவே பொறக்கட்டும்!"ங்றாரு சங்கு.
            "நமக்கு ஆம்பளெ புள்ளே, பொம்பளெ புள்ள ரண்டும் ஒண்ணுதாங்!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "அட்றா சக்கெ. பெறவென்ன? கவலைய விடுங்க. பாத்துக்கிடலாம். அதாஞ் செரி!"ன்னு சொல்லிட்டு ஒரு வெடிச் சிரிப்ப சிரிக்கிறாரு சங்கு.
            "அப்பிடியே பொண்ணோட சாதகத்தயும்..."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பாருங்க சாதவெம் கையில வர்றதெ? பயலோட சாதவெம் மொதல்ல வருது. பொண்ணோட சாதவெம் ரண்டாவதா வருது. அதுலயே வெசயம் இருக்குன்னுத்தாம் நெனைக்கிறேம். பாத்துட்டாப் போச்சி"ன்னு மறுக்கா அப்படியே இப்போ சுப்பு வாத்தியாரோட மவ்வேன் சாதவத்த தொடைக்கி மாத்திக்கிட்டு, நொட்டாங்கையில மடியில வெச்சிருந்த அவரோட போண்ணோட சாதகத்தெ வெச்சிக்கிட்டு சோத்தாங்கையில வெரலால அமுக்கி அமுக்கிக் கணக்கெப் போடுறாரு. போட்டுப் பாத்துப்புட்டு சாதக நோட்ட அப்படியே சுப்பு வாத்தியார்கிட்ட நீட்டிட்டாரு. ஒண்ணுஞ் சொல்லல.
            "பொண்ணோட சாதகத்தெப் பத்தி..." சுப்பு வாத்தியாரு இழுக்க வேண்டியதாப் போவுது.
            "மவ்வேம் கலியாணத்தெ மொதல்ல முடிங்கப் பாக்கலாம். அஞ்சாறு வருஷம் கழிச்சிப் பாத்துக்கிடலாம் இதெ. அவசரம் வாணாம். தாமசமா பண்ண வேண்டிய சாதகம். குறிப்பா சொந்தத்துல பண்ணாம பாத்துக்கிடணும். மாப்புள்ள தானா வருவாம். நீஞ்ஞளா அவசரம் பண்ண வாணாம். அதுவா எல்லாமும் நடக்கும். நீஞ்ஞளா நடத்திட வாணாம்!"ங்றாரு சங்கு.
            "தோஷம் எதாச்சியும் மவ சாதவத்துல?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெல்லாம் இல்லா. அம்சமான சாதவெம். கலியாணத்துல அவசரம் பண்ண வாணாம். அதாங் சொல்லலாம். குறிப்பா சொல்றப்பவே புரிஞ்சிக்கிடணும். மேல நோண்டக் கூடாது. அத்து நமக்குப் பிடிக்காது"ங்றாரு சங்கு சுப்பிரமணியெம். அவரோட முகம் இப்போ மாறிப் போச்சு. அதெ கவனிச்சிட்ட சுப்பு வாத்தியாரு மொகத்துல கொஞ்சம் வெசனமாப் போவுது. அதெயும் கவனிக்கிறாரு சங்கு சுப்பிரமணியெம். இருந்தாலும் ஒண்ணுஞ் சொல்லல. மடியில இருந்த சுப்பு வாத்தியாரோட மவனோட சாதகத்தெ எடுத்து நீட்டுறாரு. அதெ வாங்கிகிட்டுச் சுப்பு வாத்தியாரு, "ரூவா?"ன்னுகிட்டு சட்டைப் பையில கைய வுடுறாரு. சங்கு சுப்பிரமணியெம் கண்ணாலயே சுவத்து ஓரமா ஒரு ஸ்டூலு மேல வெச்சிருக்கிற எவருசில்வருல இருக்குற சின்னப் பெட்டியைக் காட்டுறாரு. சுப்பு வாத்தியாரு அதுக்குப் பக்கத்துலப் போயி ரண்டு நூறு ரூவா நோட்டெ எடுத்து அந்தச் சின்னபெட்டியோட ஓட்டைக்குள்ள போறாப்புல மடிச்சி போடுறாரு. போட்டுட்டு ஒண்ணுஞ் சொல்ல முடியாம கெளம்ப எத்தனிக்கிறாரு.
            இப்போ சங்கு சுப்பிரமணியெம் கொரலக் கொடுக்குறாரு. "நெறைவில்லாம போறாப்புல தெர்யுது. மேக்கொண்டு அதெ தவிர வேற எதாச்சியும் கேக்கணும்னா கேட்டுக்கிடலாம்!"ங்றாரு. சுப்பு வாத்தியாரு சாதகத்தைப் பாக்க வந்துட்டு, அப்போ ஒரு கேள்வியக் கேக்கறாரு பாருங்க. "எல்லாம் சாதகப்படித்தாம் நடக்குமா?"ன்னு. சங்கு சுப்பிரமணியெத்தோட முகம் இப்போ மாறிப் போயி அவரு சிரிக்கிறாரு பாருங்க. மறுக்கா ஒரு வெடிச்சிரிப்பா சிரிக்கிறாரு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...