27 Feb 2020

கி.ரா.வின் கரிசல்காட்டுக் கடுதாசி - ஓர் எளிய அறிமுகம்

கி.ரா.வின் கரிசல்காட்டுக் கடுதாசி - ஓர் எளிய அறிமுகம்

            கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றெல்லாம் போற்றப்படும் கி.ராஜநாராயணன் எனும் கி.ரா.வின் புத்தகம் 'கரிசல்காட்டுக் கடுதாசி'
            கட்டுரை போன்ற தோற்ற மயக்கத்தை, சிறுகதை போன்ற மாயா ஜாலத்தை, சுயசரிதை போன்ற எழுத்துத் தன்மையைக் கொண்டிருக்கும் 'கரிசல்காட்டுக் கடுதாசி' புத்தகம் பத்தி வகை எழுத்தைச் சார்ந்தது. பத்திப் பத்தியாக கி.ரா. கரிசலைச் சுற்றிய நிலவியலையும், வாழ்வியலையும் கட்டுரையாகவும், சிறுகதையாகவும், சுய புனைவாகவும் புட்டு புட்டு வைக்கிறார்.
            'கரிசல்காட்டுக் கடுதாசி' என்று புத்தகத்தின் பெயர் இருந்தாலும், இந்தப் புத்தகம் தமிழில் சொல்லப்படும் 'மடல்' போன்ற இலக்கிய வகையறாவைச் சேர்ந்தது கிடையாது. ஆனால் புத்தகத்தில் சில கடுதாசிகள் காணக் கிடைக்கின்றன. அந்தக் கடுதாசிகள் கி.ரா. வனச்சரக அதிகாரிக்கு எழுதிய கடுதாசிகள். அந்தக் கடுதாசிகளை வைத்து இந்தப் புத்தகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். அதாகப்பட்டது கி.ரா. அந்தக் கடுதாசிகளை வனச்சரக அதிகாரிக்கு எழுதுவதற்கு முன்பாக கோவில்பட்டியைச் சுற்றியிருந்த கரிசல் நிலம் எப்படி இருந்தது, அந்தக் கடுதாசிகளை எழுதிய பிற்பாடு கரிசல் நிலம் எப்படி இருக்கிறது என்பதாக இந்தப் புத்தகம் கரிசல் நிலவியல் பற்றிய ஒரு வரலாற்றைச் சொல்வதைக் காணலாம்.
            பொதுவாக பசுமைப் புரட்சி வந்த பிற்பாடுதாம் விவசாயம் அழிந்ததா? கால்நடை இலாக்கா வந்த பிற்பாடுதாம் நாட்டு வகை மாடுகள் அழிந்ததா? காட்டிலாக்கா வந்த பிற்பாடுதாம் காடுகள் அழிந்ததா? என்ற ஒரு கேள்வி மனதில் தொக்கி நிற்பதுண்டு. அதற்கான ஒரு வரலாற்று சாட்சியத்தை இந்தப் புத்தகத்தில் கி.ரா. தர முயன்றிருக்கிறார். காட்டிலாக்காவின் சட்ட திட்ட நியமங்களுக்குள் புகுந்து மரங்கள் வளரவோ, அல்லது மரங்களை வளர்க்கவோ முடியாத சங்கதி இந்தப் புத்தகம் பேசும் நுட்பமான சங்கதிகளுள் ஒன்று.
            கரிசல்காட்டுக் கடுதாசி எனும் புத்தகம் ரெண்டு பகுதிகளாக ஒரு புத்தகமாக இருக்கிறது. முதல் பகுதிக்கும், இரண்டாவது பகுதிக்கும் ஒரு சினிமாவுக்கான குதூகல உத்தி இருக்கிறது. முதல் பகுதியில் ததும்பும் குறும்பும், நகைச்சுவையும் ரெண்டாம் பகுதிக்கான ஒரு சோகமான முடிவுக்காகவா என்பது போல இருக்கிறது. முதல் பகுதியில் இருக்கும் எள்ளலும், கேலியும் இரண்டாம் பகுதியில் எந்த வித குறைவு இல்லாமல் தொடர்கிறது என்றாலும் இரண்டாம் பகுதியில் கி.ரா. சொல்லும் அண்ணாச்சியின் கதையில் சோக வாடை நிழலாடச் செய்து விடுகிறது. இயக்கங்களின் தோல்வி, கூட்டம் போட்டு பேசும் பேச்சுகளின் தோல்வியைக் காட்டுகிறது அண்ணாச்சிக் குடும்பத்தின் கையறு நிலை குறித்தான நிஜக் கதை.
            'கரிசல்காட்டுக் கடுதாசி'  எனும் இந்தப் புத்தகத்தில் வந்துள்ள பத்திகள்  அத்துணையும் ஜூனியர் விகடனில் கட்டுரைத் தொடராக வெளிவந்தவை. கி.ரா.வே குறிப்பிடுவது போல ஜூனியர் விகடன் ஒரு சாதாரண வணிகப் பத்திரிகை என்றாலும், அதில் வெளிவந்த அத்தனை கட்டுரைகளிலும் ஓர் இலக்கிய தரத்தையும், உண்மைத் தன்மையையும் பேணியிருக்கிறார் கி.ரா. வாய்மொழிச் சொல்லலின் வடிவத்திலேயே ஒரு நாட்டாறு இலக்கியம் போன்ற பதிவாக அதைச் செய்திருக்கிறார் கி.ரா.
            எளிய மக்களின் வரலாறு எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை ஒரு வரலாறாக கட்டபொம்மனுக்கு மக்கள் போட்டு வைத்த கற்குவியல் அழிக்கப்பட்டதையும், அதே கட்டபொம்மனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டிய மணிமண்டபம் நிலைத்து நிற்பதையும் கொண்டு வருத்தத்தோடு சொல்லிச் செல்கிறார். வரலாறு என்பது சாமானியர்களின் அத்தனை சாட்சியங்களையும் அழித்து, வலுவானவர்களின் சாட்சியங்களோடு முன்னகரும் பேத முரணை கி.ரா. அப்பட்டமாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
            இன்னொரு சேதி, கேரளாவுக்கான வண்ணப் புத்தகங்களும், தமிழ் நாட்டுக்கான கருப்பு வெள்ளைப் புத்தகங்களும் தமிழ்நாட்டில் இருக்கின்ற சிவகாசியில் அச்சாகிறது என்கிற சேதி. கேரளாவுக்கான சிறுவர் நூல் களஞ்சியங்கள் இங்கே வண்ணத்தில் அச்சாக, ஒரு பல்கலைக்கழகத்தின் களஞ்சியமே இங்கே கருப்பு வெள்ளையில் 'கழுமரம்' என்ற சொல்லாடல் இல்லாமல் அச்சாகும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும். நம்முடைய அக்கறையும், பொறுப்பும் அவ்வளவுதான் என்பதை அவ்வளவு அக்கறையோடும், பொறுப்போடும் பொட்டில் அடித்தாற் போல நேர்த்தியாகச் சொல்கிறார் கி.ரா. இப்படி எவ்வளவோ சேதிகள் புத்தகம் முழுமைக்கும்.
            கரிசல் மண்ணின் எவ்வளவோ சங்கதிகளை, சிடுக்குகளை, முடிச்சுகளை, பிரச்சனைகளை இந்தப் புத்தகம் நெடுக்கச் சொல்லிச் செல்கிறார் கி.ரா. அதில் மின்சார வரவால் பட்ட அவதிகளையும், சிரமங்களையும் சொல்கிறார். மின்சார வரவு - அதில் காட்டப்படும் அலட்சியம், அக்கறையற்ற தன்மை ஆகியவற்றையும் வேதனையோடு பதிவு செய்கிறார். ஒளி வரவாக இருக்க வேண்டிய மின்சாரம் இருள் வரவாக மாறி அண்ணாச்சியின் உயிரை பலி வாங்கியதைச் சொல்லி நூலுக்கான ஒரு பின்னுரையோடு இந்தப் புத்தகத்தை நிறைவு செய்கிறார் கி.ரா. அதைப் படிக்கும் போது நெஞ்சு கனக்கத்தான் செய்கிறது.
            என்ன செய்வது? இதே புத்தகத்தில்தான், "துக்கத்தை, துயரத்தைச் சிரிச்சுத்தாம் போக்கியாவணும்!" என்று கி.ரா.வே ஒரு எள்ளல் தொனியோடு சொல்கிறார். நம்மைச் சுற்றிய இழிவுகளைப் பார்த்து மனம் உளைந்துப் போயி பைத்தியக்காரராக ஆவதை விட, அப்படிச் சிரித்துச் சிரித்துப் பைத்தியக்காரராக ஆகாமல் தப்பித்துக் கொள்வது கூட ஒரு வகையில் நல்லததுதாம். காந்தி மகாத்மா கூட அதைத்தானே சொல்கிறார், "நகைச்சுவை என்ற உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றோ தற்கொலை பண்ணியிருப்பேன்!" என்று. அத்தோடு வள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார், "இடுக்கண் வருங்கால் நகுக!" என்று. நகுதலை விட வேறென்ன வழியிருக்கிறது நமக்கு? கி.ரா.வும் அதைத்தான் சொல்கிறார். அநேக கேலிகள், எள்ளல்கள் இருக்கிறது இந்தப் புத்தகத்தில். அதற்குக் காரணமாக இருப்பவர்களையும், சம்பந்தப்பட்டவர்களையும் இதற்கு மேல் நாகரிகமாக அசிங்கப்படுத்த முடியாது என்ற எல்லை அது. ஓர் எழுத்தின் மாபெரும் வெற்றி அது. அதை இந்தப் புத்தகத்தில் சாதித்திருக்கிறார் கி.ரா. நீங்களும் அவசியம் ஒரு முறை வாசித்துப் பாருங்கள் கி.ரா.வின் கரிசல்காட்டுக் கடுதாசியை. கரிசல் காட்டிலிருந்து அவர் புத்தக வடிவத்தில் ஒரு கடுதாசி போட்டது போலவே இருக்கிறது அந்தப் புத்தகம்.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...