செய்யு - 372
"இந்த நாட்டுல பல பேத்தோட தலைவிதிய
சாதகம்தான் எழுதுது. அப்படிச் சாதகத்துல எழுதுன தலைவிதியையும் மாத்தி எழுதலாம்னு இந்த
நாட்டுல நிரூபிச்சிட்டுப் போனவருதாம் சிலப்பதிகாரத்தெ எழுதுன இளங்கோவடிகளு. மனசுல
வைராக்கியமா இருக்குறவனுக்கு சாதகம் செல்லுபடியாகாது. அப்படிப்பட்ட ஆளுகளுக்கு அவ்வேம்
மனசு சொல்றதுதாங் சாதகம். சித்தம் போக்கு சிவம் போக்குன்னு போறவனுக்கு சாதகத்தெ
என்னத்த கணிக்கிறது? அப்பிடிக் கணிச்சாலும் அந்தக் கணிப்புக்கு அர்த்தமிருக்காது. காந்தியடிகளுக்குக்
கணிச்ச சாதகத்துல அவருக்கு அல்பாயுசு. அவரு செத்தது தொண்டு கெழமாயி துப்பாக்கிக் குண்டுலாயில்லா!"ங்றாரு
சங்கு சுப்பிரமணியெம்.
முப்பது வருஷ அனுபவத்துல சங்கு சுப்பிரமணியெத்துக்கிட்டயே
நெறைய மாறுதலு. அவரு கணிச்சிச் சொன்ன சாதகத்துல எத்தனையோ அப்படியே நடந்ததையும், எத்தனையோ
அப்படி நடக்காமப் போனதையும் அனுபவத்துல பாத்திருப்பாரு. அப்படியே அவரு சொன்ன மேனிக்கி
நடந்த சாதகத்துல இருந்த கட்டத்துக்கும், சொன்ன மேனிக்கி நடக்காத சாதகத்துல இருந்த
கட்டத்துக்கு என்ன வித்தியாசம் இருந்திருக்கப் போவுது? ஒண்ணும் கெடையாது. ரெண்டு கட்டமும்
வெவ்வேறு வெதமா திசை மாறுதுன்னா, மனுஷம் மனசால நெனைச்சா சாதகத்தெ மாத்தி எழுது முடியும்ங்றதுதாங்
விசயம். மனசால மாத்தி எழுது முடியும்னா பெறவு எதுக்கு சாதகத்தெ எழுதணும்? அதானே சரியான
கேள்வி. அப்பிடி ஒரு கேள்விய இப்போ சுப்பு வாத்தியாரு அவருகிட்ட கேட்டாக்கா, அதுக்கும்
சங்கு வெளக்கத்த சொல்றாரு.
"மனசால துணிஞ்சிட்டவனுக்குச் சாதகம்
கெடையா. மனசால துணியுறதுக்கு மின்னாடி உள்ள கால கட்டம் வரைக்கும்தாம் சாதகம் வேலை செய்யும்.
அதுக்குப் பின்னாடி அதுக்குப் பவரு கெடையா. துணியுறதுன்னா அது தப்பா துணிஞ்சாலும் சரித்தாம்,
சரியா துணிஞ்சாலும் சரித்தாம். அதுக்கு அம்மாம் பவரு இருக்கும். நல்லவனா இருக்கணும்னு
சாதகம் இருக்கு. ஆனா அவ்வேம் திருடணும்னு துணிஞ்சிட்டா சாதகம் பொய்ச்சுப் போயிடும்.
அதெ திருடணும்னு சாதகம் இருக்கு. அவ்வேம் திருந்தி வாழணும்னு துணிஞ்சிட்டா சாதகம் பொய்ச்சிப்
போயிடும். மனசு நெனைச்சி துணிஞ்சி எறங்கிட்டா சாதகத்துக்குப் பவரே கெடையாது. மனசு
பொறாதவனுக்குத்தாம்லா சாதகம். அந்த மனசையே தூக்கி எறியத் தெரிஞ்சவனுக்கு எதுக்குச்
சாதகம்ங்றதுதாம் சரி!"ங்றாரு சங்கு. அப்பிடிச் சொல்லிப்புட்டு மேல மேல சொல்றாரு.
"வாழ்க்கையில ஒரு கஷ்டம், ரண்டு கஷ்டம்
இருக்கிறவம்தாம் சாதகத்தப் பார்ப்பாம். அது போல வாழ்க்கையில ஒரு சந்தோஷம், ரெண்டு
சந்தோஷம் இருக்கிறவம்தாம் சாதகத்தப் பார்ப்பாம். வாழ்க்கையில எல்லாமும் கஷ்டமா இருக்கிறவனும்
சாதகத்தப் பார்க்க மாட்டாம், எல்லாமும் சந்தோஷமா இருக்கிறவனும் சாதகத்தப் பார்க்க
மாட்டாம். ஊருல சில பேத்து இருக்காம். என்ன நடந்தாலும் எனக்கென்னென்னு? அவனுக்கும்
சாதகம் செல்லுபடியாகாதுல்லா. மனசால நெனைச்சா எதை வேணாலும் மாத்திக் காட்ட முடியும்,
சாதகக் கட்டம் உட்படங்றதுதாம் நம்மட கருத்து. அப்படி மனசு நெனைக்கணுங்றதுதாம் அதுல
உள்ள விசயம்."ங்றாரு சங்கு.
"இதாம் விசயம்னு தெரிஞ்ச பிற்பாடும்
மனுஷன் ஏம் சாதகத்தெ பாக்கறாம்?"ன்னு சுப்பு வாத்தியாரு கேட்டாக்கா அதுக்குச்
சங்கு சொல்றாரு, "மனுஷன் ஒரு கோட்டிக்கார பயெ. அவனுக்கு இத்துஇத்து இந்த மாதிரிக்கி
நடக்குணும்னு ஒரு மனகணக்கு இருக்கு. அப்பிடி நடக்குமா நடக்காதான்னு தெரிஞ்சிக்கவும்,
அப்பிடி நடக்குறப்ப எடையில எடைஞ்சல எதுவும் இல்லாம இருக்குமான்னு தெரிஞ்சிக்கவும் ஒரு
ஆசெ இருக்கும். அதெ தெரிஞ்சிக்கித்தாம் அவ்வேம் சாதகத்தெ பாக்குறாம். அப்படி மனுஷன்
போடுற மனகணக்குல எது எப்பிடி நடந்தாலும் அதெ ஏத்துக்க தயாருன்னா பெறவு சாதகத்தெ எதுக்குப்
பாக்கணும். அதெ பாக்கவே தேவையில்ல. மனுஷனோட மனக்கணக்குக்குத்தாம் சாதகக் கணக்கு. மனுஷனுக்கு
மனக்கணக்கு இல்லன்னா சாதகக் கணக்கு யில்ல.
"நம்ம கதையெ எடுத்துக்குங்களேம்.
அந்தக் காலத்துல கட்டுனது ஓடிப் போனது பெருத்த அவமானமா இருந்துப் போச்சு. ஒஞ்ஞளுக்குக்
கதை தெரியுமோ என்னவோ? மொத பொண்டாட்டி ஓடிப் போயிட்டா. தங்குனது ரண்டாவதுதாங்.
ஆனா இப்பிடி ஆயிருக்கக் கூடாதேன்னு ஒரு நெனைப்பு. அவ்வே மனசு. அவ்வே ஆசெ. அவளுக்குப்
பிடிச்சவனோட போயிட்டா. ஒருவேள நாம்ம அப்பிடி ஒருத்தியோட போயிருந்தா... அவ்வே இந்த
மாதிரித்தாம் நம்மள மாதிரிக்கி ஊரு ஊரா நாடோடியா திரிஞ்சி சாதகம் பாக்கறதெ கத்துக்கிட்டு
இன்னொரு கலியாணத்தெ பண்ணியிருக்கப் போறாளா? நெனைச்சிப் பாருங்க! அந்த நேரத்துல அத்து
ஒரு மனசு. அதுக்கு அப்பிடி செஞ்சியாச்சி. நெனைச்சிப் பாத்தா இப்போ எல்லாமும் சிரிப்புத்தாம்.
மித்தபடி எது நடக்குறதா இருந்தாலும் அத்து நடந்துத்தாம் தீரும். அதெ கொஞ்சம் முங்கூட்டி
சாதவத்துல கணிச்சிப் பாக்கலாம். அவ்வளவுதாங். அதெ சாதகத்தாலயும் தடுக்க முடியா.
"எது நடந்தாலும் அதெ நீஞ்ஞ சந்தோஷமா
எதிர்கொண்டுட்டா ஒஞ்ஞளுக்குச் சாதகமே பாக்கத் தேவையில்ல. எத்து நடந்தா நமக்கென்ன அதெ
பாத்துப்பேம்னுட்டா சாதகம் சத்தியமா தேவையில்ல. இதாங் இந்த மாதிரிக்கி நடக்கணும்னா
அஞ்ஞ சாதவம் தேவையாயிருக்கு. இதாங் விசயம். ஒஞ்ஞ கதையே எடுத்துக்குங்க. நீஞ்ஞ எதுக்கு
ஒங்க புள்ளையாண்டாம், பொண்ணோட சாதவத்தெ பாக்க எடுத்து வர்றீக? புள்ள பொண்ணுக்குத்
தப்பா எதுவும் நடந்துடப்படாதுங்ற ஒரு முன்சாக்கிரதெதாம் இல்லியா. அப்பிடி எதுவும் தப்பா
நடக்குற மாதிரிக்கி கணிப்புத் தெரிஞ்சா அதுக்குத் தகுந்தாப்புல எதாச்சிம் செஞ்சி நல்ல
வெதமா நடக்குற மாதிரிக்கி பண்ணிக்கலாமுன்னுத்தானே.
"ஆனா பாருங்க வாழ்க்கையில ரண்டுமே
நடக்கும். அதெ எதிர்க்கொண்டுத்தாம் ஆவணும். அதெ தடுக்கறதுக்கு சாதகத்துலயும் வழியில்ல.
சாதகத்தெ தாண்டியும் நெறைய நடக்கத்தாம் செய்யும். கலியாணம் பண்ணி வைக்கிறோம். ரண்டுக்கும்
பொருத்தமா இல்லன்னா நமக்குல்லா வருத்தமா போயிடும்னு சாதகத்தெ வெச்சி பாக்குறேம்.
இப்பிடிச் சிந்தனெ பண்ணிப் பாருங்களேம். பொருத்தம் இல்லாட்டியும் அதெ பொருத்தமா பண்ணிக்கிற
மனப்பக்குவம் ரண்டு பேத்துக்கும் இருந்துப்புட்டா பொருந்தாத சாதவமும் பொருந்தில்லா
போவும். இதெ நெறைய சோசியக்கார்ரேம் சொல்ல மாட்டாங். சொன்னா தம்புடி போயிடுமில்லா.
ஆனா அதாம்லா உண்மெ. சாதவத்துலயே முப்பதுக்கு மேல ஒண்ணுமில்லங்றதுதாங் கணக்கு. அதாச்சி
முப்பது வயசுக்கு மேலல்லாம் சாதவத்தெ பாத்து கலியாணத்துக்குப் பொருத்தம் பாக்க வேண்டியில்லா.
முப்பது வயசு ஆச்சுன்னாலே பலவெதமான அனுபவத்துல மனசுக்கு ஒரு நெதானமும், பக்குவமும்
வந்துப்புடும் பாருங்க. அதாங் இஞ்ஞ கணக்கு. இப்போ ஒஞ்ஞளுக்குப் புரியதுல்லா!"ங்றாரு.
"மவள வெச்சிக்கிட்டு மவனுக்குக் கலியாணம்னா...
அதாங் கொஞ்சம் யோஜனெ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"நீஞ்ஞ ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க.
இருந்தாலும் கேக்குதீயேன்னுத்தாம் நாம்ம நெனைக்கிறேம். வயசு வித்தியாசம் மவனுக்கும்
மவளுக்கு அதிகெம். அதால தாராளமா மவனுக்குப் பண்ணலாம். யில்லே மவளுக்குத்தாம் பண்ணணுமா
துணிஞ்சிப் பண்ணலாம். அதது நடக்குறப்போ அததெ சந்திக்குற எதிர்கொள்ளுற தெகிரியம் வரத்தாம்
போவுது. நாம்ம இதெ மொதல்ல பண்ணுங்கோ, அதெ மொதல்ல பண்ணுங்கோன்னு அழுத்தம்லாம் பண்ண
மாட்டேம். இதெ மொதல்ல பண்ணா நல்லா இருக்கும்னுத்தாம் சொல்லுவேம். வலியுறுத்தலு, வற்புறுத்தலு
நம்மகிட்ட கெடையா."ங்றாரு சங்கு.
"வர்ற மருமவ்வே பொண்ணுக்கும் மவளுக்கும்
ஒத்துக்கிடுமா? ஒத்துக்கிடாதா? அப்பிடி இப்பிடின்னு பலவிதமான யோஜனைங்க. அதாங்! வயசுக்கு
வந்தப் பொண்ண வெச்சிக்கிட்டு மவனுக்குக் கலியாணம் பண்றதுல சில நடைமுறைகளும் இருக்குங்களே!"ங்றாரு
சுப்பு வாத்தியாரு.
"அத்துச் செரி! ஒண்ணுக்கு ஒண்ணு இடிக்கத்தாங்
செய்யும். அத்து எப்பிடி போனாலும் இடிக்கிறது இடிக்கத்தாம் செய்யும். அதுக்குன்னு
போவாமலா இருக்க முடியும்? அததெ அப்பைக்கப்போ சமாளிச்சிக்க வேண்டியதாங். ஒட்டுமொத்தமா
சமாளிக்கணும்னு நெனைச்சா எதையும் சமாளிக்கவும் முடியா, எதையும் பண்ணவும் முடியா. எழுதுனப்படித்தாம்
நடக்கணும்னு இல்லா. எழுதாதபடியும் நடக்கலாம். கணிச்சபடித்தாம் நடக்கணும்னு இல்லா. கணிப்பெ
தாண்டியும் நடக்கலாம். நெறைய யோஜிச்சா தப்பாப் போயிடும். கொஞ்சமா யோஜிச்சு சரியாப்
பண்ணுறதுதாங் செரி. கொழப்பிக்க ஒண்ணுமில்ல. மவனுக்கு முடிங்களேம். பொண்ணுக்கு ஆர
அமரப் பாத்து முடிக்கலாம்."ங்றாரு சங்கு சுப்பிரமணியெம்.
"ரொம்ப நல்லதுங். மவனுக்குப் பொண்ணு
பாத்தா பொருத்தமும் நீஞ்ஞதாங் பாத்துச் சொல்லணுங்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"சொல்லிப்புட்டா போச்சு! பாத்துட்டு
வாஞ்ஞ பாத்துக்கிடலாம்! செரி கெளம்புங்க!"ன்னு சங்கு சுப்பிரமணியெம் சொல்றாரு
சுப்பு வாத்தியாரு மனசுல உண்டான நெறைவை முகத்துல பாத்துட்டு. சுப்பு வாத்தியாரு கெளம்புறாரு.
இன்னும் நாலு பேரு அப்பத்தாம் சாதகம் பாக்கணும்னு கேட்டைத் தொறந்துகிட்டு உள்ளார வாராங்க.
இனுமே வர வர கூட்டம் அதிமாயிட்டே போவும் அவரு வூட்டுக்கு மின்னாடி.
*****
No comments:
Post a Comment