29 Feb 2020

நடைமுறைச் சடவுகள்

செய்யு - 373

            பொண்ணு பாக்குறது, மாப்பிள்ள பாக்குறதுன்னு அதுக்கான முறைக ரொம்பவே மாறிட்டு. மின்ன மாதிரியா விஷேசத்துல, சாவுல, கருமாதியில சந்திக்கிறப்ப இந்த வூட்டுல கல்யாண வயசுல பொண்ணு இருக்கு, அந்த வூட்டுல மாப்புள்ள இருக்காம்னு காதுக்குக் காது சேதி போயி, விசாரிச்சிக்கிட்டு வந்து பொண்ணு பாக்குறதும், மாப்புள்ள பாக்குறதும் மாறிப் போச்சு. எந்தெந்த வூட்டுல பொண்ணு, புள்ளைக இருக்குன்னு பெரிசுகளுக்கு நல்லாவே ஞாபவத்துல இருக்கும் அப்போ. கல்யாண வயசு வந்துப்புட்டா, இந்தப் பொண்ணுக்கு ஏத்த மாதிரி அந்த ஊர்ல ஒரு பையேம் இருப்பானே, அந்தப் பையனுக்கு ஏத்தாப்புல இந்த ஊர்ல ஒரு பொண்ணு இருப்பாளேன்னு புட்டு புட்டு வைக்கும் அந்தப் பெரிசுங்க. அங்ஙனப் போயி பாத்தாக்க அந்த மேனிக்கி சரியா அமைஞ்சிப் போயிடும்.
            இப்போ பொண்ணு பாக்கணுமா, மாப்புள்ள பாக்குணுமா இதுக்குன்னே தரகுக்கார ஆளுங்க அந்தந்த வகையறாவுல உண்டாயிட்டாங்க. அவுங்க இதெ ஒரு யேவாரிக் கணக்கா நின்னு செய்யுறாங்க. அவுங்களுக்குத் திருமண அமைப்பாளருன்னு பேரும் உண்டாயிப் போச்சு. பொண்ணுக்கேத்த மாப்புள்ள சாதகம் வேணுமா, மாப்பிள்ளைக்கேத்த பொண்ணோட சாதகம் வேணுமா அதுக்கு ஒரு ரேட்டு, பொண்ணு வூட்டுலயும், மாப்புள வூட்டுலயும் பேசி வுடணுமா அதுக்கு ஒரு ரேட்டு, கலியாணம் நிச்சயம் ஆயி பண்ணுற சீர் சனத்தியெ கணக்கு வெச்சி அதுக்கு ஒரு ரேட்டுன்னு வாங்கிக்கிறாங்க அந்தத் தரகுக்கார ஆளுங்க. சொந்தத்துலயோ, சுத்துப்பட்டுலயோ அப்பிடி பொண்ணோ, மாப்பிள்ளையோ அமையுறாப்புல இருந்தா அவுங்களோட அவசியம் இல்லே. இப்போ அந்த மாதிரிக்கி யாரும் ‍அமைச்சுக்கிறதும் இல்ல.
            பொதுவா பொண்ணுன்னா கவர்மெண்டு மாப்புள்ளையா எதிர்பாக்குறாங்க. கவர்மெண்டு வேலை பாக்கற மாப்புள்ளைன்னா கவர்மெண்டு வேலை பாக்குற பொண்ணா எதிர்பாக்குறாங்க. அப்பிடி சொந்தத்துலயோ, சுத்துப்பட்டுலயோ அமையுறது ரொம்ப அபூர்வம். அப்பிடி அமைஞ்சிட்டா தரகுக்கார ஆளுங்களோட தேவையில்ல. அப்பிடி அமைச்சிக்கத்தாம் தரகுக்கார ஆளுங்களோட அவசியம் உண்டாவுது. அவுங்களுக்கு கவர்மெண்டு வேலை பாக்குற மாப்பிள்ளையோட சாதகமோ, பொண்ணோட சாதகமோ கெடைச்சிட்டா ஜாக்பாட் அடிச்ச மாதிரித்தாம். எப்பிடியும் அதுக்கு ஏத்த மாதிரிக்கி அலைஞ்சி திரிஞ்சி ஜோடிய சேத்து வெச்சிட்டுத்தாம் மறுவேல பாப்பாங்க.
            இந்தத் தரகுக்கார ஆளுகளத் தாண்டி தினசரி பேப்பர்ல மணமகன் தேவைன்னோ, மணமகள் தேவைன்னோ விளம்பரம் கொடுக்குற அளவுக்கு இப்போ நெலமை வந்து, டி.வி பொட்டி வரைக்கும் போயி இந்த மாதிரிக்கி இன்ன மாதிரிக்கிப் பொண்ணு வேணும்னோ, மாப்புள்ள வேணும்னோ சொல்லிக் கேக்குற அளவுக்கு நெலமை போயிருக்கிறது வேற கதெ. கல்யாண தரகு ஆளுகளோட தயவுத் தாண்டி அதோட அத்தனெ நெலமைகளையும் இந்த வகையறாவுல மொதல்ல முயற்சிப் பண்ணிப் பாத்தவரு லாலு மாமாதாம். அவரு ஒரு விசயத்தெ முடிக்கிறதுக்கு பத்து வெதமான முறைக இருக்குன்னா, பன்னெண்டு வெதமான முறைகள்ல மல்லுகட்டிப் பாப்பாரு. அதென்ன இருக்குறதே பத்து மொறைகள்ங்றப்போ, பன்னெண்டு வெதமான மொறைகள்ன்னா, மிச்ச ரண்டு முறைகள் அவரா கண்டுபிடிச்சதா இருக்கும். அப்பிடி ஒரு ஆளு அவரு.
            சுப்பு வாத்தியாரு சொந்தப் பந்தத்துல மொதல்ல விசாரிச்சுப் பாத்தாரு. மவன் கவர்மெண்டு சம்பளத்துக்கு வாத்தியார்ரா இருக்காங்றது தெரிஞ்சி நான் நீயின்னு பொண்ணு கொடுக்க தயாரா இருந்துச்சுங்க. அப்பிடி விசாரிச்சிக்கிட்டு வந்த பொண்ணுகளோட படிப்பும் நெறையத்தாம் இருந்துச்சுங்க. அது சரி! இப்போ படிக்காத பொண்ணுங்களோட சாதகமே இல்லேங்ற அளவுக்கு ஒரு மாத்தம்தாம். பசங்களுக்குத்தாம் அந்த அளவுக்குப் படிப்பு இல்லாம தவிக்குறாப்புல இருக்குறதால, படிச்சி வேலையிலயும் இருக்குறதால மவனுக்குப் பொண்ண பிடிச்சிக் கட்டி வைக்குறதல சுப்பு வாத்தியாருக்கு செரமம் அதிகமா இல்ல. சொந்தப் பந்தத்துலேந்து சாதகம் வந்து குவிஞ்சிக் கெடக்குது. பவுனு, சீர் சனத்தியும் கேக்குறதெ விட நெறைய செய்யுறதா வேற சொல்றாங்க. சுப்பு வாத்தியாரோட மனகணக்கு வேற வெதமா இருந்துச்சு.
            "நாம்மத்தாம் ஒத்த ஆள சம்பாதிச்சி கடன ஒடன வாங்கி ரொம்ப செரமப்பட்டு வாழுறாப்புல ஆயிடுச்சி. ஆயுசுக்கும் கடனாப் போயி மவ்வேன் தலைபட்டு சரி பண்ணுறாப்புல போயிடுச்சி. மவனுக்கும் அந்த நெலையா வாரணும்? மவனுக்காவது படிச்சி வேலையில இருக்குற வாத்திச்சிப் பொண்ணா கட்டி வெச்சிப்புடணும். ரண்டு சம்பாத்தியமா இருந்தா அவ்வேம் வாழ்க்கெ நல்ல வெதமா ஓடும். இப்போ அதாம் அங்கங்கயும் நடக்குது. வாத்தியாரெல்லாம் வாத்திச்சிப் பொண்ணா கல்யாணத்தெ பண்றாம், வாத்திச்சிப் பொண்ணுக எல்லாம் வாத்தியாரு மாப்புள்ளையா கல்யாணத்தெ பண்ணுதுங்க. ஊரு ஒலகமே அந்தத் தெசையில ஓடுறப்போ நாமளும் நம்ம மவனுக்கு அப்பிடித்தாம் பண்ணி வைக்கணும்"ன்னு மனசுக்குள்ள ஒரு கணக்கெ போட்டுக்கிட்டாரு.

            கொத்தூரு சோசியரு, நாட்டியத்தாங்குடி சோசியரு சொன்ன வகையில பொண்ணு தஞ்சாரூ பக்கமோ, கும்பகோணத்துப் பக்கமா இருக்குறங்றதால அந்தத் தெசையிலத்தாம் போயி பொண்ண தேடணும்னு முடிவெ பண்ணிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. மின்னாடி காலத்துல சாதகப் பொருத்தத்துக்காக நோட்டெ வெச்சிப் பாப்பாங்க. இப்போல்லாம் ஒண்ணுக்கு நாலு பொண்ணோ, மாப்புள்ளையோ பாக்குறதால சாதகத்தெ காயிதத்துல கையால எழுதி அதெ நகலு பண்ணி நாலு எடத்துக்கு அனுப்புறாப்புல இருக்கு. அதுலயும் அது மாறி கையால எல்லாம் எழுதப்படாது சாதகத்தன்னு, அதெ கம்ப்யூட்டருல கொடுத்து டைப்படிச்சி அச்செடுத்து அதெ நகலு பண்ணி, அத்தோட மாப்புள்ளையோ, பொண்ணோ அதோட போட்டோவ ஒண்ணு எடுத்துல்லா இணைச்சிக் கொடுக்குறாங்க.
            வடவாதியில இதுக்குன்னே நாலஞ்சு ஸ்டூடியோ கடைக இருக்குங்க. அந்தக் கடைக்காரவுகளே போட்டோவையும் பிடிச்சி, சாதகத்‍தையும் டைப்படிச்சி, அதெ பத்து பாஞ்சு நகலையும் பண்ணி கையில கொடுத்து காசிய அலுங்காம நலுங்கமா வாங்கிக்கிடுறாங்க. பையனுக்கோ, பொண்ணுக்கோ இத்து முக்கியமான மங்கல காரியமா இருக்குறதால கடன உடன சொல்லாம கேக்குற காசிய கொடுத்து இந்த வேலைய முடிச்சிக்கிறதால ஸ்டூடியோ கடைக இந்த வேலைய மட்டும் எந்த வேல எப்பிடி கெடந்தாலும், அதெ போட்டுப்புட்டு மொத வேலையா முடிச்சிக் கொடுத்துடுறாங்க. அப்பிடி வேலைய முடிச்சிக் கொடுக்குறதுல வடவாதியில கார்த்தி ஸ்டூடியோ பிரசித்தம்.
            ஒரு நாளு மவ்வேன் விகடுகிட்ட அவசர அவரமா, நல்லா அலங்காரமா பண்ணிட்டு வாடான்னு கெளப்பிக்கிட்டு டிவியெஸ்ல பிடிச்சிப் போட்டுக் கொண்டு போனாரு சுப்பு வாத்தியாரு. வண்டி டர் டர்ன்னு போயிட்டு இருக்கு ரண்டு பேரையும் இழுத்துக்கிட்டு. இவரு இப்பிடிப் பண்றது விகடுவுக்குச் சுத்தமா பிடிக்கல. வண்டியில போறப்பவே ரண்டு பேருக்கும் பேச்சு வளருது.
            "நீஞ்ஞளா பாத்து எந்தப் பொண்ண காட்டி வுட்டாலும் தாலியக் கட்டி வுடுறேம்! இப்பிடில்லாம் பண்ண வாணாமே!"ங்றாம் விகடு.
            "ஆமாம்டா! ஒம்மட மூஞ்சியையும் மொகரையும் பாக்காம, சாதகத்துல பொருத்தத்தப் பாக்காம பொண்ண தூக்கிக் கொடுப்பாம் நெனைச்சிக்கிட்டு இரு. நாம்ம சரிதாம்னு பொண்ண கட்டிக்கிறதுக்குச் சம்மதத்தெ சொன்னாலும், பொண்ணக் கொடுக்குறவேம் அம்மாம் சீக்கிரத்துக்குச் சம்மதிக்க மாட்டாம். அவ்வேம் ஆயிரம் வெதமா இதெல்லாம் பாத்து, விசாரிச்சித்தாம் கொடுப்பாம். பொண்ணு கட்டுறதுன்னா சாமானியம்னு நெனைச்சிக்கிட்டீயால்லா! ஒலகம் கெடக்குற கெடப்புத் தெரியாம பேசுறாம்! நீயி பாட்டுக்கு பேயாம யிரு. பொண்ண பாத்துக் கட்டி வைக்கிறது எஞ்ஞ பொறுப்பு. நீயி பாட்டுக்கு நகெ வாணாம், நட்டு வாணாம், சீரு சனத்தி வாணாம்னு ஒளறிக்கிட்டுக் கெடந்தெ மாப்புள்ள பயலுக்கு ஏத்தோ கோளாறு! அத்தாம் இப்பிடிக்கின்னு ஒரு கணக்கெ போட்டு வெச்சி ஊரு ஒலகத்துல பரப்பிப்புட்டானுவோன்னு வெச்சிக்க பெறவு பொண்ணு கெடைக்கிறது கஷ்டங் ஆங் பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பொண்ண பெரிய எடத்துலல்லாம் பாக்க வாணாம். எழுதப் படிக்கத் தெரிஞ்சி கொணமா குடும்பத்தெ பாத்துக்கிட்டா போதும். அதுக்கு ஏம் இதெல்லாம்?"ன்னாம் இப்போ விகடு.
            "நீயி கேக்குறாப்புல கடையில செஞ்சி வெச்சிருக்காம் பாரு! வாங்கியாந்து கொடுக்க. எலே வெவரம் தெரியாம, ஒலகம் புரியாம பேசிக்கிட்டு கெடக்கே! இப்பிடில்லாம் பேசிக்கிட்டுக் கெடந்தே நீயி வாத்தியாரு வேலயே பாக்கலே! வாத்தியாரு வேல பாக்காமாலே ஏமாத்திக் கல்யாணத்தெ கட்டிக்க நிக்குறேன்னு புதுக்கதெயல்லோ கட்டி விட்டுப்புடுவானுங்கோ! காரியத்தெ முடிக்கிற வரைக்கிம் சித்தே ச்சும்மா கெட!"ன்னு அவரு சொல்லிட்டு வாரப்பவே கார்த்தி ஸ்டூடீயோ வந்திடுச்சி.
            மவனெ எறக்கிக் கொண்டு போயி பொண்ணு பாக்குறதுக்கு ஏத்தாப்புல போட்டோவெ புடிச்சிக் கொடுக்கச் சொல்றாரு சுப்பு வாத்தியாரு. அப்பிடியே சாதகத்தையும் கொடுத்து டைப்படிச்சி காரியத்தெ சட்டுப்புட்டுன்னு முடிச்சித் தர சொல்றாரு. கார்த்தி ஸ்டூடியோவுல நாலு பேத்துக்கு மேல வேல பாக்கறாங்க. வெசயத்தெ சொன்னதும் விகடுவெ கண்ணாடி முன்னாடி உக்கார வெச்சி அவனுங்க வேற அலங்காரத்தெ பண்ணுறாங்க. ஏற்கனவே அவ்வேம் வூட்டுல தலைக்கு எண்ணெய வெச்சி, புட்டா மாவ்வ மூஞ்சிக்குத் தேச்சி நல்ல வெதமாத்தாம் வந்திருக்காம். அதுல ஸ்டூடியோகார ஆளுக இன்னும் காலு இஞ்சி கனத்துக்குப் புட்டா மாவ அப்பி வெச்சி, சீவுன தலையெ வேற மாதிரிக்கி சீவி, ஒழுங்க போட்டிருந்த பட்டனெ அவுனுங்க ஒரு மொறைக் கழட்டி மாட்டி என்னென்னவோ பண்ணி கடெசியா மொகமும், மார்பும் தெரியுறாப்புல விகடுவெ பிடிச்சி காமிராக்குள்ள போட்டுக்கிட்டானுங்க. ஒரு வழியா அந்த வேலை முடிய இருவது நிமிஷத்துக்கு மேல ஆயிருக்கும்.
            "நாளைக்கி இந்த நேரத்துக்கு வந்துப்புடுங்க வாத்தியார்ரே! பக்காவா எல்லாத்தியும் தயாரு பண்ணி முடிச்சிப்புடறேம்!"ன்னு சொல்லி அனுப்ப நெனைக்குறாரு கார்த்தி ஸ்டூடியோ மொதலாளி கார்த்தீஸ்வரன்.
            "இன்னிக்கே கதெ ஆயிடும்னு பாத்தேம். நாளைக்கித்தாம் ஆவும் போலருக்கே!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "கொஞ்சம் நல்லா ஒர்க் பண்ணித் தர்ரேம் வாத்தியார்ரே. ஒர்க் பண்ணாத்தாம் வேல நல்லா இருக்கும். இப்பவே சித்த நேரம் உக்காந்தாலும் முடிச்சித் தந்திடுவேம். வேல அந்த அளவுக்கு இருக்கா. ன்னா சொல்றீங்க வாத்தியார்ரே!"ங்றாரு கார்த்திஸ்வரன்.
            "செரி! மொல்லமாவே நல்ல வெதமாவே ஆவட்டும்!"ன்னு சொல்லிட்டு மவனெ அழைச்சிக்கிட்டுக் கெளம்புறாரு சுப்பு வாத்தியாரு.
            மறுநாளு சொன்ன நேரத்துக்குப் போயி நின்னா சொன்ன மாதிரிக்கி வேலய முடிச்சி வெச்சிருக்காரு கார்த்தீஸ்வரன். அதெ வாங்கிட்டு வந்து வூட்டுல பாத்தாக்கா சுமார இருக்குற விகடுவோட மூஞ்சியெ போட்டோஷாப்புல கொடுத்து சூப்பரா ஆக்கி வெச்சிருக்காருங்க கார்த்தி ஸ்டூடியோகாரவுக, அந்தப் போட்டோவுக்கே பொண்ண கொடுத்துப்புடுற அளவுக்கு. அது செரி இந்த மாதிரி போட்டோஷாப்புன்னு ஒண்ணு ஒலகத்துல கண்டுபுடிக்கப்படலன்னா பல பேத்துக்குக் கல்யாணமே ஆவதுதாம். அந்தப் போட்டோஷாப் போட்டோவுல மயங்கி கல்யாணத்துக்குச் சம்மதஞ் சொல்லி கட்டிக்கிட்டு, கல்யாணத்துக்குப் பெறவு அந்தப் போட்டோவுல தெரிஞ்ச மொகத்தெ தேடிக்கிட்டுக் கெடக்குறவங்க நாட்டுல நெறைய பேரு இருக்காங்கத்தாம்.
*****


No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...