26 Feb 2020

கட்டம் சரியில்லாம காலம் தள்ள முடியாது!

செய்யு - 370

            வாத்தியாரு சாதகெம் கணிச்சா சரியா இருக்கும்னு கொத்தூரைத் தாண்டியும் பேச்சு உண்டாச்சு. சாதகெம் கணிக்குற சோசியக்காரரா எதுக்கா ஆனாரோ அதெ சோதிச்சுப் பாக்குற மாதிரிக்கி தன்னோட சாதவெத்தையும், ஓடிப் பொன பொண்டாட்டியோட சாதகெத்தையும் எடுத்து வெச்சிப் பாத்தாரு சங்கு சுப்பிரமணியெம். சாதகெக் கட்டம் அதத்தாம் சொன்னிச்சி. "அடப் பாவியோளே! இதெ பாக்காம பத்துக்கு எட்டுப் பொருத்தம் இருக்குன்னு பாத்துக் கட்டி வெச்சிப்புட்டானுவோளே!"ன்னு ஆதங்கப்பட்டுக்கிட்டாரு அவரு. மொத பொண்டாட்டி ஓடிப் போவாங்ற மாதிரிக்கி இவருக்குக் கட்டம் இருக்குறதாவும், அதுக்குத் தோதா ஆவுறாப்புல இவருக்குப் பொண்டாட்டியா வர்றவளோட சாதகெம் அச்சு அசலா பொருந்திப் போனதெ பாத்துப் பாத்து ஆச்சரியப்பட்டாரு. "அத்து சரித்தாம் சாதவெம் சரியில்லன்னா மாதவனும் காடாளப் போவணும். சாதவெம் சரியா இருந்தா செருப்பு ஏறியும் ஆட்சிப் பண்ணும்! கஷ்டப்பட்டுக் கூட காலத்தெ தள்ளலாம். கட்டம் சரியில்லாம காலத்தெ தள்ள முடியா"ன்னு அவரு அடிக்கடிச் சொல்லுவாரு.
            மனுசனுக்கு ஒரு கொணம் உண்டாவும் பாருங்க, தனக்கு நேந்தது போல இனிக்கா இன்னொருத்தருக்கு நேந்துப்புடக் கூடாதுன்னு. அப்பிடி ஒரு கொணம் உண்டாயிப் போச்சு சங்குவுக்கு. ஆரம்பத்துலயே இந்த மாதிரிக்கி இந்த மாதிரிக்கி சாதவெம் இருக்குன்னு கணிச்சிப்புட்டா, அதுக்குத் தகுந்தாப்புல சில போக்குகள மாத்திக்கிடலாம் பாருன்னு அன்னிலேந்து சோசியத்தெ பாக்க ஆரம்பிச்சிட்டாரு. காலாங்காத்தால குளிச்சி முடிச்சி அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் அரைக்கு ஒரு வேட்டி, தோளுக்கு ஒரு வேட்டி, நெஞ்சுக்கும், நெத்திக்கும் திருநீத்தப் பூசி உக்காந்தார்ன்னா யாரு வந்து வேணாலும் சாதவத்தக் காட்டி சோசியத்தெ கேக்கலாம். அதிலேந்து பத்து பதினோரு மணிக்கி வரையிலும் சாதவம்தாம். எடையில எட்டு மணி வாக்கில பாலைத் தனியா காய்ச்சி பனங்கற்கண்ட பொடிச்சுப் போட்டு ஆத்திக் கொடுக்கணும். அதெ குடிச்சிப்புட்டு பத்து பதினோரு மணிக்கி வரைக்கும் வந்து நிக்குற சனங்களுக்குச் சாதவெத்தப் பாத்து முடிச்சிட்டு அதுக்கு மேலத்தாம் காலைச் சாப்பாடு. 
            சாதவெம் பாக்க ஆரம்பிச்சதுல கம்பு, சுருளு, மான்கொம்பு, குஸ்தின்னு அத்தனையையும் விட்டுப்புட்டாரு சங்கு. ஊருல அவனவனும் தனித்தனியா கொஞ்ச நாளைக்கி கம்பைச் சுத்திக்கிட்டு, குஸ்தியைப் போட்டுக்கிட்டு, நஞ்சாக்கெ சுத்திக்கிட்டு கெடந்தாம். தெருவுக்கு ஒருத்தெம் தலைமையில பெரியகொத்தூரு, சின்னகொத்தூரு, அகரக்கொத்தூரு, மன்னஞ்சின்னு நடந்துகிட்டு இருந்தாலும் இதுக்கு வாத்தியாரு முக்கியம். வாத்தியாரு இல்லாத வித்தெ ஆத்தோட போவும்பாங்க. அப்பிடியாயிடுச்சி நெலமெ. தொடர்ச்சியா கம்புச் சுத்துறது நின்னுப் போயி, குஸ்திப் போடுறது நின்னுப் போயி, நஞ்சாக்கு சுத்துறதும் நின்னுப் போயி அவனவெம் வூட்டுலயும் கம்பு மூலையில நின்னுகிட்டு இருக்க, நஞ்சாக்கு ஆணியில மாட்டியிருந்துச்சு. ரெண்டுலயும் தூசியும் தும்பட்டையுமா ஒட்டடை அப்பிக் கெடந்துச்சுங்க. ஊர்ல கோயில்ல திருவிழான்னு வந்தா மட்டும் அந்த நேரத்துக்கு அதெ சுத்தம் பண்ணி கழுவி தொடைச்சி அந்த வார காலத்துக்கு மட்டும் சுத்துறது நடந்திச்சி.
            சங்கு சுப்பிரமணியெமும் மனசுக்குக் கொஞ்சம் அலுப்பா இருந்தாக்கா வூட்டுக்கு நொட்டாகையிப் பக்கமா இருக்குற தெடல் மாதிரிக்கி கெடக்குற கொல்லையில நின்னுகிட்டு சுருளச் சுத்துவாரு. அதுல அவருக்கு அம்புட்டு இஷ்டம். அவரு சுத்துறதெ வெளியிலேந்து பாக்குற ஆளுக கூடி உள்ள வந்திடுவாங்க. சுருளச் சுத்துறதுல ரொம்ப கவனெம் வேணும். கொஞ்சம் கவனெம் பெசகுனா போச்சு. சுத்துறவனெ ரத்தக் களறியில குளிப்பாட்டிப்புடும் சுருளு. அதெ சுத்திக்கிட்டு மான்கொம்பெ கையில வெச்சிக்கிட்டு வரிசையெ போட்டுப் பாப்பாரு. பெறவு கம்பெ சுத்துவாரு. எல்லாம் மனசுல இருக்குற அலுப்பு போற வரைக்கும். அது போச்சுன்னா மறுக்கா மனசுக்கு ஒரு அலுப்பு வாரணும் அவருக்கு அதையெல்லாம் சுத்துறதுக்கு. ஆனா எப்போ சுத்துனாலும் அதெ பழைய வேகமோ, நுட்பமோ கொஞ்சம் கொறைஞ்சபாடில்லா. இதென்ன பள்ளியோடத்துல மனசுல கத்துக்குற பாடமா என்னா? ஒடம்பும், மனசும் இணைஞ்சு கத்துக்குற பாடமுல்லா. எப்பிடிக்கி மறக்கும்? என்னத்தாம் கம்பையும், குஸ்தியையும் விட்டுப்புட்டாலும் அவரு இன்னிக்கும் ஊருக்கு வாத்தியாருதாம்.

            எப்பவாச்சியும் இளவெட்டுக அவருக்கு வெத்தலெ பாக்கு, பழம், பத்தி, அவலு பொரி சர்க்கரெ, பத்து ரூவா தட்சணைன்னு வெச்சி கம்பு கத்துக்க கேட்டாலும் சொல்லிக் கொடுக்க மாட்டேன்னு அடம்லாம் பிடிக்க மாட்டாரு. ரகளையா சொல்லிக் கொடுக்குறாரு. ஆனா இளவட்டங்க அதெ கத்துக்கணுமே. நாலு நாளைக்கு ரொம்ப ஆர்வத்தோட வந்து அஞ்சாவது நாளு காணாமாப் போயிடுறானுவோ. அதுக்குக் காரணம் ரெண்டு மூணு நாளைக்கி ஆசைக்கி கம்பெ சுத்த விட்டுப்புட்டு, அதுக்குப் பிற்பாடு ஒடம்ப பலம் பண்ணுற ஒடம்புக்கான பயிற்சிகள பண்ணணுதுக்குப் பெறவுதாம் கம்பெ கையில எடுக்கணும்னு சொல்லுவாரு சங்கு. அதெ கண்ணு மின்னாடி நின்னு அவரு சொல்றாப்புல எல்லாம் செஞ்சிக் காட்டணும். அதெ அப்போ செய்யுறதுக்குச் சொகமாத்தாம் இருக்கும். அவரு பத்து தபா செய்யச் சொன்னா இருவது தபா செய்யத் தோணும். ராத்திரிக்கிப் படுத்துக் காலையில எழுந்தாத்தாம் ஒடம்பு வலி தாங்க முடியா. அதெ ஒரு பத்து நாளு கணக்குக்குத் தாங்கியாவணும். அப்பிடிக்கித் தாங்குனாத்தாம் ஒடம்புக்கு அது ஒத்துக்கும். மொத நாளு வலியத் தாங்காம சொல்லாம கொள்ளாம பம்மிப் போற எளவட்டங்கத்தாம் அதுக்குப் பெறவு கம்புன்னோ, குஸ்தின்னோ வாயெ தொறக்க மாட்டானுவோ. அவரு கண்ணுல பட மாட்டானுவோ. ஊரை வுட்டு ஒதுக்கி வெச்ச பயலுக மாதிரி ஊருக்குள்ள பம்மி பம்மி வந்துப் போயிட்டுக் கெடப்பானுவோ. சங்குவும் அதெ கண்டுக்கிடாத மாதிரிக்கி விட்டுப்புடுவாரு.
            சங்கு சுப்பிரமணியெம் மித்த சோசியக்காரவுக மாதிரிக்கி கெடையாது. யாரு வந்து வேணாலும் அவருகிட்ட சோசியத்தெ பாத்துக்கிடலாம். நேரம்தாம் முக்கியம். காலையில சாப்பாடு கொள்ளுறதுக்கு மின்னாடி வந்துப் பாத்துக்கணும். காலைச் சாப்பாடு எறங்கிட்டுன்னா மறுக்கா சோசியத்தெ பாக்கணும்னா மறுநாளு வரைக்கும் காத்திருந்தாவணும். கூட்டம் அதிகமா இருந்திச்சுன்னா மதியானத்து வரைக்கும் கூட காலைச் சாப்பாட்ட எடுத்துக்கிட மாட்டாரு. எல்லாத்தையும் அனுப்பிச்சிட்டு மதியானத்துக்கு ரண்டு மணியாலும் அப்பத்தாம் சாப்பிடுவாரு. காலச் சாப்பாட்டுக்கு மின்னாடி சொல்றதுதாங் சரியான சோசியங்றது அவருக்கு ஒரு கணக்கு. மித்தமித்தபடி காசுல்லாம் கறாரா கேக்க மாட்டாரு. காசிய கொடுக்காம போனாலும் ஒண்ணுத்தையும் சொல்ல மாட்டாரு. கொடுக்குற காசிய கையால வாங்க மாட்டாரு. ஒரு எவரு சில்வரு பொட்டி ஒண்ணு இருக்கும். அதுக்கு மேல காசிப் பணத்தெ போடுறாப்புல ஒரு தொளை இருக்கும். அதுல சாதவெத்தப் பாக்க வர்றவங்க போட்டுட்டுப் போவ வேண்டியதுதாம். போடாம போனாலும் அதுப் பத்தி ஒண்ணும் அட்டியில்லெ. இவ்வளவுதாம் சாதவத்தெப் பாக்க கணக்குன்னு எதுவுமில்ல. அது போடுறவங்களோட விருப்பத்தோட சம்பந்தப்பட்டது. அதுல போடுற காசிப் பணத்தையெல்லாம் அவரு பாத்துக்கிட்டு இருக்க மாட்டாரு.
            சங்கு சுப்பிரமணயெம் ரெண்டவதா வர்ற பொண்டாட்டிய அவரே அவரோட வகையறாவுல பாத்து, அவரே அந்தப் பொண்ணோட சாதவத்தையும் பாத்து கலியாணத்தெ கட்டிக்கிட்டாரு. ஊரு ஒலகத்துல தனக்கு வர்றப் போற பொண்டாட்டியோட சாதவத்தெ தானே பாத்து கலியாணம் கட்டிகிட்ட கோடியில ஒருத்தரு இவரத்தாம் இருக்கும். சரியான பொண்ண சாதவத்தெப் பாத்துக் கட்டிக்கிட்டார்னு ஊர்ல ஒலகத்துல பேர்ர சொல்றாப்புல புள்ள ஒண்ணையும், பொண்ணு ஒண்ணையும் பெத்துக்கிட்டு ரொம்ப சிறப்பா தன்னோட வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாரு. அது வேற அவருக்கு ராசியான சோசியருங்றெ பேர்ர வாங்கிக் கொடுக்க ஆளாளுக்கு பலபல ஊர்லேர்ந்து அவருகிட்ட சோசியம் பாக்க வந்துகிட்டுக் கெடக்கறாங்க.
            அத்தோட மங்கல வாயிக்காரர்னு பேரும் உண்டாயிப் போயிடுச்சு. சாதவெம் சரியில்லன்னா வருஷ கணக்கெ சொல்லி வந்து பாக்கச் சொல்லுவாரு. அதாச்சி, ஒரு வருஷம் கழிச்சி வந்துப் பாக்கணும், ரண்டு வருஷம் கழிச்சி வந்துப் பாக்கணும்பாரு. அதுல புரிஞ்சிக்கிடணும், இப்போ சாதவெம் சரியில்லன்னு. சாதவத்துல என்னா சரியில்ல, ஏது சரியில்லன்னுல்லாம் சொல்ல மாட்டாரு. அத்தோட பரிகாரம் பண்றதெப் பத்தியெல்லாம் சொல்ல மாட்டாரு. பரிகாரங்றது சோசியத்துல தப்புங்றது அவரோட கணக்கு. பரிகாரம்னா ஒரே பரிகாரம் சாதவக் கட்டம் சரியாவுற வரைக்கும் தள்ளிப் போடுறதாங் பரிகாரம்பாரு அவரு. மாப்பிள்ள பொண்ணு சாதவெம் சரியில்லன்னா ஒண்ணுஞ் சொல்லாம கையில கொடுக்காம தரையில வெச்சிப்புடுவாரு. அந்தச் சோடியெ கல்யாணம் பண்ணிச் சேக்கவே கூடாதுங்றது அதுக்கு அர்த்தம். மீறிச் சேர்த்தா ஒண்ணு பொண்ணு ஓடிப் போவும், இல்லே பையன் பொண்ண விட்டுப்புட்டு ஓடிப் போயிடுவாம். இல்லாட்டி ரண்டுல ஒண்ணு அற்பாயுசல போயிடும். அதுவும் இல்லாட்டி கட்டையில போற வரைக்கும் ரண்டும் ஒண்ணுக்கொண்ணு சண்டைய போட்டுக்கிட்டு நிம்மதியில்லாம வாழ்ந்துகிட்டு கெடக்கும்.
            மூலங்கட்டளெ வாத்தியாரோட பொண்ணுக்கு தள்ளிப் போயிட்டிருந்த கல்யாண தெசய சரியா கணிச்சி எந்தப் பக்கத்துல பாத்தா மாப்புள்ளப் பயெ கெடைப்பாங்றதெயும் கணிச்சிச் சொல்லி அந்தப் பக்கத்துக்கு அனுப்புனாரு சங்கு. அந்த தெசையிலத்தாம் வாத்தியாரு பொண்ணுக்கு மாப்பிள்ளெ அமைஞ்சி கலியாணம் சட்டுபுட்டுன்னு நடந்திச்சி. அத்தோட ரகுநாதெம் பெரசிடெண்டுக்கு தேர்தல்ல மொத ரெண்டு தடவையும் நின்னாக்கா செயிக்க முடியுமா? முடியாதாங்றதயும் கட்டத்தெ பாத்து சரியா கணக்குப் பண்ணி நின்னா ஜெயிக்கலாம், ஜெயிச்ச பிற்பாடு உசுரே போற அளவுக்குப் பெரச்சனெ வரும், ஆனா உசுரு போவாதுன்னு சொன்னாரு. அப்பிடித்தாம் ஆனுச்சி. மூணாவது தடவெ ரகுநாதெம் பிரசிடெண்டுக்கு நின்னப்போ, இந்தத் தபாவும் செயம்தான்னாலும், உசுரு போற அளவுக்குப் பெரச்சனை வராட்டியும்ன்னு சொல்லிப்புட்டு அதுக்கு மேல சொல்லாம சாதவத்தெ கையில கொடுத்துட்டாரு சங்கு. மூணாவது தடவையும் சங்கு சொன்னபடிக்கி பெரசிடெண்டு ஆயி நாலாவது வருஷத்துல மாரடைப்பு வந்து போயிச் சேந்தாப்புல ரகுநாதெம்.
            ஊரு ஒலகத்துல எங்க எவ்வேம் சாதகத்தப் பாத்தாலும் சங்குகிட்டயும் ஒரு தபா சாதவத்தெ பாக்குறது இங்க ஒரு வழக்கமா போயிடுச்சி. அவரு ஒருத்தருகிட்டயே பாத்தாலே போதும்னாலும், அமங்கமலமான வெசயத்தையோ, கட்டம் சரியில்லாத சாதவத்தையோ பத்தி எதுவும் சொல்லாம கையில கொடுத்துடுவாருல்லா அவரு. அந்த ஒரு கொணம் பிடிக்காம மித்த சோசியக்காரவங்ககிட்ட போறவங்க உண்டு.
            சுப்பு வாத்தியாரு மவ்வேம், மவளோட சாதவத்தெ நாட்டியத்தாங்குடி சோசியருகிட்டெ கேட்ட பிற்பாடு சங்கு சுப்பிரமணியெத்துக்கிட்டயும் ஒரு தபா கேட்டுப்புடுவோம்னு கருக்கலோட கருக்கலா டிவியெஸ்ஸ கெளப்பிக்கிட்டு டுர்ரு டுர்ரு டர் டர்ன்னு கெளம்புறாரு.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...