25 Feb 2020

உருவானாரு ஒரு சோசியக்காரரு!

செய்யு - 369

            ஊருல அவனவனும் தன்னோட வூட்டுக் கல்யாணத்த போல முன்ன நின்னு செஞ்சி வெச்சாம் சங்கு சுப்பிரமணியத்தோட கல்யாணம். அத்தோட ஊருக்கே கம்பு வாத்தியாரு வேறயா? சொல்லவா வேணும். கல்யாணம் ஏக தடபுடலா நடந்திச்சி. மூலங்கட்டளை வாத்தியாருத்தாம் வந்து தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணத்தெ பண்ணி வெச்சதெல்லாம். சங்குவுக்குக் கல்யாணம் பண்ணி வெச்ச பொண்ணு அழகுன்னா அழகு அப்பிடி ஒரு அழகு. வாத்தியாருக்கு ஏத்த பொண்ணுன்னு ஊரே பேசுச்சு. கொணமும் அப்படி ஒரு கொணம் அந்தப் பொண்ணுக்கு. வாத்தியாருக்கு ஏத்த ஜோடின்னு ஊரே கண்ணுபட்டுப் போச்சு. வாத்தியார்ர அந்தப் பொண்ணும் கவனிச்ச கவனிப்பு அப்பிடி. எல்லா சந்தோஷமும் மூணு மாசத்துக்குள்ள முடிஞ்சிப் போவும்ணு யாராச்சிம் கனா கினா கண்டாங்களோ என்னவோ! விருந்தும் மருந்து மூணு நாளிக்கி, சந்தோஷமும், துக்கமும் மூணு மாசத்திக்கின்னு சொல்லுவாங்களே அப்பிடியோ என்னவோ!
            அப்படி கவனிச்ச பொண்ணு நாலு நாளா காணும்னா சங்குவுக்கு எப்பிடி இருந்திருக்கும்? ஊருல ஒரு பயலுக்கும், ஒரு பொண்டுக்கும் பச்சத் தண்ணி தொண்டைக்குள்ள எறங்கல. ஊரே வலை போட்டு அங்க இங்கன்னு தேடுது. ஊருல இருந்த அத்தென கிணத்துலயும் மொத தேடுதலு நடக்குது. அதுக்கு அடுத்தாப்புல சிவம் கோயிலுக்கு எதுத்தாப்புல இருந்த கொளத்துல வுழுந்துப் பத்து பாஞ்சு பேரு தேடுறானுவோ தேடுறானுவோ அப்பிடித் தேடுறானுவோ. வண்ணாங்கொளம், பரியாரிக் கொளம், குடியானத் தெரு கொளம், பள்ளத்தெரு கொளம்னு ஒரு கொளம் பாக்கி விடல. வடவாதியில ஓடுற வெண்ணாத்துக்கும் கொத்தூருக்கும் மூணு மைலு தூரம்னாலும் அதுல எதுனாச்சும் பொண்ணு விழுந்திருக்குமோன்னு வடவாதியில ஆரம்பிச்சி அருவாமணி வரைக்கும் கரையோட ஆறு போற தெச அத்தனையும் தேடியாச்சி.
            பொண்ணோட பொறந்த ஊரு இருக்குற வூட்டுக்கு ஆளனுப்பிப் பாத்து அங்கயும் தேடியாச்சி. ஒரு வேளை மனசுக்குள்ள எதாச்சிம் கோப தாபம் இருந்து ஒறவுக்காரவுங்க வூட்டுப்பக்கமா எங்கனாச்சும் போயிருக்குமான்னு அங்கங்கயும் ஆளு வுட்டுப் பாத்தாச்சி. அங்கங்க வெவரம் கேள்விப்பட்டு ஆளுங்க வேற சங்கு சுப்பிரமணியெம் வூட்டுக்குப் படையெடுத்து வாராங்க. அப்பிடி வந்துத் தங்குன ஆளுங்களுக்கு வேற சமையல்கார ஆளெ வெச்சி சோறு பொங்கிப் போடுறாப்புல ஆகிப் போச்சு நெலமெ. தங்குன ஆளுக இந்தத் துக்கத்துக்கு மத்தில கொழம்புல காரம் பத்தல, கறியில உப்பு பத்தல, எத்தனெ நாளிக்கி சோறாவே பொங்கித் தின்னுறது, ஒரு மாத்தலா பூரியோ, பரோட்டாவோ போட்டுத் தொலைங்கப்பான்னு சொல்றானுவோ. எங்கங்கயோ தேடியும் பொண்ணு எங்கனயும் தட்டுப்படுறாப்புல இல்ல.
            ஒரு வேள வடவாதிக்குப் போயி பொண்ணு அங்கயிருந்து பஸ்ஸ பிடிச்சி எங்கினாச்சும் போயிருக்குமான்னு பஸ்காரவுகளயும் விசாரிச்சுச்சு. அப்பயும் சரி, இப்பயும் சரி ஓடுறதெ மொத்தமே மூணு நாலு பஸ்ஸூங்றதால எட்டாம் நம்பரு பஸ்ஸூ, ரண்டாம் நம்பரு பஸ்ஸூ, எம்.எல்.ஏ. பஸ்ஸூ, கும்பகோணத்து மெயிலு பஸ்ஸூன்னு எல்லாத்திலயும் விசாரிச்சாச்சு. அதுல வாடிக்கையா போறவங்களுக்கும், வண்டியோட்டுற ஓட்டுநரு, நடத்துநரு வரைக்கும் ஒரு பழக்கம் என்னான்னா பஸ்ஸூல வர்றவங்க, போறவங்களோட சாதகத்தெ விசாரிச்சி தெரிஞ்சிகிட்டாதாம் அவுகளுக்குத் திருப்திபடும். அதால அவுங்களுக்குத் தெரியாம இந்த ஊருக்கு பஸ்ஸூல போயி, யாரும் ஊரு திரும்பிட முடியாது. அவுங்களும் வெலா வாரியா பொண்ணு பஸ்ஸூ வழியா எங்கனயும் போவலன்னு அடிச்சிச் சொல்லுறாங்க.
            எங்கப் போச்சு பொண்ணுன்னு ஊரே தவிச்சிப் போயிடுச்சு. சங்கு சுப்பிரமணியெம் அதெ விட தவிச்சுப் போயிட்டாரு. கம்பு சுத்துனார்ன்னா எட்டு ஊரு நின்னாலும் வெல வெலத்துப் போயிடும். இப்போ அவரு வெலவெலத்துப் போயிக் கெடக்குறாரு. ஒடம்பெல்லாம் நடுங்குது அவருக்கு. ஒரு வம்பு, சண்டே, கோவம்னாலும் அதுல கோவிச்சுகிட்டுப் பொண்ணு எங்கனாச்சும் போயிருக்கும்னோ, ஆத்துலயோ, கொளத்துலயோ வுழுந்து செத்திருக்கும்னு ஒரு ஆறுதலாவது பட்டுக்கிடலாம். வம்பு சண்டென்னு ஒண்ணு கெடையாது. ஒரு சின்ன மனத்தாபம் கெடையாது. ரொம்ப பெலசாலி, கம்பு சுத்துறதுல கோதாவான ஆளுன்னாலும் சங்கு சுப்பிரமணியெத்துக்கு சின்ன வாய்ச்சண்டைன்னாலும் ஒத்துக்காது. ஒடனே ஒத்துப் போயி நீயி சொல்றதுதாங் சரின்னு அவரு பாட்டுக்குப் போயிட்டே இருப்பாரு. எதிரு பேச்சுல்லாம் பேச மாட்டாரு. அப்பிடி ஒரு ஆளு பொண்டாட்டிக்கிட்ட எப்பிடி நடந்துப்பாருன்னு சொல்லவா வேணும்?
            இங்க ஆளு தளந்துப் போயி உக்காந்ததெ கேள்விப்புட்டு மூலங்கட்டளை கம்பு வாத்தியாரே வந்துப்புட்டாரு. தன்னோட சிஷ்யப்புள்ளைக்கு இப்பிடி ஆயிப் போச்சேன்னு அவரு ரொம்ப தளும்பிப் போயி உக்காந்திருக்காரு. ஒரு வாரம் வரைக்கும் திருவாரூ, ஆர்குடி, கூத்தாநல்லூருன்னு அங்க இங்க அலைஞ்சிம் ஒரு சேதியும் தெரியல. கடைசியலத்தாம் விவரம் தெரிய வந்துச்சி. அது யாராலயும் எதிர்பாத்து யோசிக்க முடியாத ஒண்ணா வேற இருந்துச்சு. அது செரி பொண்ணு தெருவுக்குப் பால் எடுக்க வந்த பால்க்காரேனோட ஓடிப் போவான்னு யாருத்தாம் எதிர்பார்க்க முடியும்? மூணு நாலு நாளா ஊருல பால் எடுக்க வர்ற பால்க்காரன காணுமேன்னு நூலு பிடிச்சிப் போயி அவ்வேம் ஊருக்குள்ள விசாரிச்சா அவ்வேம் அங்க ஆளக் காணும். அப்பிடியே விடாம நூலு பிடிச்சிப் போயித்தாம் அதெயும் கண்டுபிடிக்க முடிஞ்சிது.

            சங்கு சுப்பிரமணியெம் ஒடைஞ்சுப் போயிட்டாரு. ஊருல அவனவனும் பொண்ணப் பாத்தா கண்டம் துண்டமா வெட்டிப் போட்டுப் போடணும்னு வெறி கொண்டு நிக்குறாம். வாத்தியாரோட வாத்தியாரே பேசுனதுக்கே கொதிச்சுப் போன பயலுவோ, வாத்தியாருக்கே ஒண்ணுன்னா ச்சும்மா இருப்பானுவோளா? அவனவனும் கடலு கொந்தளிக்குறாப்புல கொந்தளிக்கிறாம். கடைசியா மூலங்கட்டளெ வாத்தியாரு சொல்றதுதாங் முடிவுன்னு எல்லாரும் அவரோட மொகத்தப் பாக்குறானுவோ. இந்த நெலையில எதாச்சிம் ஒரு முடிவ எடுத்துத்தான ஆவணும். மூலங்கட்டளெ வாத்தியாரு சொல்றாரு, "ஒரு பொண்ணோட மனசெ யாரும் ஒண்ணும் பண்ண முடியா. அத்து யாரோட வாழணும்னு பிரியப்படுதோ அத்தோடத்தாம் அத்து வாழும். அத்தெப் பிரிச்சிக் கொண்டாந்து மறுக்கா எஞ் சிஷ்யப் புள்ளயோட வாழ வெச்சாலும், மறுக்கா அத்து ஒடிப் போவாதுன்னு ன்னா நிச்சயம். பொண்ணோட வூட்டுக்காரவுங்க இத்த அத்து வுடச் சம்மதிச்சாவணும். எஞ் சிஷ்யப்புள்ளே மறுக்கா வேற ஒரு நல்லப் பொண்ணா பாத்துக் கல்யாணத்த பண்ண சம்மதத்தெ கொடுத்தாவணும்!"ன்னாரு.
            அவரு அப்பிடிச் சொன்னதுதாம் தாமசம், பொண்ணு வூட்டுக்கார சனங்க ஓடியாந்து மூலங்கட்டளெ வாத்தியாரோட காலுல வுழுவுறாங்க. அவரோட கால பிடிச்சிக்கிட்டு, "யய்யா! எஞ்ஞ வூட்டுல இன்னொரு பொண்ணு இருந்தா ஒஞ்ஞ சிஷ்யப் புள்ளைக்கி எஞ்ஞ மாப்புள புள்ளைக்கியே கட்டிக் கொடுத்திடுவேம். அப்பிடி ஒரு பாக்கியம் இல்லைங்களே. எஞ்ஞ ஊர்ல, எஞ்ஞ வகையறாவுல எந்தப் பொண்ண ஒஞ்ஞ சிஷ்யப் புள்ளெ வெரல நீட்டிச் சொல்றாரோ அந்தப் பொண்ண கொண்டாந்து கட்டி வெச்சாத்தாங்கய்யா எஞ்ஞ குடும்பத்தெ பிடிச்ச பாவம் போவும்!"ன்னு கதறி அழுவுறாங்க.
            "யேய் சங்கய்யா! ஒம் மனசுல உள்ளதெச் சொல்லு!"ங்றாரு இப்போ மூலங்கட்டளெ வாத்தியாரு.
            "அத்து வந்து... அத்து மேல உசுரையே வெச்சுப்புட்டேம்யா! வாத்தியாரய்யா!"ன்னு தளும்புனாரு பாருங்க சங்கு சுப்பிரமணியெம் ஊரே கொந்தளிச்சிப் போயிடுச்சி. "ஓடுகாலிச் சிறுக்கி! இந்த மவராசனெ வுட்டுப்புட்டா எச்சக்கார பயலோட ஓடிப் போயி..."ன்னு ஆளாளுக்குக் கெட்ட கெட்ட காது கூசுறாப்புல வசவுகள அள்ளி வீசுதுங்க சனங்க.
            "த்தா... நிறுத்துங்க எல்லாம்!"ன்னு ஒரு அதட்டல போட்டாரு மூலங்கட்டளெ வாத்தியாரு. சத்தம் சர்வமும் அடங்கிப் போச்சு.
            "நடந்தது நடந்துப் போச்சி. ஆரும் ஒண்ணும் பண்ணுறதுக்கில்ல. ஆத்திரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு ஆவப் போறது ஒண்ணுமில்ல. உண்மையான கம்புக்காரவங்கறவெம் இந்த மாதிரிச் சந்தர்ப்பத்துல நெதானமா இருக்கிறவேம்தாம். எஞ் சிஷ்யப்புள்ளே அப்பிடி இருக்காம். நமக்கு ரொம்ப பெருமைத்தாம். இந்தாருய்யா சங்கய்யா மனசு வுட்டு அழுவணுமா அழுதுப்புடு. ஊரு ஒலகத்துல நடக்காத சங்கதி ஒண்ணும் நடந்துப்புடல. ஒங் கூட குடும்பம் நடத்த வக்கில்ல அந்தக் கொசகெட்ட சிறுக்கிக்கு. பாவிப் பய மவள கொண்டாந்து ஒந் தலையில கட்டியாச்சி. அதெ வுடு. இன்னிலேந்து ஒரு வாரத்துக்குள்ள ஒங் கலியாணத்தெ முடிச்சாவணும் இந்த வாத்தியாரு. ஒஞ் சம்மதத்தெ சொல்லு!"ங்றாரு மூலங்கட்டளை வாத்தியாரு.
            "அத்தெ நம்மால மறக்க முடியா. இப்பிடியே நம்மள வுட்டுப்புடுங்க வாத்தியாரய்யா!"ன்னு சின்னப் புள்ள கணக்கா குலுங்கிக் குலுங்கி அழுவுறாரு சங்கு சுப்பிரமணியெம்.
            "அடச்சீ! அவ்வே ஒரு பொம்பளென்னு அவளெ மறக்க முடியான்னுகிட்டு? அவளெ விட ராஜாத்தியெ, அழகியெ கொண்டாந்து கட்டி வைக்கிறேம் பாரு ஒமக்கு! எம் மவராசம்டா நீயி! மவராணிய கொண்டாராம்டா சங்கய்யா!"ங்றாரு மூலங்கட்டளெ வாத்தியாரு.
            "மனசு போறல்லயோ! மனசு சம்மதம் சொல்ல மாட்டேங்குதய்யா! வாத்தியாரு கேட்டும் மறுக்குதேய்யா!"ன்னு ஓலமிடுறாரு சங்கு.
            "ஜாதவெம் அப்பிடி இருக்கே! ஜாதவெத்தெ ஆரு ன்னா பண்றதுக்கு?"ன்னு சொன்னாரு பாருங்க மூலங்கட்டளெ வாத்தியாரு, அங்கப் பிடிச்சிக்கிட்டாரு சங்கு சுப்பிரமணியெம். "ஜாதவெம்! ஜாதவெம்!"ன்னு சொல்லிக்கிட்டு பைத்தியம் பிடிச்சவரு மாதிரி அன்னிக்குச் சிரிச்சாரு பாருங்க ஒரு சிரிப்பு. சுத்தி நின்ன சனமெல்லாம் அவருக்குப் பைத்தியம்தாம் பிடிச்சிக்கிட்டுன்னு நெனைச்சிகிட்டு. மூலங்கட்டளெ வாத்தியாரும் அவர்ர பிடிச்சிக்கிட்டு, "யேய் சங்கய்யா! என்னம்மடா ஆச்சு ஒமக்கு! யேய் சங்கய்யா!"ன்னு தோளப் போட்டு உலுக்கறாரு.
            "ஜாதவெம்! ஜாதவெம்!"ன்னு சொல்லி மறுக்கா மறுக்கா சிரிச்சிக்கிட்டே இருக்காரு சங்கு சுப்பிரமணியெம்.
            அன்னிக்கு ஊர விட்டுக் கெளம்பி ஊரு ஊரா அலஞ்சி அங்கங்க இருக்குற சாதகம் பாக்குறவங்க, சோசியம் பாக்குறவங்கிட்டயெல்லாம் காலடியில கெடந்து அதெ கத்துக்கிட்டு அவரு ஊரு திரும்புனப்போ முடியெல்லாம் வெச்சிகிட்டு, கொண்டையெல்லாம் போட்டுக்கிட்டு, தாடியெல்லாம வளத்துக்கிட்டு சாமியார்ரப் போல சோசியக்காரரா திரும்புனாரு சங்கு சுப்புரமணியெம்.
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...