31 Jan 2020

ஆட்டு மாட்டுப் பள்ளியோடம்!



செய்யு - 344

            பழக்க வழக்கம், பேச்சு வார்த்தெ சரியா இல்லன்னாலும் கோட்டகம் பள்ளியோடத்துக்குக் குமரு மாமாவோட கைங்கர்யம் ரொம்பவே அதிகம். பள்ளியோடத்துக்கு வராந்தா தெறந்த‍ மேனிக்குக் கெடந்ததுல ஊர்ல உள்ள ஆடுங்க, மாடுங்க எல்லாம் ராத்திரி நேரத்துல அங்கத்தாம் பாடம் படிக்கணும்னு வந்துடும்ங்க. அந்த ஆடுங்க, மாடுங்க அங்கனயே படுத்து, புழுக்கைகளப் போட்டு, சாணியப் போட்டு வெச்சு காலையில போயிப் பாத்தாக்கா அந்த எடத்தெ சுத்தம் பண்றதுக்குள்ள அது ஒரு அரை மணி நேரத்தெ முழுங்கிப்புடும். மழைக்காலத்துல இந்த அட்டூழியம் ரொம்ப அதிகமாவே இருக்கும். கோடைக்காலத்துல அங்கங்க படுக்குற ஆடுங்க, மாடுங்க மழைக்காலத்துல வராந்துக்குள்ளத்தாம் வந்துப் படுத்துக்கும்ங்க. ஒரு வூட்டு ஆடு மாடு, ரெண்டு வூட்டு ஆடு மாடுன்னு இல்லாம ஊருல்ல உள்ள அத்தனெ ஆடு மாடுங்களும் வந்துப் படுத்தா வராந்தா என்னாவுறது? மழைக்காலத்துக்கு ஊர்ல இருக்குற ஆடுங்களுக்கும் மாடுங்களுக்கும் பள்ளியோடத்து வராந்தாத்தாம் கொட்டில் மாதிரி ஆகிப் போச்சு.
            அத்தோட மனுஷங்களும் பகல் நேரத்துல பொழுது போகலன்னா வராந்தாவுல வந்து துண்டெ விரிச்சிப் போட்டு படுத்துக்கிடுறாங்க. என்ன இப்பிடி பள்ளியோடத்து வராந்தாவுல பாடத்தெ நடத்துறப்ப படுத்திக்கிட்டா எப்பிடின்னா, "அதுக்கென்ன வாத்தியாரே! நீஞ்ஞ பாட்டுக்குப் உள்ளார பாடத்தெ நடத்துங்க! நாஞ்ஞப் பாட்டுக்குத் வெளியில தூங்குறேம். அதுல ஒங்களுக்கு ன்னா பாதிப்பு வந்துப் போச்சு?" அப்பிடின்னு சொல்லிப்புட்டு, சொல்லப் போற பதில கூட கேக்க நேரமில்லாதத போல அடுத்த நொடியே கொர் கொர்ன்னு கொறட்டை வுட்டுத் தூங்குறாங்க.
            இது ஒரு பிரச்சனை ஆச்சா... அடுத்தது இன்னொரு பிரச்சனை என்னான்னா... அறுவடை காலம் ஆச்சுன்னா கிராமத்துச் சனங்க அறுக்குற நெல்லு மூட்டைகள வராந்தாவுல கொண்டாந்து அடுக்கிக்கிட்டுப் படுத்துக்கிறாங்க. அறுவடை முடியுற இருவது நாளைக்கு வரையுமாவது பள்ளியோடத்து வராந்தா முழுக்க நெல்லு புடிக்கிற கொள்முதல் நிலையம் போல ஆயிடுது. அப்ப மட்டுந்தாம் வராந்தாவுல ஆடு மாடுக பிரச்சனை இருக்காது. மூட்டைக பிரச்சனை ஆரம்பமாயிடும். அதாவது மூட்டைகள அடுக்கிறதோட வுடாம எம்மோட எடத்துல இவ்வேம் அடுக்கிட்டாம், அவ்வேம் எடத்துல இவ்வேம் அடுக்கிட்டாம்னு வேற சண்டெ இழுத்துக்கிட்டு அதுக்குப் பஞ்சாயத்துப் பண்ணி வையுங்கன்னு விகடுகிட்ட வந்து நிக்குறாங்க. பள்ளியோடத்து வராந்தாவுல மூட்டைகள அடுக்குறதெ தப்புன்னா இதுல இப்பிடி பஞ்சாயத்து வெச்சுக்கிட்டு வந்து நின்னா என்ன பண்றது? அதுவுமில்லாம பள்ளியோடத்து வராந்தாவுல இது இவுங்க மூட்டை அடுக்குறதுக்குன்னா எடம், அது அவுங்க மூட்டை அடுக்குறதுக்கான எடம்னு யாரு பிரிச்சி வுட்டதுவோ?
            இந்த மேனிக்குப் பள்ளியோடத்து வராந்தாவுல மூட்டைகள அடுக்காதீங்க? ஆடு மாடுகள வுடாதீங்கன்னா அவுங்கள்ல யாரும் கேக்குற பாடாயில்ல. "இதென்ன புதுக் கூத்தா இருக்கு? பள்ளியோடம் பெறவு எதுக்கு இருக்கு? பள்ளியோடத்து வராந்தா சும்மாத்தான கெடக்கு? ராத்திரி நேரத்துல பள்ளியோடத்துல ன்னா பாடமா நடக்குது?"ன்னு கேட்டுட்டுச் சிரிக்கிறாங்களே தவிர அப்பிடி அவுங்க பண்றதெ மட்டும் நிறுத்த மாட்டேங்றாங்க.
            இத்தெ இப்பிடியே விட முடியாது, இதுக்கு ஒரு வழியக் கண்டுபிடிக்கணும்னு வராந்தாவுக்கு மரச்சட்டத்துல ஒரு தட்டிய செஞ்சு அடைச்சா தேவலாம்னு தோணுச்சு விகடுவுக்கு. இப்போ வருஷா வருஷம் பள்ளியோடத்துக்குப் பள்ளி மானியம், பராமரிப்பு மானியம்னு பணத்தெ ஒதுக்குறாங்க. அந்தப் பணத்தெ எடுத்துச் செஞ்சப்புடலாம்னு சின்னமுத்து வாத்தியாருகிட்ட கலந்துகிட்டாம் விகடு. அவரு எது செஞ்சாலும் சரித்தாம்ங்ற மாதிரி தலையாட்டுறாரு. குமரு மாமாகிட்ட போயிச் சொன்னதுக்கு அதுவும் சரின்னு காரியத்துல எறங்கிப்புடுச்சு. ஒரு நாளு வந்து தட்டிக்கான அளவுகள எடுத்துக்கிட்டு, இருவது நாள்ல தட்டிய தயாரு பண்ணிகிட்டு,துணைக்கு ஒரு ஆளையும் அழைச்சுக்கிட்டு டாட்டா ஏஸ்ல வந்து எறங்கிப்புடுச்சி குமரு மாமா. சுத்திலும் தட்டிய வெச்சி அடைச்சி, கதவ வெச்சி, நீல நெறத்துல பெயிண்டையும் கையோட கையா அடிச்சி விட்டு போயிடுச்சு. அத்தோட வராந்தாவுக்கு தட்டியிலயே கதவைப் போட்டு கதவுக்குப் பூட்டையும் போட்டு அடைச்சாச்சி. இதுல அடுத்தப் பிரச்சனை உண்டாயிப் போச்சு. இப்பிடி பள்ளியோடத்து வராந்தவ அடைச்சா ஆடுங்க, மாடுங்க எங்கப் போயி படுக்குறது? அறுவடை காலத்துல அறுக்குற மூட்டைகள எங்க போயி அடுக்குறது? மேக்கொண்டு என்னாத்த பண்றது?ன்னு கிராமத்துலேந்து பள்ளியோடத்துக்குத் தாக்கல் வருது.
            "அதிகாரிங்க வந்துப் பாத்தா பெரச்சனையா போயிடும். ஒஞ்ஞ வூட்டு ஆடு மாடுகள ஒஞ்ஞ ஒஞ்ஞ வூட்டுல கட்டி வெச்சி வளருங்க. ஒஞ்ஞ ஒஞ்ஞ நெல்லு மூட்டைகள ஒஞ்ஞ ஒஞ்ஞ வூட்டுல வெச்சிக்குங்க. பள்ளியோடம் பொது எடம். அது புள்ளைங்க படிக்க கொள்ள, வெளையாட‍ கொள்ள உபயோகப்படணுமே தவுர இப்பிடில்லாம் உபயோகம் ஆகக் கூடாது!" அப்பிடிங்றாம் விகடு அந்தத் தாக்கலுக்கு.

            "அப்பிடி ன்னா சட்டம் இருக்கா? அதெ எடுத்துக் காட்டுங்க வாத்தியார்ரே பாப்பேம்!"ங்றாங்க சனங்க சில பேருங்க. அத்தோட,             "இத்து எஞ்ஞ கிராமம். எஞ்ஞ பள்ளியோடம். நீஞ்ஞ வேத்து ஊருக்காரரு. பள்ளியோடம் வந்தா பாடத்தெ நடத்துறதெ மட்டும் பாருங்க. சட்டத்துல யில்லாத காரியத்தையெல்லாம் செய்யாதீங்க. பெறவு பெரச்சனையா போயிடும். போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் பண்றாப்புல ஆயிப்புடும்!" அப்பிடின்னும் சொல்லுறாங்க கிராமத்துல இருக்குற சில ஆளுங்க.
            விகடு பாத்தாம் அவுங்கள, "ரொம்ப நல்லதாப் போச்சி. மொதல்ல போயி அதெச் செய்யுங்க. இனுமே இஞ்ஞ ஆடு மாடுங்க படுக்குறதுக்கு, மூட்டைகள அடுக்குறதுக்கு அனுமதி கெடையாது."ங்றாம்.
            "நாஞ்ஞ கலக்டருகிட்ட போயி கம்ப்ளய்ண்ட் பண்ணுவேம்! கலக்டரு ஒஞ்ஞ மேல நடவடிக்கெ எடுத்தா நாங்க பொறுப்பில்ல பாத்துக்குங்க! வெவசாயம் பண்றத தடுக்குறதுக்கு யாருக்கும் உரி‍மெ யில்ல"ங்றாங்க சனங்க.
            அவுங்க புரிஞ்சிப் பேசுறாங்களா, புரியாம பேசுறாங்களான்னு நெனைக்க நெனைக்க விகடுவுக்குச் சிரிப்பு சிரிப்பா வருது. விகடு சிரிச்சிட்டாம். சிரிச்சிக்கிட்டே, "நீஞ்ஞ எஞ்ஞ வேணாலும் போயி என்ன வாணாலும் பண்ணுங்க. முடிவுல மாத்தம் இல்ல."ங்றாம் விகடு.
            "இத்தெ இப்பிடியே வுடக் கூடாது. ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரிய ஓட்டுன கதெயா ஆயிப்புடும். வாத்தியாரு மேல நடவடிக்கெ எடுத்தாவணும்! சிரிச்சிக்கிட்டே பேசுனா நாம்ம பயந்துப்புடுவேம்னு நெனைப்பாக்கும்? ஊரு வுட்டு ஊரு வர்ற வாத்திக்கே இம்மாம்ன்னா இந்த ஊர்லயே பொறந்து இந்த ஊரு மண்ண தின்னுட்டுக் கெடக்குற நமக்கு எம்மாம் இருக்கணும்?"னு பேசிகிட்டே கலையுறாங்க சனங்க.
            பள்ளியோடத்துக்குன்னு எடம் வரைமுறை இல்லாம தெறந்த மேனிக்குக் கெடக்குறதாலத்தாம், ஆடுங்க, மாடுங்க, மனுஷங்க வர்றதும், போறதும், சமயத்துல வராந்துக்குள்ளயே வந்துப் படுத்துகிறதும்னு இருக்கு. வண்டிகளும் பள்ளியோடத்துக்குப் பக்கத்துலயே சர்ரு புர்ருன்னு வர்றதும் போறதும்னு இருக்கு. இதுக்கு ஒரு முடிவு பண்ணியாவணும்னா பள்ளியோடத்தச் சுத்தி வேலிய அடைச்சாவணும்னு தோணுது விகடுவுக்கு.
            பள்ளியோடத்தச் சுத்தி வேலி அடைக்கணும்னா பள்ளியோடத்துக்கு எம்மாம் நெலம் இருக்குன்னு தெரியணுமேன்னு பத்திரத்தெ எடுத்துப் பாத்தா, பள்ளியோடத்து எடத்து வழியா பஞ்சாயத்து ரோட்ட போட்டு வெச்சிருக்குற சங்கதியே அப்பத்தாம் தெரிய வருது. பள்ளியோடத்து மின்னாடி வரைக்கும் ரோடு வர்றதோட சரி. அதுக்கு மேல ரோடு கெடையாது. அதெ தாண்டி ரோடு போற அத்தனெ எடமும் பள்ளியோடத்து எடம். அந்த பள்ளியோடத்து எடத்துல குறுக்கால ரோட்ட போட வெச்சி சனங்க போயிட்டும், வந்துட்டும் இருக்குற விசயம் அப்பத்தாம் தெரிய வருது. இதுக்கு உடந்தையா மின்னாடி இருந்த பஞ்சாயத்து தலைவரும் நடந்திருக்கிறாரு.
            விகடு இந்த சமாச்சாரங்கள அத்தனையையும் எடுத்துக்கிட்டு இப்போ பஞ்சாயத்து தலைவர்ரா இருக்குறவர்கிட்டே போயிட்டாம். கோட்டகம் கிராமம் ஓகையூரு பஞ்சாயத்துல வருது. அதோட பஞ்சாயத்து தலைவர்ரா இப்போ இருக்குறவரு உதயச்சந்திரன். அவரு விகடு சொன்ன சங்கதி அத்தனையையும் பொறுமையா கேட்டுக்கிட்டாரு. "நீஞ்ஞ சொல்றது சரித்தாம் வாத்தியார்ரே. மின்னாடி இருந்த பஞ்சாயத்து தலைவரு கோட்டகத்துல ஓட்டை வாங்கணுங்றதுக்காக குறுக்கால ரோட்டைப் போட்டு தர்றதா வாக்குறுதிக் கொடுத்து பள்ளியோடத்து எடத்துல குறுக்கால தாரு ரோட்டைப் போட்டுப்புட்டாங்க. அத்து தப்புத்தாம். போட்ட ரோட்டை எடுத்தா பெரச்சனையா போவும். அதெ வுட்டுப்புட்டு மிச்ச எடத்துல வேலிய கட்டிக்கிங்க."ங்றாரு.
            "ரோட்டுக்கு இந்தாண்ட பள்ளியோடம். அந்தாண்ட டாய்லட்டு கட்டியிருக்கு. குறுக்கால ரோடு போவுது. நாம்ம இந்தாண்டயும், அந்தாண்டயும் ரண்டு வேலில்லா தேவையில்லாம கட்ட வேண்டிருக்கும். புள்ளைங்க டாய்லெட்டுப் போவணும்னா ரண்டு எடத்துல வேலிப் படலெ தொறந்துகிட்டுப் போவணும். ரோட்டை அந்தாண்டையும், இந்தாண்டையும் கடந்துகிட்டுப் போவணும். வண்டிங்க வேற சர்ரு புர்ருன்ன போயிட்டுக் கெடக்குதுங்க. அந்த ரோட்டை எடுத்து வுட்டுப்புடுறதுதாங் செரி. பள்ளியோடம் பஞ்சாயத்துப் பள்ளியோடங்றதெ ஒத்துக்கிறேம். பஞ்சாயத்துக்கு ஒண்ணுன்னா பள்ளியோடத்து எடத்துலயே கைய வெச்சா, படிக்கிற புள்ளைங்களுக்கு வெளையாட எடம் எஞ்ஞ இருக்கு? நாளைக்கே பள்ளியோடம் பெரிய பள்ளியோடமா ஆவுதுன்னு வெச்சுக்குங்க. புதுசா கட்டடத்தெ கட்ட எஞ்ஞ எடம் இருக்கு? அப்போ எடத்துக்கு எஞ்ஞ போவீங்க? இப்பிடியே வுட்டாக்கா அந்த ஊரு வளராமலே போயிடும். பள்ளியோடத்து எடத்துல மட்டுமே ரோடு நானூத்து அம்பது அடிக்குப் போவுது ஊடால!"ங்றாம் விகடு.
            "வாத்தியாரம்பீ! நீஞ்ஞ பேசுறதுல்லாம் வாஸ்தவம்தாம். நீஞ்ஞ சொல்றதெ பண்ணா அடுத்த தடவெ நாம்ம பெரசிடண்டுக்கு நின்னு ஒத்த ஓட்டெ கூட கோட்டகத்துலேந்து வாஞ்ஞ முடியாது. நம்ம அடிமடியிலல்லா கையெ வைக்குறீங்க. அத்து ஒரு ஊரு? அந்த ஊருக்கு ஒரு பள்ளியோடம்? அவுனுங்க வெளங்க மாட்டேய்னுங்க யம்பீ! நீஞ்ஞ போனீங்களா வேலயப் பாத்துட்டுப் போங்க. அவுனுங்கள திருத்த முடியாது வாத்தியாரும்பீ!"ங்றாரு உதயச்சந்திரன்.
            "நீஞ்ஞ நெனைச்சா செய்யலாம்!"ங்றாம் விகடு.
            "இந்தப் பதவிக்கு வந்து ஒண்ணும் சம்பாதிக்கலம்பீ! மித்த ஆளுங்க மாதிரி நாம்ம கெடையாது. கையி சுத்தம். ஏதோ வண்டிய ஓட்டிக்கிட்டும் உருட்டிக்கிட்டும் கெடக்குறேம்!"ங்றாரு உதயச்சந்திரன்.
            "சம்பாதிக்கலங்றதுக்காக, கெட்ட பேர்ர சம்பாதிக்க வேண்டியதில்ல!"ங்றாம் விகடு.
            "வாத்தியாரும்பீ! நல்லாவே பேசுதீங்க!"ங்றாரு உதயச்சந்திரன்.
            "பாத்து பண்ணி வுடுங்க. ஒங்களுக்குப் புண்ணியமா போவும்! ஒங்கள நம்பித்தாம் வந்திருக்கேம். மலை போல நம்பி வந்திருக்கேம்!"ங்றான் விகடு.
            "யாம்பீ! நீஞ்ஞ வேற புண்ணியம் அது இதுன்னுகிட்டு? செரி போங்க! நாம்ம அடுத்த தடவெ பெரசிடென்டுக்கே நிக்கல. நின்னாலும் ஓட்டைப் போட மாட்டானுவோ. இத்து ஒரு நல்லதெ செஞ்சதா இருந்துட்டுப் போவட்டும். நீஞ்ஞ நெனைக்கிறதெ நடத்திக்குங்க!"றாரு உதயச்சந்திரன்.
            "யய்யா! இதுல நாம்ம நெனைக்கிறதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. இதாங் ஞாயம். இதாங் செரி. ஏத்தோ ஒரு நேரத்துல மாறிப் போயிடுச்சு. அத்தெ இப்போ சரி பண்ணிக்கிறோம். அம்மாங்தாம்!"ங்றாம் விகடு.
            "முடிவோட வந்துப்புட்டீங்க. முடிச்சிப்புடுங்க!"ங்றாரு இப்போ உதயச்சந்திரன்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...