30 Jan 2020

சீப் ரேட்டு வேலைக்காரரு!



செய்யு - 343

            குமரு மாமா வர்றதெ வழியப் பாத்துட்டே உக்காந்திருக்காம் விகடு. அதுக்குள்ள இன்னும் நாலஞ்சு பேரு வந்துட்டாங்க வேல விசயமா குமரு மாமாவ பாக்குறதுக்கு. எல்லாருமா சேர்ந்து பெஞ்சு போல அடிச்சி வெச்சிருக்கிற பலக மேல குந்தியிருக்காங்க. இன்னும் கொஞ்சம் நேரம் ஆனாக்கா இன்னும் நாலஞ்சு பேரு வந்துடுவாங்க போலருக்கு. குமரு மாமாட்ட யாரு மொதல்ல பேசுறது, வேலயப் பத்திச் சொல்றது காரியத்தெ முடிச்சிக்கிறதுங்றதுல இப்போ உக்காந்திருக்கிற ஆளுகளுகிட்ட ஒரு போட்டி உண்டாறது போல பேச்சு ஓடிட்டு இருக்கு. எல்லாருமே சீக்கிரத்துல குமரு மாமா வேலய முடிச்சிக் கொடுக்காம இருக்குறதெப் பத்தித்தாம் பேசிக்கிறாங்க.
            "ஆம்மாம் நாம்ம கொடுக்குற காசிக்கு சட்டுன்னு வேலயப் பாத்து முடிக்கிணுமாக்கும்! கொமரு சீப் ரேட்டுல பாக்குற வேலயப் பாத்துட்டு வேத்து ஊருக்காரங் வரைக்கும் வேலைக்கி வந்து நிக்குறாம். ஆனா பய செம்ம கில்லாடி. காசியப் பாக்கப் பாக்கத்தாம் வேல நெடக்கும். இல்லன்னா பாதிக் கோத்தும், பாதிக் கோக்கமாத்தாம் கெடக்கும்."ங்றாரு அதுல ஒருத்தரு.
            "அத்து கெடக்குப் போ! காசிய காட்டுனா மட்டும் ன்னாவாம்? பத்து நாளுல்ல முடியுற வேல இருவது நாளு வரைக்கும்ல இழுத்துட்டுப் போவுது!"ங்றாரு அதுல இன்னொருத்தரு.
            "காசிய காட்டவே இல்லன்னு வெச்சிக்கோ வாஞ்சிப் போட்டுருக்குற பலவெல்லாம் கொமருக்குன்னு அச்சாரம் பண்ணிட்டுப் போவ வேண்டியதுதாத்தாம்."ங்றாரு முன்னாடி பேசுன ஆளு.
            "பத்து காசி மிச்சமிருந்தாலும் நாலு ஆணிய போடாம வெச்சிருக்காம் கொமரு. அத்த கொடுத்தாத்தாம் அந்த நாலு ஆணிய சட்டுபுட்டுன்ன அந்த நேரத்துல போட்டு தூக்கிட்டுப் போங்றாம். நல்ல கதெய கெடுத்த போ!"ங்றாரு இன்னொரு ஆளு.
            இப்போ தூரத்துல குமரு மாமா பொன்னியம்மன் கோயில் பக்கத்துல வர்றது தெரியுது. கிட்டக்க வர வர குமரு மாமா விகடுவ பாக்குது. விகடு குமரு மாமாவ பாக்குறாம். முகத்த மழிச்சு பத்து நாளுக்கு மேல இருக்கும் குமரு மாமாவுக்கு. வழக்கமா போறப்ப வர்றப்ப பாக்குற அது போட்டுருக்குற அதே பழுப்புச் சட்டையும், லேசா பழுப்பேறுன வேட்டியத்தாம் கட்டியிருக்கு.
            விகடுவப் பாத்ததும், "வா!" அப்பிடிங்கிது. விகடு எழுந்திரிச்சி நின்னுகிட்டு, "ம்!"ங்றாம்.
            "ன்னா சோலி?"ங்குது குமரு மாமா அத்தனைப் பேரையும் வுட்டுப்புட்டு இவன பாத்து மட்டும். அத்தான் எப்பிடி இருக்காங்க, அக்கா எப்பிடி இருக்குன்னோ வேற எந்தக் கேள்வியையும் கேக்கல. விகடுவும் அத்தை எப்பிடி இருக்குன்னோ, புள்ளைங்க எப்பிடி இருக்குன்னோ எந்தக் கேள்வியையும் கேக்கல. நேரா விசயத்துக்கு வந்து பேச்சு நடக்குது.
            "பள்ளியோடத்துக்கு அஞ்சு செல்ப் அடிச்சி வேணும் அஞ்சு தட்டு இருக்குறாப்புல. பழக்கடையில சாய்ச்சாப்புல வெச்சிருப்பாங்கள்ல. அது மாதிரி வேணும்! அத்தோட சார்ட் ஒட்டி வைக்குறாப்புல ஸ்டாண்டு அஞ்சு வேணும்." அப்பிடிங்றாம் விகடு.
            "ன்னா பலவையில வேணும்? எம்மாம் நீளம்? தட்டுங்களுக்கு எடையே எம்மாம் உசரம் இருக்கணும்?"ங்குது குமரு மாமா.
            "மூவாயிரத்து எரநூத்து ரூவா கொடுத்துருக்காங்க. அதுக்குள்ள ன்னா பலவ ஒத்து வருமோ அந்தப் பலவையில வேணும். நீளம் அஞ்சு அல்லது ஆறு அடி வெச்சிக்கலாம். உசரங்றது ஒரு டிரே அலுங்காம கொள்ளாம உள்ள போயிட்டு வர்ற உசரம்."ங்றாம் விகடு.
            "மூவாயிரத்து எரநூத்துக்கு அஞ்சு செல்ப்பா? நீயி சொல்றதெப் பாத்தா ஒவ்வொரு செல்ப்புக்கும் அஞ்சு பலவையாவுது. அஞ்சுக்கும் சேர்த்தா இருபத்தஞ்சு பலவ ஆவுமேடா! தூங்குமூஞ்சு பலவைன்னாலும் பலவைக்கே காசி கட்டுபடியாகாதல்லோ! பெறவு அஞ்சு ஸ்டாண்டு அத்து எப்பிடி வேணும்னு தெரியலயே!"ங்குது குமரு மாமா.
            "பணம் அம்மாம்தாம் ஒதுக்கியிருக்காங்க! அதுக்குள்ள வேணும்! சாப்பாடு ரெடி, டிபன் ரெடின்னு கடையில வைக்குறாங்கள்ல அது போல ஸ்டாண்டு. அகலம் ஒரு சார்ட்டு ஒட்டுற அளவுக்குக் கொஞ்சம் பெரிசா!"ங்றாம் விகடு.

            "பள்ளியோடத்துக்குங்றே! பாத்துப் பண்ணிக்கிடலாம்! காசிய ஒரே தபாவா கொடுத்துப்புடு. வேலைய முடிச்சு நாமளே கொண்டாந்துப் போட்டுடுறேம். ஆனா வேல முடியறதுக்கு ஒரு மாசம் ஆவும். வேல இஞ்ஞ நெறைய கெடக்கே."ங்குது குமரு மாமா.
            "யில்லே! ஏற்கனவே ரொம்ப தாமசம் ஆயிடுச்சி. ஆபீஸருங்க வந்துப் பாத்தா சிக்கலாயிப்புடும். பணத்தெ வேற எடுத்தாச்சி. பணத்த எடுத்தா மூணு நாளைக்குள்ள செலவு பண்ணியாவணும். பண்டமா பொருளு வந்து சேந்தாவணும். கொசரம் சீக்கரமா பண்ணித் தந்தா தேவல."ங்றாம் விகடு.
            "ன்னடா இத்து! விடிஞ்சா கலியாணம்! கட்டுறா தாலியங்றே? இஞ்ஞ எம்மாம் வேல கெடக்குப் பாரு! ஒவ்வொருத்தரும் வந்து உக்காந்து வாஞ்சிட்டுப் போறாய்ங்க! பத்து பாஞ்சி நாளாவது ஆவும்!"ங்குது குமரு மாமா.
            "இத்து ஆரு பள்ளியோடத்து வாத்தியாரா?" அப்பிடிங்கிறாரு பக்கத்துல குமரு மாமாகிட்ட வேலைய சொல்ல வந்து முன்னாடி பேசிட்டு இருந்தார்ல அவரு.
            "ஆமாமாம்! பள்ளியோடத்து வாத்தியாருதாம்!"ங்குது குமரு மாமா அலட்சியமா.
            "ம்ஹூம்! எஞ்ஞகிட்ட பேசுற மாதிரியே பேசாதே! என்னவோ வேலய சீப்பா முடிச்சித் தர்றேங்றதுக்காக இஷ்டத்துக்குப் பேசுவீயோ? ஒரு வாத்தியாரு வந்து கேக்குறாப்புல்ல. அவுங்களுக்கு எப்போ வேணுமோ அம்மாம் சீக்கிரத்துல முடிச்சிக் கொடுத்துப்புடு."ங்றாரு அவரு.
            "ஆமாம்டா குமரு சீக்கிரமா முடிச்சிப்புடு!"ங்றாங்க பக்கத்துல உக்காந்திருக்கிற மித்த இன்னொரு ஆளும்.
            "செரி! முடிச்சிப்புடுவோம். முடிச்சிட்டாப்  போச்சு. அதுக்கென்ன ஆயிப் போச்சு? ஒஞ்ஞ வேலய மின்ன பின்ன வெச்சிக்கிலாம்ல!"ங்குது குமரு மாமா.
            "அட என்னப்பா! நீயி அடிமடியில கை வெக்கிறே? வாத்தியார்ர கெஞ்ச வுடலாமா? பாத்து முடிச்சிப்புடு!"ங்றாங்க அவுங்க எல்லாரும் ஒத்தக் குரல்ல.
            இப்பத்தாம் விகடு, "ஆமாம் மாமா! கொஞ்சம் சீக்கரமா முடிச்சித் தந்துப்புடு மாமா!"ங்றாம் விகடு.
            "செரிடா மாப்ளே! முடிச்சிப்புடுவேம்! இவுங்க அத்தனெ பேரு வேலயையும் தூக்கி அந்தான்டா போட்டுட்டு முடிச்சிப்புடறேம்டா மாப்ளே! ஒரு வாரத்துல எடுத்துக்கிடலாம்!"ங்குது குமரு மாமா.
            "இதுக்கொசரம் ஒண்ணும் கொறைச்சலு யில்ல. வேலயப் பிடிக்கிறதுக்கு மாப்ளேங்றது மச்சாங்றது? நீஞ்ஞ ஒண்ணும் வெசனமாகாதீங்க வாத்தியாரம்பீ! இதுக்குல்லாமா போயி மாமா ஓமான்னுக்கிட்டு?" அப்பிடிங்கிறாரு உக்காந்திருக்குற ஆளுல்ல ஒருத்தரு.
            "அடெ ச்சும்மா கெடய்யா! அவ்வேம் எஞ்ஞ அக்கா மவ்வேம்யா! எஞ்ஞ அத்தாம் சுப்பு வாத்தியாரு இருக்காருல்ல! அவரோட மவ்வேம்யா! நாம்ம அவனுக்கு தாய் மாமேம்யா!"ங்குது குமரு மாமா.
            "ம்ஹூக்கும்! இதுக்குத்தாம் இந்த முறுக்கு முறுக்குறீயாக்கும்? அக்கா மவ்வேம் வந்துக் கேக்குறாம்! நாளைக்கே முடிச்சிக் கையில தர்றேம்னு சொல்றது யில்லே! ஏய் கொமரு கொழுப்புடா ஒனக்கு! ஒரு பொட்டப் புள்ளய பெத்திருந்தா அடங்கிப் போயிருப்பே? ரண்டும் ஆம்பளப் புள்ளையால்ல பெத்து வெச்சிருக்கே. அத்தாங் இந்த ஆட்டம் ஆடுறே! இதுல இன்னொன்ன பெத்துக்க வேற மணிக்கு ஒரு தபா வூட்டுப்பக்கம் போய்ட்டு வர்றீயாமே? ஊர்ல இதப் பத்தித்தாம் பேச்சாக் கெடக்கு? ஏம்டா கூறு கெட்ட பயலே! அப்பம் பேர்ர கெடுக்கணும்னே நிக்குறீங்கடா!" அப்பிடிங்கிறாரு அந்த ஆளு.
            "ச்சேய்! வாய மூடுய்யா! அக்கா மவ்வனே வெச்சிக்கிட்டுப் பேசுறா பேச்சா இத்து? ந்தா நீயி கெளம்புடா! காசி இருந்தா கொடுத்துட்டுப் போ. யில்ல நாளைக்கு வந்து பைசலப் பண்ணு. பைசலப் பண்ணாத்தாம் வேலய ஆரம்பம் பண்ணுவேம். வேலய முடிச்சி பெயிண்ட்டு வர்ரைக்கு வெச்சிக் கொண்டாந்து தந்துப்புடறேம்!" அப்பிடிங்கிது குமரு மாமா விகடுவப் பாத்து.
            "சரிங் மாமா!"ன்னு சொல்லிட்டுப் பையில வெச்சிருந்த மூவாயிரத்து இருநூத்து ரூவாய எடுத்துக் கொடுத்துட்டுக் கெளம்புறாம் விகடு.
            குமரு மாமா சொன்னபடி ஒரு வாரத்துல வேலய முடிச்சிக் கொண்டாந்து கொடுக்கல. அது ஒரு இருவது நாளுக்கு மேல எடுத்திக்கிடுச்சு. எடுத்துட்டு வர்ற கொள்ள எந்தச் செரமும் இல்லாம அதுவே ஒரு டாட்டா ஏஸ்ல வெச்சிக் கொண்டாந்து பள்ளியோடத்துல போட்டிடுச்சு. அதுவே ஒரு ஆளையும் கொண்டாந்திருச்சு. அதெ வெச்சிக்கிட்டு அதெ தூக்கி எங்கெங்க போடணும்னு கேட்டுட்டு அங்கங்க போட்டு செட் பண்ணிக் கொடுத்துட்டும் போயிடுச்சு.
            இப்பத்தாம் கோட்டகம் பள்ளியோடத்தப் பாக்குறதுக்கு அம்சா இருக்கு. அஞ்சு பாடத்துக்கு அஞ்சு வெதமான செல்ப். எத்தனெ எண்ணிக்கைக்கு டிரேயை வாங்கணுமோ அத்தென எண்ணிக்கைக்கு அது வாங்கி ஆயிருந்துச்சு. அதெ கூத்தாநல்லூரு சாகிப் தாளகத்துக்காரரு காதர்பாட்சா விகடுங்றதால சல்லிசான வெலைக்குப் போட்டுக் கொடுத்து உதவி பண்ணியிருந்தாரு. ‍ஷெல்ப்புகளுக்குள்ள டிரேகளை வெச்சி, ஒவ்வொரு ஷெல்ப்புக்குப் பக்கத்துல அந்தப் பாடத்துக்கு ஏணிப்படி படத்தெ ஒட்டுறாப்புல ஸ்டாண்ட வெச்சி அதுல ஏணிப்படிகளோட படத்தெ ஒட்டி வுட்ட பெறவு புள்ளைக அட்டைகள எடுத்து வந்து படிக்கிறதும், வைக்குறதும், அதெ பாக்க பாக்க அது ஒரு அழகாத்தாம் இருக்கு. 
*****


No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...