31 Dec 2019

குட்டிச் சிங்கப்பூரு!



செய்யு - 313

            அரச மரம்தாம் புத்தருக்குப் போதிமரம். கிராமத்துப் பக்கத்துல இது மாதிரியான போதி மரங்கள் அதிகெம். அந்த மரத்துக்கடியிலத்தாம் கிராமத்து ஆளுங்க, ஆடு, மாடுங்களோட அதெ மேய்க்கிறவங்க, விளையாடுற கொழந்தைங்க எல்லாம் உக்காந்திருக்கும். அதுக்கடியில உக்காந்து உக்காந்தோ என்னவோ அந்த மனுஷங்களுக்கும் புத்தரு மாதிரியான ஒரு மனநெல வாய்ச்சிடுது. அவ்வளவுக்கு ஏம் போவணும்? கிராமத்துப் பஞ்சாயத்துங்களே இந்த அரச மரத்தடியிலத்தாம். சில பஞ்சாயத்துல கொஞ்சம் கரைச்சலு, இரைச்சலு இருந்தாலும் முடிவா புத்தரு மாதிரியான ஒரு மனநெலக்குக் கொண்டாந்துடுவாங்க. அதாங் அரசமரத்தோட சிறப்பு போலருக்கு. அதால அந்த மரத்துக்குக் கீழே உக்காந்த புத்தரு ஞானத்த அடைஞ்சாரு போலருக்கு.
            சிலுசிலு காத்தும், அந்தக் காத்துக்கேற்ப அரச மரம் தர்ற குளிர்ச்சியும், இதுக்குனெ கட்டப்பட்டது போலருக்கும் மதுவாங் கட்டையும் கடைசியா ஒண்ணு சேந்து விகடோவட மனசுல, "ஆமாம் போ! எது நடந்தாலும் நடந்துட்டுப் போவுது! அங்கப் போயி என்னத் தோணுதோ அதெ பேசுவேம், என்ன மாதிரியான முடிவு அப்போக்கித் தோணுதோ அதெயே எடுத்துப்போம்"ன்னு தோண வைக்குது. இன்னுங் கொஞ்ச நேரம் இந்த நிழல்லயும், மதுவாங்கட்டையிலயும் ஒக்காந்தா தேவலாம்னுத்தாம் படுது. ஆனா இப்பவோ எவ்வளவு நேரம் உக்காந்தோம், எவ்வளவு நேரம் ஆயிருக்கும்னு யோசனெ வருது. யோசனெ வந்தாலும் அவ்வேன் கைக்கடியாரத்தைப் பாக்கல. என்ன நேரமா வேணாலும் இருந்துட்டுப் போவட்டும் செரி கெளம்புவோம்னு மதுவாங்கட்டைக்கு வந்த வழியில திரும்பி கோம்பூரு ரோட்டுலேந்து வேலுக்குடி மெயின் ரோட்டுக்கு வந்து கூத்தாநல்லூர நோக்கி சைக்கிள மிதிக்குறான்.
            இப்போ சைக்கிள மிதிக்கிறப்போ எல்லா பாரமும் எறங்குனது போலருக்கு. என்னவோ தனக்கும் எடுக்கப் போற முடிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது போல தோணுது. யாருக்கோ நடக்குற ஒண்ணுக்கு தாம் இப்போ போயிப் பேசப் போறோம்னுத்தாம் அவனுக்குத் தோணுது. எப்படி இப்படி சித்தெ நேரத்துல மனசு மாறிப் போச்சுன்னு அதுவும் அவனுக்கு ஆச்சரியமாத்தாம் இருக்கு.
            அடே யப்பாடி! இந்த ஒலகத்துல யார்ர நம்புனாலும் நம்பலாம். ஒருத்தனோட மனச மட்டும் ஒருத்தன் நம்பிடக் கூடாது. அதுவுங் குறிப்பாச் சொல்லணும்னா அவனோட மனசு இருக்கே அதெ அவன் நம்பவே கூடாது. இப்போ ஒரு மாதிரியா இருக்குற மனசு, இன்னோரு நேரத்துல அப்படிய பல்டி அடிச்சி இன்னொரு வெதமால்ல மாறிடுது.
            நல்லா யோசிச்சுப் பாத்தா மனசுங்றது ஒரு வேஷக்காரன் மாதிரி. சினிமாவுல வேஷங் கட்டி நடிக்கிறாங்க இல்ல. அப்படித்தாம் இந்த மனசு ஒவ்வொரு வெதமா வேஷங்கட்டி இந்த வாழ்க்கைங்ற சினிமாவுல நடிச்சிக்கிட்டு இருக்கு. ஒரு நடிகன் எப்படி ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு ஆளா நடிக்கிறாம் பாருங்க! அப்படித்தாம் இந்த மனசும் ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கும்னு அவனுக்குப் புரியுது. ஒரு நேரத்துல இருக்குற மனசு இன்னொரு நேரத்துல இருக்காது. இப்போ சந்தோஷமாவும் துடிப்பாவும் இருக்குற மனசெ அப்படியே எல்லா நேரமும் இருக்கணும்னு எதிர்பார்க்க முடியாது. இப்போ பயந்துகிட்டும், நடுங்கிக்கிட்டு இருக்கற மனச அப்படியே இருக்கும்னு நெனைக்க முடியாது. மனசப் பொருத்த வரைக்கும் ஒவ்வொரு நேரத்துலயும் ஒவ்வொரு மாதிரித்தாம் இருக்கும்.
            குளிருல நடுங்குற ஒடம்புகிட்ட வேர்த்துப் போயி நில்லுன்னோ, வெக்கையில வேர்த்துப் போயி நிக்குற ஒடம்புக்கிட்டு குளுந்துப் போயி நில்லுன்னோ எப்படிச் சொல்ல முடியாதோ மனசுகிட்டேயும் அப்படித்தாம். மனசுகிட்ட இதுக்காகப் போயி அது இதுன்னு எதாச்சியும் சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது. அப்படி சொல்ல நெனைச்சா அப்படிச் சொல்ற அதுவும் இன்னொரு மனசுதாங்றத புரிஞ்சிக்கிடணும். மனசு ஒரு நெலையில இருக்க, அந்த மனசே இன்னொண்ணா பிரிஞ்சி அப்படி இரு இப்பிடி இருன்னா மனசு எதெக் கேக்குறது? எப்பிடி இருக்குறது?ன்னு கொழம்பிப் போயி அதுக்கு ஒரு பகுதியா பிரிஞ்சி யோசிக்க முடியும். ஏற்கனவே துண்டு துண்டா போயிருக்குற மனசு இன்னொரு துண்டா போயி யோசிக்க ஆரம்பிச்சி மனசு துண்டுபட்டது அதிகமாயி இன்னும் கொழப்பம் அதிகமாயிடும்.
            வேலுக்குடிய தாண்டி சைக்கிள மிதிச்சா பனங்காட்டாங்குடி வருது. அதெ தாண்டி மிதிச்சிட்டுப் போறப்ப பூதமங்கலம். அப்படியே போறப்ப லெட்சுமாங்குடி புது பஸ் ஸ்டாண்டு கண்ணுல படுது. கட்டி உபயோகமில்லாம கெடக்குற அதெ பாக்குறாம் விகடு. அதெ பாக்குறப்ப அப்படி ஆபீஸ் ஆரம்பிச்சி நம்ம நெலையும் அதுபோல ஆயிடுமோங்ற பயம் அவனுக்குள்ள வருது. அதெ எவ்வளவு செலவு பண்ணி கட்டியிருப்பாங்க. லெட்சுமாங்குடிக்குன்னு ஒரு பஸ் ஸ்டாண்ட் இருந்தா அந்த ஊரு நல்லா வளரும்னு நெனைச்சித்தாம் அந்த யோசனையெ பண்ணிச் செஞ்சிருப்பாங்க. ஆனா இப்போ அங்க எந்த பஸ்ஸூம் நிக்குறதில்ல. பஸ்ஸூங்க பாட்டுக்கு ரோட்டோட நேரத்தாம் போவுதே தவிர எந்த பஸ்ஸூம் அதுக்குள்ள போயி வரதில்ல. வூட்டக் கட்டி அதுல குடியிருக்காம பாழடைஞ்சுப் போயிக் கெடந்தா எப்பிடி இருக்குமோ அப்பிடில்ல கெடக்குது பஸ் ஸ்டாண்டு.

            அந்த பஸ் ஸ்டாண்டுக்குள்ள கட்டியிருக்கிற எந்தக் கடையிலயும் யாரும் கடை போடல. மூத்திரம் பெய்யுறதுக்கும், அவரசமா இயற்கை ஒபாதையக் கழிக்கிறதுக்கும் மனுஷங்க அந்த பஸ் ஸ்டாண்ட பயன்படுத்திக்கிறாங்க. அதெ தவிர மனுஷங்களுக்கு அந்த பஸ் ஸ்டாண்டால எந்தப் பிரயோஜனமும் இருக்குறதா தெரியில. குடிகாரங்களும், பாக்குப் போடுறவங்களும் அங்கங்க ஓரமாக படுத்துக் கெடக்கறாங்க. அந்த பஸ் ஸ்டாண்டுல மனுஷங்களுக்கு உபயோகம் இருக்கோ பன்னிங்க கூட்டத்துக்கு ரொம்ப உபயோகம் இருக்கு. அதுங்க அங்கத்தாம் தேங்கிக் கெடக்குற சாக்கடையில, மனுஷக் கழிவுகளத் தின்னுக்கிட்டு குதியாட்டம் போட்டுக்கிட்டு நிக்குதுங்க. ஒண்ணு ரெண்டு லாரியோ, டூரிஸ்ட்டு பஸ்ஸூங்க நிப்பாட்டுறதுக்கு எடம் வசதியா இருக்கேன்னு உள்ள நிப்பாட்டிக் கெடக்குதுங்க. மித்தப்படி அந்த பஸ் ஸ்டாண்ட எதுக்காக கட்டுனாங்களோ, அதோட நோக்கம் நிறைவேறல்ல.
            எல்லாத்தையும் அப்படியே பாத்துக்கிட்டே சைக்கிள மிதிச்சா போலீஸ் ஸ்டேஷன் வருது. அந்த போலீஸ் ஸ்டேஷன் காம்பெளண்டுக்குள்ள எவ்வளவோ வாகனங்க அப்படியே துரு பிடிச்சிப் போயி இத்துப் போயி நிக்குதுங்க. ஏதோ ஒரு கேஸ்ல உள்ள போன வாகனங்களா இருக்கும் அதுங்க. பெறவு அதெ மீட்க முடியாம அதுகளும் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லாம அப்படியே கெடக்குதுங்க. வாழக்கையோட பெருத்த சோதனைங்றது அதுதாங். உபயோகமாகணும்னு உருவாயி உபயோகமத்துப் போறது இருக்கே அதெ தலையெழுத்துன்னு சொல்றதா? அதெ தலைவேதனைன்னு சொல்றதா? அதெ ஒண்ணும் பண்ண முடியாதுன்னு அப்படியே விட்டுப்புடறதா? அதெ எப்படிச் சொல்றதுன்னு தெரியல. இதெல்லாம் இப்ப மனசுக்குள்ள ஓடி ஒரு புது கொழப்பத்த உண்டு பண்ணுது விகடுவோட மனசுக்குள்ள. மனுஷனுக்கு சில நேரத்துல வவுத்தக் கலக்கும் பாருங்க, அதெ போல இப்போ மனசக் கலக்குது விகடுவுக்கு. வவுத்தக் கலக்கி அது வயித்தாலப் போனா ஒடம்பு நல்லா வந்துடும். ஆனா இந்த மனசு கலங்குறது இருக்கே அது வயித்தாலப் போறது போல எங்க வெளியிலப் போவுது? மனசுக்குள்ளயே கெடந்து கொடையோன்னுல்ல கொடையுது.
            கொஞ்ச நேரத்துக்கு அரச மரத்தடியும், குளுந்த காத்தும் தந்த அமைதிய இப்போ உபயோகமில்லாம கெடக்குற பஸ் ஸ்டாண்டும், வாகனங்களும் தகத்தெறிஞ்சிப்புடுச்சி. விகடு அவனோட பழைய சைக்கிளப் பாக்குறாம். லெட்சுமாங்குடி மெயின்ரோட்டுலேந்து எடது பக்கமா பிரியுது அப்துல் ரகுமான் ‍ரோடு. அப்படியே எடது பக்கமா கையைக் காட்டி சைக்கிள வளைச்சித் திருப்புறாம். திருப்புறதுக்கு மின்னாடி சைக்கிளப் பாத்தான்ல, அவனுக்குள்ள இப்போ ஒரு எண்ணம் வந்துச்சிப் பாருங்க. இத்து பழைய சைக்கிள்தான, இத்துப் போன சைக்கிள்தான, ஆனா உபயோகம் அத்தாப் போச்சு. இல்லல்ல. இத்து உபயோகமா இருக்குறதும், உபயோகமத்துப் போறதும் யாரு கையில இருக்கு? அதெ வெச்சிருக்கிற மனுஷங் கையிலத்தான இருக்கு. அதெ போலத்தாம் ஆபீஸூம். அதெ வெச்சி நடத்துறவங் கையிலத்தாம் எல்லாம் இருக்கு. அதெ வுட்டுப்புட்டு சம்பந்தமில்லாம யோசிக்கிறது பிரயோஜனமில்லன்னு அவனுக்குத் தோணுது.
            அந்த நெனைப்பு தோணுண உடனே எழுந்து நின்னு சைக்கிள மிதிக்க ஆரம்பிக்கிறாம். அதுக்கு எந்த அவசியமில்லேங்ற மாதிரி அப்துல் ரகுமான் ரோட்டுலேந்து பிரியிற தெருவு ஒவ்வொரு எடத்துலயும் ஒவ்வொரு வேகத்தடைய போட்டு வெச்சிருக்காங்க வாழ்க்கையில முன்னேறம்னு நினைக்குறப்ப வருமே முட்டுக்கட்டைங்க அந்த மாதிரி. சைக்கிள சீட்டுலயே உக்காந்து மெல்லமா மிதிக்கிறது மாதிரி ஆயிப் போவுது அவ்வேன் நெலமே. சுமாரா எட்டு வேகத்தடையத் தாண்டி மிதிச்சி வந்தா கூத்தாநல்லூரு முனிசிபாலிட்டி ஆபீஸூவருது. எதுக்கே பிரியிற தெருவுல கெழக்குக் கோட்டையாரு வூட்டுப் பக்கமா திருப்புறாம்.
            அடேங்கப்பா இங்க ஒவ்வொரு வூடும் எம்மாம் பெரிசா இருக்கு. வூடு ஒவ்வொண்ணுத்தையும் வூடாவா கட்டிருக்காங்க. ஒவ்வொண்ணுத்தையும் கோட்டை மாரில்லா கட்டியிருக்காங்க. ஒவ்வொரு வூடும் ஒவ்வொரு தினுசு. ஒத்த மாடி உள்ள வூடுங்க, ரெண்டு மாடி உள்ள வூடுங்க, மூணு மாடி உள்ள வூடுங்கன்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு வூடும் இசுலாமிய சனங்க வூடுக. அது மட்டுமா இங்க இருக்கற அவுங்களோட கடைகள்ல அம்புட்டு வெளிநாட்டுச் சாமானுங்கள, சரக்குகள வாங்கலாம். வெளிநாட்டுக் கடியாரம், வெளிநாட்டு சென்டுக, வெளிநாட்டு ரேடியோ, வெளிநாட்டு டெக்கு, வெளிநாட்டு டி.வி., வெளிநாட்டு அயர்ன் பாக்ஸூன்னு அவுங்ககிட்ட கெடைக்குற வெளிநாட்டுப் பொருளுங்களுக்குக் கணக்கு இருக்காது.
            நீங்க கூத்தாநல்லூருக்குள்ள நொழைஞ்சிட்டாலேயே இது இந்தியாவா? வெளிநாடாங்ற சந்தேகம் வந்துப்புடும் ஒங்களுக்கு. அட நீயென்னப்பா ஒரு சிங்கப்பூருக்கு போறவேம் மாதிரில்ல பேசுறேன்னு நீங்க சொன்னா அது செரித்தாம். ஏன்னா கூத்தாநல்லூருக்கு இன்னொரு பேரு குட்டிச் சிங்கப்பூரு. இங்க ஒரு ஆபீஸப் போட்டா வெளிநாட்டுல போயி வேல பாக்குறேன்னு கூட தெனாவெட்டா சொல்லிக்கலாம். இங்க இருக்குற ஆளுங்களுக்கு மட்டும் நம்பிக்கெ வந்துட்டுன்னா வெளிநாட்டுலப் போயி சம்பாதிக்கிற அத்தனெ சம்பாத்தியத்தயும் அவுங்ககிட்டயே சம்பாதிச்சிப்புடலாம். அந்த நம்பிக்கெ அதுதாங் முக்கியம். அம்புட்டுச் சீக்கிரத்துல அவுங்க யாரையும் நம்பிப்புட மாட்டாங்க. நம்பிட்டாங்கன்னா உசுரையே கொடுப்பாங்க. அவுங்க வூட்டு ஆளுங்க கணக்கா நடத்துவாங்க. நல்லது கெட்டதுன்னு அப்பிடித் தொணை நிப்பாங்க. பாசத்துல அப்பிடியே மெழுகா உருகிப் போயிடுவாங்க. எந்த விசயம்னாலும் நம்பிக்கெ வெச்ச அந்த ஆள கலந்துக்காம எதெயும் செய்ய மாட்டாங்க. நம்பிக்கைக்கு அவுங்க கொடுக்குற மருவாதி அது.
            அங்க இருக்குற வூடுகள்ல்ல கெழக்குக் கோட்டையாரு வூடு மட்டும் தனியா தெரியுது. அது மூணு மாடி வூடு. வூட்டை அப்படியே சலவைக்கல்லால எழைச்சி வெச்சிருக்காரு கெழக்குக் கோட்டையாரு. வூட்டுக்கு முன்னாடி நிக்குற காம்பெளண்டே ரெண்டாளு உசரத்துக்கு பாக்குறதுக்கு அது ஒரு சீனப் பெருஞ்சுவரு மாதிரி நிக்குது. அந்த வூட்ட ஒரு சுத்துல ரெண்டு கண்ணால பாத்துட முடியாது. ஏழெட்டு எடத்துல நின்னு ஒவ்வொரு சுத்தா பகுதி பகுதியாத்தாம் பாக்கலாம். ஏம் அந்த வூட்டுக்காரர கெழக்குக் கோட்டையாருன்னு சொல்றாங்றத கெழக்கால நிக்குற அந்த வூடே சாட்சியா நின்னு சொல்லுது. அந்த வூட்டுலேந்து நாலஞ்சு வூடு தள்ளித்தாம் மாலிக் அய்யாவோட வூடு இருக்குது. அதெல்லாம் நல்லா தெரிஞ்சும் விகடு சைக்கிள நிப்பாட்டு அப்படியே கால ஊனிக்கிட்டு, அங்க நின்னுகிட்டு இருக்குற ஒரு ஆளுகிட்ட, "இஞ்ஞ புரபஸர் மாலிக் வூடு?" அப்பிடிங்றாம்.
            "அதோ ரோட்டாண்ட ஒரு டிவியெஸ் பிப்டியும், மேக்ஸ் ஹண்ட்ரட் ஆரும் நிக்குது பாரு. அதாங்!"றாரு அந்த ஆளு. இவனுக்கு அங்க நிக்குறப்பவே அது சுப்பு வாத்தியாரோட டிவியெஸ் பிப்டி மாதிரியும், விநாயகம் வாத்தியாரோட மேக்ஸ் ஹண்ட்ரட் ஆர் மாதிரியும் தெரியுது. இருந்தாலும் கண்ணு ரெண்டையும் ஒரு சிமுட்டு சிமிட்டிக்கிட்டுப் பாக்குறாம். கொஞ்சம் அப்படியும் இப்படியுமா தெரியுது.
            இவ்வேன் சைக்கிள அந்த வண்டிக மின்னாடி போயி நிப்பாட்டிப் பாத்தா சந்தேகமே இல்லாம அது சுப்பு வாத்தியாரோட வண்டியும், விநாயகம் வாத்தியாரோட வண்டியுந்தாம் அதுங்க.
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...