1 Jan 2020

25.1



            வில்சன் அண்ணன் ஒரு கதை சொல்லத் தொடங்குகிறார்.

            "அன்றைய தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்த ராகவன் கண்களில் அந்த வாசகம் தென்படுகிறது.
            நெருப்பு, விஷம், பகை - இந்த மூன்றையும் மிச்சம் மீதி இல்லாமல் அழித்து விட வேண்டும் என்று அந்த தினசரி வாசகம் பேசுகிறது.
            ராகவன் மனதில் அந்த வாக்கியம் ஆணி அடித்தாற் போல் பதிகிறது.
            அன்றிலிருந்து ராகவன் நெருப்பை சர்வ ஜாக்கிரதையாகப் பயன்படுத்துகிறார். தீக்குச்சியைக் காலால் மிதித்துத் தேய்க்கிறார். சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் மூடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கிறார்.
            வயலுக்கு அடித்து விட்டு மீதம் இருந்த பூச்சி மருந்தைக் குழி வெட்டிப் புதைத்து விடுகிறார்.
            நெருப்பு, விஷம் இந்த இரண்டையும் அழித்தாகி விட்டது என்று ராகவன் மனதில் ஒரு நிம்மதி உண்டாகிறது.
            அடுத்துப் பகை இருக்கிறதே. அதை அழிக்க வேண்டுமே. அடுத்த வீட்டு வீரபாண்டியுடன் பதினைந்து வருட பகை - ஜென்மாந்திரப் பகை இருக்கிறது ராகவனுக்கு. பேச்சு வார்த்தை கிடையாது ரெண்டு பேருக்கும். அந்தப் பகையை அழிப்பது எப்படி என்று யோசிக்கிறது ராகவனின் மனம்.
            விடுவிடுவென்று வீரபாண்டியின் வீட்டில் நுழைகிறார் ராகவன்.
            கண்ணெதிரே பகையாளி வீரபாண்டியன் வீட்டில் நுழையும் கணவனைக் கண் கொட்டாமல் பார்க்கிறாள் ராகவன் மனைவி. அவள் மனதுக்குள் இன்று அடிதடி நடக்குமோ, வெட்டுக்குத்து நிகழுமோ என்ற கலக்கம் உண்டாகிறது.
            உள்ளே சென்ற ராகவன் அமைதியின் சொரூபமாய்த் திரும்புகிறார்.
            "வருஷக் கணக்கில் நீடித்த பகையை மிச்சம் வைக்காமல் முடித்தாயிற்று" என்கிறார் ராகவன்.
            "என்னா பண்ணீங்க?" என்று கேட்கிறார் ராகவனின் மனைவி.
            "அவனை - அந்தப் பகைவனை - வீரபாண்டியை நண்பனா ஏத்துக்கிட்டேன். நண்பனா மாத்திக்கிட்டேன். பகை முடிஞ்சாச்சு. இனி நட்புதான். நட்பு என்றைக்கும் நீடிக்கும், நிலைக்கும். இதில் எந்த மாத்தமும் இல்லை." என்கிறான் ராகவன்.
            இப்போது ராகவனுக்கும் மனதில் அமைதி. ராகவனின் மனைவிக்கும் மனதில் அமைதி."
            கதையைச் சொல்லி முடிக்கிறார் வில்சன். "அற்புதம்! அற்புதம்!" என்று வில்சன் அண்ணனைக் கட்டித் தழுவுகிறார் சந்தர்பாய்.
            கதைகள் மனிதர்களைக் கட்டித் தழுவச் செய்கின்றன.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...