29 Dec 2019

சைக்கிள் வுடுறப்ப சஞ்சலம் வுடுது!



செய்யு - 312

            அந்த விசாலக் கிழமெ வந்தப்போ மாலிக் அய்யாவ போயிப் பாக்குறதா? வேணாமான்னு கொழம்ப ஆரம்பிச்சிட்டாம் விகடு. ஆபீசு போடலன்னாலும் போயி பாக்காம இருக்குறது மரியாதையா இருக்காது. அப்படி ஒரு முடிவுல இருந்தாலும் அதெப் போயி சொல்லிபுடறதுதாம் ஞாயம் இல்லையா.
            நல்லதுக்கும், கெட்டதுக்குமான ஒரு மனக்கொழப்பம் அது. நல்லது எது? கெட்டது எது?ன்னு தெரியாம இருக்குறப்ப மனுஷன் எதெ வேணாலும் செஞ்சிக்கிட்டே இருப்பாம். மனசுன்னு ஒண்ணு இருக்குறது அப்போ தெரியவே தெரியாது. இதாங் நல்லது, இதாங் கெட்டதுன்னு தெரியுறப்போ நல்லதா உள்ளதத்தாம் செய்யணும்னு மனசு நெனைக்கும். ஆனா கெரகம் எப்டி இருக்குமுன்னா கெட்டதெ செஞ்சத்தாம் தப்பிப் பொழைக்க முடியுங்றது போல இருக்கும். அப்போ நல்லதெ செஞ்சி நாசமாப் போறதா? கெட்டதெ செஞ்சித் தப்பிப் பொழைக்கிறதா?ங்ற சஞ்சலம் இருக்கே. அது மனசக் கொன்னு மனுஷன சித்திரவதைப் பண்ணிப்புடும்.
            சுருக்கமா சொல்லணும்னா எதெயும் பிரிச்சுப் பாக்காதப்ப மனசுன்னு ஒண்ண மனுஷன் பாக்கவே முடியாது. பிரிச்சுப் பாக்குறப்பத்தாம் மனசுன்னு இருக்குறதெ மனுஷனால உணர முடியும். நல்லதோ, கெட்டதோ வேற ஒண்ணும் வழியில்ல ரெண்டையும் ஏத்துக்கிட்டு ஆவணும்னு போயிக்கிட்டே இருந்தா இந்த மனச மறுபடியும் மனுஷனால பாக்க முடியாது. ஒவ்வொரு விசயத்தையும் ரெண்டு ரெண்டா அதாவது நல்லது - கெட்டது, சந்தோஷம் - கவலை, அதிர்ஷ்டம் - துரதிர்ஷ்டம், பாசம் - வெறுப்பு, சுறுசுறுப்பு - சலிப்பு, வெற்றி - தோல்வி, லாபம் - நஷ்டம், ஞாயம் - அநியாயம், சிரிப்பு - சோகம் இப்பிடின்னு பிரிச்சிக்கிட்டுப் போனா மனசு உருவாயிடும். ஆமாம் போ இதெல்லாம் பிரிச்சிப் பாக்க எங்க நேரமிருக்குன்னு போயிட்டு இருந்தா மனசு செத்துப் போயிடும். உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு ரொம்ப பலமா இருக்குறதா சொன்னாக்க நீங்க நிச்சயம் பிரிவினைவாதித்தாம். அப்பிடியா மனசுன்னு ஒண்ணு எங்க எங்கிட்டு இருக்குன்னு கேட்டா நீங்க எல்லாத்தையும் சமமா பாக்குற அசாமித்தாம்.
            விகடவோட மனச அந்த ஒரு கேள்வித்தாம் உறுத்திக்கிட்டு இருந்துச்சு. ஒருவேள நஷ்டம் ஆயிடுச்சுன்னா அதுக்கு என்னா பண்ணுவேங்ற கேள்விக்கு அவனால அப்படி ஆகாதுன்னு ஒரு பதில அழுத்தமா சொல்ல முடிஞ்சாலும் இப்போ அவனுக்குள்ளே அப்படி ஆகாதுன்னு நூத்துக்கு நூறு எப்படிச் சொல்ல முடியுங்ற வினா எழ ஆரம்பிச்சிடுச்சு. மொதல்ல ஆபீஸப் போடலாம்னு நெனைச்சப்போ அவனுக்கு நஷ்டம்ங்றதெல்லாம் ஞாபகத்துலயே இல்ல. லாபம் ஒண்ணுத்தாம் அவனோட ஞாபகத்துல இருந்துச்சு. மனசு அப்போ லாபம் - நஷ்டம்னு ரெண்டா ஆகவே இல்ல. இப்போ லாபத்துக்குப் பக்கமா நின்னு ஒரு மனசும், நஷ்டத்துக்குப் பக்கத்துல ஒரு மனசும் நின்னு ரெண்டுப் பக்கமாவும் வாதாடுதுங்க. லாபத்துக்குப் பக்கத்துல நின்னு வாதாடுறது யாருன்னு கேட்டாக்கா அதுவும் விகடுவோட மனசுத்தாம். நஷ்டத்துக்குப் பக்கமா நின்னு வாதாடுறது யாருன்னு கேட்டாக்க அதுவும் விகடுவோட மனசுதாம்.
            முன்னாடி விகடுவும், விநாயகம் வாத்தியாரும் ரெண்டு பக்கமா நின்னு பேசுனாங்க இல்லையா? இப்போ அந்த வேலைய அவனோட மனசே விகடுவாவும், விநாயகம் வாத்தியாராவும் நின்னு செய்யுது. அதெப்பிடி தன்னோட மனசுல ஒரு பாதியா விநாயகம் வாத்தியாரு புகுந்தாருன்னு அது வேற அவனுக்கு எரிச்சலா இருக்கு? அப்போ விநாயகம் வாத்தியாரு போல பேசுற மனசு நானா? விநாயகம் வாத்தியாரன்னு அது வேற அவனுக்குக் கொழப்பம் தாங்க முடியல.
            மாலிக் அய்யா காலந்தவறாமையுல ரொம்ப சரியான ஆளு. அவருக்கு ரெண்டு தாள குண்டூசி குத்தி இணைச்சுக் கொடுக்கறதுலயும் ஒரு நேர்த்தி இருக்கணும்னு எதிர்பாக்குற ஆளு. குண்டூசிய குத்துறதெ வெச்சி அந்த ஆளோட ஜாதகத்த அக்குவேறு ஆணிவேரா கணிக்குற ஆளு அவரு. குண்டூசிய குத்தினா வெளியில அது நீட்டிக்கிட்டு இருக்கக் கூடாது. அதெ மறுபடியும் ஒரு குத்து குத்தி அதோட கூர்ப்ப உள்ளார குத்திப்புடணும். இல்லாட்டி, "ஒரு குண்டூசிய இப்டி ஒந் தாள வாங்குறவேம் கையக் குத்துறாப்புல வைக்குறீயே? ஒனக்கெல்லாம் பிறத்தியாளப் பத்தின யோஜனெ கொஞ்சமாவது இருக்கா? நீயெல்லாம் ன்னா மனுஷம்டா?" அப்பிடிம்பாரு அவரு. இப்படி ஊடால மாலிக் அய்யாவ பத்தின சிந்தனையும் ஓடுது விகடுவுக்கு.
            டிரேடிங் ஆயிட்டு இருந்த கம்ப்யூட்டர்ல நேரம் மூணு ஆவுறது தெரியுது. மார்க்கெட் முடியுறதுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்குது.
            "நாம்ம கெளம்புறேம்!"ன்னு விகடு எழுந்திருக்கிறாம்.
            "நானும் வரட்டா?"ங்றாரு லெனின்.
            வேணாங்றது போல தலைய ஆட்டுறாம் விகடு.
            "ன்னா முடிவு? ஆபீஸ் போட்டுறலாம்தான்ன?"ங்றாரு லெனின்.
            "நூத்துக்குத் தொண்ணூத்து ஒம்போது போடணுங்றதுத்தாம் முடிவு. நூத்துக்கு ஒண்ணே ஒண்ணு போட வாணாம்னுங்றது முடிவு. போறப்போ எந்தப் பக்கம் முடிவாகுதோ அதாங் முடிவு."ங்றான் விகடு.
            "அதாங் நாம்ம வர்றேங்றேம்!"ங்றாரு லெனின்.
            "டெர்மினல்ல ஆர்டர் ஆகலன்னா ஹெட் ஆபீஸ்லேந்து போன் வரும்ங்கய்யா! நீஞ்ஞ கொஞ்சம் பாத்துக்குங்க! நம்மால ஒங்களுக்குப் பெரச்சன வேணாம்!"ங்றான் விகடு.
            "அத்து ஒரு மேட்டரு இல்ல. கோபிய வெச்சு ரெண்டு டெர்மினலுக்கும் சமாளிச்சுக்கலாம்!"ங்றாரு லெனின். ஹெட் ஆபீஸிருந்து ஒவ்வொரு டெர்மினலிலும் நடக்கும் பங்கு யேவாரத்தை உன்னிப்பாக பாத்துக்கிட்டு இருப்பாங்க. எதாச்சிம் ஒண்ணுல ஆர்டரோட அளவு கொறைஞ்சாலும் உடனே போன் அடிப்பாங்க ஏம் ஆர்டரு கொறையுதுன்னு. ஏன்னா ஆபீஸோட வருமானமே ஆர்டர் போட வெச்சு விக்குறதுலயும், வாங்குறதுலயும் கெடைக்கிற கமிஷன்தானே. அதால கிளையண்ட்ஸை எதாச்சிம் பண்ண வெச்சிக்கிட்டே இருக்கணும். இல்லன்னா ஹெட் ஆபீஸ் போனு அலற ஆரம்பிச்சிடும்.
            "வாணாம்! நாம்ம பஸ்லப் போகல. சைக்கிள்லத்தாம் போவப் போறேம்!"ங்றான் விகடு இப்போ.

            "அம்மாம் தூரம் சைக்கிள்ல போயி பிற்பாடு அஞ்ஞயிருந்து வூட்டுக்குச் சைக்கிள்ன்னா... தேவயே யில்ல. சைக்கிள இஞ்ஞ ஸ்டாண்டுல போட்டுட்டு பஸ்லப் போயி, நாளைக்கு அப்டியே வூட்டுலேந்து பஸ்ல வந்து எடுத்துக்கிடலாம்!"ங்றாரு லெனின்.
            விகடு அதுக்கு எந்தப் பதிலும் சொல்லாம வெளியில வர்றாம். ஏ.சி. அறையை விட்டு வெளியில வந்ததும் லேசான வெப்பம் வந்து ஒடம்பத் தாக்குது. தன்னோட சைக்கிளோட ஸ்டாண்டைத் தட்டி விட்டுப்புட்டு ஏறி அதுல உக்கார்றாம். திருவாரூ தெக்கு வீதியிலேந்து பஸ் ஸ்டாண்டுக்கு வர்றதுக்குள்ள வாகனங்க நெரிசலா அங்கயும், இங்கயுமா போயிட்டு இருக்கு. பஸ் ஸ்டாண்டைத் தாண்டி மேம்பாலத்து வழியா போனாக்கா இவனோட ஊரு போற வழி. அப்படித் திரும்பாம நேரா தஞ்சாவூரு ரோட்டுல போனாக்கா விளமலு வருது. விளமலு கல்லுபாலத்துக்கிட்டு பெட்ரோலு பாங்குகிலேந்து எடது பக்கமா ஒடிச்சி மன்னார்குடி ரோட்டுல போனாக்கா கூத்தாநல்லூரு போவலாம். விளமலு கடைத்தெரு தாண்டி கூட்டுறவு நகரு வர்ற வரைக்கும் வெத வெதமான வானங்களா கடந்து வர்றது பெரிய ரோதனையாத்தாம் இருக்கு. இவ்வளவு வாகனங்கள நாட்டுல எங்க உற்பத்திப் பண்ணாங்கன்னு ஆச்சரியமா இருக்கு? நாட்டுல இம்மாம் வாகனங்க இருக்கான்னு அதிசயமாவும் இருக்கு? ரோட்டுல சனங்களும் ச்சும்மா கொசகொசன்னு யம்மாடி ன்னா கூட்டம்னு அலுத்துப் போவுது.
            விளமலு ரயில்வே கேட்ட தாண்டுன பிற்பாடுத்தாம் ரோடு தெரியுது, ரோடு ரோடா இருக்குது. ஒண்ணு ரெண்டு வாகனங்க மட்டும் வர்றதும் போறதுமா இருக்கு. காத்து குளுகுளுன்னு அடிக்கிற மாரி இருக்குது. ரோட்டோட ரெண்டு பக்கமும் பொட்டலாத்தாம் இருக்கு. வயலா இருந்ததையெல்லாம் ப்ளாட்டு போட்டு வெச்சிருக்காங்க. நல்ல வேளையா சனங்க இன்னும் வூடு கட்டி குடி வர்றாதால பொட்டல் பொட்டலாவே இருக்கு. பொட்டல் எல்லாம் வூடு ஆனாக்க இந்த அளவுக்குக் காத்து வருமான்ன தெரியல. அதெப்படியே அத்தனை வருஷம் வயலுகளா இருந்தத சில வருஷத்துக்குள்ள ப்ளாட்ட போட்டு நகர்களா ஆக்கிப்புட்டாங்கன்னு தெரியல. அடிக்கிற காத்து சைக்கிள ஒரு பக்கமா லேசா தள்ளப் பாக்குது. அதெ ஒரு பாலன்ஸூக்குக் கொண்டு வர்றது கொஞ்சம் செரமா இருந்தாலும் அது ஒரு சந்தோஷத்தைக் கொடுக்குது மனசுக்குள்ள. சீட்டை வுட்டு ஏறி நின்னு மிதிக்க ஆரம்பிக்கிறாம் விகடு. சைக்கிளு அடிக்கிற காத்துலயும் செம வேகத்துல போய்ட்டு இருக்கு. இப்பிடி மிதிச்சிட்டுப் போறது ரொம்ப ஜாலியா இருக்க கமலாபுரம் கடைத்தெரு வர்ற வரைக்கும் இதே மிதியிலத்தாம் போறான் விகடு.
            கமலாபுரம் கடைத்தெருவுல கொஞ்சம் கூட்டமா இருக்கு. கொஞ்சம் வேகத்த மட்டுப்படுத்தி சைக்கிளு ரேஸ்ல மெல்லமா போவாங்களே அது மாதிரிப் போறாம். கடைத்தெரு தாண்டுனதும் மூலங்குடி, வேலுக்குடி வரைக்கும் வேகம்னா வேகம் அன்ன வேகம். அவனுக்கு ஒலகமே மறந்து போல இருக்கு. இந்த வேகத்துல அவனுக்கு எதுக்கு இப்டி சைக்கிள மிதிச்சிட்டுப் போறேங்றது கூட மறந்திடுச்சி. வேலுக்குடி வந்து அந்த மொரட்டுத்தனமா இருக்குற வளைவுல திரும்புறதுக்கு வேகத்த கொறைச்சப்பத்தாம் அவனுக்கு எதுக்குச் சைக்கிளுல போறோம்ங்ற ஞாபவமே வருது. அந்த ஞாபவம் வந்ததும் வளைவ திரும்பி முடிச்சா வர்றகோம்பூரு ரோட்டுப் பக்கமா சைக்கிள திருப்புறாம். அது கூத்தாநல்லூரு போறதுக்கான வழி கெடையாது. அவன் சைக்கிள திருப்பாம நேரா மன்னார்குடி ரோட்டுல போனாத்தாம் கூத்தநல்லூரு போவ முடியும். கோம்பூரு ரோட்டுல திருப்புனா பாதி வழியிலயே தி‍செ மாறுறாப்புலத்தாம் அர்த்தம்.
            கோம்பூரு ரோட்டுல திருப்புனவன் அங்க இருக்குற ரைஸ் மில்ல கடந்து வந்து அப்டியே எடது பக்கமா ஒடிச்சிச் சைக்கிள திருப்புறாம். அது ஓகையூரு போற ரோடு. அதுல கொஞ்சம் தூரம் போனாக்கா ஒரு பெரிய மதுவாங் கட்டெ வருது. பக்கத்துலயே ஒரு பெரிய அரசமரம் நிக்குது. அதுக்கு அடியில சைக்கிள நிப்பாட்டுனவன் அப்படியே ஒரு தாவு தாவி மதுவாங் கட்ட மேல ஏறி உக்காந்திருக்கிறாம்.
            சைக்கிள்ல போறதுல ஒரு விசயம் என்னான்னா போவுறப்ப வேர்க்காது. அடிக்கிற காத்துல சாமரம் வீசறது போல ஒடம்புக்கு சொகமா இருக்கும். சைக்கிள வுட்டு எறங்கி உக்காந்தா போதும் இதயம் படபடன்னு துடிக்கும். ஒடம்பு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிடும். விகடு இப்போ கிட்டதட்ட பத்து பன்னெண்டு கிலோ மீட்டராவது மிதிச்சிக்கிட்டு வந்திருப்பாம். சைக்கிள நிப்பாட்டி உக்காந்ததும் இதயம் படக் படக்னு துடிக்கிறது ஒலகத்துக்கே கேக்கறது போல இருக்கு அவனுக்கு. ஆனா அதுவும் ஒரு‍ சொகமாத்தாம் இருக்கு. குப்புன்னு வேக்குற வேர்வையில சட்டைக்காலரு, கக்கம் எல்லாம் நனையுறது தெரியுது. நெத்தியிலயும், கழுத்துலயும் வழியுற வேர்வையை வழிச்சி வெரலால அப்பிடியே சுண்டி விடுறாம். அந்த வேர்வையை வர விடக் கூடாதுன்னு அரசமரம் சிலுசிலுன்னு காத்த வாங்கி வுடுது. உக்காந்த ரண்டு நிமிஷத்துக்குள்ள வந்த வேர்வை எங்கேங்ற கேக்குற அளவுக்கு அடிக்கிற காத்தோட ஏ.சி.ய போட்டு வுட்டாப்புல எல்லாம் அடங்கிப் போவுது. ஏ.சி. மரமாட்டம்தாம் அரச மரம் இலைகள சிலுசிலுத்துக்கிட்டு ஏதோ சிம்போனி இசைய போட்டு விட்ட மாதிரி கெத்தா காத்துல இலை, கிளைகள டான்ஸ ஆட விட்டுட்டு நிக்குது. இயற்கையான ஆட்டம், பாட்டத்தோடு சொர்க்க லோகத்து ஏ.சி.ரும்னா அது அரச மரந்தாம்.
            அரசமரத்தோட நிழலு அந்த மதுவாங்கட்டைக்கும் சேர்த்து பந்தல போட்டது போல இருக்குது. சுத்திலும் வயல் வெளிங்கத்தாம். அங்கங்க விவசாய ஆளுங்க வேல பாத்துக்கிட்டு இருக்காங்க. கையில கயித்தோட மாடுகள வெச்சிக்கிட்டு மேய்ச்சிக்கிட்டு இருக்குற ஆளுங்க நிக்குறாங்க. வெயிலு அவ்வளவா தணிஞ்சாப்புல இல்ல. மேக்காலேந்து சூரியன் ரொம்ப சார்ப்பா மஞ்ச வெயில மூஞ்சுல ஊசி குத்துறாப்புல அடிக்கிது. ஆனா அனுபவிக்க இதமான வெயிலு. வெயில தணிய அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆவணும் போல இருக்கு. அப்படி கொஞ்சம் நேரம் ஆனா இந்த மதுவாங் கட்டையில ஆளுங்க வந்து உக்கார ஆரம்பிச்சிடுவாங்க. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கு வூடுன்னு ஒண்ணு கண்ணுல தட்டுப்படவே இல்ல. வானத்துல ஒரு சில பறவைங்க மட்டும்தாம் பறந்துக்கிட்டு இருக்குங்க. அரசமரத்துல ஒரு சில குருவிகளோட கீச்சு கீச்சு சத்தமும் கேட்குது.
             எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்கிறோம்னு விகடு யோசிக்க ஆரம்பிக்கிறாம். யோசிக்க யோசிக்க சுப்பு வாத்தியாரு, விநாயகம் வாத்தியாரு, புரபஸர் மாலிக், லெனின், கோபி, சுபான்னு ஒவ்வொருத்தரு முகமா மனசுல வந்துப் போகுது. கடைசியா தொண்டாமூத்தூரு கேப்பிட்டல்ல மசாலா பாலு குடிக்கிறதுக்கு முன்னாடி லெனின், கோபி, சுபாகிட்ட ஆபீஸ் போடுறதப் பத்தி அவுங்களாப் பேசுனதுதாம். அதுக்குப் பிற்பாடு பேசல. லெனின் அப்பப்போ அது பத்திப் பேச்சுக் கொடுத்தாலும் விகடு பதிலுக்குப் பேச்சுக் கொடுத்து அதுக்கு ஒரு பதிலச் சொல்லல. அதால அவங்களும் அமைதியா வுட்டத்தாம் இதுக்கு ஒரு முடிவு கெடைக்கும்னு நெனைச்சி அது தொடர்பா மேக்கொண்டு பேசுறதெ நிப்பாட்டிட்டாங்க. ஆனா அவுங்க அமைதியா வுட்டதுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லாம போனதுதாம் மிச்சம். விகடுவால தெளிவா ஒரு முடிவுக்கு வர முடியல. சரி நாமளா போயிப் பேசலாம்னு நெனைச்சாலும் அதுக்கு அவனோட மனசு எடங் கொடுக்க மாட்டேங்குது. ஒரு மாதிரி வெசயத்தெ எத்தனெ முறைத்தாம் மாத்தி மாத்திப் பேசுறதுன்னு யோசிச்சு யோசிச்சு அதெ விட்டுப்புட்டாம்.
            கடைசியா இப்போ கெளம்புறப்பத்தாம் லெனின் அது பத்திக் கேட்டாரு. அது பத்தின ஒரு முடிவு இருந்தா அவருகிட்டே சொல்லிருப்பாம். அவங்கிட்ட அது இல்லாததால அப்படி ஒரு குந்தாங்கூறான பதிலச் சொல்லிட்டு வந்துட்டாம். அதாலத்தாம் அவன் லெனின் பஸ்ல போவச் சொன்னப்பயம் சைக்கிள்லயே வந்துட்டாம். சைக்கிளு பங்காளி போல அவனுக்கு. அது அவனுக்கு ஆசானு. அதுல போறப்பத்தாம் அவனோட மனசஞ்சலம் கொறைஞ்சது போலிருக்கும் எவ்ளோ மனகஷ்டம் இருந்தாலும் சைக்கிள எடுத்துட்டுப் போனாக்கா போதும் மனசுல சந்தோஷம் வந்துடும் அவனுக்கு. சைக்கிள மிதிக்க மிதிக்க கஷ்டங்கள் எல்லாத்தியும் ஏறி மிதிக்கிற மாதிரி தோணும் அவனுக்கு.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...