29 Dec 2019

24.3



            இயற்கைப் பேரிடர்களும், மனிதப் பேரிடர்களும் நிறைய கவிஞர்களைப் பிரசவிக்கின்றன. பேரிடருக்குப் பிறந்த கவிஞர்களால் பிரளயமாகிறது பூமி. சுனாமிக்குப் பிறந்த கவிஞர்கள் அதிகம். அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குலில் நிறைய கவிஞர்கள் அவதாரம் எடுத்தார்கள்.

            பெருவெள்ளம் வந்தால் கண்ணீரால் எங்களை மூழ்கடித்து விடாதே மேகமே என்று கவிஞர்கள் பிரார்த்திக்கத் தொடங்கி விடுகிறார்கள். வறட்சி வந்தால் எங்கள் வயிற்றைக் காயப் போட்டு விடாதே என்று நாக்கு வறள கவிதைப் படிக்கிறார்கள்.
            கவிஞர்கள் பிறப்பதில்லை உண்டாக்கப்படுகிறார்கள். பேரிடர்கள் கவிஞர்களை உண்டு பண்ணுகின்றன. உலகின் எந்தப் பிரதேசத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தாலும், குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் கவிஞர்கள் பிறந்து விடுகிறார்கள். கவிஞர்களின் பிறப்புக்கு எந்த வித கவிஞர் தொகை கட்டுபாடும் எந்தத் தேசத்திலும் இல்லை.
            எப்போதெல்லாம் கவிஞர்கள் எண்ணிக்கை குறைகிறதோ அப்போதெல்லாம் பூமி ஒரு பேரிடரை நிகழ்த்தி கவிஞர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறது. எப்போதெல்லாம் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகமாகிறதோ அப்போதெல்லாம் பூமி அமைதியை நிலைநிறுத்தி கவிஞர்களின் எண்ணிக்கையைக் குறைத்து விடுகிறது.
            பல நேரங்களில் பேரிடரால் கவிஞர்கள் பிறக்கிறார்களா? கவிஞர்களால் பேரிடர் பிறக்கிறதா? என்ற சந்தேகம் எழுவதை எப்படித் தவிர்ப்பதென்று புரியாமல் போய் விடுகிறது.
            அகலின் நான்காவது கூட்டத்தொடரில் கவிப்பேரொளி கண்ணன் அவதரிக்கிறார்.
            அடைமழையை அள்ளித் தெளிக்கிறது மேகம்
            ஊரெங்கும் வெள்ளம் என்று வெள்ள நிவாரணக் குரல்கள் கேட்கின்றன
            கனலைக் கக்கி கழனியையெல்லாம் வறளச் செய்கிறது சூரியன்
            ஊரெங்கும் பஞ்சம் என்று வறட்சி நிவாரணக் குரல்கள் கேட்கின்றன
என்ற கவிதையை வாசிக்கிறார். கூட்டவாதிகள் ஒவ்வொருவரும் கை தட்டுகிறார்கள். அந்த கை தட்டலின் ஓசை அடங்குவதற்கு முன் பனிரெண்டாம் வகுப்புக் குழாத்திலிருந்து ஒரு புவனக் கவிஞர் புவனேஸ்வரி பிறப்பெடுக்கிறார். அவர் வாசிக்கிறார்,
            சுவைக்க தேன்
            சூட மலர்
            சமைக்கக் காய்
            பரிமாற இலை
            தின்ன பழம்
            எரிக்க விறகு
            தரும் என்னை
            இனியேனும் திட்டாதீர்கள்
            மரமண்டை என்று.
ஆகா! அருமை! என்று மறுபடியும் கூட்டவாதிகள் கைகளைத் தட்ட தொடங்கி விடுகிறார்கள்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...