28 Dec 2019

ஊடால பூந்து கலந்துக்கிறது



செய்யு - 311

            விகடு ஒண்ணும் பேசல. "அப்பா சொன்னிச்சு..."ன்னு விநாயகம் வாத்தியாருதாம் ஆரம்பிக்கிறாரு. அதுக்கும் விகடு ஒண்ணும் பேசல.
            "ஒனக்கு வாத்தியாரு வேல எப்பிடியும் ஒரு வருஷத்துக்குள்ள வந்துப்புடும். அப்டி வந்துப்புட்டா பெறவு இந்த ஆபீசு அது இதுன்னு செருமப்பட்டு வீணால்லா போயிடும்! அதாங் கொஞ்சம் யோஜிச்சுப் பண்ணலாமுன்னு அப்பா நெனைக்குது!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "வருஷா வருஷம் இதத்தாங்கய்யா சொல்லுறீங்க! வேலத்தாம் வந்த பாடில்ல. அது வரட்டும். வராம போவட்டும். இப்போ வர்ற வாய்ப்பை விட வேணாம்னு நெனைக்கிறேம். அப்படியே வேல வந்தாலும் ஆபீஸை கைமாத்தி எடுத்துக்கிறதுக்கு ஆளுங்க நெறைய பேரு இருக்காங்க. இதுல முதல்ல போட்டு வீணாவுறதுக்கு ஒண்ணும் இல்ல. எல்லாம் எங்க பேராசிரியர் ஐயாத்தாங்க போடுறாங்க."ங்றான் வெகடு.
            "யாருய்யா அவுங்க?"ன்னு சிரிச்சிக்கிட்டே கொஞ்சம் நக்கலா கேள்வியப் போடுறாரு விநாயகம் வாத்தியாரு.
            "திருவாரூ தியாகராசரு கல்லூரியில நமக்கு தாவரவியல் பாடஞ் சொல்லித் தந்தவரு."ங்றான் விகடு.
            "ஒமக்கு ஏம் அவுங்க ஆபீஸ் போட்டு... அப்படித் தர்றதுல அவுங்களுக்கு ன்னா லாபம்னு புரிய மாட்டேங்குது? இப்போ எஞ்ஞ தம்பிங்க மெட்ராஸ்ல இருக்காங்கல்ல. அவுங்க சிலதெ நீயி சொல்றாப்புல பார்ட்னர்சிப்ல டீலு பண்ணுறத கேள்விப்பட்டிருக்கேம். தப்பா நெனைச்சிக்காதே வெகடு. நாம்ம புரியாமத்தாம் கேக்கிறேம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு நைச்சியமா.
            "இதுல தப்புல்லாம் ஒண்ணும் இல்லங்கய்யா! இப்டி கலந்துக்கிறதுதாங் சரி. ஒருத்தொருக்கொருத்தர் கலந்துக்கிட்டு வெவரம் தெளிவாச்சுன்னா எந்தப் பிரச்சனையுமில்ல. அதெ வுட்டுப்புட்டு அவங்கவங்க மனசுல ஒண்ணு நெனைச்சுக்கிட்டு, அவுங்க நெனைக்குற வெதமா அப்படித்தாம்னு கலந்துக்காம இருக்குறதுதாங் எல்லா பிரச்சனைக்கும் காரணம். நீங்க கேட்குறது சரிதாங்க்யயா! அவுங்களுக்கு முதலீடு பண்றதப் பத்தி அவ்வளவு விவரம் தெரியலேங்றாங்க. நம்மகிட்ட இருக்குற அந்த விவரத்தைத்தாம் அவங்க முதலீடா பாக்குறாங்க. அவுங்க பெரிய கையிங்க. ஆபீஸ் போடுறது அவுங்களுக்கு பெரிய விசயமில்லே. அவுங்களுக்குன்னு சொந்தமாவே ஒரு ஆபீஸ் போடுற அளவுக்கு அவுங்க அதாங் முஸ்லீம்மார்க ஆளுங்க இருக்காங்க. அதாங் ஆபீஸப் போட்டுத் தந்து அதுல வர்றத நமக்குன்னும், அவுங்களுக்கு முதலீடு பண்ணித் தர்ற லாபம் அவுங்களுக்குன்னும் செய்யலாம்னு பேராசிரியர் ஐயா நெனைக்குறாங்க!"ங்றான் வெகடு அப்பங்காரரையும் பேச்சோடு பேச்சாக குத்திக் காட்டுறது போல.
            "அது செரி வெகடு! ஆபீஸ நாம்ம போடாம ஆபீஸ்ல வர்ற லாவம் நமக்குன்னா அதுல ஞாயம் இல்லியே? நமக்கு ஒரு உபகாரம் பண்றாங்றது வேற, பிசினங்றது வேற. பின்னாடி மனவருத்தம் வந்துடக் கூடாது பாரு. ஆரம்பிக்கிறப்பவே தெளிவா பேசிக்கணும். ஒருவேள நீயி ஆபீஸ் போடுறேன்னு வெச்சிக்குவோம். அதுல லாவம் பிச்சிக்கிட்டு போவுதுன்னு வெச்சிப்போம். அப்போ என்னாவும்னு நெனைக்குறே? அந்த எடத்துல என்ன வாணாலும் நடக்கலாம். லாவம் அதிகம் வர்றதால நீயி ஆபீஸூக்காக என்னா முதலு போட்டுருக்கிறேங்ற கேள்வி வந்துப்புடலாம். அப்போ நீயி என்ன சொல்வே? இந்த ஆபீஸ உருவாக்குனது நாம்ம, இப்டி லாவத்தக் கொண்டு வந்தது நாம்ம, அதாங்க மொதலுன்னு சொல்லுவீயா? அதுக்கு நேர்மாறா ஒருவேள... நட்டம் வந்துப் போவுதுன்னு வெச்சிப்பேம். ஒண்ண நம்பித்தாம் பண்ணினேம். இப்டி ஆயிடுச்சே! ஆன நட்டத்துக்கு எதாச்சிம் ரூவாய எடுத்து வையின்னு நிக்குறாங்கன்னு வெச்சிப்பேம் நீயி ன்னா பண்ணுவே? இப்ப நாம்ம சொல்றதெல்லாம் நடக்கணும்னு அவசியமில்ல. நீயி ஆபீஸ ந்நல்லாவே நடத்துவேம்னு வெச்சிக்கிட்டாலும் ஒருவேள... நாம்ம சொல்ற மாறி நடந்தா ன்னா பண்ணுவே? ஏம் நாம்ம இப்டிப் பேசுறேன்னா அதாங் பிசினசுங்றது. நட்பு மொறையில பிசினஸ ஆரம்பிச்சு விரோதியா ஆயி பிரிஞ்சி வாரக் கூடாது. நாட்டுல இன்னிக்கு நூத்துக்கு தொண்ணூத்து ஒம்பது அப்டித்தாம் நடக்குது. எல்லாங் கெரகம். அதாங் அப்பா வந்து நம்மகிட்டு கலந்துகிடுச்சி. அதாங் நாம்ம வந்து பேசுறேம்னு வந்திருக்கேம்!"ன்னு விநாயகம் வாத்தியாரு நேரடியாவே வெசயத்தைப் போட்டு இப்பத்தாம் ஒடைக்கிறாரு.
            "நீங்க சொல்ற மாரி நடக்க வாய்ப்புல்லங்கய்யா! ஆனா நாம்ம சொல்லிப் பண்ற முதலீடு எறங்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா காத்திருந்தா அதுவே ரெண்டு பங்கா, மூணு பங்கா வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு!"ங்றான் விகடு.
            "நீயி இன்னும் விசயத்துக்கே வரல. பிசினஸங்றது மதிலு மேல போற பூனை மாரித்தாம். இந்தப் பக்கம் லாவம். அந்தப் பக்கம் நட்டம்னு வெச்சிக்கோயேன். எந்தப் பக்கமும் அந்த பிசினஸ்ங்ற பூனைக் குதிக்கலாம். ரண்டையும் சமாளிக்கிற தெறமையும் சூதானமும் இருந்தாத்தாம் பிசினஸ்ல நிக்க முடியும். நீயி என்னவோ அங்க எங்களோட பி.எப். பணத்தயெல்லாம் கவர்மெண்டு போடப் போறதா... அதாங் ஷேர் மார்கெட்டுல போடப்போறதா சொன்னீயாமே? அதுல்லாம் பிரபோஸல் போயிருக்கு. அவ்வளவுதாம். அதெல்லாம் அப்படி ஆவ வுட மாட்டேம். போராட்டம் பண்ணுவேம். அதுல்லாம் அம்மாம் ஈஸி கெடையாது பாத்துக்கோ. காசெ ஒபரியா வெச்சுக்கிட்டு அந்தக் காசெ ன்னா பண்றதுன்னு அரிப்பெடுத்து அலையுறாம் பாரு! அவனுக்குத்தாம் நீயி சொல்ற ஷேர் மார்கெட்டுல்லாம் சரி வரும். நாம்ம இப்பத்தாம் தலயெடுக்கிறேம். நமக்கு நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் சரிபட்டு வராதுன்னுத்தாம் நாம்ம நெனைக்கிறேம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "நாலு வருஷம் மார்கெட்டுல இருந்திருக்கேம். நம்மகிட்ட டிரேட் பண்ற கிளையண்ட்ஸூக்குக் கூட நஷ்டம் வர்ராம பண்ணியிருக்கேம்!"ங்றான் விகடு.
            "நாப்பது வருஷம் இதுல இருந்தும் ஒண்ணும் பண்ண முடியாதவன பத்தியெல்லாம் மெட்ராஸ்ல இருக்குற எம்மட தம்பிச் சொல்லியிருக்காங்க. ஒனக்காகவே இன்னிக்குப் போன போட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல அவங்கிட்டப் பேசிருக்கேம் பாத்துக்க!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு கண்டிக்கிற தொனியோட வெரல ஆட்டிக்கிட்டு.
            "நீங்க ஒரு விசயத்த புரிஞ்சிக்க மாட்டேங்றீங்கய்யா! நீங்க முதலீடு பண்ணவங்களோட, டிரேட் பண்ணவங்களோட நெலமையப் பத்திச் சொல்லிட்டு இருக்கீங்கய்யா! நாம்ம தெளிவா சொல்றேம்! ஒங்க தம்பிங்க நடத்துற பிசினஸ் பாஷையிலயே சொல்றேம். சாராயக்கடை நடத்துறவேம் ஆண்டியாவ மாட்டாம். சாராயக் கடையில வந்து குடிக்கிறவேம்தான் ஆண்டியாவாம். இதுல கடைய போடுறவேம் கடைசி வரைக்கும் நட்டமாவ மாட்டாம். கடைக்கு வர்றவம் நட்டமாவாம்."ங்றான் விகடு.
            "நீயி கோபமா ஆயிட்டேன்னு நெனைக்கிறேம். ஆனா விசயத்துக்கு வந்துட்டே. பரவாயில்ல. எஞ்ஞ தம்பிங்க சாராயக்கடை யேவாரிகளாவே இருக்கட்டும். ஒண்ணும் நமக்கு வருத்தமில்லே. ஆனா ஒம்மட வாயாலயே சொன்னப் பாரு. இதுல கடையப் போட்டவம் நட்டமாவ மாட்டாம். ஆனா கடைக்கு வந்தவம் நட்டமாவாம்னு. அதெச் சொல்லித்தாம்பா ஒங்க அப்பாரு வேதனைப்படுறாரு. அழுவுறாரு. நம்மட குடும்பத்துக்கு அப்டி ஒரு வாசாப்பு வேணுமான்னு கேக்குறாரு. நாம்ம வர வேண்டிய எடத்துக்கு நீயே வந்துட்டதால நீயே அதுக்குப் பதிலச் சொல்லு! எஞ்ஞ தம்பிங்க ஏத்தோ போயிட்டாங்க அவுங்கள வுடு. அப்போ குடும்பத்தோட வறுமெ அப்டி. ஆன்னா ஒம்மோட நெலம இப்போ அப்டி யில்ல. அதால சரியாச் சொல்லு. யோஜசிச்சுச் சொல்லு"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "எந்தப் பக்கம் போனாலும் அதுல வளைச்சு வளைச்சுப் பிடிச்சி தெளிய வெச்சி தெளிய வெச்சி அடிக்கிறீங்க. நாம்ம போடுற கடெ வேற. மித்த கடைங்க வேற. நம்ம கடையில யாரும் நட்டமாவ மாட்டாங்கோ. நட்டமாவ வுட மாட்டேம். இத்து சத்தியம். நீஞ்ஞ நம்மள நம்பலாம்கய்யா!"ங்றான் விகடு.
            "ந்தாருப்பா வெகடு! பிசினஸ்ல இதெல்லாம் பேசுறதுக்கில்ல. நட்டம் வராத பிசினஸூ எஞ்ஞ இருக்கு? நட்டமான்னா ன்னா பண்ணுவே? அவுங்க அடைஞ்ச நட்டத்துக்கு ஈடு பண்ணிக் கொடுக்க ஒங்கிட்ட ன்னா சொத்துப்பத்து இருக்கு?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "ஒண்ணுமில்லங்கய்யா! ஒண்ணுமேயில்லங்கய்யா! எங்கிட்ட ன்னா இருக்கு? நாம்ம சம்பாதிக்கிறதுல ஒத்த பைசா காசி கூட நம்மகிட்ட இல்லே. எல்லாத்தையும் எஞ்ஞ யம்மாகிட்டத்தாம் கொடுக்கிறேம். அது அதுலேந்து கொடுக்குற காசியில்லத்தாம் பஸ்ல கூட போவாம இன்னிக்கு வர்றைக்கும் பழஞ்சைக்கிள்லயே போயிட்டு வர்றேம். ஒண்ணுமேயில்ல. ஒண்ணுமேயில்லங்றதாலத்தாம் எதாச்சிம் ஒண்ண சேக்கணும்னு இதெ ஆரம்பிக்க நெனைக்கிறேம். ஒண்ணுமே இல்லன்னு கடெசி வரைக்கும் இருந்துடக் கூடாது பாருங்கய்யா! அதுக்குத்தாம் இப்டில்லாம் செருமப்படுறேம். மனுஷனுக்குச் சந்தர்ப்பங்கறதெல்லாம் எப்பயாச்சியும்தாம் வரும். அதுவா வர்றப்ப பயன்படுத்திக்கணும். அதெ வுட்டுப்புட்டு நாம்ம பயன்படுத்திக்கிறாப்புல சூழ்நிலெ இருக்குறப்ப வான்னா அது வரவே வராது. இப்டி அப்டின்னு பேசிட்டு இருக்குறதுல புண்ணிய இல்லைங்கய்யா. வெட்டு ஒண்ணு துண்டு ஒண்ணுன்னு ஒங்க முடிவெ சொல்லுங்கய்யா!"ன்னு விடாப்புடியா கேக்குறான் விகடு.
            "நீதானப்பா சொன்னே! இப்டிக் கலந்துக்கிறது நல்லதுன்னு! சொல்லிப்புட்டு நிமிஷ நேரத்துல இப்டி மாறுனா நாம்ம ன்னா பண்ணுறது?"ன்னு அடுத்த கொக்கியப் போடுறாரு விநாயகம் வாத்தியாரு.

            "சொன்னேம்தாம்! நீஞ்ஞ பேசுறதெ இப்போ பாக்குறப்போ நீஞ்ஞ நம்மள ஊக்கப்படுத்துற மாரி தெரியல. நம்மள மனசளவுல ஊனப்பட வெக்குறீங்க. அதாங் அப்டி பேச வாண்டியதா இருக்கு!"ங்றான் விகடு.
            "பேசப் பேச வெகடுகிட்ட சுத்தமான தமிழுப் போயிடும் போலருக்கே! ஏம்பா யப்பாடி ஒஞ்ஞ அப்பாவுக்கு நீயி ஒருத்தம் மட்டுந்தாம் புள்ளீயா? ஒந் தங்காச்சி ஒண்ணு இருக்குல்ல. நீயி பாட்டுக்குப் பிசினஸ்னு போயி அதுல நட்டப்பட்டு வந்து நின்னியின்னா... ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தாம் அப்டி வெச்சிப்போம். நாளிக்கு ஒந் தங்காச்சிய கலியாணம் காட்சில்லாம் பண்ணிக் கொடுக்கணுமே. அதெ ஒங்க அப்பாரு பாக்குமா? யில்ல ஒன்னோட நட்டத்தப் பாக்குமா? பதிலெச் சொல்லு! மேக்கொண்டு நாம்ம பேசல."ங்றாரு இப்போ விநாயகம் வாத்தியாரு அழுத்தமான நங்கூரத்தப் போட்டாப்புல.
            "ஷேர் மார்கெட்டுல நமக்குப் பிடிக்காத ஒரே வார்த்தெ நஷ்டங்றதுதாம். அதெ நமக்குத் தெரிஞ்ச அளவுல நாம்ம ஆபரேட்டரா இருந்து பண்ண டெர்மினல்ல மார்கெட்டுல பாத்ததில்ல, பாக்க வுட்டதில்ல. மார்கெட்டுக்குப் போன ஒரு வருஷம் வரைக்கும் அதெ நெனைச்சு நெனைச்சு மண்டையைப் போட்டு ஒடைச்சிக்கிட்டுக் கிடந்திருக்கிறேம். மார்கெட்டுக்கு வர்ற எவ்ளோ ஆளுங்களப் பாத்து அதெ கண்டுபிடிச்சிருக்கிறேம். டிரேட் பண்ற ஒவ்வொருத்தரயும் இஞ்ச் பை இஞ்சா கவனிச்சு அதெ மண்டையில போட்டு கசக்கிப் பிழிஞ்சு அந்த ரசவாதத்த கண்டுபிடிச்சிருக்கிறேம். நஷ்டம் நஷ்டம்னு சொல்லுதீங்களே! அதெப் பாக்கவும் மாட்டேம். நாலு வருஷமா நாம்ம கத்துக்கிட்ட வித்தைங்கள நம்மால நாப்பது நிமிஷத்துல ஒங்களுக்கு விளக்கிட மிடியாது. மனசு பூரா அந்த சூட்சமங்கத்தாம் நெரம்பிக் கெடக்குது. அதெ எப்டிச் சமாளிப்பேம் என்ன வகையில சமாளிப்பேங்றது நாம்ம மட்டும் அறிஞ்ச ரகசியம். அந்த ரகசியத்துக்குத்தாம் இன்னிக்கு ஆளு நம்மள பாத்து வர்றாங்க. நமக்குத் தெரிஞ்ச அளவுல ஷேர் மார்கெட் யாரையும் கைவுடாது. ஆனா சிலபேரு கைய வுட வைப்பாங்க. அத்து மார்கெட்டோட மிஸ்டேக்குக் கெடையாது. மார்கெட்டுல மிஸ்டேக்கு பண்றவங்களோட மிஸ்டேக்கு."ங்றான் விகடு.
            "செரி அதெ வுடு. நீயி டென்ஷன் ஆவுறாப்புல ஆவுது. புரபஸ்ர்னு சொன்னீயே! யாரு ன்னா ஊரு? பேரு?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு வேற ஏதோ ஒரு விசயத்தப் புடிக்கிறாப்புல.
            "புரபஸர் டாக்டர் அப்துல்மாலிக். மின்னாடி அடியக்கமங்கலத்துல இருந்தாரு. இபபோ ஜாகையா கூத்தாநல்லூருக்கு வந்துட்டாரு. பெருங்கையா ஆயிட்டாரு!"ங்றான் விகடு.
            "கூத்தாநல்லூர்ல எஞ்ஞேங்றேம்?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "அப்துல் ரகுமான் ரோட்டுல முனிசிபாலிட்டி ஆபீஸூக்கு எதுத்தாப்புல போற சந்துல கெழக்குக்கோட்டையாரு வூடு இருக்குற தெருவுலத்தாம்!"ங்றான் விகடு.
            "நீயிப் போயி பாத்தியா? மேக்கொண்டு பேசுனீயா?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "மீட்ல ஓட்டல் செல்வீஸ்ல பாத்ததுதாம். விசாலக் கெழமெ வாரச் சொல்லிருக்காரு."ங்றான் விகடு.           
            "வர்ற விசாலக் கெழமயா?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            விகடு தலைய ஆட்டுறான். விநாயகம் வாத்தியாரு எழுந்திரிச்சி, "செரி வாத்தியாரே நாம்ம கெளம்புறேம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரைப் பார்த்து.
            "தலயும் இல்லாம வாலும் இல்லாம மொட்டயாப் பேசுனீங்க! மொட்டயா கெளம்புதீங்க. உக்காருங்க நாம்ம டென்ஷன் ஆவாம பதிலெச் சொல்றேம்!"ங்றான் விகடு.
            "யில்ல. நமக்குக் கொஞ்சம் வேல இருக்கு. கெளம்புறேம். இத்து கொஞ்சம் இன்னும் ப்ரியா பேசணும். பெறவு வர்றேம். பாத்துக்கலாம்."ங்றாரு விநாயகம் வாத்தியாரு. அவருக்குள்ள வார்த்தெ எஞ்ஞ தடிச்சிடுமோங்ற மாதிரி ஒரு அச்சம் முகத்துல தாண்டவமாடுது.
            "அப்போ முடிவு?"ங்றான் விகடு.
            "ஒன்னய வெச்சி மட்டும் யோஜிக்காத. குடும்பத்தயும் மனசுல வெச்சி யோஜி. இப்பைக்கு இதாங். பெறவு பேசலாம். பேசுறதுக்கு நெறய இருக்கு. பேசிக்கலாம்."ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "பேசிக்கலாம்னு கெளம்புதீயளே?"ங்றான் விகடு.
            "அதாங் தெளிவா பேசிக்கலாம்னு சொல்லிருக்கேம்ல. பேசிக்கலாம். இப்போ பேசலாம்யில்ல. பேசிக்கலாம். பேசுவேம். இப்போ ‍பொறு. வூட்டுல ஒடம்பு சரியில்ல. மருந்து வாங்கி வாரேம்னு வந்தேம். பேச்சுல நேரம் ஆவுறாப்புல தெர்யுது. நமக்கும் குடும்பம் முக்கியம்பா!"ன்னு சொல்லிட்டு மேக்கொண்டு பேச விருப்பம் இல்லாதவரப் போல, "வர்றேம்மா! வர்றேம் செய்யு! வர்றேம்டா வெகடு!"ன்னு சொல்லிட்டு விடுவிடுவென கெளம்பி மேக்ஸ் ஹண்டர்ட் ஆருக்குப் பக்கத்தில போனவரு, ஏறி உக்காந்து கிக்கரை ஒரு ஒதைச்சி ஒரே ஒதையில வண்டிய கெளப்பிக்கிட்டு, ட்ருக்கு ட்ருக்டெக்னு சத்ததோடு போறாரு.
            அது வரைக்கும் பேயாமலே இருந்த சுப்பு வாத்தியாரு, வெங்கு, செய்யுன்னு யாரும் இப்பவும் விகடுகிட்ட பேசல. அவனும் யாருகிட்டயும் பேச விருப்பம் இல்லாதவன் போல ரூமுக்குள்ள போயி உக்காந்துக்கிட்டான்.வர்ற விசாலக் கெழம மாலிக்கைப் போயிப் பாக்கறதா வேண்டாவான்னு ஒரு குருஷேத்திரமே மனசுக்குள்ள ஓடுது. இத்து இப்போ அவனுக்கு குருவா இருந்த விநயாகம் வாத்தியாரே உருவாக்குன சேத்திரமா வேறல்ல போயிடுச்சு. அவரோட பேச்சோட சாரங்றது இப்போ இந்த ஆபீஸ் போடுற வேலயெல்லாம் வேணாங்குறதுதாம். சுப்பு வாத்தியாரு அப்படித்தாம் விநாயகம் வாத்தியார்கிட்ட, பயெ நமக்குக் கட்டுப்பட மாட்டேங்றாம், நீஞ்ஞ அப்டிப் பேசி வுடுங்க, அவ்வேம் மனசு மாறிக்குவாம்னு சொல்லிருப்பாரு. பதிலுக்கு விநாயகம் வாத்தியாரும் நீஞ்ஞ யாரும் ஊடால புகுந்துப் பேசிப்புடாதீங்க, நாம்ம மட்டுமே பேசியே மனசெ கரைச்சிப்புடறேம்னு சொல்லியிருப்பாரு. அவுங்க ரெண்டு பேரும் ஒத்த மனசு, ரெண்டு ஒடம்புன்னு இருக்குற ஆளுங்கத்தானே.
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...