1 Nov 2019

11.01




            கவிஞர் தீக்காபி ஆங்காரமாய் அந்த காரியத்தைச் செய்தார். சதக் சதக் என குத்தி முடித்தவுடன் பொலிச் பொலிச் என திரவம் அதிலிருந்து வெளிவந்தது. அதில் தன் ரேகை படாமல் எடுத்து அதைத் தோளில் தொங்கும் ஜோல்னா பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டார்.
            யாருக்கும் துளி சந்தேகம் வந்து விடக் கூடாது என்ற கவனம் அவரது ஒவ்வொரு அசைவிலும், நடவடிக்கையிலும் இருந்தது. எந்த ஆதாரமும் சிக்கி விடக் கூடாது என்பதிலும் மிகுந்த படபடப்போடு இருந்தார். ஜோல்னா பைக்குள் போட்ட பிரேத விரோதக் காரணி உயிரற்றுக் கிடந்தது.
            இரவு எட்டு மணிக்குள் கவிஞர் தீக்காபி ஆர்குடி போயாக வேண்டும். வழியில் வடவாதியில் ஒன்றும், நல்லூரில் ஒன்றும் ஆக இரண்டு காவல் நிலையங்கள் இருக்கின்றன. காக்கிச் சட்டைக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடாமல் அவர் கடந்தாக வேண்டும். தாங்கிச்சேரியில் காவலர்களின் சோதனைச்சாவடி ஒன்று இருக்கிறது. அந்தச் சோதனையிலும் தப்பியாக வேண்டும். நேரம் சரியாக ஏழரை என்று காட்டியது கடிகாரம். பாழாய்ப் போன கடிகாரம்! நேரத்தைச் சற்றுக் குறைத்துக் காட்டினால்தான் என்ன? கடிகாரத்துக்கு கவிஞர் தீக்காபி மேல் இரக்கம் ஏற்படாமல் போய் விட்டது. காலம் எப்போது கவிஞர்களோடு ஒத்துப் போகாது. காலத்தின் சுழற்சியில் கவிஞர்கள் எப்போதும் கோமாளிகள்.
            பேருந்து பயணம் என்றால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் தப்பி விடலாம். வடவாதி கிராமத்துக்கு வரும் இரவு எட்டு மணிப் பேருந்தில் ஓடிப் பிடித்து விளையாடும் அளவுக்குத்தாம் ஆட்கள் இருப்பார்கள். ஏறியவர்களும் ஓடிப் பிடித்து விளையாடாமல் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். நடத்துநராகப் பார்த்து அவர்கள் பயணச்சீட்டுக் கேட்டுப் பெற்ற இடம் வந்ததும் உடம்பைப் போட்டு குலுக்கி, தலையை அப்படியும் இப்படியுமாகப் போட்டுத் திருப்பி, எப்படியோ ஒருவழியாக எழுப்பி இறக்கி விட வேண்டும். கவிஞர் தீக்காபி எட்டு மணிக்குப் போய் சேர வேண்டிய இடத்துக்கு எப்படி எட்டு மணிப் பேருந்தில் ஏற முடியும்?
            கவிஞர் தீக்காபி ஒரு முடிவுக்கு வந்தவராக வெகுகாலத்துக்கு முன்பு நிராகரிக்கப்பட்டு தன்னால் வாங்கப்பட்ட பெயர் கண்டறிய முடியாதபடி பல நிறுவன உதிரிபாகங்களால் தயாரிக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் தேர்ந்து கொண்டார். தனது ஜோல்னாபை சமாச்சாரத்தோடு, தன் சம்சாரத்தையும் பின்னால் அமர்த்திக் கொண்டு உதைவாங்கி எனப்படும் கிக்கரைப் போட்டு உதையோ உதையோ என்று உதைத்தார். சமாச்சாரத்தோடு சம்சாரம் எதற்கென்றால் காக்கிச்சட்டைக்காரர்கள் சம்சாரத்தோடு சென்றால் சோதனையிட மாட்டார்கள் என்பதற்காக. அதுவும் இல்லாமல் அந்த இருசக்கர வாகனம் அவரது சம்சாரம் ஏறி உட்கார்ந்தால்தான் அவருக்குக் (கவிஞருக்கு அல்ல, கவிஞரின் சம்சாரத்துக்கு - பி.கு. நாட்டில் எதுதாம் கவிஞர்களுக்குக் கட்டுப்படுகிறது சொல்லுங்கள்!) கட்டுபட்டு இயங்கத் தொடங்கும். அந்த தொல்லை வேறு கவிஞர் தீக்காபிக்கு இருந்தது.
            உதைவாங்கி எனப்படும் கிக்கர் சில பல உதைகளை வாங்கிக் கொண்டு பெருங்குரலெடுத்து சத்தத்தை எழுப்பிக் கொண்டவாறே இரு சக்கரங்களையும் உருட்டிக் கிளம்ப தயாரானது. வாகனத்தில் அமைதிபடுத்தி எனப்படும் சைலன்ஸர் இத்து விழுந்து நாளாகியிருக்க வேண்டும். வாகனம் பெருங்குரலெடுத்து அழுவது போல சத்தம் எழுப்பிக் கொண்டே உருள ஆரம்பித்தது. அவசரகால வாகனம் வ்வாங் வ்வாங் வ்வாங் என சத்தமெழுப்பிக் கொண்டு செல்வது போல அவ்வாகனம் ட்ர்ரா டட்டா ட்ர்ரா ட்ர்ர ட்ர்ரா டட்டா என சத்தமெழுப்பிக் கொண்டு பிரயாணிக்கத் தொடங்கியது. இந்த நல்ல உவமையை வாசகர்கள் தயவு செய்து கவனிக்க வேண்டும் என்ற நாவலாசிரியர் கடவுளிடம் பிரார்த்திக்கிறார்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...