1 Oct 2019

உண்மையான வாசகன் வாசிப்பதை நிறுத்துவதில்லை



நேரம் போதாமை.
சமீப நாட்களாய் அழுத்திக் கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் பொதுவெளியில் படிப்பது என்றால் கூச்சமாக இருக்கும். பார்ப்பவர்கள் விசித்திர ஜந்துவாக நினைத்து விடுவார்களோ என்ற பொதுவெளிப் பிரக்ஞை இருந்து கொண்டிருக்கும். எப்போது அந்த பொதுவெளிப் பிரக்ஞையைக் கடந்தேன் என்று தெரியவில்லை.
யோசிக்காமல் தரையில் சப்பக்கென்று உட்கார்கிறேன். பையில் இருக்கும் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விடுகிறேன்.
மனு கொடுக்கும் அலுவலகங்கள் என்றால் ரொம்ப வசதி.
நீண்ட நேர காத்திருப்பு நீண்ட நேர வாசிப்புக்கு உதவியாக இருக்கிறது. அந்தச் சூழலே ரம்மியமாக இருக்கிறது. யாரும் யார் குறித்த பிரக்ஞை இல்லாமல் வேலை பார்க்கும் இடத்தில் யார் குறித்த பிரக்ஞையும் இல்லாமல் அது பாட்டுக்குப் பக்கங்கள் பறக்கிறது.
நாளையும் இது போல வரச் சொல்லி காக்க வைத்தால் தேவலாம் என்ற மனோ ஏக்கம் உருவாகி விடுகிறது.
 இப்படி படிக்கின்ற காலத்தில் படித்திருந்தால் வேலைக்குப் போயிருக்கலாம் என்று அம்மா திட்டுவது கேட்கிறது.
படிக்கின்ற காலத்தில்தான் படிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன?
எப்போது தோன்றுகிறதோ அப்போது படிக்கிறேன்.
இன்று நாள் அக்டோபர் மாதத்தில் 2059 இல் ஒரு நாள்.
பத்திரமாக இருக்கும் 1999 இன் தினசரியை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறேன்.
ஊழல், லஞ்சம், வேலையின்மை, கலவரம், ரத்தம், கொலை, திருட்டு, கற்பழிப்பு எதுவுமே மாறவில்லை.
உண்மை, நேர்மை, பச்சாதாபம், பரிவு, கருணை, மனசாட்சி, இரக்கம், சகிப்புத்தன்மை எல்லாமே மாறி விட்டது.
தினசரியை ஓரமாக வைத்து விட்டு திகில் கதை ஒன்றை எடுக்கிறேன். வாசிக்கிறேன்.
"முன்னொரு காலத்தில் பாரதம் என்றொரு மர்ம தேசத்தில்..."
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...