நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர
வாகனங்களின் விற்பனை வெகுவாக சரிந்து விட்டதான புலம்பலை அண்மை காலமாக ஊடகங்கள் வெளிப்படுத்தி
வருகின்றன. பொதுவாக பொருளாதார வளர்ச்சி என்பது வாகன உற்பத்தி மற்றும் விற்பனையைக்
கொண்டு மதிப்பிடப்படுகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு பெரிய பொருளாதாரச்
சரிவை இந்தியா விரைவில் சந்திக்கப் போகிறது.
இந்த வாகன உற்பத்தியும், விற்பனையும் அது
ஏற்படுத்திய தாக்கத்தையும் உணர நகர்புறத்தின் டிராபிக் ஜாம் எனப்படும் வாகன நெருக்கடியைப்
பார்ப்பதே போதுமானதாக இருக்கலாம். பெருகி வரும் வாகனப் பெருக்கத்திற்கேற்ப சாலை வசதிகள்
மேம்படுத்தப்படவில்லை என்பதாகவோ அல்லது பெருகி வந்து கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கேற்ப
பொதுப் பயன்பாட்டு வானங்களான பேருந்துகள் அதிகரிக்கப்படவில்லை என்பதாகவோ கூட இதைப்
பார்க்கலாம்.
சாலை ஓரங்களில் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருக்கும்
நான்கு சக்கர வாகனங்களும், ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு
மூன்று இரு சக்கர வாகனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு வீட்டுக்கும்
போதுமான எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இருப்பதும் கண்ணுக்குப் புலனாகும்.
ஒரு பொதுக் கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டால்
இந்தியாவின் மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையில் எரிபொருளால் இயங்கும் வாகனங்களின்
எண்ணிக்கை இருக்க கூடும். ஒரு வீட்டிற்கு ஒரு வாகனம் இருந்த நிலையெல்லாம் மலையேறி விட்டது.
ஒரு வீட்டில் ஒருவர்க்கே இரண்டு மூன்று வாகனங்கள் இருக்கும் அளவுக்கு நிலைமை மாறிக்
கொண்டு இருக்கிறது.
புதுப் புது அலைபேசிகளை மாற்றி மாற்றிப்
பயன்படுத்துபவர்கள் போல வாகனங்களைப் புதிது புதிதாக மாற்றிப் பயன்படுத்துபவர்களும்
இருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சிக்கு வாகனங்களின் உற்பத்திப் பெருக்கமும், விற்பனைப்
பெருக்கமும் அவசியமாக இருக்கலாம். அந்த அளவுக்கு வாகனங்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டுமோ
என்பதை நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு வாகனங்களும் சாலைகளில் ஏற்படுத்தும்
வாகன நெருக்கடி, வெளியிடும் புகை அளவு என்று யோசிக்கும் போது மக்கள் தொகைக் கட்டுபாட்டைப்
போல வாகனக் கட்டுபாடு என்பதும் அவசியமானதாகத்தான் தோன்றுகிறது.
மிக முக்கியமான கேள்வியாக பொதுப் போக்குவரத்திற்குப்
பயன்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர
வாகனங்களின் உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரிக்கச் செய்து அதைப் பொருளாதார வளர்ச்சியாக
காட்ட நினைப்பதில் உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகிக்கவும் வேண்டியதாகத்தானே இருக்கிறது?
பொருளாதார வளர்ச்சியைப் போலவே சுழலியல் வளர்ச்சியும் தேவையாக இருக்கிறது அல்லவா!
இப்போது ஆட்டோ மொபைல் துறை எனப்படும்
வாகன உற்பத்தித் துறையில் ஏற்படும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பெரிதாகப் பேசிக்
கொண்டிருக்கும் ஊடகங்கள், இந்தியாவின் மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையான விவசாயத்
துறையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவையும் அது சந்திக்கும் தொழிலாளர் பற்றாக்குறைப்
பிரச்சனைகளைப் பற்றியும் பேசாமல் ஏன் மெளனம் சாதிக்கின்றனவோ!
அந்த மெளனத்தின் பின்னால் கிராமத்துத்
தொழிலாளர்களை வெளியேற்றி, நகரத்திற்குத் தேவையான தொழிலாளர்களை உள்வாங்கிக் கொண்ட
பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிய புரிபடாத கண்ணி ஒன்று இருக்கிறது.
இப்போதும் பொருளாதார வளர்ச்சி என்பதில்
நகரத்தைக் கணக்கெடுத்துக் கொள்வதைப் போல கிராமங்களை எந்த அளவுக்குக் கணக்கில் எடுத்துக்
கொள்கிறார்கள்? நகரங்கள் வளர்ந்தால் நாடு வளர்கிறது என்பது போன்ற தோற்றம்தானே உருவாக்கப்பட்டுக்
கொண்டு வருகிறது. இந்தியாவின் உண்மையான பொருளாதார மூலதனம் இப்போதும் கிராமத்தில்தான்
இருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கானப் பொருளாதார வீழ்ச்சி எப்போதும் இந்தியாவைப்
பாதிக்காமல் இந்தியாவுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போன்ற நிலை இப்போதும்
நீடிக்கிறது. இதைப் புரிந்து கொண்டு கிராமங்களுக்கான விவசாயப் பொருளாதார மேம்பாடுகளை
உருவாக்கினால் உலகின் வலுவானப் பொருளாதார சக்தியாக இந்தியா மட்டுமே இருக்கும். இந்தியாவின்
கிராமங்களுக்கு அப்படிப்பட்ட சக்தி இருக்கிறது. ஆனால் நிலைமை பாருங்கள் தன்னடைய கிராமங்களின்
சக்தியை தானே உணராத, உணர்ந்து கொள்ள விரும்பாத மனநிலையைத்தான் இந்தியா இன்னும் தொடர்ந்து
கொண்டு இருக்கிறது. அது அப்படித் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்தியப் பொருளாதாரத்தை
ரகசியமாகப் பின்னிப் பிணைந்து உறுதிபடுத்திக் கொண்டிருக்கும் பணியை இந்திய கிராமங்கள்
தன்னை அறியாமல் எப்போதும் செய்து கொண்டிருக்கும். தன்னகத்தே உள்ள இயற்கை வளமும்,
நிதானமான மக்கள் வளமும் அதன் சொத்துகளாக இப்போதும் உள்ளன என்பதுதான் அதன் பின்னுள்ள
காரணம்.
*****
No comments:
Post a Comment