31 Mar 2019

படிப்புத் தொழிற்சாலைகள்



செய்யு - 41
            கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டுமே என்ற பழமொழி தனக்காவே உருவாக்கப்பட்டது போல விகடுவுக்குத் தோன்றியது. ஆண்டியப்பராம் சிவபெருமானே நினைத்தாலும் பூசாரி விபூதி அடித்தால்தான் உண்டு. கடவுளுக்கு எல்லாரும் சமம் என்று சொன்னாலும் பூசாரிக்கு யார் இதைச் சொல்வது? கடவுளா மனிதர்களை நிர்வாகம் செய்கிறார்? மனிதர்கள்தான் கடவுளை நிர்வாகம் செய்கிறார்கள்.
            கோயிலில் விபூதி, குங்குமம் கொடுக்காததை "நமக்கு கோயில்ல துன்னூரு கொடுக்கல! நம்மய துலுக்கமாரு வூட்டுப் புள்ளன்னு சொல்லிட்டாங்க!" என்று நெடுநாட்கள் வரை பலரிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான் விகடு. வடவாதிக்குப் போன போது இதைச் சாமியாத்தாவிடமும் சொன்னான் விகடு. "அடப் போடா இவனே! நம்மள வுட எவம்டா வேணும் உமக்கு துன்னூரு அடிக்க?" என்று சொல்லி விபூதியை அள்ளி விகடுவின் முகத்தில் விசிறி அடித்து நெற்றியில் பூசி விட்டது சாமியாத்தா. "யாத்தே நீ இப்படிப் பண்றதுக்கு அந்த பூசாரிமாரு துன்னூரு கொடுக்காம இருந்ததே பரவால்ல!" என்று எரிச்சல் அடைந்தன் விகடு.
            பூசாரி கொடுக்காமல் போன விபூதியின் தாக்கம் வெள்ளிக் கிழமைகளில் விகடுவைக் கோயிலுக்குப் போக விடாமல் செய்தது. அவன் பிரகாரத்தின் வெளியிலேயே நின்று கொள்வான். மற்ற பிள்ளைகள் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு வருவார்கள். யாராவது வற்புறுத்திக் கூப்பிடுவார்கள். "வேண்டாம்ப்பா! நம்மள துலுக்கமாரு வூட்டுப் புள்ளம்பாங்க. துன்னூரு கொடுக்க மாட்டாங்க!" என்றான்.
            ஹாஸ்டலில் ஞாயிற்றுக் கிழமை எல்லா பிள்ளைகளும் துணிகளைத் துவைத்துக் கொண்டிந்தார்கள். அவரவர் கொடிகளில் துணிகளைக் காயப் போட அவரவர்களுக்கு இடம் கிடைக்காது என்பது அந்த நாளின் விசேசம். யார் முதலில் துவைத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்கள் இஷ்டத்துக்குக் காயப்போட்டு இருப்பார்கள். இதனால் சனிக்கிழமை சாயுங்காலமே கட்டிய துணிக்கயிறுகளை அவிழ்த்து வாளியில் போட்டுக் கொள்வார்கள் பிள்ளைகள். காயப்போடும் போது கொடிகளைக் கட்டிக் கொண்டு காயப் போடுவார்கள்.
            ஞாயிற்றுக் கிழமைகளின் காலைச் சாப்பாடு அரிசி உப்புமா. அதற்குப் பொட்டுக்கடலைச் சட்டினி ஊற்றுவார்கள். பிள்ளைகளுக்கு உப்புமாவும் சட்டினியும் பிடிக்காது. மற்ற நாட்களில் முதல் ஆளாக சாப்பிட நிற்கும் பிள்ளைகள் அன்று ஒரு நாள் மட்டும் கடைசியாகச் சாப்பிடுவதை விரும்புவார்கள். கடைசிச் சாப்பாட்டுக்கு அடிதடியும் நடக்கும். அப்படி அடிதடி நடக்கும் அளவுக்கு அரிசி உப்புமாவில், அதுவும் பிடிக்காத அரிசி உப்புமாவில் அப்படி என்ன இருந்தது என்று நீங்கள் கேட்கலாம். பிள்ளைகளுக்கு அரிசி உப்புமாதான் பிடிக்காது. அதன் அடியில் இருக்கும் காந்தலாய்ப் பிடித்துப் போன உப்புமா பிள்ளைகளுக்கு அவ்வளவு பிடிக்கும். அந்தப் பிடித்தம்தான் அடித்துப் பிடித்துக் கொண்டு கடைசி உப்புமாவைச் சாப்பிடச் செய்தது. பழுப்பு நிறத்தில் பட்டை பட்டையாய் காந்தலாக உரித்துக் கொண்டு வரும் அதைச் சாப்பிட பிள்ளைகள் போட்டிப் போட்டுக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டு நிற்பார்கள். சில பிள்ளைகள் ஞாயிற்றுக் கிழமை உப்புமாவுக்காக ரகசியமாக சீனி எடுத்து வைத்திருப்பார்கள். அந்த வாய்ப்பு ஸ்டோர் ரூமுக்குப் போய் மளிகை சாமான்கள், காய்கறிகள் எடுத்துக் கொடுக்கும் பிள்ளைகளுக்குத்தான் கிடைக்கும். வார்டன் ஸ்டோர் ரூமின் வெளியில் நின்று கொண்டு அன்றன்றைக்குத் தேவையான காய்கறிகள், சாமான்களை எடுத்து வரச் சொல்வார். காய்கறி, சாமான்களை வாங்கி வந்து உள்ளே வைக்கும் போதும் அப்படித்தான். பிள்ளைகள்தான் கொண்டு போய் வைப்பார்கள். அந்த நேரத்தில் ஆட்டையைப் போடும் சீனியைத்தான் உப்புமாவுக்குத் தொட்டுக் கொள்வார்கள். இதனால் ஸ்டோர் ரூமுக்குள் பொருள் வைக்க எடுக்க பிள்ளைகளுக்குள் ஒரு போட்டியே நடக்கும். அப்படிப் போக முடியாத பிள்ளைகள் உள்ளே வழக்கமாகப் போகும் பிள்ளைகளிடம் நெருக்கமான சிநேகிதம் வைத்துக் கொள்வார்கள். எல்லாம் ஞாயிற்றுக்கிழமை அரிசி உப்புமாவுக்கான சீனிக்காகத்தான்.
            ராமராஜூக்கு விகடுவின் மேல் தனிப்பிரியம் இருந்தது. அவன்தான் ஞாயிற்றுக் கிழமை அடித்துப் பிடித்துக் கொண்டு போய் உள்ளே நுழைந்து காந்தலான அரிசி உப்புமாவோடு வெளியே வருவான். ஸ்டோர் ரூமில் பொருட்களை உள்ளே வைத்து எடுப்பதற்கும் முதல் ஆளாய் நின்று சாதித்து விடுவான். அவன் தயவால் ஞாயிறுதோறும் காந்தலா உப்புமாவும், சீனியும் சாப்பிடும் பெரும் பாக்கியம் விகடவுக்குக் கிடைத்தது. பதிலுக்கு விகடுவுடம் பாடம் தொடர்பான சந்தேகங்களை எப்போதாவது கேட்பான் ராமராஜ். படிக்கும் நேரங்களில் அவன் விகடுவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருப்பான். புத்தகத்தைக் கையில் எடுத்ததும் அவனுக்கு தூக்கம் வந்து விடும். வார்டன் வரும் நேரங்களில் அவனை உஷார்படுத்தி விட வேண்டும். காந்தல் உப்புமாகவுக்காவும், சீனிக்காகவும் விகடு அந்த உதவியைச் செய்து கொண்டிருந்தான்.
            ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் பலதரப்பட்ட பிள்ளைகள் இருந்தாலும் ஹாஸ்டல் அதன் வழக்கமான கலகலப்பிலிருந்தும், உற்சாகத்திலிருந்தும் விலகி இருந்தது. சதா சர்வகாலமும் ஹாஸ்டலில் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. படிக்காமல் ஏமாற்றுவது தெரிந்தால் அதற்கென தனித் தண்டனைகள் வகுக்கப்பட்டு அமலில் இருந்தன. பொதுவாக தவறுக்கான எல்லா தண்டனைகளிலும் அடி முதல் அம்சம். மனம் நொந்து போகும் வகையில் அசிங்கப்படுத்துவது இரண்டாவது அம்சம். பெற்றோர்களுக்கு கடிதம் எழுதப்படும் என்று மிரட்டப்படுவது மூன்றாவது அம்சம். கடிதம் எழுதுவதோடு விட்டு விட மாட்டார்கள். பெற்றோர்களை ஒரு குறிப்பிட்ட நாளில் வரச் சொல்லி அவர் கூனிக் குறுகிப் போகும் அளவுக்குப் பிள்ளைகளை வைத்துக் கொண்டே பேசினார்கள். தண்டனைகளுக்குப் பயப்படாத பிள்ளைகள் கூட இந்த விசயத்துக்கு யோசித்தார்கள். "நம்மால நம்ம அப்பா அம்மா இங்க வந்து அசிங்கப்பட்டுடக் கூடாது!" என்று பெரியமனுசத்தனமாக யோசித்தார்கள்.
            விகடுவின் மனதில் ஹாஸ்டலுக்கு வந்த நாளில் இருந்தே அந்தக் கேள்வி இருந்தது. "படிப்புங்றது மனுஷங்களுக்காவா? படிப்புக்காவ மனுஷங்களா?" என்பதே அந்தக் கேள்வி. அந்தக் கேள்வியை ஒருமுறை அவன் தைரியமாக வார்டனிடம் கேட்டுப் பார்த்தான். வார்டன் திகைத்தார். அப்புறம் அவனை முறைத்தார். குரலை கடுமையாக்கிக் கொண்டு, "படிச்சத்தான் சமுதாயத்துல மனுஷனா மதிப்பாங்க! ன்னா புரிஞ்சுதா?" என்றார்.
            அந்த ஹாஸ்டலில் பிள்ளைகள் தயாரிக்கப்பட்டார்கள். பத்தாம் வகுப்பு என்றால் நானூறு மார்க்கு மேல் வாங்கும் பிள்ளைகள், நானூற்று ஐம்பதுக்கு மேல் வாங்கும் பிள்ளைகள், ப்ளஸ்டூ என்றால் ஆயிரத்துக்கு மேல் வாங்கும் பிள்ளைகள், ஆயிரத்து நூறுக்கு மேல் வாங்கும் பிள்ளைகள் என்று தயாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த வகைமைக்குள் பிள்ளைகள் வந்து விட வேண்டும். வரா விட்டால் வர வைத்தார்கள். தயாரிப்புகள் எங்கே நடக்கும்? தொழிற்சாலைகளில்தானே. அந்த வகையில் பார்க்கும் போது ஹாஸ்டல் படிப்புத் தொழிற்சாலையாகத்தான் இருந்தது.
            பிள்ளைகளின் இயல்பான ஆர்வங்கள், இயற்கையான விருப்பங்கள் இவைகளுக்கான வாய்ப்பு எதுவும் அங்கு இல்லை. எந்நேரமும் படித்துக் கொண்டிருந்தால் பிரச்சனையில்லை. அப்படிப் படிக்காவிட்டால் அப்படி படிக்க வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தார்கள்.
            ஒரே எண்ணத்தை மீண்டும் மீண்டும் விதைக்க விதைக்க அது அப்படியே பதிவாகி அந்த எண்ணத்தின் படி செயல்படும் ரோபோக்கள் போல் பிள்ளைகள் ஆகி விட வேண்டும் என்று ஹாஸ்டலில் எதிர்பார்த்தார்கள்.  இப்போது சொன்ன இது மிகவும் சரியான வாக்கியம். மனிதர்கள் ரோபோக்கள் போல ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள்தான் மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அனைத்து அமைப்புகளிலும் இருக்கிறது. மனிதர்கள் தனித்துவத்தோடு இருப்பதைப் பார்த்தால் மனிதர்கள் அச்சமடைகிறார்கள். ரோபோக்களை உருவாக்கும் விதிகளிலிருந்து இது மாறுபட்டிருக்கிறதே என்று ஆவேசம் கொள்கிறார்கள்.
            மனிதர்களின் ஆசையைக் கொண்டே மனிதர்கள் ரோபோக்களாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். ஹாஸ்டல் நிர்வாகிகள் அப்படித்தான் பேசினார்கள். "எங்களுக்கு ன்னா சார் வந்துருக்கு? இப்படி ஒரு ஹாஸ்டலை நடத்தி என்னாகப் போகுது சொல்லுங்க? வேறு எதுலயாவது மொதல்லப் போட்டா இத வுட பத்து மடங்கா சம்பாதிச்சுடுவோம். நாலு புள்ளிங்க படிச்சு நம்ம ஹாஸ்டல்லேர்ந்து பெரும் வேலய்க்குப் போன அது நமக்குதான பெரும. அந்த ஒண்ணுக்குதாம் பல்ல கடிச்சிட்டு நடத்திகிட்டு இருக்கோம்!" என்பார்கள். இதைக் கேட்கும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள்.
            உண்மையில் பிள்ளைகள் மற்றும் பெண்களை வைத்து நடத்தும் ஹாஸ்டல் என்பது நவீன உறிஞ்சல் வியாபாரமன்றி வேறென்னவாக இருக்கும்? பிள்ளைகள் மற்றும் பெண்களைக் கட்டுப்படுத்துவது எளிது. எதிர்த்துப் பேச மாட்டார்கள். இவைகள்தான் விதி என்று சொன்னால் அதை ஏற்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது அவர்களுக்கு? அவர்களை எவ்வளவு சுரண்டினாலும் அதைச் சொல்வதற்கான தைரியமும், சொற்களும் அவர்களுக்கு எங்கிருந்து வரப் போகிறது? சாதாரண மிரட்டலுக்கே கண்களைக் கசக்கிக் கொண்டு காலில் விழுந்து விடுவார்கள். அவர்களை எப்படி வேண்டுமானாலும் வளைத்து எப்படி வேண்டுமானாலும் ஒடித்து முறித்து விட முடியும். அப்படி ஒடித்து முடிப்பதைக் கூட அவர்களின் நல்லதுக்காகத்தான் என்று சப்பைக் கட்டு கட்ட முடியும்.
            பிள்ளைகள் மற்றும் பெண்கள் குறித்த பெரும் அச்சத்தில் இருக்கும் இந்த சமுதாயத்திடம் அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பற்றி என்ன பேச முடியும்? அவர்களின் உரிமைகளைப் பேசினால் அதுதான் அவர்களின் ஆபத்து என்பார்கள். அவர்களின் சுதந்திரம் பற்றிப் பேசினால் அதுதான் அவர்களுக்கான மாபெரும் அச்சுறுத்தல் என்பார்கள். அவர்களுக்கான உரிமைகளையும், சுதந்திரங்களையும் வழங்கி விட்டால் இவர்கள் தங்களின் அதிகாரங்களையும், அத்துமீறல்களையும் யாரிடம் கொண்டு செலுத்துவார்கள்?
            எப்படிப் பார்த்தாலும் ஹாஸ்டல் என்பது தன்னளவில் ஒரு சிறைச்சாலை. பாதுகாப்பு என்பதை அழகிய தோரணமாகத் தொங்க விட்டுக் காட்டி அதை உலகின் சரியான இடம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள்.
            இந்த விசயம் யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ கிராமத்துத் தாய்மார்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் அதிகமாக சேட்டைத்தனமும், குறும்புத்தனமும் செய்யும் பிள்ளைகளை இப்படித்தான் மிரட்டுவார்கள், "ரொம்ப துடுக்குத்தனம் பண்ணிட்டிருந்தீன்னா ஆஸ்டல்ல கொண்டு போட்டுருவேம் பாத்துக்கோ!"
*****

No comments:

Post a Comment

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...