1 Apr 2019

சு. தமிழ்ச்செல்வியின் கண்ணகி நாவல் அறிமுகம்



பிரதிகளின் கட்டுடைக்கும் புதுயுக கண்ணகி - 'கண்ணகி' நாவல்
            பெண்ணின் பேருழைப்பைத் தன் நாவலில் தொடர்ச்சியாக பதிவு செய்து வரும் சு.தமிழ்ச்செல்வி 'கண்ணகி' நாவல் மூலமும் அதையே உறுதி செய்கிறார். அவர் எழுதியுள்ள மாணிக்கம், அளம், கற்றாழை போன்ற நாவல்களில் குடியானக் குடும்பப் பெண்களின் உழைப்பைப் பதிவு செய்திருக்கிறார். ஆறுகாட்டுத்துறை நாவலில் மீனவக் குடும்பப் பெண்ணின் உழைப்பைப் பதிவு செய்திருக்கிறார். கண்ணகி நாவலில் தலித்திய பெண்ணின் உழைப்பைப் பதிவு செய்கிருக்கிறார்.
            'கண்ணகி' நாவல் ஒருவகையான பண்பாட்டு ரீதியிலான அதிர்ச்சியைத் தரும் நாவல். அதை கண்ணகியின் பேரன்பினாலும், பேருழைப்பினாலும் தமிழ்ச்செல்வி சமன் செய்ய முயன்றிருக்கிறார்.
            சிலப்பதிகாரக் கண்ணகிக்கும், தமிழ்ச்செல்வியின் கண்ணகிக்கும் பண்பாட்டு ரீதியிலான வேறுபாடுகள் அதிகம். சிலப்பதிகாரக் கண்ணகியை ஒரு விமர்சன நிலையில் நிறுத்தும் வகையில் கூட அவர் தனது நாவலுக்கு கண்ணகி என்ற பெயரைத் தேர்வு செய்திருக்கலாம். பூம்புகார் படைத்த கலைஞருக்கு இந்நாவலை சமர்ப்பணமாகவும் தந்திருக்கிறார் சு.தமிழ்ச்செல்வி.
            சித்தேரிக்குப்பத்தில் மாட்டுக்கறி போடும் காசாம்புவின் மகள் கசந்தாமணிக்கும், மாட்டுத்தரகு செய்யும் கொளப்பாக்கத்து அஞ்சாம்புலிக்கும் மகளாகப் பிறந்தவள் கண்ணகி.
            ஆயியார் மடத்தெருவில் குடித்தனம் நடத்தும் கசந்தாமணி ஒரு நிலையில் அங்கிருந்தால் கண்ணகி கெட்டுவிடுவாளோ என்று நினைத்து சித்தேரிக்குப்பத்திற்கு அனுப்பி வைக்கிறாள். தாத்தாவோடு வளரும் பேத்தி கரண்டு வேலைக்கு வரும் ஆசைத்தம்பியோடு ஆசைப்பட்டு அவனோடு கார்குடலுக்கு வந்து விடுகிறாள். தாத்தா காசாம்பு குடும்பத்தாரோடு வந்து சமாதானம் செய்து பார்க்கிறார். கண்ணகி போக மறுக்கிறாள்.
            ஆசைத்தம்பியோடு ஆசையாகக் குடும்பம் வந்த கண்ணகிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் சம்பவங்களாக நடக்கின்றன. ஆசைத்தம்பி ரெண்டவதாகக் கட்டிக் கொண்டு சூடாமணியோடு வருகிறான். அத்தோடுதான் நிறுத்தினானா என்றால் அவள் தங்கை பச்சையம்மாளையும் கட்டிக் கொண்டு வருகிறான். சரிதான் அத்தோடுதான் நிறுத்தினானா என்றால் கார்குடலிலே அண்ணி முறையுள்ள அஞ்சலயுடனும் அவனுக்குத் தொடர்பு இருக்கிறது.
            கண்ணகி ஆசைத்தம்பியிடம் எவ்வளவோ அடிபடுகிறாள். அடியென்றால் அப்படி அடிபடுகிறாள். அப்படி அவள் அடிபடுவதாலே அவளது இரண்டு குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறந்து இறந்து போகின்றன. அல்லது இறந்தே பிறக்கின்றன.
            ஆசைத்தம்பி சூடாமணியோடு திருவிழா, சினிமாவுக்குப் போகிறான். கண்ணகி தன்னையும் அவ்வாறு அழைத்துச் செல்லுமாறு வேண்டுகிறாள். குறிப்பாக மாசிமகத்தின் போது நடைபெறும் தெப்பத் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்கிறாள். ஆசைத்தம்பி மழுப்பி விட்டுப் போய் விடுகிறான்.
            கண்ணகி எந்த ஏக்கத்தையும் காட்டிக் கொள்ளாமல் கார்குடலை விட்டுக் முதன்முதலாகக் கிளம்புகிறாள். விருத்தாச்சலம் வரும் அவள் இலக்கின்றி பஸ் ஏறி பாண்டிச்சேரிப் போகிறாள். அங்கு நிராதவராய் நிற்கும் அவளை திவ்யநாதன் தனது அக்கா மரியபுஷ்பம் வீட்டில் தங்க வைக்கிறான். அங்கு அவளுக்கு திவ்யநாதன் மூலம் பாரதி பிறக்கிறான். கண்ணகிக்கோ பிள்ளை மேல் பெரிதாக விருப்பமில்லை. அந்தக் குழந்தையை யாரிடமாவது கொடுத்து விட்டால் தேவலாம் என்று நினைக்கிறாள். அப்போதுதான் அவளுக்கு ராணி அக்கா மூலமாக சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. பாரதியை ஓர் அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு சிங்கப்பூர் செல்கிறாள். சிங்கப்பூரில் தன்னை வேலைக்காக அழைத்து வந்த அன்சாரின் மனைவியாக வாழ்கிறாள்.
            அன்சார் கொடுக்கும் பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைக்கிறாள் கண்ணகி. ஒரு கட்டத்தில் கண்ணகி சிங்கப்பூரில் இருப்பதை அறியும் ஆசைத்தம்பி மகன் பாரதி மூலம் உருக்கமாக கடிதம் எழுத வைத்து இங்கு வருமாறு அழைக்கிறான். அவர்களின் அழைப்பை ஏற்று வரும் கண்ணகி இங்கு வந்த பிறகு குடும்பத்துக்காக உழைக்கிறாள். தன் சக்களத்திகளுக்குப் பிறந்த பெண் குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்க உதவுகிறாள். கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் ஆசைத்தம்பியையும் செலவு செய்து வைத்தியம் பார்க்கிறாள். அன்சார் மூலம் மகன் பாரதியை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கிறாள். அங்கு கண்ணகிக்கும் அன்சாருக்கும் இருந்த உறவைப் பற்றித் தெரிந்து கொள்ளும் பாரதி உடனே நாடு திரும்பி விடுகிறான். நாடு திரும்பிய பாரதிக்கும் ஆட்டோ வாங்கிக் கொடுத்து பணத் தேவைகளுக்குப் பக்கபலமாக இருக்கிறாள் கண்ணகி.
            எவ்வளவுதான் கண்ணகி பாரதிக்கு உதவினாலும் தன் அம்மாவின் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு பாரதிக்கு இருக்கிறது. அதைப் போக்குவதற்கு கண்ணகி முயன்று பார்க்கிறாள். பாரதி தன் மகனுக்கு காதுகுத்தல் வைக்கும் அதே நாளில் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வரும் அன்சார் கண்ணகியைப் பார்த்துப் பேச வேண்டும் என்று பிரியப்படுகிறான். தனது மகன் பாரதி தன்னை வெறுத்து ஒதுக்கி விடக் கூடாது என்று நினைத்து முதலில் பேரனின் காதுகுத்தலுக்குப் போவதென்று முடிவெடுக்கும் கண்ணகி கடைசி நேரத்தில் அன்சாரைப் பார்ப்பதற்குத் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி உட்காருகிறாள். நாவல் இந்த இடத்தில் நிறைவு பெறுகிறது.
            கண்ணகி எல்லாரையும் ஏற்றுக் கொள்கிறாள். அவளுக்கு யார் மீதும் பெரிதான விமர்சனங்கள் எதுவுமில்லை. உதவி என்று கேட்டால் தயங்காமல் செய்கிறாள். அவளைப் பொருத்த வரையில் தன் மீது பாசத்தைப் பொழியும் ஓர் ஆன்மாவை எதிர்பார்க்கிறாள்.
            நாவலில் கண்ணகி மேல் உயிரையே வைத்திருக்கும் தாத்தன் காசாம்பு, அப்பன் அஞ்சாம்புலியைத் தவிர தன் கணவனோ, மகனோ தன்னை ஒரு மனுஷியாகக் கூட ஏற்றுக் கொள்ளாத அவர்களின் மனநிலையை அவள் வெறுக்கிறாள். அவர்கள் கண்ணகி மூலம் கிடைக்கும் பொருளாதாரத் தேவைகளுக்காகவே அவளைச் சார்ந்து இருக்கிறார்கள். அப்படி அவர்கள் அவளைச் சார்ந்திருக்கும்படி கண்ணகி தன் நிலையை உயர்த்திக் கொள்ளவும் செய்கிறாள்.
            அந்தப் பொருளாதாரத் தேவையைத்தான் தமிழ்ச்செல்வி இந்த நாவலில் பரிசீலனை செய்கிறார். விவாதத்துக்கு உட்படுத்துகிறார். ஆண் இந்தப் பொருளாதாரத் தேவையை நிறைவு செய்கிறேன் என்ற இடத்தைப் பயன்படுத்திக் கொண்டுதானே வேண்டுமளவுக்குப் பெண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டும் தொடுப்புகளை வைத்துக் கொள்கிறான். ஒரு பெண்ணுக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவளால் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை நிறைவு செய்யும் வாய்ப்பு இருந்தால் அவளை இந்தச் சமூகம் பொருளாதாரத்திற்காக ஏற்றுக் கொள்ளத்தானே செய்கிறது.
            நாவலில் ஆசைத்தம்பி மூன்று பெண்களைக் கல்யாணம் செய்து கொள்கிறான். மூன்று பெண்டாட்டிகளோடு வாழ்கிறான். கண்ணகி ஆசைத்தம்பித் தவிர மற்ற இரண்டு ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் அவளும் மூன்று ஆண்களோடு வெவ்வேறு காலக்கட்டத்தில் வாழ்கிறாள்.
            பாரதி கூட ஆசைத்தம்பிக்குப் பிறந்தவனில்லை. ஆனால் ஆசைத்தம்பி பாரதியை தன்னுடைய மகனாகப் பார்க்கிறான். கண்ணகியிடம் இருக்கும் பொருளாதாரம் அப்படி ஆசைத்தம்பியைப் பார்க்க வைக்கிறது.
            அன்சாரோடு வாழ்ந்த வாழ்க்கைக்காக அம்மாவைப் பாரதி வெறுத்தாலும், பணத்தேவைக்காக அம்மாவைச் சார்ந்து இருப்பதை அவன் வெறுக்கவில்லை. தனது மனைவி மூலம் கண்ணகியிடமிருந்து அவன் தேவையானப் பண உதவிகளைப் பெற்றுக் கொள்கிறான்.
            மகனுக்காக சிங்கப்பூரிலிருந்து இங்கு வரும் கண்ணகி மகனை நம்பியும் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரவில்லை. கண்ணகி தனக்குத் துணையாக நான்கு பெண்களை வைத்துக் கொண்டு மீன் வியாபாரம் செய்கிறாள். சொந்தக் காலில் நிற்கும் அவளது துணிவு தனக்கான முடிவுகளை மேற்கொள்ளவும் அவளுக்குத் துணை நிற்கிறது.
            தன் தாத்தன், அப்பனிடமிருந்து அவளுக்குக் கிடைத்த கடப்பாடில்லாத அன்பு தன் மகனிடமிருந்து கிடைக்கும் எதிர்பார்க்கிறாள். அப்படிக் கிடைக்காத போது அப்படிப்பட்ட அன்பை எவ்வித கடப்பாடும் இல்லாமல் தர இருக்கும் அன்சாருக்காக அவள் பேரனின் காது குத்தலையும் பொருட்படுத்தாமல் கிளம்புகிறாள். அன்பைத் தரும் ஆணுக்காக ஒரு பெண் எவ்வளவு தூரமும் எதையும் கடந்து செல்ல தயாராக இருக்கிறாள்.
            தனக்கே உரித்தான் அன்பைத் தரும் ஆணுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறாள் பெண். அதற்கான தகுதிதான் ஓர் ஆணுக்கு வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட தகுதியில்லாத ஆணிடம் ஒரு பெண் வாழ வேண்டியதில்லை என்ற முற்போக்கின் வடிவமாக தமிழ்ச்செல்வி படைத்துள்ள கண்ணகி விளங்குகிறாள்.
            இதே கண்ணகி சிலப்பதிகாரக் காலத்தில் இருந்திருந்தால் கோவலன் பிரிந்த அன்றே இவளும் பிரிந்து சென்றிருப்பாள். இளங்கோவடிகளின் காப்பியம் வேறு திசையில் பயணித்திருக்கும். இப்போதும் என்ன? இளங்கோவடிகளின் காப்பியம்தான் வேறு திசையில் பயணித்திருக்கிறது. அதற்கு தமிழ்ச்செல்வி பிறந்து வந்து நாவல் எழுதும் காலம் வரை ஆகியிருக்கிறது.
            மொத்தத்தில் கணவனின் உயிரைக் காப்பதற்காக இரண்டு கண்ணகிகளும் போராடுகிறார்கள். கணவனின் இறப்பிற்குப் பின் அந்தக் கண்ணகி தெய்வமாகிறாள். இந்தக் கண்ணகி தனக்கு நியாயமாகப் படும் தான் தேடும் அன்பைத் தருபவரை தன் குடும்பத்தின் முக்கியமான விஷேசத்தையும் பொருட்படுத்தாமல் சென்று பார்க்க விரும்புகிறாள்.
            நாவலில் பெரிய அதிர்ச்சியாகத் தோன்றும் இடம் இது என்றாலும்,
            பெண்ணின் உழைப்பை எவ்வித கூச்சமில்லாமல் பெறும் ஆண்கள் அதற்கான பரிகாரமாக அன்பைத் தராத போது காப்பியத்துக்குக் கட்டுப்பட்ட கண்ணகிகள் கட்டுடைத்து புதுயுக கண்ணகிகளாக உருவாகவே செய்வார்கள்.
            பண்பாடுகள் உருவாக்கியுள்ள பிரதிகளை அக்கண்ணகிகள் தாங்கள் ஏங்கும் அன்பிற்காக, அந்த அன்பிற்காகத் தோன்றும் நியாயத்துக்காக மறுபரிசீலனை செய்து புதியப் பாதையில் பயணிக்கவே செய்வார்கள்.
            கிடைக்காத அன்புக்காக எதையும் மீற முயல்வதே மனித மனம். அந்த அன்புக்காக எதற்காகவும் கட்டுப்பட நினைப்பதும் அதே மனித மனம்தான். மனித மனங்கள் எப்படிப் போக வேண்டும் என்பதை சக மனித மனங்களே தீர்மானிக்கின்றன. அதை கண்ணாடி போல் காட்டும் வேலையைத்தான் இலக்கியங்கள் செய்கின்றன.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...