29 Mar 2019

சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை - நாவல் அறிமுகம்




ஆறுகாட்டுத்துறை நாவல் - ஆற்று காட்ட முடியாத வாழ்வின் சுழல்
            நம் இந்தியச் சமூகத்தில் பல தாரங்களை மணந்து கொண்ட அரசர்கள் இருந்திருக்கிறார்கள். குடிமக்களிலும் இரு தாரங்களைக் கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு மட்டுமே இருந்த அச்சலுகைப் பெண்களுக்குக் இருந்தது கிடையாது.
            பெண்களைப் பொருத்தவரையில் காலம் காலமாக இச்சமூகத்தில் ஒரு கணவனுடன்தான் வாழ்ந்திருக்கிறார்கள். கணவன் இறந்தால் சிதையில் வீழ்ந்து இறக்கும் சதி எனும் வழக்கம் நிலவிய சமூகத்திலும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கணவன் இறந்த பின் வெள்ளாடை உடுத்தி, மொட்டையடித்து அமங்கலியாகவும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அரிதாக கணவன் இறந்த பின் மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்த பெண்களும் ஒரு சில சமூகங்களில் இருந்திருக்கிறார்கள்.
            ஒரு பெண்ணுக்கு இரண்டாவது கணவன் என்பது முதல் கணவனின் இறப்பின் காரணமாக மறுமணத்தின் மூலமே பெண்களுக்குச் சாத்தியம். ஆணுக்கு முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே இரண்டாவது மனைவி சாத்தியமாவது போல பெண்ணுக்கு இரண்டாவது கணவன் சாத்தியமில்லை.
            ஓர் ஆணுக்கு இரண்டு மனைவிகள் வாய்க்கும் போது அவர்கள் எப்படியோ ஒத்து வாழ்ந்து விடுகிறார்கள். அதுவே ஒரு பெண்ணுக்கு அப்படி நேர்ந்து விடும் போது ஆண்களால் அப்படி வாழ்ந்து விட முடிவதில்லை.
            சூழ்நிலையோ சந்தர்ப்பவசமோ ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவனைத் தந்து விடும் போது ஒரு பெண்ணின் நிலை எப்படி இருக்கும்? ஆறுகாட்டுத்துறை நாவலில் சு. தமிழ்ச்செல்வி காட்டுவது அப்படி ஒரு பெண்ணின் நிலைதான்.
            சு. தமிழ்ச்செல்வியின் இரண்டாவது நாவலான அளம் நாவலுக்கு நேர் எதிரான நாவல் என்று ஆறுகாட்டுத்துறை நாவலைச் சொல்லலாம்.
            அளம் நாவலில் பொருள் தேட விட்டுப் பிரிந்த கணவனுக்காக சுந்தராம்பாள் காலம் முழுதும் காத்திருக்கிறாள். ஆறுகாட்டுத்துறை நாவலில் சமுத்திரவல்லி கடலில் சென்ற கணவனுக்காகக் காத்திருந்து சொந்தபந்தம் மற்றும் ஊராரின் நெருக்குதலால் கணவனின் தம்பியை மணந்து கொள்கிறாள்.
            அளம் நாவல் கட்டிய கணவன் இல்லாமல் சுந்தராம்பாள் படும் பாடுகளைப் பேசுகிறது என்றால், ஆறுகாட்டுத்துறை நாவல் அண்ணன், தம்பி இருவரையும் கட்டிக் கொண்டதால் சமுத்திரவல்லி படும் பாடுகளைப் பேசுகிறது.
            சமுத்திரவல்லி ஊர் நாட்டாரின் மகள். சமுத்திரவல்லி காதலித்து மணந்து கொண்ட காதல் கணவன் சாமுவேல். சாமுவேலுக்காக தன் குடும்பத்தை விட்டு வந்து விடுகிறாள் சமுத்திரவல்லி. நாட்டாரின் மகளை மணந்து கொண்டதால் சாமுவேலிடம் ஊர் கொஞ்சம் விலக்கம் காட்டுகிறதே அன்றி சாமுவேலை ஒதுக்கி வைக்கவில்லை. அப்படி ஊரே ஒரு மாதிரியாக சாமுவேலை விலக்கி வைத்தது மாதிரி நடந்து கொண்டாலும் ஆறுகாட்டுத்துறையின் சுப்பு சாமுவேலின் பக்கம் நிற்கிறார். சாமுவேலுக்கு அந்த விலக்கம் பிடிக்கவில்லை. எல்லாம் சமுத்திரவல்லி தன்னைக் காதலித்ததால் நேர்ந்தது என நினைக்கிறான். நாட்டார் சாமுவேலோடு பேசுவதில்லையே தவிர அவருடைய படகில் வேலை பார்ப்பதையோ, சம்பாதிப்பதையோ அவர் எந்த விதத்திலும் தடுக்கவில்லை.
            சமுத்திரவல்லிக்குப் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என சாமுவேல் எதிர்பார்க்கிறான். பெண் குழந்தைப் பிறந்ததைக் கேள்விப்படும் சாமுவேல் மகளின் முகத்தைக் கூட பார்க்காமல் கடலில் மனம் போனபடி போய் கச்சல் பகுதியில் மாட்டிக் கொள்கிறான். அவன் திரும்புவதற்கு ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
            கணவன் போன ஏக்கத்தோடு இருக்கும் சமுத்திரவல்லி சாமுவேலின் தம்பி அருள்தாசுக்காக பாடுபடுகிறாள். அவன் படிப்பதற்காக நாட்டாரின் மகளாக இருந்தும் மீன் விற்கச் செல்கிறாள், மரம் வெட்டச் செல்கிறாள், கருவாடு போட்டு வியாபாரம் செய்கிறாள்.
            தனக்காக இவ்வளவு கஷ்டப்படும் அண்ணிக்காகவும், குழந்தைக்காகவும் அண்ணியையே மணக்கத் தீர்மானிக்கிறான் அருள்தாஸ்.
            ஆறுகாட்டுத்துறையில் முதல் கணவன் இறந்தாலோ அல்லது கைவிட்டாலோ பெண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருப்பதால் நாட்டாரும், ஊரும் இதற்குச் சம்மதிக்கிறார்கள். அருள்தாசுக்கும், சமுத்திரவல்லிக்கும் மகன் பிறக்கிறான்.
            யாரும் எதிர்பாராத வகையில் ஆறு ஆண்டுகள் கழித்து சாமுவேல் வருகிறான். விஷயம் அறிந்து சாமுவேல் அருள்தாஸைக் கொன்று விடும் நோக்கோடு துரத்துகிறான். அருள்தாஸ் தப்பி ஓடி விடுகிறான்.
            அதற்குப் பிறகு சாமுவேல் இஷ்டத்துக்கு கட்டுமரத்தில் கடலுக்குப் போவதும், வருவதுமாக இருக்கிறான்.
            அதே ஆறுகாட்டுத்துறையில் இரண்டு பெண்களைக் கட்டிக் கொண்டு சுமூகமாக வாழும் ஆண்களைப் போல் இரண்டு ஆண்களைக் கட்டிய தானும் வாழ்ந்து விட முடியாதா என்று ஏங்குகிறாள் சமுத்திரவல்லி. அதற்கு தம்பி அருள்தாஸ் ஒத்து வந்தாலும் அண்ணன் சாமுவேல் ஒத்து வர வேண்டுமே!
            சாமுவேல் சமுத்திரவல்லியையும், தன் தம்பியையும் நினைத்து நினைத்துப் பொருமுகிறான். இருவரையும் கொன்று போட்டாலும் தன் ஆத்திரம் தீராது என்று எண்ணி எண்ணி நெஞ்சுக்குள் வேகிறான்.
            அப்படிப்பட்ட சாமுவேல்தான் திடீரென்று மன்மத நாடகம் நடைபெறும் அந்த மூன்றாம் நாள் இரவில் சமுத்திரவல்லியோடு அன்பாகப் பேசுகிறான். நடந்ததை மறந்து விட்டு புது வாழ்வு வாழ்வோம் என்கிறான். தங்கள் காதல் தொடங்கியக் காலத்திலும் காதலர்களாய் கட்டுமரத்தில் கடலுக்குச் சென்று வந்ததைப் போல கடலில் சென்று வருவோமா என்று கேட்கிறான். சமுத்திரவல்லியும் சம்மதிக்கிறாள். இருவரும் கட்டுமரத்தில் செல்கிறார்கள். சமுத்திரவல்லி தன்னை மறந்து படுத்துக் கிடக்கிறாள். சாமுவேல் அவளை எழுப்பி விடும் இடத்தில் கட்டுமரம் நடுக்கடலில் பாறைச்சுழல்கள் உருவாகும்இடத்தில் நிற்கிறது.
            சாமுவேல் சமுத்திரவல்லியை பாறைச்சுழலில் தள்ளி விடுவதற்காக அழைத்து வந்திருப்பது சமுத்திரவல்லிக்குத் தெரிகிறது. சமுத்திரவல்லி சாமுவேலோடு போராடுகிறாள். சாமுவேல் சமுத்திரவல்லியைக் கடலில் தள்ளி விடுவதில் குறியாக இருக்கிறான்.
            எதிர்பாராமல் வரும் அலைச்சுழலில் சமுத்திரவல்லியைத் தள்ளி விட நினைத்த சாமுவேல் நிலைதடுமாறி விழுந்து பாறைச்சுழலில் சிக்கிக் கொள்கிறான். சமுத்திரவல்லி உயிர் பிழைக்கிறாள்.
            பழிவாங்கும் நோக்கோடு யார் கடலில் இறங்கினாலும் கடல் அவர்களைப் பழிவாங்கி விடுகிறது. சாமுவேல் அப்படித்தான் கடலால் பழிவாங்கப்படுவதாக நாவலை வாசிக்கையில் ஒரு தோற்றம் உண்டாகிறது. அதுவும் இல்லாமல் சமுத்திரவல்லியை கடலின் மகளாகத்தான் ஆறுகாட்டுத்துறை மக்கள் பார்க்கிறார்கள். தன் மகளைக் கொல்ல நினைத்தவனைப் பார்த்துக் கொண்டு கடல்தாய் சும்மா இருந்து விடுவாளா? அலையாய் ஆக்ரோஷமாய்ச் சீறி சாமுவேலை பாறைச்சுழலுக்குள் தள்ளி கடல்தாய் தள்ளி விடுவதாகவும் சாமுவேலின் மரணம் குறித்து மற்றொரு தோற்றமும் நாவலை வாசிக்கையில் உணர முடியும்.
            ஓர் ஆண் இரண்டு பெண்டாட்டிகளோடு வாழும் போது, ஒரு பெண் இரண்டு கணவர்களோடு வாழ முடியாமல் போகும் அவலத்தைச் சித்திரமாக்கும் வகையில் சு.தமிழ்ச்செல்வி இந்நாவலை எழுதியிருக்கிறார்.
            சமுத்திரவல்லி கடல்தாயின் கருணை உள்ளத்தோடு இருக்கிறாள். அந்தக் கருணைக்கும் சமுத்திரவல்லியின் அன்புக்கும் பொருத்தமற்றவனாய் இருக்கும் சாமுவேல் அந்தப் பொருத்தமற்றத் தன்மையாலே வீழ்ந்து போகிறான்.
            பெண்களின் மகத்தான அன்பு சூழ்ந்த இந்த உலகில் அவர்களின் அன்பை முழுமையாகப் புரிந்து கொள்ளும் போது ஏற்படும் மாற்றம்தான் எவ்வளவு உன்னதமாக இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் நிராகரித்துப் போகும் போது வாழ்வுதான் எவ்வளவு கருணையற்றதாக மாறி தவிக்க விடுகிறது.
            சாமுவேலும், அருள்தாசும் இரண்டு ஆண்களின் இருவேறு மனநிலைகள் என்ற பார்த்தாலும் சரிதான் அல்லது ஒரே ஆணின் இருவேறு மனநிலைகள் என்று பார்த்தாலும் சரிதான் சாமுவேலாக இருக்கும் மனசு ஒரு பெண்ணின் மனதை எப்படிக் காயப்படுத்துகிறது என்பதையும், அருள்தாஸாக இருக்கும் மனது அதற்கு எப்படி மருந்திடுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
            இந்த உலகம் பேரன்பின் பெருவலியைச் சுமந்தபடி சுழன்று கொண்டிருக்கிறது. அந்த பேரன்பைப் புரிந்து கொள்ள ஒரு பெரிய மனம் வேண்டியிருக்கிறது. அந்த பெரிய மனதைப் புரிந்து கொள்ளாதவர்களை தனது சுழலில் இழுத்துக் கொள்ள வாழ்க்கையின் பாறைச் சுழல்கள் காத்திருக்கின்றன.
            என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம் என்கிறார் வள்ளுவர். அதாவது அன்பில்லாதவர்களை ஏதோ செய்ய அறம் காத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார் வள்ளுவர். அதே நேரத்தில் அன்புடையவர்களை ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியும் காப்பாற்ற தயாராக இருக்கிறது கடல் என்கிறார் சு.தமிழ்ச்செல்வி.
            இனி,
            எவ்வளவோ பேருக்கு வழிகாட்டிய ஆறுகாட்டுத்துறை சமுத்திரவல்லிக்கு வழிகாட்டாமலா போய் விடும். தன் மகளுக்காக வாழத் துடிக்கும் கடலின் மகளான அவளை சமுத்திரத்தாய் வாழ விடாமலா செய்து விடப் போகிறாள்!
            சமுத்திரவல்லி தப்பி கரை சேர்வதுடன் முடிகிறது நாவல்.
            அன்பு எப்படியோ கரை சேர்த்து விடுகிறது வாழ்க்கையை!
            அது இல்லாதவர்கள் கரை சேர முடியாமல் சுழலில் சிக்கி தம்மை இழந்து விடுகிறார்கள் சாமுவேலைப் போல!
*****

1 comment:

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...