செய்யு - 38
ஹாஸ்டலில் சேர்ந்த முதல் ஞாயிறன்று நடந்த
பெட்டிச் சோதனையை விகடுவால் மறக்க முடியாது. எல்லா பிள்ளைகளும் ஹாஸ்டலின் கீற்றுக்
கொட்டகையில் வரிசையாக உட்கார வைக்கப்பட்டார்கள்.
"யாராவது பணங் காசு வெச்சிருந்தா
எடுத்துக் கொடுத்துடலாம். தண்டன கெடயாது. சோதனயில அகப்பட்டுச்சுன்னா அப்புறம் பாத்துக்குங்க.
ரிப்போட்டாயிடும்! ன்னா யாரும் பணங் காசு ஏதும் வெச்சிருக்கீங்களா?" என்றார்
ஹாஸ்டல் வார்டன்.
பிள்ளைகள் அமைதியாக இருந்தார்கள்.
"ன்னா பதிலே வர மாட்டேங்குது? வெச்சிருக்கீங்களா?
இல்லையா?" என்று அழுத்தம் கொடுத்துக் கேட்டார் ஒருமுறை.
"ல்லே சார்!" என்று எல்லா பிள்ளைகளும்
தலையாட்டினார்கள். விகடுவும் அப்படியே தலையாட்டி ல்லே சார் சொன்னான்.
"சோதன ஆரம்பிக்கப் போவுது. ல்லாரும்
உக்காந்த இடத்துலயே உக்காந்து இருக்கணும். யாரும் அந்தாண்ட இந்தாண்ட நகர்றது, உள்ள
எட்டிப் பாக்குறது ம்ஹூம் ஆமாம் பாத்துக்குங்க!" கையில் கம்பை உயர்த்திப் பிடித்தபடி
இதைச் சொன்ன வார்டன் சொல்லி முடித்ததும் கம்பைத் தாழ்த்திக் கொண்டார்.
ஹாஸ்டல் வார்டன் நல்ல சிவப்பு. கட்டையாக
இருந்தார். எப்போதும் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்தார். அவர் வார்டனாகவும்,
அத்துடன் நரிவலம் பள்ளியில் க்ளார்க்காகவும் இருந்தார். அவர் பெயர் முருகு சுந்தரம்.
பிள்ளைகள் அவரை வார்டன் சார் என்பார்கள்.
ஹாஸ்டல் வார்டன் தனக்குத் தகுந்த மாதிரி
மூன்று பிள்ளைகளைத் தேர்ந்து கொண்டார். ஹாஸ்டலின் வரவேற்புக் கூடத்தின் இடது புறம்
இருந்த அறையில் ப்ளஸ்டூ பிள்ளைகளும், வலது புறம் இருந்த அறையில் பத்தாம் வகுப்புப்
பிள்ளைகளும் இருந்தார்கள். மற்ற வகுப்பில் படித்த பிள்ளைகள் அனைவரும் நடுக்கூடத்தில்
இருந்தார்கள். ப்ளஸ்டூ பிள்ளைகள் இருந்த அறையிலிருந்து சோதனை ஆரம்பித்தது.
உட்கார்ந்திருந்த பிள்ளைகளில் இரண்டு மூன்று
பேரிடம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் தாங்கள் பணத்தைப் பெட்டியில் வைத்திருப்பதாகவும்,
எப்படியும் சோதனையில் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் குசுகுசுவென்று பயந்தபடி
பேசிக் கொண்டிருந்தார்கள். போனமுறை நடந்த சோதனையில் கண்டுபிடிக்க முடியாததைப் பற்றியும்
பேசி ஆறுதலும் அடைந்து கொண்டார்கள்.
ஹாஸ்டலில் தகரப் பெட்டிகள் வைத்திருந்த
பிள்ளைகளே அதிகம். ஒரு சில பிள்ளைகளே சூட்கேஸ் வைத்திருந்தார்கள். தகரப் பெட்டிக்குள்
நான்கைந்து பழைய செய்தித்தாள்களைப் பரப்பி விட்டு அதற்குள்தான் தங்களது ஆடைகள், புத்தகங்கள்,
நோட்டுகள், சோப்பு, சீப்பு வகையறாக்களை அந்தப் பெட்டிக்குள் கச்சிதமாக வைத்திருந்தார்கள்.
தகரப் பெட்டிக்குள் பரப்பியிருக்கும் செய்தித்தாள்களுள் சாமர்த்தியமாக யாரும் கண்டுபிடிக்க
முடியாத வண்ணம் பணத்தை வைத்திருப்பார்கள். சோதனையின் போது மொத்தப் பெட்டியையுமே
அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுத்து கலைத்துப் போட்டு விடுவார்கள். சோதனை முடிந்த பிறகு
பிள்ளைகள் கலைத்துப் போட்டப் பொருட்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பழம் செய்தித்தாள்களும் பணம் வைத்திருந்தால் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள்.
தகரப் பெட்டியின் உள்ளே தகரத்தில் சில
இடங்களில் இடுக்குகள் இருக்கும். அங்கே பணத்தை ஒளித்து வைப்பவர்களும் உண்டு. அதையும்
சோதனையின் போது கவனமாக டார்ச்லைட் வரை அடித்துப் பார்ப்பார்கள். சில பிள்ளைகள் புத்தகம்,
நோட்டுகளில் பக்கங்களுக்கு இடையில் மறைத்து வைத்திருப்பார்கள். அதனால் அனைத்து வகைப்
புத்தகங்கள், நோட்டுகள் அனைத்தையும் விசிறியடித்துப் பார்ப்பார்கள். சில பிள்ளைகள்
நோட்டுப் புத்தங்களுக்கு அட்டை போட்டிருப்பார்கள். அந்த அட்டையையும் பிரித்துப் பார்ப்பார்கள்.
பணத்தை உள்ளே வைத்து வெளியே அட்டைப் போட்டிருக்கிறார்களா என்பதைச் சோதிப்பதற்காக
அப்படிச் செய்வார்கள்.
துணிகளுக்கு இடையில் பணம் இருக்கலாம் என்று
துணிகளையும் எடுத்து கலைத்துப் போட்டு விடுவார்கள். மடித்து வைத்து இருக்கும் துணிகளில்
பேண்ட் பாக்கெட்டுகள் வரை சோதனை போடுவார்கள். பவுடர் டப்பா மூடியைத் திறந்து அதற்குள்
பவுடரோடு பவுடராக பணத்தை வைத்து மாட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதால்
பவுடர் டப்பாவைத் திறந்து பார்த்து வரை சோதனை போடுவார்கள்.
இன்றைய சோதனையில் யாரும் மாட்ட மாட்டார்கள்
என்றே எல்லா பிள்ளைகளும் நினைத்தார்கள். வழக்கமாக இந்தச் சோதனையில் மாட்டும் பிள்ளை
ராமராஜ்தான். அந்தப் பிள்ளை மிக அமைதியாக உட்கார்ந்திருந்தான். அந்தப் பிள்ளை ஒன்பதாம்
வகுப்பு. எல்லாரும் ராமராஜைத்தான் பார்த்தார்கள். "யப்பா! ன்னால்ல அடி வாங்க
முடியதுப்பா! நாம்ம ஒண்ணும் பணமும் வெச்சில்ல. காசும் வெச்சில்ல. நாம்ம மட்டுவம்னு
மட்டும் கனவுல நெனக்காதீங்க! யாரும் வெச்சிருந்தா இப்போ கூட ஒண்ணுமில்ல. வார்டன் சார்ட்ட
சொல்லிடுங்கப்பா! யாராச்சும் மாட்டுனீங்கன்னா நாம்ம தொணய இருப்போம்னு நெனச்சீங்கன்னா
ஏமாந்துடுவீங்க ஆமா! எங்கிட்ட ஒண்ணுமேயில்ல பாருங்க!" என்றான்.
ராமராஜ் சொன்னது உண்மை. அன்று அவன் மாட்டவில்லை.
சொல்லப் போனால் சோதனையில் யாரும் மாட்டவில்லை ஒரே ஒரு ஆளைத் தவிர.
"இன்னிக்கு ஒருத்தம்தான் மாட்டியிருக்கான்!"
என்ற வார்டன் சொன்னதும் அந்த ஒருவன் யார் என்று தெரிந்து கொள்ள எல்லா பிள்ளைகளும்
ஆர்வமானார்கள். விகடவுக்கும் அவன் யார் என்று அறிய ரொம்ப ஆவலாக இருந்தான். ஆனால் நிலைமையப்
பாருங்கள், சோதனையின் முடிவில் பணம் வைத்திருந்த அந்த ஒரு ஆள் விகடு என அறிவிக்கப்பட்ட
போது விகடுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
எல்லாரும் உள்ளே அனுப்பப்பட்டார்கள். விகடு
வார்டன் அறைக்கு அழைக்கப்பட்டான். விகடுவின் உடல் நடுங்கியது. அவனறிந்த வகையில் இதுபோன்ற
தவறுகளில் மாட்டிக் கொண்டதில்லை. தன் பெட்டியில் எப்படி பணம் வந்தது? என்று அவனுக்கு
ஆச்சரியமாக இருந்தது.
வார்டன் அறை திண்ணையின் இடது பக்கம் இருந்தது.
அதை அறை என்று சொல்ல முடியாது. ஒரு தடுப்பு. பரீட்சை அட்டை இருக்கும் இல்லையா அந்த
அட்டையால் அறை போன்ற தடுப்பை உருவாக்கியிருந்தார்கள்.
"நாம்மதான் சொன்னோம்ல! பணம் வெச்சிருந்தா
கொடுத்துடுலாம்னு. எப்படி ஒம் பொட்டியில பணம் இருந்துச்சு. ஐம்பத்து அஞ்சு ரூவா இருக்கு.
எப்படி வந்துச்சு?" வார்டனின் குரலில் காட்டம் தெரிந்தது.
விகடுவுக்கு என்ன பதில் சொல்வது என்பது
புரியாமல் தடுமாறியபடி நின்றான். அவனுக்கு மயக்கம் வந்து விடும் போலிருந்தது. உடம்பெல்லாம்
வியர்த்துக் கொட்டியது. வார்டன் அதை நன்றாகக் கவனித்தார். இப்படி நம்முடைய பெட்டியில்
நாம் பணம் வைக்காமல் தானாக பணம் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். அது இப்படி ஒரு சூழ்நிலையிலா
வர வேண்டும்?
வார்டன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
அவரது அறையை விட்டு வெளியே போனார்.
"டேய் பசங்களா? யாராச்சும் பணம் வெச்சிருந்து
மாட்டிப்பீங்கன்னு பயந்துகிட்டு இவனோட பெட்டியில வெச்சீங்களா? இருந்தா சொல்லிடுங்க.
ஒண்ணுஞ் செய்யல. பணத்த அவனோட அக்கெளண்ட்ல வெச்சுருக்கேன். இல்லேன்னா ஒம்மளோட பணம்
போயிடும். இவனோட அக்கெளண்ட்ல சேத்துடுவேங் பாத்துக்கோங்க." சொல்லிவிட்டு சில
நிமிடங்கள் காத்திருந்தார். யாரும் தன்னுடைய பணம் என்று சொல்ல முன்வரவில்லை.
வார்டன் அறைக்குள் வந்தார். விகடுவைப்
பார்த்தார். அவன் முகம் இருண்டிருந்தது. "திஸ் இஸ் பர்ஸ்ட் டயம். நெக்ஸ்ட் டயம்னா
ன்னா பண்ணுவன்னு நமக்கே தெரியாது! கரெக்டா இருந்துக்கோ! கெளம்பு" என்றார்.
விகடு அவரது அந்தச் சின்ன அறையை விட்டு
வெளியே வந்தான். நடுக்கூடத்துக்கு இவனுடைய பெட்டி இருந்த இடத்துக்கு வரும் வரையில்
எல்லா பிள்ளைகளும் அவரவர் பெட்டிகளில் கலைந்து கிடந்ததை எடுத்து அடுக்கியபடி இவனையே
பார்த்தார்கள். இவனது பெட்டியின் பக்கத்தில் இருந்த இடது பெட்டிக்காரன் சுபலேஷ்,
"வருத்தப்படாதீங்கண்ண. நம்ம பயலுவோல்ல யாரோத்தான் உங்க பொட்டியில வெச்சுருப்பாணுங்க.
நம்ம வார்டன் சார் எல்லாத்தயும் கண்டுபிடிச்சிடுவாரு. அம்பத்தஞ்சு ரூவால்ல போயிருக்கு.
இன்னும் ரெண்டு மூணு நாளுல்ல பாருங்க. எவனாது சொல்லிட்டு அவர்ட்ட அடிவாங்குவானுங்கோ
பாருங்க!" என்று ஆறுதலாகச் சொன்னான். இவனது பெட்டிக்கு வலது பக்கத்துப் பெட்டிக்காரனாய்
இருந்த சாகுலும் அதையேத்தான் சொன்னான். கலைந்து கிடந்த எல்லா பொருட்களையும் எடுத்து
வைத்து விட்டு வந்த அனைவரும் விகடுவுக்கு அதையேச் சொன்னனர். விகடுவும் அவர்கள் சொன்னபடி
இரண்டு மூன்று நாட்களில் யாராவது அப்படிச் சொல்லி தன்னை நிரபராதி என்று நிரூபிப்பார்கள்
என்று எதிர்பார்த்தான். அப்படி யாரும் அவனை நிரபராதி என நிரூபிக்கவில்லை.
பல நாட்கள் தன்னுடைய பெட்டியில் பணம் எப்படி
வந்தது என விகடு யோசித்துக் கொண்டே இருந்தான். மறுபடியும் தன்னுடைய பெட்டியில் இது
மாதிரி பணம் வந்து விடுமோ என்று அவன் அடிக்கடி பெட்டியைச் சுயசோதனைப் போட ஆரம்பித்தான்.
*****
No comments:
Post a Comment