29 Mar 2019

கைப்பற்றப்படாத பணம்



செய்யு - 39
            தன்னுடைய பெட்டி பணங்காய்ச்சிப் பெட்டியா? என்று விகடுவுக்குச் சந்தேகம் வந்தது. வைத்தது எதுவோ அது பெட்டியில் இருந்தால் இப்படியா யோசிக்கத் தோன்றும். வைக்காத ஒன்று வைத்தது போல பெட்டியில் இருந்தால் இப்படித்தான் அது சம்பந்தம் இல்லாமல் யோசிக்க வைக்கும் போலிருந்தது.
            அடுத்தடுத்த ஞாயிற்றுக் கிழமைச் சோதனைகளில் பெட்டியில் பணம் இருந்து பிடிபடுவது போல விகடுவுக்குத் தொடர்ச்சியாக கனவுகள் வந்து கொண்டிருந்தன. அந்தக் கனவுகளிலிருந்து விடுபட அவனுக்கு நெடுநாட்கள் ஆனது. மறைந்திருக்கும் உண்மைகளை மனம் கனவுகள் வழி அவிழ்க்கப் பார்க்கிறதோ என்னவோ!
            அப்படித்தான் ஹாஸ்டலில் சோதனை நடக்கிறது. விகடுவின் பெட்டி முழுவதும் பணமாக இருக்கிறது. இந்த முறை, "ஏதடா இவ்வளவு பணம்?" என்று கேட்டு வார்டன் சார் விகடுவைக் குச்சியால் அடிக்கிறார். "அதானே! எது இவ்வளோ பணம்?" என்று சொல்லியபடியே மயங்கிச் சரிகிறான் விகடு. விகடு மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் ஹாஸ்டல் பிள்ளைகள் எல்லாரும் கோரஸாக, "நாங்க ல்லாரும் எங்க பணத்த விகடுவோட பெட்டியில வெச்சோம்!" என்று சொல்லி அழுகிறார்கள். வார்டன் சார் விகடுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பப் பார்க்கிறார். விகடுவால் மயக்கம் தெளிந்து எளிய முடியவில்லை. அவனது கை, கால்கள் அசைக்க முடியாதபடி பூமியோடு பூமியாக ஒட்டப்பட்டது போல இருக்கிறது. கண்களைத் திறக்க முடியவில்லை. கண்கள் முழுவதும் நட்சத்திரங்களாக மின்னுகின்றன. எங்கும் வெளிச்சம். ஒரே வெளிச்சம். கண்ணில் தெரிவது அந்த வெளிச்சம் மட்டுமே. விகடுவின் உடல் முழுவதும் வியர்த்து விட்டது. அவன் கனவிலிருந்து முழித்தான். கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரண்டேகால் ஆகியிருந்தது. விடிவதற்கு நேரம் இருந்தது. சுற்றிலும் பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எழுந்து உட்கார்ந்து கொண்டான். அதன் பின் அவனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.
            அதிகாலை ஐந்து மணிக்கு ஹாஸ்டலில் பிள்ளைகளை எழுப்பி விடுவார்கள். அதுவரை அவனுக்குத் தூக்கம் வரவில்லை. பல் துலக்கி விட்டு, கை கால் அலம்பிக் கொண்டு படிக்க உட்கார வேண்டும். ஹாஸ்டலில் ஒரு தாத்தா இருந்தார். அவர்தான் காவலாளி. முடியெல்லாம் நரைத்து இடுப்பில் கைலியும், மேலுக்குச்  டீ சர்ட்டுமாக இருப்பார். ஐந்து மணிக்கு எல்லாம் சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்புவார். பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ்டூ படிக்கும் பிள்ளைகள் அதற்கு முன்பாகவே எழுந்து உட்கார்ந்து கொண்டு படித்துக் கொண்டிருப்பார்கள். மற்ற வகுப்புப் பிள்ளைகளை எழுப்பி விட்டாலும் எழும்ப மாட்டார்கள். எழுந்து உட்காருபவர்களும் படிக்கின்ற பாவணையில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
             இதில் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்புப் படிக்கும் பிள்ளைகள் பாவமாக உட்கார்ந்திருப்பார்கள். அவர்களின் முகத்தின் மழலை கூட மாறாதது போல இருக்கும். அவர்களால் முழிக்க முடியாது. அவர்களையெல்லாம் ஏன் கொண்டு வந்து ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறார்கள்? பிள்ளைகளுக்காக இருந்த படிப்பை, படிப்புக்காகப் பிள்ளைகள் என்று மாற்றி விட்டிருக்கிறார்களோ என்னவோ! அந்த மாற்றம்தான் ஆறாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளை ஹாஸ்டலில் கொண்டு வந்து சேர்க்கக் காரணமோ என்னவோ!
            விகடுவுக்குத் தன் கனவு பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. யாரிடம் சொல்வது? ப்ளஸ் ஒன் படிப்பதில் அவனையோத்த பிள்ளைகள் ஏழு பேர் இருந்தார்கள். அதில் பரமானந்தம் மட்டும் அவனைப் போல் மேத்ஸ் குரூப். பக்கிரிசாமி பயிர் பாதுகாப்பியல் எனும் வெக்கேஷனல் குரூப். அருட்செல்வம், வணங்காமுடி, மணவழகன் மூவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப். நடராசனும், செளந்தரும் சயின்ஸ் குரூப்.
            எல்லாரும் எழுந்து உட்கார்ந்து கொண்டு படிப்பது போன்ற பாவணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் அந்த நேரத்தில் படிக்கப் பிடிக்கவில்லை. அதற்காகப் படிக்காமல் இருக்க முடியாது. வார்டன் சார் திடீர் விசிட்டுகள் வரக் கூடும். அப்படி வரும் போது படிக்காமல் இருந்தால் அடியிலிருந்து தப்ப முடியாது.
            நடந்த சம்பவம் பற்றி பலரும் பலவிதமாக விகடுவுக்கு ஆறுதல் சொல்லி விட்டார்கள். மறுபடியும் அது பற்றிச் சொன்னால் கேட்பவர்கள் சிரித்து விடுவார்களோ என்ற தயக்கமும் விகடுவுக்கு இருந்தது.  அவன் பெட்டியைத் திறந்து எதையோ தேடுவதைப் போல் பணம் ஏதும் தன் பெட்டியில் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான். பிறகு பெட்டியை மூடி உடனே பூட்டைப் போட்டுக் கொண்டான். பள்ளிக்கூடம் வந்து பெட்டியைத் திறக்கும் பிள்ளைகள் தூங்கப் போகும் போதுதான் பெட்டிக்குப் பூட்டு போடுவார்கள். அதுவும் தங்கள் பெட்டிக்கு எதிரே படுத்திருக்கும் பிள்ளைகள் அதையும் போட மாட்டார்கள். பள்ளிக்கூடம் கிளம்பும் போது மட்டும்தான் பூட்டுப் போடுவார்கள். விகடு பெட்டியைத் திறந்து மூடினாலே பூட்டுதான். இதையும் மற்றப் பிள்ளைகள் சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள்.
            "நாங்கலாம் எதையும் உங்க பொட்டிலேர்ந்து தூக்கிட மாட்டோம்ணா!" என்பார்கள் பிள்ளைகள்.
            "தூக்குனாத்தான் பரவாயில்லயே. யாராச்சும் ல்லாத நேரமா பாத்து பொட்டில பணத்தப் போட்டுடுவாங்கன்னு யோசனயா யிருக்கு!" என்பான் விகடு.
            "பாத்தீங்களாடா அண்ணாவோட அதிர்ஷ்டத்த! ல்லாரு பொட்டியிலயும் காசு காணாத்தான் போவும். அண்ணாவோட பொட்டியிலத்தான்டா காசு மூடியப் பிய்ச்சுட்டுக் கொட்டுது!" என்று அதற்கும் ஹோவென்று சிரிப்புதான்.
            இந்தச் சிரிப்புக்கு யோசித்துதான் சொல்வதைத் தள்ளிப் போட்டான் விகடு. அவன் தள்ளிப் போடப் போட கனவுகள் தூங்க விடாமல் மொய்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கனவுகள் வந்து அவன் விழித்துக் கொண்டான்.
            விடை தெரியாத ஒரு நிகழ்வுக்காக மனம் இப்படியா கனவுகளாய்ப் போட்டு குழப்பிக் கொள்ளும்? ஒரு நாள் கனவில் ஹாஸ்டல் வார்டனே விகடுவுக்குத் தெரியாமல் அவனுடைய பெட்டியில் பணம் வைத்தார். வார்டன் சார் எதற்கு விகடுவின் பெட்டியில் பணம் வைக்க வேண்டும்? விகடுவை அவருக்குப் பிடிக்கவில்லை போலும். ஒவ்வொரு நாள் கனவிலும் ஹாஸ்டலில் இருந்த ஒவ்வொருவரும் அவனது பெட்டியில் பணம் வைத்துக் கொண்டிருந்தார்கள். சில நாட்களில் அவர்கள் வைக்கும் பணம் பெட்டியை மீறி மூட முடியாத அளவுக்குப் புடைத்துக் கொண்டிருந்தது. பெட்டிக்குள் பணத்தை வைக்க முடியாமல் அந்த ஹாஸ்டல் முழுவதும் பணத்தால் அடுக்கி முடித்து விடுகிறார்கள். அப்போதும் முடியாமல் ஹாஸ்டலுக்கு வெளியேயும் அடுக்குகிறார்கள். ம்ஹூம். முடியவில்லை. பணக்கட்டுகள் அடுக்க முடியாமல் ரோடு, பள்ளிக்கூடம் என நீண்டு நரிவலம் முழுவதும் அடுக்குகிறார்கள். அடுக்கிக் கொண்டே போகிறார்கள். அப்படியே அடுக்கிக் கொண்டே வந்து விகடுவுன் திட்டையில் இருக்கும் வீடு வரைக்கும் வந்து விடுகிறார்கள். இப்போது வீட்டுக்கும் ஹாஸ்டலுக்கும் ஒரு பணத்தொடர்ச்சி வந்து விடுகிறதா? இதைச் சுட்டிக் காட்டி உன் வீட்டிலிருந்துதான் பணம் வந்திருக்கிறது. நீதான் பணத்தை எடுத்து வந்தாய் என்று சொல்லி விகடுவைக் குற்றம் சொல்கிறார்கள். இப்படிச் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் விகடுவின் கனவுக்குள் வந்து அவனுடைய பெட்டிக்கள் பணம் வைப்பவர்கள், பணத்தை அடுக்கிக் கொண்டிருப்பவர்கள் கணக்கற்றவர்களாய் நீண்டு கொண்டிருந்தார்கள். விகடு இதுவரை பார்த்திராத அவன் அறியாத மனிதர்கள் கூட வந்து அவனது கனவில் பணம் வைப்பதை கர்ம சிரத்தையோடு செய்து கொண்டிருந்தார்கள். அவன் அவர்களைப் பார்த்து கனவில் சத்தம் போட்டான், "ஏம் இப்படி ல்லாரும் நம்மோட பெட்டியிலயே பணத்தை வய்க்குறீங்க?" என்று. காலாண்டு பரீட்சை லீவுக்கு வீட்டுக்குக் கிளம்பும் இரண்டு நாட்களுக்கு முன் அவனது பெட்டியில் அம்மாவும், செய்யுவும் கூட வந்து பணத்தை வைத்தார்கள்.
            அதுவரை அந்தக் கனவு சங்கதிகளை யாரிடம் சொல்வது என்று தவித்த விகடு காலாண்டு லீவுக்கு வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடமும், செய்யுவிடமும் கூறினான். அம்மாவும், செய்யுவும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.
            "இப்படி நீங்க சிரிக்குற மாரி ஹாஸ்டல்லயும் சிரிச்சிடுவாங்களோன்னுதான் நாம்ம யார்கிட்டயும் சொல்லல தெரியுமா?" என்றான் விகடு.
            "நாம்ம அதுக்காகச் சிரிக்கலடா!" என்றது அம்மா.
            "அப்புறம் ஏஞ் சிரிச்சீங்க?"
            "மொத தடவயா பிரிஞ்சி ஆஸ்டலுக்குப் போறீல்ல. கைகாசு செலவுக்கு திடீர்னு வேணுன்னா ன்னா பண்ணுவே? அதாங் பொட்டிக்குள்ளாற பேப்பருக்குள்ள மறச்சு அம்பது ரூவாயை வெச்சன்! நீ எப்பயாவது பாத்து எடுத்து வெச்சிப்பன்னு நெனச்சேம். நீ இப்படி மாட்டிப்பேன்னும், கனா கனாவா கண்டுட்டு இருப்பேன்னு ஆருக்குத் தெரியும்?" என்றது அம்மா.
            "அம்மா அம்பது ரூவா வெச்சுச்சா. நாம்ம அஞ்சு ரூவா வச்சன்!" என்றாள் செய்யு.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...