25 Jan 2019

பின்னோக்கி ஓடாத நதி


பின்னோக்கி ஓடாத நதி
திரும்பிப் பார்க்காத குணம் ஓர் அதிசயம்.
இரவில் நடக்கும் போது இருள் படிந்த நடந்து வந்தப் பாதையைத் திரும்பிப் பார்க்காத ஒரு தன்மையைப் போன்றது அல்ல அது. அங்கே அச்சம் இருக்கிறது. அச்சத்தின் காரணமாகவே திரும்பிப் பார்க்காமல் இருக்கலாம்.
பொதுவாக நினைக்கப்படுவது போல, வாழ்வில் கடந்து வந்த கஷ்ட நஷ்டங்களைத் திரும்பிப் பார்க்காதது போன்றதும் அல்ல அது. அப்படிப் பார்க்காததன் மூலம் மமதையை வளர்த்துக் கொள்ளும் ஒரு நிலையும்  அல்ல அது.
தீர்க்கமான ஒரு முடிவுக்குப் பின் அந்த முடிவில் செல்லும் குணம் அது.
ஒரு முடிவின் பின் விளைவுகளைக் கண்டு அஞ்சித் திரும்பிப் பார்க்காத குணம்.
அந்த முடிவு எடுத்தாகி விட்டது. அது முடிந்து விட்டது. இனி ஒரு மீள் தொடக்கம் அதற்கு இல்லை.
திருவள்ளுவர் சொல்வது போல எண்ணித் துணிக கருமம்.
திரும்பிப் பார்க்காமல் செல்வதற்கு ஓர் அசாத்தியத் துணிச்சல் வேண்டும். அந்த அசாத்திய துணிச்சல் புரிந்து கொள்வதன் மூலம் உருவாவது.
தெளிவாகப் புரிந்து கொண்ட பின் அங்கே குழப்பம் இல்லை.
குழப்பம் இல்லாத ஒன்றுக்கு இன்னொரு யோசனை இல்லை.
இன்னொரு யோசனை இல்லை என்பதால் திரும்பிப் பார்க்கும் அவசியம் இல்லை.
ஓடத் துவங்கிய நதி ஒரு போதும் பின்னோக்கி ஓடுவதில்லை.
விழத் தோன்றினால் மழைத்துளி போல விழுந்து விடுவது.
எழுத் தோன்றினால் ஊதுவத்தியின் புகையைப் போல மேலே சென்று கொண்டிருப்பது.
முடிவை மறுபரிசீலனை செய்ய மிச்ச சொச்சம் காரணங்கள் இல்லாத அந்த நிலை அசாதாரணமானது போலத் தோன்றினாலும் சாதராணமானது.
மனிதர்கள் அசாதாரணமாக நினைக்கும் முடிவுகள் சாதாரணமாகத்தான் எடுக்கப்பட்டு இருக்கின்றன. பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அது அசாதாரணமாகத் தெரியலாம்.
புரிந்து கொள்பவர்களுக்கு அசாதாரணங்கள் என்பது எதுவுமில்லை. சாதாரணங்கள் மட்டுமே இருக்கின்றன.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...