குறளதிகாரம் - 12.9 - விகடபாரதி
உங்கள் சொற்கள்
எப்படி?
மனம் நினைப்பதை
வாய் பேசுகிறது.
தொடக்கம்
மனம். முடிவு வாய்.
வார்த்தை
மனதிலிருந்து ஊற்றெடுப்பதால் வாக்குமூலம் என்பது மனதின் உறுதிப்பத்திரமாக கொள்ளப்படுகிறது.
மனம் எப்படி
நினைக்கிறதோ, அதையே வாய் பேசுகிறது.
மனம் எப்படிக்
கருதுகிறதோ, அதையே வாய் சொல்கிறது.
மனம் எப்படி
உணர்கிறதோ, அதையே வாய் வார்த்தைகளாக்குகிறது.
மனம் கோபமாக
உணர்ந்தால், வார்த்தைகளில் சூடு பறக்கிறது.
மனம் சாந்தமாக
உணர்ந்தால், வார்த்தைகளில் குளிர்ச்சி பரவுகிறது.
மனம் சரியாக
நினைத்தால், வார்த்தைகளும் சரியாக வெளிப்படுகின்றன.
மனம் தவறாக
நினைத்தால், வார்த்தைகளும் தவறாக வெளிப்படுகின்றன.
மனம் அன்பாகக்
கருதினால், நேசத்திற்குரிய வார்த்தைகள் வெளிப்படுகின்றன.
மனம் பகையாகக்
கருதினால், வெறுப்புக்குரிய வார்த்தைகள் வெளிப்படுகின்றன.
நிலத்தின்
இயல்புபடி நீர் திரிவது போலத்தான், மனத்தின் இயல்புபடி வார்த்தைகளும் திரிகின்றன.
உவர் நிலத்து
நீர் உப்பு நீராகி விடுவது போல, கசந்த மனத்தின் வார்த்தைகள் கசக்கத் தொடங்கி விடுகின்றன,
கனிந்த மனத்தின் வார்த்தைகள் இனிக்கத் தொடங்கி விடுகின்றன.
மனத்தில்
துணிவு இருந்தால் வார்த்தைகளில் தைரியம் கொப்புளிக்கிறது.
மனத்தில்
பயம் இருந்தால் வார்த்தைகளில் அச்சம் புரையோடுகிறது.
ஒருவர் மனம்
எப்படி இருக்கிறதோ, அப்படியே அவரது வார்த்தைகளும் வெளிப்படுகின்றன.
கறைபடிந்த
மனதிலிருந்து தூய்மையானச் சொற்களை எதிர்பார்க்க முடியாது.
எதிர்மறையான
மனதிலிருந்து நேர்மறையானச் சொற்கள் பிறக்க முடியாது.
கோழைத்தனமான
மனதிலிருந்து வீரமான சொற்கள் தோன்ற முடியாது.
பலகீனமான
மனதிலிருந்து உறுதியானச் சொற்கள் உருவாக முடியாது.
அலைபாயும்
மனதிலிருந்து தெளிவானச் சொற்கள் தோன்ற முடியாது.
அல்பதனமான
மனதிலிருந்து பெருந்தன்மையானச் சொற்கள் வர முடியாது.
முகம் மனத்தின்
கண்ணாடி என்றால், வார்த்தைகள் மனத்தின் அளவுகோல்.
நேர்மையான
வார்த்தைகள் தூய்மையான மனத்தின் அளவுகோல்.
சாந்தமான
வார்த்தைகள் பொறுமையான மனத்தின் அளவுகோல்.
நேசமான வார்த்தைகள்
அன்பான மனத்தின் அளவுகோல்.
மெய்யான வார்த்தைகள்
வாய்மையான மனத்தின் அளவுகோல்.
இதே அளவுகோல்
எதிர்மறையான அளவுகோலுக்கும் பொருந்தும்.
பொய்மையான
மனதிலிருந்து பொய்யும், புரட்டுகளுமே வார்த்தைகளாக வெளியாகின்றன.
கபடமான மனதிலிருந்து
ஏமாற்றுகளும், போலித்தனங்களுமே சொற்களாகப் பிறக்கின்றன.
வஞ்சகமான
மனதிலிருந்து சூழ்ச்சிகளும், தந்திரங்களுமே வார்த்தைகளாக வழிகின்றன.
மனம் கோணியிருந்தால்
வார்த்தைகளும் கோணுகின்றன.
மனம் பிறழ்ந்திருந்தால்
வார்த்தைகளும் பிறழ்கின்றன.
மனம் சாய்ந்திருந்தால்
வார்த்தைகளும் சாய்கின்றன.
மனம் சோர்ந்திருந்தால்
வார்த்தைகளும் சோர்ந்து விழுகின்றன.
மனம் நடுவுநிலைமையிலிருந்து
தவறியிருந்தால் வார்த்தைகளும் நடுவுநிலைமையிலிருந்து தடுமாறி விழுகின்றன.
முடிவைத்
தீர்மானிக்கும் முன்,
தீர்ப்பை
வழங்கும் முன்,
நீதியை உரைக்கும்
முன்
மனம் எப்படி
இருக்கிறதோ, அப்படியே முடிவைத் தீர்மானிக்கும், தீர்ப்பை வழங்கும், நீதியை நிலைநாட்டும்
சொற்களும் வந்து விழுகின்றன.
ஒருதலைபட்சமான
மனத்திலிருந்து ஒருதலைபட்சமான தீர்ப்பே முடிவாக நீதி என்று வழங்கப்படுகிறது.
வண்டிச் சக்கரத்தில்
கோட்டம் விழுந்திருந்தால், ஓட்டம் குறைபடுவதைப் போலத்தான், மனத்தில் கோட்டம் விழுந்திருந்ததால்
சொற்களின் நடுவுநிலைமை குறைவு படுகிறது.
மனத்தில்
ஒருதலைபட்சமான கோணல் இல்லையென்றால், சொற்களிலும் ஒருதலைபட்சமான ஒருசார்புத் தன்மையற்ற
செப்பம் உண்டாகிறது, நன்றாகிறது.
நடுவுநிலைமையானச்
சொற்கள் நடுவுநிலைமையான மனதிலிருந்தே பிரசவமாகின்றன.
விதை எப்படியோ,
முளைப்பும் அப்படியே.
மனம் எப்படியோ,
வார்த்தைகளும் அப்படியே.
ஒருவர் நடுவுநிலைமைத்
தவறிப் பேசுவாரானால், அவரது மனம் நடுவுநிலைமையில் இல்லை என்பதற்கு அதுவே அறிகுறியும்,
அளவுகோலும் ஆகும்.
சொற்கோட்டம்
இல்லது செப்பம் ஒரு தலையா உட்கோட்டம் இன்மை பெறின்.
நல்ல மனம்
கெட்டச் சொற்களை உரைப்பதில்லை.
நடுவுநிலைமையான
மனம் நீதி பிறழ்ந்தச் சொற்களை உதிர்ப்பதில்லை.
*****
உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்டோர்
ReplyDeleteஉள்ளத்தில் இருந்து நல்லதையே வெளியிடுவார்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காமல் படித்திருக்கும்!
ReplyDeleteஉறங்க வேண்டிய நேரத்திலும் உறங்காமல் வாசித்துத் தந்த கருத்துக்கு நன்றி ஐயா!