26 Apr 2018

இரத்தம் தக்காளிச் சட்னி அன்று!


குறளதிகாரம் - 12.10 - விகடபாரதி
இரத்தம் தக்காளிச் சட்னி அன்று!
            பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதையே நாமும் பிறருக்கும் செய்வதே ஒழுக்கம் என்பார் பெரியார்.
            தன்னைப் போல பிறரை நேசிக்க வேண்டும் என்பார் இயேசு பிரான்.
            யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதே தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் நோக்கு.
            எல்லாரும் இன்புற்றிருக்க என்பார் தாயுமானவர்.
            யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பார் பூங்குன்றனார்.
            இப்படி தம்மையும், பிறரையும் வேறுபடுத்தாமல் தாமே பிறராகவும், பிறரே தாமகவும் கருதும் மனப்பான்மையை வளர்க்கவே இலக்கியம் விரும்புகிறது.
            தம்மையும், பிறரையும் வேறுபடுத்திப் பார்க்காத நோக்கு நிலை மானுடத்தின் உச்சநிலை.
            நடுவுநிலைமையின் மூலம் அடையப்பட வேண்டிய இறுதி நிலையும் அதுவேயாகும்.
            தமக்கும் பிறருக்கும் வேறுபாடு இருப்பதாகக் கருதுவதாயின் தமக்கு ஓர் உயர் நிலையும், பிறருக்குச் சற்றே தாழ்வான ஒரு நிலையும் தோன்றி நடுவுநிலைமை பாழ்பட்டுப் போய் விடும்.
            யாவரும் சமம் என்பதே சரியான நடுவுநிலைமைக் கொள்கை. அதை சமத்துவம் என்போம் நாம்.
            சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சட்டம் உயர்த்திப்பிடிப்பதும் யாருக்கும் பாகுபாடில்லாத நடுவுநிலைமைக் கொள்கையையே.
            எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் என்று இராமலிங்க அடிகள் கூற விழைவதும் எவ்வுயிர்க்கும் வேறுபாடு கருதாத நடுவுநிலைமைக் கொள்கையையே.
            இன்று உலகம் வணிகமயமாகி விட்டது. இதை அன்றே உணர்ந்தவர் வள்ளுவர். அவர் காலத்திலும் வணிகம் இருந்திருக்கும். இவ்வளவு கோர முகத்தோடோ, கோரப் பிடிகள் கொண்டதாகவோ இருந்திருக்காது. இருந்தாலும் அவர் வருங்காலத்துக்கும் சேர்த்தே சிந்தித்திக்கிறார்.
            சமூகத்தின் பரிமாற்றப் பொருளாதார முயற்சியாக வணிகமே அமைவதால் வணிகத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நடுவுநிலைமை குறித்து வள்ளுவர் அதிக அக்கறை காட்டுகிறார்.
            தமக்கு ஒன்றை எப்படிச் செய்து கொள்வோமோ அப்படியே பிறருக்கும் செய்ய விழைய வேண்டும் என்கிறார்.
            நாம் எப்படிப்பட்ட பொருட்களை வாங்க நினைக்கிறோமோ அப்படிப்பட்ட பொருட்களையேப் பிறருக்கும் விற்க வேண்டும்.
            நாம் அழுகியப் பழங்களை வாங்க மாட்டோம் என்றால், நாமும் அழுகியப் பழங்களை விற்கக் கூடாது.
            தரம் குறைந்தப் பொருட்களை வாங்க விழைய மாட்டோம் என்றால் தரம் குறைந்தப் பொருட்களை விற்க விழையக் கூடாது.
            தமக்குப் பாதிப்பு தரும் பொருட்களை வாங்க மாட்டோம் என்றால் பிறருக்குப் பாதிப்பு தரும் பொருட்களை விற்கக் கூடாது.
            ஒரு வீட்டை வாங்கும் போது தமக்கெனக் கருதியே வாங்குகிறோம். தமக்கெனக் கருதியே பராமரிக்கிறோம்.
            அப்படியே பிறரது பொருட்களை வாங்கும் போதும் தமக்கெனக் கருதி வாங்குவது போல் வாங்கி, தம்முடையதைப் பராமரிப்பதைப் போல் பராமரித்து வணிகம் செய்ய வேண்டும்.
            தமக்கென வாங்கும் போது தரத்தை உறுதிபடுத்திக் கொள்வது போலத்தான் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு விற்பதற்காகப் பொருட்களை வாங்கினாலும் அவைகளைத் தமக்கென வாங்குவது போல தரமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
            தாம் வாங்கும் பொருட்கள் தரமாக இருப்பதை அறிந்து மகிழ்வதைப் போல தம்மிடமிருந்து பொருட்களை வாங்குபவர்களும் அப்பொருள் தரமாக இருப்பதை அறிந்து மகிழ வேண்டும். அதுதான் வணிகத்திற்கான சரியான நடுவுநிலைமை.
            இரசாயானப் பொருட்களால் பாதிப்பு என்று தெரிந்து தாம் அதை உபயோகிக்காமல், லாபம் வருகிறது என்பதற்காக மற்றவர்களுக்கு அதை விற்பதன்று வணிகம்.
            தமக்குப் பாதிப்பு தரும் பொருட்களைப் பிறரிடம் வணிகமாகச் செயயாமல் இருப்பதே சரியான வணிகம். அச்சரியான வணிகமே நடுவுநிலைமையான வணிகம்.
            வணிகம் செய்யும் போது வணிகத்தின் நடுவுநிலைமையைக் கருத்தில் கொண்டு வணிகம் செய்ய வேண்டும். பிறரிடமிருந்து பெறப்பட்டப் பொருளாயினும் அப்பொருட்கள் தமக்காகப் பெறப்பட்டால் எவ்வளவு அக்கறையோடும், கவனத்தோடும், விழிப்போடும் இருந்து பெறப்பட்டு இருக்குமோ அவ்வளவு அக்கறையோடும், கவனத்தோடும், விழிப்போடும் இருந்து பெறப்பட்டப் பொருளாக இருந்து அவைகள் வாடிக்கையாளர்களின் கைகளை அடைய வேண்டும்.
            தாம் ஒரு பொருளை வாங்கும் போது பொருளின் எடை சரியாக இருக்க வேண்டும் என்பதை எந்த அளவுக்கு விரும்புகிறோமோ, அதே அளவு பிறருக்கு ஒரு பொருளை விற்கும் போது சரியான அளவில் கொடுக்க வேண்டும்.
            தமக்காக ஒரு பொருளைக் கொள்ளும் போது கூடுதலாகக் கொள்வதோ, பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் போது குறைத்துக் கொடுப்பதோ நடுவுநிலைமை ஆகாது. அப்படிச் செய்வது நியாயத் தராசில் சமமாக நிற்காது.
            நியாயத் தராசில் எது சமமாக நிற்குமோ அதுவே நடுவுநிலைமை.
            தமக்கென ஓர் அளவும், பிறருக்கென ஓர் அளவும் கொண்டால் நியாயத் தராசு சமமாக நிற்காது. வணிகத்தின் நடுவுநிலைமை அங்குக் கேள்விகுறியாகி விடும்.
            தமக்கு எப்படிச் செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே பிறருக்கும் செய்யப்பட வேண்டும் என்பதே வணிகத்தின் தார்மீகமான நடுவுநிலைமையான விதி.
            நடுவுநிலைமையற்ற வணிகம் மனிதத்தைத் தரம் குன்றச் செய்து விடும். உலகத்தை கலகப் பொருளாக்கி விடும்.
            மனிதரின் கடைசிப் பொருளாதார நடவடிக்கையாக பண்டமாற்றோ, வணிகமோ இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, அதில் ஏற்படும் பிரச்சனையே வருங்காலப் பிரச்சனையாக இருக்கும் என்பதை வள்ளுவர் அறுதியிடுகிறார்.
            அப்படிப் பிரச்சனை நேரிடின் அதற்கு என்ன தீர்வு என்பதை யோசிக்கும் வள்ளுவர், அப்பிரச்சனைக்கு மட்டுமல்லாது எப்பிரச்சனைக்கும் தீர்வாக அமைவது நடுவுநிலைமை என்பதை முன் வைக்கிறார்.
            வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் என்கிறார்.
            உம் நாட்டுக்கு அணு மின்சாரம் ஆபத்து என்றால் அதை பிற நாட்டுக்கு விற்காதே!
            உம் நாட்டை ரசாயன வேளாண்மை அழித்து விடும் என்றால் உன் நாட்டை அழிக்கும் அதை பிற நாட்டுக்கு வணிக நோக்கில் பரப்பாதே!
            உம் நாட்டுச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்றால் உம் நாட்டில் விற்க விரும்பாத அப்பொருட்களைப் பிற நாட்டில் விற்க முயலாதே!
                        ... என்று வல்லரசுகளுக்குப் பாடம் எடுக்கும் வணிக நடுவுநிலைமையும் இக்குறட்பாவில் உண்டு.
            நல்லதையே வாங்க வேண்டும், நல்லதையே விற்க வேண்டும்.
            சரியான அளவோடு வாங்க வேண்டும். சரியான அளவோடு விற்க வேண்டும்.
            போலிகளை எப்படி வாங்க மாட்டோமோ, அப்படியே போலிகளை விற்க மாட்டோம்.
            கலப்படங்களை எப்படி கைக்கொள்ள மாட்டோமோ, அப்படியே கலப்படங்களை கைமாற்ற மாட்டோம்.
            தரமற்றவைகளையும், பாதிப்புக்கு உட்படுத்துபவைகளையும் எப்படி விலக்க வற்புறுத்துவோமோ அப்படியே, அவைகளை பிறருக்கு விற்காமல் விலக்கி வைப்போம்.
            நன்மைகளையே கொள்வோம்! நன்மைகளையே கொடுப்போம்! என்ற எளிமையான அதே நேரத்தில் வலிமையான நடுவுநிலைமைக்கானக் குரலே வணிகத்திற்கான நடுவுநிலைமைக் கோட்பாடு ஆகும்.
            அதையே வள்ளுவர் பிறவும் தமபோல் செயின் என்ற அறத்தினின்று பிறழாத வணிகமாக முன்னிறுத்துகிறார்.
            இரத்தம் யாருக்கு வடிந்தாலும் ரத்தமே. அது தமக்கு வடிந்தால் ரத்தமாகவும், பறிருக்கு வடிந்தால் அது தக்காளிச் சட்னியாகவும் மாறுவதில்லை.
            தாம் ஒரு வாடிக்கையாளராக ஒரு வணிகர் எதை முன் வைப்பாரோ, அதையே ஒரு வணிகராகவும் அவர் முன் வைக்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...