18 Jan 2022

நம்பிக்கைதான் எல்லாம்!

நம்பிக்கைதான் எல்லாம்!

சொல்கிறபடி செய்கின்ற பழக்கம் பொதுவாக அனைவருக்கும் குறைவு. அவரவர்களின் பழக்கத்தின்படி செய்வதைச் செய்வார்கள். ஒன்றை எதிர்பார்த்துச் செய்ய சொல்வதைக் கண்டிப்பாகச் செய்ய மாட்டார்கள். அதற்காக வருத்தப்பட முடியாது.

மக்கள் ஒன்றைச் செய்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எனப் பல கூறுகள் அடங்கியிருக்கின்றன. இதனால் திட்டங்களைச் செயல்படுத்தும் போது மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப வகுத்துச் செயல்படுத்த வேண்டியிருக்கிறது.

பெருந்தொற்றுக் காலங்களில் முகக்கவசம் பாதுகாப்பானது என எவ்வளவு வலியுறுத்தினாலும் அனைவரும் முழுமையாக அதை ஏற்றுக்கொள்வதில் ஒரு சுணக்கம் இருக்கவே செய்யும். முகக்கவசம் அணியாமைக்கு அபாரதம் விதிப்பது நிலைமையைக் கொஞ்சம் மேம்படுத்தும். அதை விட முகக்கவசம் அணியாமல் இருந்தால் அது சாமிக் குற்றமாகி விடும் என்றால் நிச்சயம் நிலைமை மாறி விடும். கடவுளோடு தொடர்பு படுத்தும் நம்பிக்கைகள் அனைவரிடமும் அந்த அளவுக்கு வேலை செய்யக் கூடியன.

நோய்களைக் கடவுளின் கோபமாகப் பார்க்கும் மனநிலை இன்னும் மக்களிடம் முழுமையாக மாறிவிடவில்லை. அம்மை நோய்க்கும் மாரியம்மனுக்கும் இருக்கும் தொடர்பு அத்தகையது. இந்த நம்பிக்கை அன்றிலிருந்து இன்று வரை கொஞ்சம் கூட மாறி விடவில்லை. அண்மையில் கோவையில் கொரோனாவுக்காக கொரோனாதேவி சிலை அமைத்ததும் அப்படிப்பட்டதுதான். மக்களின் இந்த நம்பிக்கைகளைப் பார்த்து கோவையில் கொரோனா குறைந்துவிடவில்லை. கோவையில்தான் அளவுக்கு அதிகமாக கொரோனா தன் கைவரிசையைக் காட்டியது. என்றாலும் மக்களின் நம்பிக்கைகள் அப்படிப்பட்டவை.

மக்களுக்கென்று இருக்கும் வேறு சில நம்பிக்கைகள் விநோதமானவை. திடீரென்று ஒரு நாள் அரசாங்கம் ஐநூறு ரூபாய் நோட்டுகளையும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் செல்லாது என்று அறிவித்ததைப் போலப் பத்து ரூபாய் நாணயங்களைச் செல்லாது என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

வணிக நிறுவனங்களிலும் இந்த நம்பிக்கை வேரோடியிருப்பது ஆச்சரியம் தரத் தக்கது. பத்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் நோட்டாக இல்லையா என்கிறார்கள். இல்லையென்றால் இருக்கிற பணத்தை நோட்டாகத் தாருங்கள் சில்லரை தருகிறோம் என்கிறார்கள்.

இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் போன்றவற்றில் நாணயங்களை ஏற்றுக் கொண்டது போலப் பத்து ரூபாயில் நாணயங்களை மனதளவில் மக்கள் ஏற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் பிடிக்கும் போல.

நேர்மை குறித்த மக்களின் நம்பிக்கை இன்னும் விநோதமானது. இந்த உலகில் யார் நேர்மையாக இருக்கிறார்கள் என்பார்கள். அதனால்தான் தாங்களும் நேர்மையாக இல்லை என்பார்கள். அது சரி உலகில் யாரும் நேர்மையாக இல்லை என்றால் நாமும் நேர்மையாக இருக்கக் கூடாது என்று அர்த்தமா என்ன?

இப்படி மக்களிடம் பொதுவான நம்பிக்கைகள் பல இருக்கின்றன. கவனித்துப் பார்த்தால் சுவாரசியத்துக்குப் பஞ்சம் இருக்காது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...