29 Dec 2021

மார்கழி மாதத்துத் தரமான சம்பவங்கள்

மார்கழி மாதத்துத் தரமான சம்பவங்கள்

            மார்கழி மாதத்தில் பக்திக்குப் பஞ்சம் இருக்காது. காலையில் எழுந்தவுடன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பக்தி பாடல்கள் காதை நிறைக்கும் மாதம் அல்லவா மார்கழி. ஆலயங்களுக்கு அருகில் இருக்கும் வீடு என்றால் காதை வலிமையாகப் படைத்த தெய்வத்துக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

            குளிருக்கு இதமான தூக்கம் வரக் கூடிய மாதம்தான் மார்கழி. அந்த நேரம் பார்த்துக் காதுக்குள் நுழையும் பாடல்கள் தூக்கத்தை இந்திரலோகத்துக்கு அனுப்பி விடும்.

            இந்த மார்கழி மாதத்தில்தான் மாலை போடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்படி மாலை போடுபவர்களின் பூசை புனஸ்காரங்கள் விஷேசத் தன்மை வாய்ந்தது. இந்த பூசைகளில் வாயினால் மட்டும் பஜனை பாடுபவர்களின் எண்ணிக்கை குறைவு. ஸ்பீக்கர் கட்டி பஜனை பாடுபவர்களின் எண்ணிக்கை அதிகம்.

            பஜனைப் பாடுபவர்களுக்கு பாட வேண்டும் என்ற ஆசை அதிகமாகத்தான் இருக்கும். அதைக் கேட்பதற்கு உண்டான பொறுமை இருக்கிறதே! அந்தப் பொறுமையைப் பக்திதான் வளர்க்கிறது.

            மார்கழி மாதத்தில் மாலை போடுவதைப் பல விதங்களில் நன்மையைத் தருவதாகப் பலரும் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக மொடா குடிக்காரர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் டாஸ்மாக்கில் சரக்குப் பஞ்சம் குறைந்த பாடாய் இருக்காது.

            புகைப் பிடிப்பவர்கள் புகைப் பழக்கத்தை விட, தவறான பழக்கங்களில் இருப்பவர்கள் தவறான பழக்கங்களை விட என்று பல விதங்களிலும் மார்கழி மாதப் பூசைகள் உதவுகின்றன. இதற்காக எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம்.

            மார்கழி மாதம் முடிந்த பிறகும் நிலைமை அதே போலத் தொடர்ந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். அதற்கு வாய்ப்புகள் கொஞ்சம் குறைவுதான். காய்ந்து கிடந்த நிலம்தான் அதிக நீரை உறிஞ்சும் என்பது போல நிலைமை மாறி விடும். இதற்கு என்னதான் செய்வது? எல்லா மாதங்களும் மார்கழி மாதமாக இருந்தால் சௌகரியமாக இருக்கும். அதற்குக் காலண்டர் அனுமதிக்காது. பேசாமல் நாம் எல்லா மாதங்களையும் மார்கழி மாதமாகக் கற்பிதம் செய்து கொள்ளலாம் என்றால் அதற்கு மனம் அனுமதிக்காது.

            மாதங்களில் நான் மார்கழி என்று கடவுள் சொல்வதாக ஒரு வாசகம் இருக்கிறது. கடவுள் விரும்புவதால் என்னவோ அந்த ஒரு மாதத்திலாவது சரியாக இருக்க வேண்டும் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள் போலும். கடவுள் பன்னிரு மாதங்களையும் விரும்பியிருக்கலாம். பன்னிரு மாதங்களிலும் மனிதர்களைக் கட்டுச் செட்டாக வைத்திருக்க கடவுளும் விரும்பவில்லை போலும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...