29 Oct 2021

மனிதர்கள் குறித்த மிக மோசமான முடிவுகள்

மனிதர்கள் குறித்த மிக மோசமான முடிவுகள்

            எஸ்.கே. மனிதர்கள் குறித்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் பின்வரும் முடிவுகளைக் கண்டடைந்திருந்தார். தான் இத்தனை நாட்கள் கண்டடைந்த முடிவுகளில் மிக சாசுவதமான முடிவுகளாக இம்முடிவுகள் அமைந்திருப்பதாக அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. மேலும் இம்முடிவுகளை அடைந்த பிறகு அவரது மனதில் எல்லையற்ற அமைதியும் நிலவியது. அம்முடிவுகளின் சுருக்கமான தொகுப்பு வருமாறு,

            மனிதர்கள் இயல்பிலேயே கெட்டவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களை நல்லவர்கள் என்று நினைக்கும் போதுதான் எல்லா பிரச்சனைகளும் ஆரம்பிக்கின்றன. நல்லவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது.

            மனிதர்கள் தங்களை அறியாமல் நல்லவர்களாக நடந்து கொண்டால் உண்டு. பிரக்ஞைபூர்வமாக அவர்கள் நல்லவர்களாக நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. இந்த முடிவை அடைந்து விட்டால் மனிதர்கள் ஏன் பிசுனாரிகளாக, ஏமாற்றுக்காரர்களாக, சுயநலமிகளாக, அதிகார வெறி பிடித்தவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்து வேதனைப்பட வேண்டியதில்லை.

            மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டால் மனிதர்கள் குறித்த எந்தச் சஞ்சலமும் மனதில் ஏற்படப் போவதில்லை. அநாவசியமாக அயோக்கியர்களை ஏன் நல்லவர்கள் என நினைத்துச் சஞ்சலப்பட வேண்டும் என்று சொல்லுங்கள்.

            உங்கள் வாழ்க்கையில் ஒருவரை நல்லவராக மாற்றப் போகிறேன் என்று நினைத்து எதையாவது செய்ததை விட செய்யாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நீங்கள் ஒருவரை நல்லவராக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தால் அவர் மென்மேலும் கெட்டவராக மாறிக் கொண்டிருப்பார். மனிதர்கள் யாரும் யாரையும் மாற்றுவதை விரும்புவதில்லை. அதுவும் ஒருவர் தன்னை நல்லவராக மாற்றுகிறார் என்று தெரிந்தால் அவர் அடிபட்ட பாம்பாகி விடுவார். ஆகவே இது போன்ற விசயங்களில் எவ்வித ஆர்வமும் காட்டாமல் பேசாமல் இருங்கள்.

            ஒருவரை மரண அடி அடித்து ஏதோ ஒரு திசையில் கொண்டு போக வாழ்க்கை தயாராக இருக்கிறது. ஆகவே நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. உங்களால் முடியுமானால் எதையும் செய்யாமல் அமைதியாக வேடிக்கை பாருங்கள். இல்லையா பேசாமல் போய் படுத்துத் தூங்குங்கள். வாழ்க்கை நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கும்.

            மனிதர்கள் குறித்த இப்படி மோசமான முடிவுகளுக்குச் சமயங்களில் வந்து விடுகிறார் எஸ்.கே. எதிர்மறையான சூழ்நிலைகளைப் பார்த்து எதிர்மறையான மனநிலை உருவாக்கிக் கொள்ளும் முடிவுகள் இவை. இவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டால் பிறகு என்ன இருக்கிறது? மனிதர்களுக்கு நல்லவற்றை நோக்கிய மாற்ற வேண்டிய கட்டாயமும் கடமையும் இருக்கிறது. அந்தக் கட்டாயம் என்ற அச்சில்தான் கடமை உணர்வோடு மனிதர்கள் சுழன்றாக வேண்டும்.

            அப்படியே விட்டு விடுவதானால் விட்டு விடலாம். பிறகு இந்த உலகில் எது குறித்தும் அக்கறை கொள்ளும் உணர்வை இழந்து விடுபவர்களாகி விடுவோம். இந்த உலகோடு நமக்குத் தொடர்பில்லை என்றால் எதையும் கண்டு கொள்ள வேண்டியதில்லை. இந்த உலகோடு நமக்குத் தொடர்பு இருக்கிறது. இந்த உலகமும் இந்த மனிதர்களும் தரும் வசதிகளில்தான் நாம் வாழ்கிறோம் என்றால் நேரிடும் சிறு சிறு அசௌகரியங்களைப் பொருட்படுத்தாமல் இந்த உலகுக்காகவும் இந்த மனிதர்களுக்காகவும் அக்கறையோடு யோசிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...